வாக்கு சதவிகிதம் : ஒரு மாயை

ஒவ்வொரு தேர்தலில் வெற்றி பெறும்போதும், வெற்றி பெற்ற கட்சிகள் இது ஆளுங்கட்சிக்கு எதிரான வெறுப்பு என்றும் தம் தலையை மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டதால் கிடைத்த வெற்றி என்றும் கதைப்பது வழக்கம். தோல்வியுற்ற கட்சிகள் முன்வைக்கும் விளக்கங்கள் இப்படி இருக்கும் : ‘நாங்கள் பெருந்தன்மையுடன் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்.’ அல்லது, ‘எங்கள் சாதனைகளை முழுமையாக மக்களிடம் எடுத்துச் செல்ல தவறிவிட்டோம்.’ அல்லது, ‘தோல்வியுற்றபோதிலும் எங்கள் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் கட்சிக்கும் கிடைத்திருக்கும் வாக்கு சதவிகிதம் குறைவுதான்.’

தமிழகத்தில் கடந்த 5 சட்டசபைத் தேர்தல்களிலும், லோக்சபா தேர்தல்களிலும் அதிமுக, திமுக கட்சிகளுக்கு வாக்கு சதவிகிதம் எவ்வாறு அமைந்துள்ளன என்பதைப் புரிந்துகொண்டால் சில விஷயங்கள் தெளிவாகும்.

1991 சட்டசபைத் தேர்தல் ராஜீவ் காந்தியின் இறப்பையொட்டிய மிகப் பெரிய அனுதாப அலையை அதிமுக அணிக்கு வழங்கியது. 1996 சட்டசபைத் தேர்தல் அதிமுகவின் மிகப்  பெரிய ஊழல், ஆடம்பரம் ஆகிவற்றுக்கான எதிர்பலையையும், ரஜினியின் ஆதரவுடன் த மா கா என்ற கட்சியை மூப்பனார் உருவாக்கி திமுகவுடன் அணிசேர்ந்து சந்தித்த தேர்தல்.

1991, 1996 ஆகிய இரு சட்டசபைத் தேர்தல்களும் ஏறத்தாழ முன் முடிவுகளுடன் நடந்தத் தேர்தல்கள். ஆனால் 2001, 2006 தமிழக சட்டசபைத் தேர்தல் இரு கட்சிகளின் எதிர்ப்பலையிலோ ஆட்சிக்கு எதிரான மிகப் பெரிய மாற்றாக நடந்த தேர்தல்களோ அல்ல. இந்தத் தேர்தல் காலகட்டம் மிகச் சிறந்த மாற்று அணியை வலுவாக உருவாக்குபவர்கள் வெற்றி பெற இயலும் எனக் காட்டியது. மேலும் இந்த வாக்கு சதவிகிதக் கணக்கில் இரு பெரும் கட்சிகளுக்கும் ஒரு சிக்கலுண்டு. அது அவர்கள் கூட்டணிக் கணக்கின் அடிப்படையில் எத்தனை இடங்களில் நிற்கிறார்கள் என்பதைப் பொறுத்து அமையும்.

2001 தேர்தல் என்று நினைக்கிறேன். கருணாநிதி வாக்கு எண்ணிக்கையையும் வாக்கு சதவீதத்தையும் ஒப்பிட்டு ஒரு கணக்கைச் சொன்னார். அதாவது மிகச் சொற்ப வாக்கு எண்ணிக்கையையே அதிமுக அதிகம் பெற்றதாகக் குறிப்பிட்டார். மிக சௌகர்யமாக தங்களது கட்சி 42 இடங்களில் அதிமுகவைக் காட்டிலும் அதிகமாக நின்றதை மட்டும் மறைத்துவிட்டார். பெரும்பாலும் கூட்டணிக் கட்சிகளின் வாக்கு என்பது சில தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை பெற உதவுகிறது , மேலும் மக்களுக்கு ஒரு strong ஒபினியன் தரச் செய்யும் என்பதற்கான அடிப்படையாகவே உள்ளது. ஆனால் தமிழகத்தின் எந்தத் தொகுதியாக இருப்பினும் அதிமுக திமுகவுக்கு என உள்ள வாக்கு சதவீதம் மிக அதிகம். (சொற்ப இடங்களைத் தவிர).

