பெருமாள் கோயில் கொடையும் அம்மன் கோயில் கொடையும்:

 

 

saamiyaadi

 

 

“ஏண்ணே… எப்படி இருக்கீய? நல்லா இருக்கியேலா!”

“நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க?”

“இந்தா பார்க்கியல்லா…” பொன் பாண்டி எப்பவுமே இப்படித்தான் பதில் சொல்வான். ரொம்ப நாள் ஊர்ல பார்க்கவில்லையென்றாலும் கூட அதே உரிமையில் பதில் சொல்வது கிராமத்துக் கதைகளை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எளிதாகவே நகர்த்திச் செல்ல உதவுகிறது.

அவன் மட்டுமல்ல. கிராமத்திலுள்ள பெரிசுகள் முதல் நண்டு நசுக்குங்க வரைக்கும் ஆரம்பக் கேள்வியிலேயே அந்த உரிமையை எடுத்துக் கொள்வார்கள். கேள்வியும் பதிலும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு ரகம் தான். வயசுப்பசங்ககிட்டே கூடவே நக்கல் தொனியும் தென்படும்.

ஏ… பொன்பாண்டி பெருமாள் கோயில் கொடை முடிஞ்சிருச்சா ? இல்ல இனிம தானா? (பெருமாள் கோயில்னு சின்னப் பிள்ளைகளிலிருந்தே சொல்லிப் பழகியாச்சு. ஆனால் அதுல ஒரு அம்மனும் உண்டு.)

“ஏண்ணே…. அது இப்ப வைகாசியிலல்லா கொடுக்காக…”

“ஆடியில தானல எப்பவும் கொடுப்பாக…”

“பெருமாளுக்கு ஆடியில கொடை கொடுத்தாப் பிடிக்கும். ஆனா பக்தர்களுக்கு வைகாசிதானே வே பிடிச்சிருக்கு…”

சாமி கொண்டாடி பாண்டி நாடார் சில வருடங்களுக்கு முன்னாடியே, சாமியாடும் போது “ யாரைக் கேட்டுப்பா…. வைகாசியில மாத்துனேன்னு கேட்டுச்சு… “

தாமோதர நாடார் தான் எப்பவுமே சாமிக்கிட்டே கேள்வியும் கேப்பார்… பதிலும் சொல்வார். “ ஏன் வைகாசி உனக்கு ஆகலையா” ன்னார்.

“ம்ம்ம்…. எனக்குக் கொடை கொடுக்கியா…. இல்ல… ஒன் சவூர்யத்தப் பார்க்கியா” – இது சாமி.

“சரி… பிடிக்கலன்னா சொல்லு… அடுத்த வருஷத்திலேருந்து ஆடியிலேயே கொடுத்துப்புடலாம்..”

“சாமி, ஒரு முப்பது செகண்டு கழிச்சு அடி மேளத்தை” ன்னார்.

அதுக்கப்புறம் ஆடியில தான் கொடை கொடுத்துக்கிட்டு இருந்தாங்க… இப்ப திருப்பியும் வைகாசியில கொடையை மாத்திட்டு இருக்காங்க…

பொன் பாண்டி ஏன் திருப்பியும் வைகாசிக்கு மாத்திட்டாக…
அதாண்ண… ஆடியில கொடுத்தா ஸ்கூல் ஆரம்பிச்சிருதுல்லா… வைகாசின்னா பிள்ளையளுக்கு ஸ்கூல் லீவு. வைகாசின்னா பிள்ளையள கூட்டிக்கிட்டு ஒரு நாலு நாளைக்கி முன்னையே எல்லா வீட்டுல உள்ள பொண்டாட்டிமார்களும் பிள்ளையளும் வந்துரும். அந்தால இங்கனக்குள்ளே திருச்செந்தூர்…. கன்னியாகுமரின்னு எங்கியாவது டூர் போவாவ… அவ்வோ நாடாக்கமார் பூரா பேரும் திருப்பூர், கோயம்புத்தூர், மெட்ராஸ்ல இருக்கிற அவ்வவோ கடையை சனிக்கிழமை அடைச்சிட்டு, ஞாயித்துக் கெளம காலையில வந்துருவாவோ…

“அது சரில… சாமி கோபப் படலயா”

“அப்ப பாண்டி நாடார் ஆடுன்னார்… இப்ப அவருக்கு வயசாகிட்டுன்னு அவர் மவன் சரவணன் தான் ஆடுதான். இப்ப அவன் பிள்ளையளும் திருப்பூர்ல படிக்கில்லா.. அதான் சாமி கோபப் படல போல…” மீண்டும் நக்கலோடு பதில் சொன்னான் பொன்பாண்டி. ஊர்ல உள்ள பெரிசுக தான் “ஆடியிலதான் கொடுக்கணும்… ஆடியிலதான் கொடுக்கணும்னு ஆடி… ஆடி… பார்த்தாவ… “ எவம்ண்ணே கேக்கான்.

“ஏன் ஒருத்தனும் கேக்கலங்கிற…..”

அதான் சொன்னம்லாவே! ஆடியில கொடுத்தா நீரு வேணா முதல்ல போரும்…. நானும் பிள்ளைகளும் ஞாயித்துக் கெளம காலையில வந்துட்டு திங்கட் கெளம கெளம்பிருவோம்… பத்தாக்குறைக்கு பரீட்சை வந்துட்டா…. இந்த வருஷம் நாங்க வரலன்னுட்டு ஒரே சண்டை வீட்டுக்கு வீடு.

“பின்ன..”

