சுடலைமுத்து தான் என்னோட நெருங்கிய தோழன். இப்பவும்தான். எங்களுக்குள்ளே நடந்த உரையாடல்கள் தான் இப்ப எனக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது.
வருசத்தில பத்து பதினைஞ்சு தடவை ப்ளேன் எங்கூருக்கு மேலே பறந்தாலே பெரிய விஷயம். பிளேன் மேல பறக்கிற போதெல்லாம் நாங்க அண்ணாந்துப் பார்ப்போம். அது கண்ணுக்குத் தெரிவதிலிருந்து மறையும் வரை கண்ணை எடுப்பதில்லை. மெட்ராசில இருந்து ஒரே ஒரு தடவை ஊருக்கு வந்த மாமா பய , என்னடா… இதைத் தான் பட்டிக்காட்டான் யானையைப் பார்த்த மாதிரின்னு சொல்வாங்கடா… என்று என்னையும் சுடலைமுத்துவையும் நக்கலடித்ததுண்டு.
ஜெட் கோடு கிழிச்சிட்டுப் போறதையும் ரொம்ப ரசிச்சுப் பார்ப்போம். ஒருநாள் ப்ளேன் எங்கூரை கிராஸ் பண்ணி மேல பறந்தது.
“ஏலே சுடலைமுத்து ஒரு நாளைக்கு இதுல பறக்கணும்ல!”
ஏலே… இதென்ன பஸ்ன்னு நினைச்சியா… நாம பஸ்ஸிலே இஸ்கூலுக்குப் போறதே அதிசயமா இருக்கு… இதுல பிளைட் வேறையால!!!
இல்லல… ரொம்ப ஆசையா இருக்குல…
விடுல… சும்மா சொன்னேன். நீதான் நல்ல படிக்கியே… கவலப்படாதல. நீ பறப்பல.
சுடலைமுத்து, ஒண்ணுக்கு வந்தா என்னல பண்ணுவாங்க.
ட்ரைன் மாறி பின்னால ஓட்டை வச்சிருப்பானுவ..
அப்படின்னா எவனும் ஒண்ணுக்கு இருந்தா கீழே விழுந்தா… ஊரைக் கிராஸ் பண்ணும் போது ஆட்கள் மேல விழும்லால.. அப்படியெல்லாம் இருக்காதுல.
ட்ரைன்ல ஊருக்குள் போகும் போது எங்கலே போவுது.
ஏல… அது வேற.. இது வேற… அதுல யாரு மேலயும் தெறிக்காது. இதுல அப்படியால…
உள்ளே அடைச்சி வச்சா நாறாதால…
சிட்டில எங்க மாமா வீட்டுக் கக்குஸ்ல இருந்தப்போ வீட்டுக்குள்ள நாத்தமே வரலல்ல. ஆனா மாமா வீட்டுல பாச்சா உருண்ட வச்சிருந்தாவ. அப்படி எதுனாச்சும் பிளேன்ல வச்சிருப்பாங்க.
விடுல நாத்தம் பிடிச்ச கதையை என்றான் சுடலைமுத்து. ஐயாயிரம் கிலோமீட்டரைக் கூட சீக்கிரம் கொண்டு போய் விட்டுருமாமே. அப்படியால…
ஆமால… ஆனா நம்மூருக்கு மேல பறக்கும் போது பார்த்தா சின்னதா ஸ்லோவா போற மாதிரிதான் தெரியுதில…
அவசரம்னு போய் கேட்டா ஏத்துவானுகளா சுடலைமுத்து என்றேன்.
ஏத்தலன்னா என்ன மயித்துக்கு சீக்கிரம் கொண்டு போய் விடுவேன்னு சொல்றானுக.. ஏத்துவானுகன்னு நினைக்கேன்.
உட்கார இடம் கிடைக்கலன்னா கீழே தரையில் உட்கார்ந்துவாங்களா…
இல்ல ஸ்டாண்டிங்ல நின்னுக்கிட்டே வருவாங்களா… சுடலைமுத்து, ஆனா எனக்கு ஒரு டவுட்டு இருக்கு. அப்ப… ஏம்ல ஒரு படத்திலயும் எக்ஸ்ட்ரா ஆட்களைக் கூட்டி வர்ற மாதிரி காண்பிக்க மாட்டேங்கிறாணுக.
பஸ்சிலேயே ஒரு தடவை எங்கப்பா மெட்ராசில இருந்து நின்னுக்கிட்டே வந்திருக்காரு. மூணு மணி நேரம் நிக்க முடியாதா?
ஏ… மக்கா, ஜன்னலை திறந்து வச்சு ஈசியா ஊரைப் பார்க்கலாம்லா… அப்படியே மேகத்தையும் தொடலாம்லா என்றான் சுடலைமுத்து.
ஜன்னல் தெறந்திருந்தா வெயில் மாசத்தில வெயிலையும் குளிர் மாசத்தில குளிரையும் தாங்க முடியாதுலா… அதனால பூட்டித் தான் வச்சிருப்பாங்க…
ஒனக்கு ஒண்ணு தெரியுமால… எங்க தாத்தா சொன்னாரு, பறவைகள் பறக்கிறத பார்த்துத் தான் பிளேனைக் கண்டுபிடிச்சாங்களாம்.
அதான் பிளேன்லையும் ரெக்கை வச்சிருக்கானுக போல….
ஏம்ல பிளேன்ல எல்லாரும் போறது கஷ்டமால…
ஏ… மக்கா …, ஒரு டிக்கெட் லட்ச ரூபாய் இருக்குமோல… அதான் நிறைய பேர் பிளேன்ல போக முடியாம கஷ்டப் படுதாங்களோல….
ரெண்டு பேரும் என்ன ஏதுன்னு தெரியாமலே நெறைய பேசுனோம்.
மனிதர்கள் எப்பவுமே தமக்குக் கொஞ்சம் ஒரு விஷயம் தெரிஞ்சிருந்தாக் கூட , மீதியை அவர்களின் கற்பனை வளத்தைக் கொண்டு கேள்விகளையும், அது இப்படித்தான் இருக்குமென்ற தனது வாதத்தையும் முன் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
முதல் தடவை பிளேன்ல போனப்போ எனக்கு ஏகப்பட்ட சந்தோசம். ஊர்ல போய் சுடலை முத்து , பிளேன்ல கம்பெனி மூலமா ஒரு தடவை போயிட்டேம்ல… இந்த பால குமாரனின் கனவு நிறைவேறி விட்டது என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினேன்.
ஆனால் அலுவல் தொடர்பாக அடிக்கடி விமானத்தில் பயணிக்கிற வாய்ப்புக் கிடைத்த பிறகு, அந்தரத்தில் பறந்து கொண்டிருக்கிற எனக்கு , ஏலே… சுடலைமுத்து … பிளேன்ல போறதைக் காட்டிலும் கொடுமையான பயண முறை எதுவுமில்லன்னு கத்தணும் போல இருக்குது. ட்ரைன், பஸ்சுன்னா ஈசியா கத்திருப்பேன். போலி நாகரிகம் என்னைக் கத்த விடாமல் கட்டிப் போட்டிருந்தது.