TN Legislative Resultsகருணாநிதி அளித்த விவரம், கட்சிகள் நின்ற இடங்கள், அவை பெற்ற வாக்கு சதவிகிதம் ஆகியவற்றை உதாரணமாகப் பார்க்கலாம். 2001 தேர்தலில் அதிமுகவின் வாக்கு சதவீதம் 31.44 % . திமுக 30.92% . அதிமுக 141 இடங்களில் நின்று 131 இடங்களைப் பிடித்துள்ளது. திமுக 183 இடங்களில் நின்று 31 இடங்களில் வெற்றி பெற்றது. இந்தக் கணக்கைத் தான் கருணாநிதி ஒப்பிட்டார். ஆனால் vote % in seats contested பற்றி ஒப்பிட்டால் அதிமுக 52.08 %. திமுக 39.02% . 2011 தேர்தல் வாக்கு சதவீதம் ஒப்பிட்டால் அதிமுகவின் வாக்கு சதவீதம் 32.64 % . திமுக 26.46% . அதிமுக 188 இடங்களில் நின்று 61 இடங்களைப் பிடித்துள்ளது. திமுக 132 இடங்களில் நின்று 96 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் vote % in seats contested பற்றி ஒப்பிட்டால் அதிமுக 40.81%. திமுக 45.99%. வாக்கு சதவீதத்தை நாம் எவ்வாறு அணுக வேண்டும் என்பதற்காகவே இந்த ஒப்பிட்டைச் செய்துள்ளேன்.

வாக்கு சதவீதம் பற்றிய ஆய்வை மேற்கொண்டால் சில அடிப்படை விடயங்கள் எளிதாகப் புரியும்.

  1.  அதிமுக, திமுக ஆகியவை வாங்கிய வாக்கு சதவீதமென்பது அவர்கள் எத்தனைத் தொகுதிகளில் நின்று அதைப் பெற்றுள்ளார்கள் என்பதை வைத்தும், இரு கட்சிகளும் எத்தகையக் கூட்டணியை அக்கால அரசியல் சூழலுக்கு ஏற்றாற்போல அமைத்துள்ளார்களோ அதற்கேற்றாற் போலவே வாக்கு சதவீதத்தில் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
  2. Vote % in Seats Contested என்பதை அடிப்படையாகக் கொண்டு கவனித்தால் சட்டசபைத் தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறுகிற தருணங்களில், பெரும்பாலான தேர்தல்களில் திமுகவைக் காட்டிலும் 10% க்கு அதிகமான வாக்கு வித்தியாசத்தில் உள்ளதைக் காண முடிகிறது. திமுக பலமான கூட்டணி அமைத்தே 5% வாக்குகள் அதிகம் பெற்றுள்ளதைப் பார்க்க முடிகிறது. இவையும் அவர்கள் நின்றுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே அமைந்துள்ளது.  1991, 96 தேர்தல்கள் விதிவிலக்கு.
  3. ஒரு கட்சி வாங்கியுள்ள வாக்கு சதவீதத்தை வைத்து வெற்றி தோல்விகள் கிடையாது. அக்கட்சி எத்தனை இடங்களில் போட்டியிட்டுள்ளது என்பதை வைத்தே  அத்தகைய வாக்கு வங்கியை பெற்றுள்ளது. ஆதலால் அவர்கள் நின்ற தொகுதியில் மக்கள் எத்தனை சதவீதத்தை அளித்துள்ளார்கள் என்ற கணக்கினைப் பார்க்க வேண்டியுள்ளது. இதில் கூட்டணிக் கட்சிகளின் பங்களிப்பையும் பார்க்க வேண்டியுள்ளது.
  4. லோக்சபா தேர்தல்கள் ஏறத்தாழ மத்தியில் யார் ஆட்சியில் அமர வேண்டும் என்ற அடிப்படையில்தான் வாக்குகளை அளித்துள்ளார்கள் என்று பார்க்க வேண்டியுள்ளது. ஆனால் இதிலும் 2014 தமிழக லோக்சபா தேர்தல் முடிவுகள் தமிழக ஆளுங்கட்சியான அதிமுகவுக்கே சாதகமாக அமைந்துள்ளது.

அனைத்துத் தரவுகளும் தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்திலிருந்தே எடுக்கப்பட்டுள்ளன.

http://eci.nic.in/eci_main1/ElectionStatistics.aspx

http://eci.nic.in/eci_main1/GE2014/ge.html

மேற்கூறிய அட்டவணையைக் கூர்ந்து கவனித்தால் கட்சிகளின் வாக்கு சதவீதம் மாயை என்பது மட்டும் தெளிவாகப் புரியும். அதே வேளை திமுகவுக்குக் குறைந்த பட்சம்  23% வாக்குகளும், அதிமுகவுக்கு குறைந்த பட்சம் 28% வாக்குகளும் உள்ளன என்பதும் தெரிகிறது.

