நேற்று விஜய் டிவியின் மகாபாரதத்தில் பகடை உருட்டும் காட்சி நடந்தது. உடனே எனக்கு நினைவுக்கு வந்தது எங்கூரு கோயில் கொடையில் நாங்க கட்டை விளையாடியது தான்.
எங்க கிராமத்தில் நடக்கும் கோயில் கொடையின் போது கட்டை உருட்டுவார்கள். ஒரே கூட்டமா இருக்கும். சில நேரம் சின்ன பசங்களை சேர்க்க மாட்டாங்க. நாங்க என்ன பண்ணுவோம்னா வீட்டில் கலர் குடிக்க பைசா வேணும்னு கேட்டு ஒரு ரூபாயோ ரெண்டு ரூபாயோ வாங்கிக்கிறது.
கலர்ன்னா , வேற ஒண்ணுமில்ல. சீனியைப் போட்டு கலர் பவுடர் போட்டு அதைப் பனிக்கட்டிக்குள்ளே குளிர வச்சு தருவாங்க. அது மாதிரி நிறைய கடைகள்(ஜவ்வு மிட்டாய், பஞ்சு மிட்டாய், விளையாட்டுப் பொருள் கடைகள் ) கோயில் பக்கத்தில் இருக்கும்.
திருப்பியும் கட்டை உருட்டுறதுக்கு வருவோம். நாமம், பொட்டு, டைமண்ட், ஆட்டின், கிளெவர், இஸ்பேட் என ஆறு கட்டங்கள் இருக்கும். உருட்டுறவர் நாலு கட்டையை (சதுரமா இருக்கும்) உருட்டுவார். அதுல நாலு பக்கத்திலும் இந்த சிம்பலும் இருக்கும்.
நாம ஒரு கட்டத்தில்(டைமண்ட்) ஐந்து ரூபாய் வைத்து, அவர் உருட்டுன பிறகு டைமண்ட் விழுந்தால் , நமக்கு அவர் ஐந்து ரூபாய் தருவார். ஒருவேளை டபுள் டைமண்ட் விழுந்தால் பத்து ரூபாய் தருவார்.
நாலு கட்டம் போக மீதி கட்டத்தில் பைசா வச்சவன் பைசாவை இழப்பான். நாங்க பயலுக என்ன பண்ணுவோம்னா , டீம் மாறி பிரிஞ்சிக்கிறது . ஏலே மக்கா ஜெயிச்சாலும் தோத்தாலும் நாம ஷேர் பண்ணிக்குவோம். ஆளுக்கு ஒரு கட்டத்தில் முதல்ல வைப்போம். அப்புறம் அவன் கட்டை பெரும்பாலும் எதுல விழுதுன்னு பார்த்துட்டு அதுக்குத் தகுந்த மாதிரி விளையோடுவோம். பணம் இருபது ரூபாய் வரை (பெரிய பணம்லா அப்ப அது) ஜெயிச்சிட்டோம்னா எஸ்கேப் ஆகிறனும். தோத்தால் போனா போகுதுன்னு போய் மேளம் அடிக்கிறதைப் பார்ப்போம்.
டீலில் பல தடவை ஜெயிச்சதுண்டு. பிதாமகனில் கூட பாலா இதை வைத்திருப்பார். கட்டை அடிக்கிறவர் சூர்யா மாதிரியே ஒண்ணு விழுந்தால் ஒண்ணு, ரெட்டை விழுந்தால் டபுள்னு நமக்கு ஆசை மூட்டிக் கொண்டே இருப்பார். அது ஒரு அழகிய கனாக்காலம்.
இனிய நினைவுகள் ஞாபகம் வந்தன…