இந்தியைப் பள்ளிகளில் கட்டாயமாகக் கொண்டு வர வேண்டுமா?

hindi

 

 

நண்பர் Vaa Manikandan அவர்கள் ஹிந்தியை அரசியல் ரீதியாகப் பள்ளிகளில் படிக்க விடாமல் இருந்ததற்குப் பதிலாக அதை ஒரு பாடமாக வைப்பதால் தமிழ் அழியாது, மாறாக ஹிந்தியும் ஒரு கருவியாகப் படிப்பது தான் , பிற மாநிலங்களில் வேலைக்குச் செல்லும் போது அது எளிதாக இருக்குமென்று சொல்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதனால் நாம் எதையும் இழந்து விட்டதாக எனக்குத் தோன்றவில்லை. ஏனெனில் நானும் servicing field ல் தான் பல வருடங்களாகப் பணி புரிந்து வருகிறேன். முதலில் அவர் சொன்னதை முற்றுமாக நிராகரிக்கும் மன நிலையில் நானில்லை. மறுப்பதற்கு முன்பாக சுய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.

என்னுடைய Testing & Commissioning பணியில் முதன்முதலாகப் பணியாற்ற பஞ்சாப் செல்ல வேண்டியத் தேவை ஏற்பட்டது. பஞ்சாபிலுள்ள பாட்டியாலா அருகில் தான் அந்த Power Plant இருந்தது. அங்கு இரு guest house ல் நாங்களும் கஸ்டமரும் தங்கி இருந்தோம். ஒருநாள் இன்னொரு guest house ல் வைத்து இரவு treat என கஸ்டமர் தரப்பில் சொல்லி இருந்தார்கள். இது நடந்தது, பஞ்சாப் சென்ற நாலாவது நாளில்.

அது மிகக் குளிர் காலம். அங்குக் கடைகள் 8 to 8:30 மணிக்கெல்லாம் அடைத்து விடுகிறார்கள். நான் விருந்து வழங்கும் விருந்தினர் விடுதிக்கு அருகிலுள்ள ஒரு இண்டர்நெட் செண்டருக்குச் சென்றிருந்தேன். இரவு மணி ஏழரை இருக்கும். பவர் கட்டானது. சரி, விருந்தினர் விடுதிக்குச் செல்வோம் என வெளிவந்தால் அதற்கு எந்த முடுக்கில் செல்ல வேண்டுமெனத் தெரியவில்லை. கைபேசியெல்லாம் அப்போது கிடையாது. எனக்கு இருட்டில் எப்படி செல்வது எனச் சுத்தமாகத் தெரியவில்லை. உடனே ஒரு சைக்கிள் ரிக்ஷாவை எடுத்துக் கொண்டு இடத்தைக் கண்டுபிடிக்கலாம் என முடிவு செய்தேன். அவரிடம் நான் எங்கு இறங்க வேண்டுமென ஹிந்தியிலோ, பஞ்சாப் மொழியிலோ சொல்லத் தெரியவில்லை.

இடத்தை நாமாகவேக் கண்டுபிடித்து இறங்க வேண்டியது தான் என நினைத்து ஏறிக் கொண்டேன். ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது, அவர் விருந்தினர் விடுதிக்கான பகுதியை விட்டு சற்று தொலைவுக்குச் சென்று விட்டால், தப்பு எனத் தெரியும். அவரிடம் சைகையாலும் அரைகுறை ஆங்கிலத்திலும் சொல்வேன். அவரும் U turn அடிப்பார். திருப்பியும் என்னால் இடத்தைக் கண்டுபிடிக்க இயலாது. திருப்பியும் U turn அடிப்பார்.

என்னுடைய ஆங்கிலம் (அதை ஒழுங்காப் பேசத் தெரிந்தால் தானே) அவருக்குப் புரியலை. எனக்கு ஹிந்தியில் எப்படி சொல்லணும்னு தெரியலை. எனக்கு இந்தியில் இதர்ஜாவ் , உதர்ஜாவ் கூடத் தெரியாதுன்னா நான் எப்படி சமாளிச்சிருப்பேன்னு நினைச்சுக்கோங்க. சைக்கிள் ரிகஷா காரர் என்னைத் திட்டி விடுவோரோ என உள்ளுக்குள் பயம். திட்டினால் எனக்கென்னப் புரியவாப் போகுது. அப்போதைக்கு அவர் திட்டி இருந்தால் கூட அது செவிடன் காதில் சங்கு ஊதுணக் கதையாகத் தான் இருந்திருக்கும். ஆனால் மனிதர் ரொம்ப நல்லவர், என்னைத் திட்டவில்லை. நான் ஊருக்குப் புதுசு, ரொம்ப தெவங்குறேன் என்பது மட்டும் அவருக்குத் தெளிவாகப் புரிந்திருந்தது. மனிதர்கள் அடுத்தவர்களின் நிலையறிந்து நடந்து கொள்கிற போது அவர்கள் மீது மிகப் பெரிய மரியாதையும் நன்றியுணர்வும் பல்மடங்குப் பெருகி விடுகிறது. இன்று வரையிலும் அந்த ரிகஷாக்காரர் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறார்.