சாதி ஒழிய என்ன தேவை?

2007042307350401அமெரிக்காவில் கறுப்பர் வெள்ளையர் இனப்பிரிவினை பார்க்கக்கூடாது என 1968 ஆம் ஆண்டு அமெரிக்க அரசு Fair Housing Act என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட வெள்ளை இனத்தவரின் சம்மதத்துடனே சட்டம் நிறைவேறியது. சட்டத்துக்கும் நடைமுறைக்கும் உள்ள முரண் இனப்பிரிவினையிலும் தொடர்ந்து இருக்கிறதா என்பதை அறிய ஹுபர்ட் ஓ கோர்மான் என்பவர் ஓர் ஆய்வை மேற்கொண்டார்.

அமெரிக்க வெள்ளையர்களிடம் முதலில் அவர் தொடுத்த கேள்வி, நீங்கள் இனப் பிரிவினை பார்ப்பவரா? இனப்பிரிவினை பார்ப்பது தவறென நினைக்கிறீர்களா?. இக்கேள்விக்கு 82% வெள்ளையர்கள் தாம் இனப்பிரிவினை பார்ப்பவரல்ல என்று பதிலளித்துள்ளனர். இதைக் கணக்கில் கொண்ட கோர்மான் சில மாதங்களுக்குப் பிறகு தாம் ஆய்வு செய்த அதே அமெரிக்கர்களிடம் கேள்வியை மாற்றிப் போட்டார்.

இம்முறை அவரின் கேள்வி சற்று வித்தியாசமானது. பதிலிலிருந்து கேள்வியை எழுப்பினார். நீங்கள் இனப்பிரிவினைப் ( racist) பார்ப்பவரல்ல, ஆனால் உங்களைச் சுற்றியுள்ள வெள்ளையர்களோ, உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள வெள்ளையர்களோ இனப்பிரிவினை பார்க்கிறார்களா? என்ற கேள்வியை முன் வைத்தார். பதிலளித்தவர்கள், ஆமாம், எனக்குத் தெரிந்து நிறைய வெள்ளையர்கள் வீடுகளை கறுப்பர்களுக்குக் கொடுக்க விரும்புவதில்லை. அவர்களின் மீதுள்ள நம்பிக்கையின்மையே வீடுகளையோ அல்லது அவர்கள் வாழும் பகுதிகளில் கறுப்பர்கள் வாழ விருப்பப்படாதவர்களாகவே தாங்கள் சந்தித்த பல வெள்ளையர்களும் உள்ளதாகப் பதில் அளித்தனர்.

இந்த ஆய்வை அப்படியே தமிழ்நாட்டில் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டால் பதில் எவ்வாறு இருக்கக்கூடும். நீங்கள் சாதி, மதம் பார்த்து நட்பு கொள்பவரா? அல்லது நீங்கள் சாதிய சிந்தனைகள் உள்ளவரா? இதை நேரடியாகக் கேட்டால் அமெரிக்காவில் சொன்னது போலவே நான் அனைத்து சாதியினரிடமும் நட்புப்பாராட்டுபவன் என்றே பதிலமையும். என்னுடைய நண்பர்கள் இவர்கள்தான் என்று அடையாளப்படுத்தவும் முனைவார்கள்.

கோர்மான் கேட்ட இரண்டாவது கேள்வியை நம்மூரில் இவ்வாறு கேட்டால் பதில் எவ்வாறு இருக்கும். நீங்கள் சாதி பார்த்துப் பழகுவதில்லை. ஆனால் உங்கள் வீட்டிலோ உங்கள் அக்கம்பக்கத்தாரோ சாதி பார்த்து மதம் பார்த்து வீட்டை வாடகைக்கு விடுகிறார்களா? பணம் யார் தருவார்கள் எனப் பார்த்து விடுகிறார்களா? என்ற கேள்வியை வைத்தால் பதில் மேலே பார்த்த அமெரிக்கர்களின் பதிலைப் போலவே இருக்கும். ஆம், எங்கள் வீட்டிலும் சரி, அக்கம்பக்கத்திலும் சரி, குறிப்பிட்ட சாதியினருக்கோ, அல்லது பிரச்னை செய்யாத சாதியரா? என்று பார்த்து விட்டே பெரும்பாலும் வீடுகளை வழங்குவதாக அவர்கள் சொல்லக்கூடும். சில சாதியினர் வாடகைக்கு வந்த பின் பணம் தராமல் போகக்கூடும் அல்லது வீட்டைக் காலி பண்ண மாட்டேன் என்று பிரச்னை பண்ணுவார்கள். ஆதலால் அவர்களிடம் மல்லுக்கு நிற்பதற்குப் பதிலாக, முதலிலேயே ஆள் பார்த்து விடுகிறார்கள் என்றே தாம் புரிந்து கொள்வதாக விளக்கம் அளிப்பார்கள்.

