மத்திய அரசு சமசுகிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தேயாக வேண்டும் !!!

1. மத்திய அரசு சமசுகிருத வாரமாக அனைத்து மாநிலங்களிலும் உள்ள CBSE பள்ளிகள் கொண்டாடுவது சரியா? தவறா? என்ற கேள்வியை முன் வைப்பவர்களுக்கான பதில் கட்டுரை அல்ல இது.

2. தமிழைக் காட்டிலும் சமசுகிருதம் உயர்ந்த மொழி என்று வாதிடுவதற்காக எழுதப்படவில்லை. தமிழை நீங்கள் எந்த அளவுக்கு நேசிக்கிறீர்களோ அதே அளவிற்கு உளப்பூர்வமாகக் காதலிக்கிறேன். ஆதலால் தமிழைக் காட்டிலும் சமசுகிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக நீங்களாகப் பொருள் கொண்டு என்னிடம் கேள்வி எழுப்புவதால் எந்தப்பயனும் இல்லை.

இப்போது சமசுகிருதத்திற்கு மத்திய அரசு ஏன் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றிச் சொல்லி விடுகிறேன். ஒவ்வொரு சமயத்திற்குமான மூல நூல்கள் குறிப்பிட்ட மொழியில்தான் அதிகம் உள்ளன. அவ்வகையில் என்னுடைய இந்தியாவின் ஆதிகாலச் சமயமான இந்து சமயத்தின்(அதுதான் இந்தியாவின் அடிப்படை கலாச்சார, பண்பாட்டின் அடையாளங்கள்) மூல வேதங்களான ரிக், யசூர்,சாம, அதர்வணம் போன்ற வேத நூல்களாகட்டும், இரு பெரும் இதிகாசங்களான மகாபாரதம், ராமாயாணம், பகவத் கீதையாகட்டும். அவையாவும் சமசுகிருத மொழியில் தான் முதன்முதலாக எழுதப்பட்டுள்ளன.

இந்தியா ஆகச்சிறந்த தத்துவார்த்த நாடாக விளங்குவதற்கு இந்நூல்கள் கற்பிக்கும் வாழ்வியல் பாடங்கள் முக்கியம். சமசுகிருதத்தை தமிழ் மீது கொண்ட காதலால் வெறுப்பவர்களை மன்னித்து விடலாம். மத நம்பிக்கைகளில் ஈடுபாடில்லாதவர்களுக்கு இது முக்கிய விடயமாகப் படப்போவதில்லை. ஆனால் இந்து என்கிற உணர்வோடு இருக்கிறவர்கள் எந்த அடிப்படையையும் புரிந்து கொள்ளாமல் இந்திய அரசு, சமசுகிருதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை எதிர்ப்பதைத் தான் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. நம்மவர்களுக்கு கட்சித் தலைமைகள் சொல்வதே வேத வாக்கு. அதன் அடிப்படையில் மட்டுமே ஒவ்வொரு விடயத்தையும் அணுகுகிறார்கள். அதுதான் அடிப்படைப் பிரச்சினை.

அவர்களின் முக்கியக் குற்றச்சாட்டே பேச்சு வழக்கற்ற தற்போதைய காலக்கட்டத்தில் எழுத்து வழக்கிலும் அல்லாத மொழிக்கு தமிழைக் காட்டிலும் (பிற பிராந்திய மொழியைக் காட்டிலும்) பன்மடங்கு அதிக நிதியை ஒதுக்குவதைத் தான் பொறுக்க முடியாமல் எதிர்க்கிறார்கள். அவர்கள் எக்காரணத்தைக் கொண்டு எதிர்க்கிறார்களோ அதே காரணத்திற்காகத் தான் நான் ஆதரிக்கிறேன். ஏன் என்ற கேள்வி முன் வைக்கப்படலாம்?

கோடிக்கணக்கிலான மக்கள் பெருவாரியாக பேசுகிற , எழுதுகிற பிராந்திய மொழிக்குக் கல்விக்கு ஒதுக்குகிற நிதியும், மாநிலங்கள் கொடுக்கிற முக்கியத்துவம் மற்றும் பிராந்திய மொழியைப் பயன்படுத்துபவர்களைக் கொண்டே, அம்மொழிகளை பேணிக்காக்க இயலும். குறிப்பாக மாநில அரசுகள் தாய்மொழி வழிக் கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தல், அரசு வேலை வாய்ப்பில் தாய்மொழிக் கல்வி கற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தல், அரசு அலுவல் மொழி மற்றும் மொழி ஆய்வுத்துறைகளுக்கான மாநில நிதி ஒதுக்கீட்டின் கீழ் மொழி வளர்ச்சிக்கான வழிமுறையைக் கையாள்வதன் மூலம் மொழியை மேம்படுத்தச் செய்ய இயலும்.

சமசுகிருதம் உத்திரகாண்டில் கூட இரண்டாம் மொழியே ஒழிய பிரதான மொழியாக இல்லை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். லத்தீன் மொழி பயன்பாட்டாளர்கள் இன்று யார் உள்ளார்கள்? ஆனால் அதைப் பொக்கிஷமாகப் பாதுக்காக்க அவர்கள் தொடர் முயற்சியைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்வோம். மேலும் சமசுகிருத்ததிற்கு முக்கியத்துவம் கொடுப்பதை நீங்கள் எதிர்க்கக் குறிப்பிடும் முக்கியமான காரணமாகிய எவனும் பேசாத, எழுதாத மொழிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து இந்து சமயத்தின் நூல்களையும் , அதில் சொல்லப்பட்டுள்ள தத்துவார்த்த விடயங்களையும், வானியல், அறிவியல், கணிதம் சம்பந்தப்பட்ட விபரங்களைப் பேணிப் பாதுகாக்கா விடில் நம்முடைய அடிப்படையை இழந்து விடுவோம் என்பதைக் கூடப் புரிந்து கொள்ளாமல் கண்ணை மூடிக் கொண்டு எதிர்ப்பது எவ்வாறு? மத்திய அரசு அதைச் செய்யாவிட்டால் யார்தான் அதைச் செய்வார்கள்?. சிந்தியுங்கள் நண்பர்களே. இந்து சமயத்தின் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்கள் இதை ஆதரிக்க வேண்டும்.