சரி, இனி நாம் அந்த விருந்தினர் விடுதியை அடைய முயற்சிப்பது முடவன் கொம்புத்தேனிக்கு ஆசைப்படுவது போலன்னு நினைச்சிக்கிட்டு , நாம தங்கி இருக்கிற விருந்தினர் விடுதிக்காகவாவது போயிருவோம்னு முடிவு செய்தேன். ஆனால் அதுவும் ரெண்டு கிலோ மீட்டருக்கு மேல். மீண்டும் ரிக்ஷாகாரரிடம் ஹம் ஆப் கே ஹெயின் கோன் தியேட்டர்…. இவ்வளவுதான் நான் சொன்னேன். அவர் புரிஞ்சுக்கிட்டார். ஏன்னா, அந்தப் படம் ஓடுற தியேட்டருக்குப் போனால், எனக்கு நான் தங்கி இருக்கும் விடுதிக்கு வழி தெரியும். ஏன்னா, ரவுண்டு அபௌட் எதிரில் தான் விடுதி இருந்தது. அவர் தியேட்டர் அருகே செல்ல, நான் சைகையில் நேரே போகணும் என்றேன். அவரும் மிதித்தார். ஒருவழியாக நான் தங்கியிருந்த விருந்தினர் விடுதியை அடைந்தேன். அங்கிருந்த குக் மீண்டும் அதே சைக்கிள் ரிகஷா காரரிடம் விருந்து நடக்கும் விடுதியில் கொண்டு வந்து இறக்கி விட்டார். இந்த ஒன்றரை மணி நேர அக்கப் போருக்குப் பிறகு அந்த சைக்கிள் ரிக்ஷா காரர் 40 ரூபாய்தான் வாங்கினார். இந்தச் சூழ்நிலை ஒரு மனிதனுக்கு தாம் செல்லும் இடத்திலுள்ள மொழியின் அவசியத்தை நிச்சயமாக உணர்த்தி இருக்கும். 

இந்தியாவின் பல மாநிலங்களில் ஏறத்தாழ பதினாறு மாநிலங்களுக்கும் மேலாக பணியாற்றி இருக்கிறேன். எல்லா மொழியிலும் இப்பவும் தெவங்கத்தான் செய்வேன். ஆந்திராவில் சிறிது காலம் தங்கியதால் சற்று அவர்களின் மொழியைப் புரிந்து கொண்டேன். ஹிந்தியும் சரி, மலையாளமும் சரி. அவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பேசச் சொன்னால் எப்பவும் உபயோகிக்கிற வார்த்தைகளைத் தாண்டிப் பேச வராது.

அதற்குக் காரணம் இதுதான். அந்தக் கட்டாயத்திற்குள் தினம் தினம் சித்தரை அனுபவிக்கும் சூழலுக்குள் சிக்க வில்லை. நாம் பணி நிமித்தமாக பேசுகிற ஆட்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருப்பது & புரிந்து கொள்வது. இன்னொரு காரணம், மணி சொன்ன மாதிரி நம்மூர்க் காரன் 4 பேர் இருந்துருவாணுக, அவ்வளவுதான். பிறகு எங்கிருந்து கத்துக்கிறது? அவனுகக்கிட்டே பேசியே நேரத்தைப் போக்கிட வேண்டியதுதான். ஆனால் அனுபவத்தில் சற்றுக் கற்றுக் கொண்டேன். வாக்கியமாகச் சொல்ல வராத இடங்களில் வார்த்தைகளாகப் போட்டுப் புரிய வச்சிறதுதான் பழக்கமாக மாறிப் போனது.