ஜெயமோகன் தமது ஒரு கட்டுரையில் சாதி பற்றிக் குறிப்பிடும் போது, தமிழகத்திலுள்ள பெரும்பாலோர் தாம் பழகும் நபர் என்ன சாதி என்று உள்ளுக்குள் அறிய விரும்புபவர்களாகவே உள்ளனர் என்று கூறுகிறார். அதன் மூலம் அவரிடம் பழகுவதை அவர்கள் நிறுத்தப்போவதில்லை. ஆனால் அவர்களிடம் எதைப் பற்றி எவ்வாறு பேச வேண்டும் என்ற முன்னெச்செரிக்கையுடன் பழகுகிறார்கள்.

மேற்கூறிய இரண்டு நிகழ்விலும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது, அடிப்படையில் மனிதர்கள் தனிப்பட்ட முறையில் சாதி வெறியோடோ, இனப்பாகுபாட்டுடனோ இருப்பதில்லை. ஆனால் அவர்கள் சார்ந்த சமூகத்தில் பலர் அவ்வாறு உள்ளதாக நினைக்கிறார்கள். பலரும் சாதி வெறியரோ, இனப்பிரிவினை பார்க்கிற அளவுக்கு கொடூரமானவர்களுமல்ல, அதேபோல தான் பார்ப்பதில்லை என்று சொல்லிக் கொண்டே, மற்றவர்கள் இவ்வாறே இருக்கிறார்கள் என்ற பரவலான எண்ணம் அவர்களையும் தான் சார்ந்த சமூகச் சிந்தனைக்குள் பயணிக்கச் செய்கிறது. இந்தக் கேள்விகளை வரதட்சணை,  ஆட்சி, அதிகாரம், ஜனநாயகம், வளர்ச்சி எனப் பலவாறாகக் கேட்டாலும் பதில்கள் இதைப் போலவே அமையக்கூடும்.

இந்தப் பிரச்சினையிலிருந்து அல்லது இவ்வெண்ணத்திலிருந்து மனிதர்கள் விடுபட என்ன வழி? நாம் பெரும்பாலும் வழி நடப்பவர்களாகவே இருக்கிறோம். சட்டத் திட்டங்கள் என வரையறுக்கப்பட்டவற்றை கேள்வி எழுப்புபவராகப் பெரும்பாலும் இருப்பதில்லை. இதுகுறித்த ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் அமைவதில்லை. இரு பக்கமும் அடுத்த பக்கத்தினரின் அராஜகம் பற்றியே கேள்வி எழுப்புகிறோம். சமூக வாதிகள் என சொல்லிக்கொண்டு ஒடுக்கப்பட்டவர்களின் பக்கமே நியாயம் பேச இயலும் என ஓரணியும், அரசின் அனைத்து சலுகைகளையும் வாங்கிக் கொண்டும், எண்ணிக்கையில் பலம் பெற்றவர்களாக இருப்பதால் இன்று ஒடுக்கப்பட்டவர்கள் வேண்டுமென்றே பிரச்னை செய்கிறார்கள் என்று அடுத்த பக்கம் மட்டுமே நியாயம் பேசும் வரையிலும் இப்பிரச்சினைகளுக்கு முடிவுகள் கிடைக்கப்போவதில்லை.

இந்த ஒற்றைச் சார்பு மனநிலையோடு சாதிகள் ஒழிய வேண்டும் என்று நியாயம் பேசுவது வெறும் முற்போக்கு, பிற்போக்கு அடையாளமாகவே பார்க்கப்படும். மாறாக இரு பக்கமும் உள்ள தவறைப் புரிந்து கொள்ளும் மைய எண்ணத்தைக் கொண்ட சமூகவாதிகள் தான் இன்றைய தேவை. அவர்களாலும், கல்வியறிவு, விஞ்ஞான வளர்ச்சி போன்றவற்றின் மூலமே இப்பிரிவினை எண்ணங்கள் ஒழியக்கூடும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s