இப்ப மணிகண்டன் அவர்களுக்கு என்னுடைய கருத்தென்ன என்பதைச் சொல்லி விடுகிறேன். தமிழர்கள் ஹிந்தி கற்றுக் கொள்ளாததால் தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் (ஏன் நம்மைப் போன்ற பொறியாளர்களும் இதில் சேர்த்தி) பேசிப் பேசி பழகுவதால் வெளிநாட்டில் பணி புரியச் செல்கிற போதும் சரி, பிற மாநிலங்களில் பணி புரியச் செல்கிற போதும் நம்மையும் அறியாமல் ஆங்கிலத்தில் சமாளித்து வெற்றி கண்டுள்ளோம். ஆரம்பக் கட்டங்களில் கஷ்டப்படுவோம் என்பது உண்மைதான். எனக்குத் தெரிந்து ஹிந்தியை பள்ளியில் படித்த தமிழர்கள் ஹிந்தி பேசிக் கேட்டிருக்கிறீர்களா? அதை விடக் கொடுமை எதுவும் இருக்காது. ஆனால் அவர்களுக்கு ஹிந்தியில் என்ன எழுதி இருக்கிறது என்பதை வாசிப்பது லாபம் தான். ஒரு மொழியை additional ஆக கற்றுக் கொள்வதில் தவறில்லை என்பதில் உடன்படுகிறேன்.

பயன்பாட்டளவில் பேச மட்டுமே நீங்கள் குறிப்பிடுகிற மற்ற மொழிகள் பெரும்பாலும் தேவைப்படுகிறது. ஆந்திராக் காரனின் ஆங்கில உச்சரிப்பைக் காட்டிலும் நம்முடைய உச்சரிப்பும் மலையாளிகளின் உச்சரிப்பும் ஓரளவு நன்றாக இருப்பதாகவே நான் உணர்கிறேன். மொழியைக் கற்றுக் கொள்ள பள்ளியில் ஹிந்தி சேர்க்கப்பட வேண்டும் என்ற நியதி சரியென எனக்குத் தோன்றவில்லை. மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டிய ஆர்வம் மட்டுமே தேவைப்படுகிறது. மேலும் நீங்கள் சொல்ல முனைவதும் பேச்சுக்குத் தான் ஹிந்தி தேவை என்று சொல்வதாக நினைக்கிறேன். எழுத்துக்களைப் படிக்க வேண்டுமானால் பள்ளிகளில் ஹிந்தி அவசியம், ஆனால் ஹிந்தியை வெகு வேகமாகக் கற்றுக் கொண்டவர்கள் யாரென பாருங்கள். படிக்காமல் , நீங்கள் குறிப்பிடும் பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் தான். அவர்களால் மட்டுமே வெகு விரைவாக எந்த மொழியையும் உள்வாங்கிக் கொள்ள முடிகிறது.

கட்டாயம் வருகிற போது மனிதர்கள் உலகின் எந்த மூளையில் வாழ்ந்தாலும் அது மொழி என்றில்லை, அவர்களுக்கு அத்தியாவசியம் என்றால் அதைக் கற்றுக் கொள்வார்கள். அல்லது கற்றுக் கொள்கிறார்கள். நானெல்லாம் இந்தியாவில் இருக்கிற வரைக்கும் கார் ஓட்டக் கற்றதில்லை. அதற்கான தேவையோ, விருப்பமோ, கட்டாயமோ இல்லை. கார் வாங்க வசதியும் கிடையாது. பின்ன அதைக் கற்று நமக்கெதுக்கு என்று தான் இருந்து வந்துள்ளேன். கார் ஓட்டிப் பழகுறதுக்கு முன்னாடி தப்பா ஓட்டிட்டா செத்துப் போயிருவோமோன்னு பயம். கற்றுக் கொண்ட பிறகு, அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ணுறதெல்லாம் அது ரொம்ப ஈசின்னு சொல்றது.

மனிதர்கள் எப்போதுமே தங்களுக்குக் கைவந்த கலையாக ஆன விடயங்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. மற்றவர்களுக்கு அதில் ஏதும் பயப்படத் தேவையில்லை என சொல்ல வருகிறார்களா? அல்லது தான் அவ்விடயத்தில் மெத்தப்படித்த மேதாவியென காட்ட முனைகிறார்களா? எதுவுமே புரியவில்லை. மீண்டும் விஷயத்திற்கு வருவோம்.

நாங்கள் இருக்கும் சவுதியில் கூட அராபிய மொழியை நன்கு பேசுபவர்கள் நம்மூரில் பள்ளியில் படிக்காமல் கடைகளில் வேலை பார்ப்பவர்கள் மட்டுமே அரேபிய மொழியை நன்கு பேசுவார்கள். படித்தவர்கள் நம்பர்களை மட்டும் தெரிந்தால் போதுமென்று , (அது எதற்கெனில் அராபியில் கடைக்காரன் கேட்பதற்கு சரியாகக் கொடுக்க வேண்டுமல்லவா ) அராபிய மொழியை அவ்வளவோடு கற்றுக் கொண்டு நிறுத்தி விடுவார்கள்.

ஆங்கில மொழியின் தேவையென்பது ஹிந்தியைக் காட்டிலும் அதிகமாகும், நீங்கள் குறிப்பிடுகிற உலக மயமாதலில். ஆதலால் அரசியல் காரணங்களுக்காக ஹிந்தியை எதிர்க்கவில்லை. நீண்ட காலத்திற்கு ஒரு மொழியை கற்றுக் கொள்ளத் தேவைப் பட போவதில்லை. கட்டாயமே ஒரு மனிதனுக்கு எல்லாவற்றையும் கற்றுத் தருகிறது. ஹிந்தியை ஏன் பள்ளிகளில் வைக்கவில்லை என்ற கேள்வி கூட அரசியல் வாதிகள் செய்து வைத்துள்ள விடயங்களால் தான். மேலும் இதர மாநிலப் பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கும் போது நம்முடைய மாநிலத்தில் ஏனில்லை என்பதால்தான்.

ஆங்கிலம் கற்றுக் கொள்வதன் அவசியத்தை ஒப்பிடும் போது ஹிந்தியின் தேவை குறைகிறது. ஹிந்தியை விட்டு அரைகுறை ஆங்கிலத்தில் வேறு மாநிலங்களில் பேசிப் பழகுவதால் நம்மால் வெளிநாடுகளில் பணி செய்யும் போது சமாளிக்க எளிதாக உள்ளது. அதற்கு உதாரணம், ராஜஸ்தானிலோ, ஹிந்தி பேசும் மாநிலத்தில் இருந்து வந்தவனோ இங்கு ஆங்கிலம் பேசத் திணறுகிற அளவுக்கு நம்மூர்க்காரர்கள் (படிக்காதவர்கள் கூட) திணறுவதில்லை. நம்மூர்க்காரர்களும் சரி, தென்னிந்தியர்களும் சரி, ஆங்கிலத்தில், தான் சொல்ல வருவதை அரபி பேசுபவனிடத்தும் சொல்லி சமாளித்து விடுவார்கள்.

என்னிடம் நிறைய நேரங்களில் புதிதாக வெளிநாட்டில் பணியாற்ற வருகிற வட இந்தியனைப் பார்த்து, இவருக்கு நான் சொல்கிற எதுவுமே எளிதில் புரியவில்லை என்று அரபு மொழி பேசும் பொறியாளர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

மேலும் அவசியம் வருகிற பட்சத்தில் அவர்களாகவேத் தேவையான மொழியைக் கற்றுக் கொள்வார்கள்.ஹிந்தி போல ஆங்கிலத்தையும் பள்ளியில் இருந்து எடுத்து விடுங்கள் என்று சொல்கிற நிலையில் இன்றைய சமூகச் சூழல் உலகம் முழுமைக்கும் இல்லை. என்னுடைய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தேன், ஆங்கிலம் பேசும் திறன் இருப்பதால் இந்தியர்கள் உலகமயமாதலில் அதிகப் பலன் அடைகிறார்கள். அவர்களைத் தான் உலகிலுள்ள நாடுகளும் பன்னாட்டு நிறுவனங்களும் தேடுகிறார்கள்.

இருபது ஆண்டுகளுக்கு அரபு நாடுகளில் பணியாற்றி வந்த படித்தவனிடம் போய் கேளுங்கள்: உங்களுக்கு அரபு மொழியில் சரளமாகப் பேசத் தெரியுமா என்று. முழிப்பான். அதையே நீங்கள் குறிப்பிட்ட பத்தாம் வகுப்புக் காரனிடம் கேட்டுப் பாருங்கள், அவன் பேசிக் காண்பித்து பெருமை கொள்வான். ஆதலால் ஹிந்தியைப் பள்ளிகளில் கொண்டு வராததற்கு நாம் வருத்தப்பட வேண்டியதில்லை. நமக்குத் தேவையென வருகிற சூழலில் நாம் எதையும் கற்றுக் கொள்வோம். 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s