பின்ன என்னவே… போன வருஷம் அவ்வோல்லாம் பிள்ளையள கூட்டிக்கிட்டி வரவா செஞ்சாவ… நீரு சொல்லித் தான் போன வருஷம் வந்தோம்… ஆடிக் கொடைன்னா நீங்க மட்டும் போயிட்டு வாங்கன்னு… இங்க பிள்ளைகளுக்குப் படிப்பு இருக்கு. பொண்டாட்டிமாருக மொகத்த திருப்பிக்கிட்டாளுக. அம்புட்டுத்தான்… கொடையை வைகாசிக்கு மாத்தியாச்சு.
“அப்படியால… அது சரி… இந்த வருஷம் கொடைக்குக் கூட்டம் எப்படி இருந்துச்சு..”

ஏண்ணே…. எல்லா வீட்டுலயும் வந்துருந்தாவ… ஆனா என்ன கோயிலுக்குத் தான் மணியடிக்க ஆரம்பிச்சாதான் எல்லாம் வந்தாக. முன்னல்லாம் கொடைன்னா வில்லுப் பாட்டு ஆரம்பிச்சாலே நல்லா மேக்கப் போட்டுக்கிட்டு கோயில்ல வந்து அங்கனக்குள்ளே உக்காந்து கதை பேசுவாங்க.. இப்ப அவ்வோ வர்றதுக்கு அவென்அவென் போன்ல கூப்டுதான். சாமிக்கு அலங்காரம் ஆயிருச்சு. கெளம்பி வாங்கன்னு….

நான் சின்னப் பயலா இருந்தப்போ… கோயில் கொடைன்னா… ஊர் முழுக்க பந்தல்… ஸ்பீக்கர் செட்… கலர் கடைகள், முறுக்கு கடைகள் என ஊரே எப்பப் பாத்தாலும் கோயிலை சுத்திச் சுத்தி வரும். ஏல… செத்த நேரம் தூங்கம்ல ன்னு சொன்னா, அதான் வருஷம் புல்லா தூங்கத் தான செய்றோம். இது நம்ம கொடை…. நாம நிக்கலைன்னா எவன் வருவான்னு கொடை கொடுக்கிறவன் அத்தனை பேரும் புது டிரெஸ்ஸ போட்டுக்கிட்டு கோயிலை சுத்திச் சுத்தி வருவானுங்க… இப்ப என்னடான்னா ஸ்பீக்கரும் பந்தலும் இருக்கு. வயசான பெருசுங்க மட்டும் கோயில்ல உட்கார்ந்துருக்காங்களாம். பெண்களெல்லாம் கொடை ஆரம்பிக்கும் போதுதான் வர்றாங்களாம்.

“பொம்பளையாட்கள் வரலன்னா அதெண்ணன கோயில் கொடை” என்றான் பொன்பாண்டி.

ஆமாம் என்று தலையாட்டி வைத்தவன், . அம்மன் கோயில் கொடை எப்படில நடந்துச்சு.

அது பட்டையைக் கெளப்பிருச்சுல்லா. வில்லுப்பாட்டு, கரகம், நாதஸ்வரம் அம்புட்டு பேரையும் நல்லா சுலுக்கு எடுத்துட்டுதான அம்மன்கோயில் கொடையில விடுவாங்க. கொடைக்காரனுக முக்காவாசி பேருக்கு மேல இங்க தான இருக்கானுக.

அம்மன் கோயில் கொடையைப் பொறுத்தவரையில் தேவர், ஆசாரி, பண்டாரம் மூணு பட்டறை காரங்களும் சேர்ந்துதான் கொடுக்கிறாங்க. பெரும்பாலும் உள்ளூர்ல உள்ள கொத்தனார் வேலை, மர வேலை, பூ கட்டுறது, வயலைப் பார்த்துக்கிறது, கந்து வட்டி போன்ற தொழில்களோடு வெட்டியாவே ஒரு குருப்பும் ஊர்ல வலம் வரும். இந்த வெட்டிக் குருப்புங்க ஒரு நாள் வேலைக்குப் போகும், நாலு நாளைக்கு வெட்டியா கதையடிச்சுக்கிட்டும் சீட்டு வெளையாடிகிட்டும் நேரத்தைப் போக்கிக்கிட்டு இருக்கும்.

அம்மன் கோயில் கொடை எப்பவுமே கூடுதல் வசீகரம்தான். இத்தனைக்கும் வரித்தொகை கம்மி. ஆனால் கொஞ்சம் கூடுதல் குடும்பங்கள் வரி கொடுக்கின்றன. மூணு பட்றையிலிருந்தும் ஓரொரு தர்மகத்தா செலக்ட் பண்ணி இருப்பாங்க.

பெருமாள் கோயில் கொடையில் பூஜை நடக்கும் போது வந்தா பெரிய மனுஷ அடையாளம். ஆனா அம்மன் கோயில் கொடையில கோயில்ல முன்ன நின்னுக்கிட்டு மூணு நாள்ல தொண்டை கட்டுற அளவுக்கு ஸ்பீக்கர் சத்தத்திலும் பேசிக்கிட்டு, குளிக்க மட்டும் வீட்டுக்குப் போய்க்கிட்டு இருக்கிறவுக தான் பெரிய மனுஷன். அவுகதான் கொடை கொடுக்கிறதில முக்கியமான ஆட்கள்.

ரெண்டு கோயில் கொடையிலும் ஒரே காமனான விஷயம், அப்பப்ப மைக்கில, எங்கிருந்தாலும் ஜெயபால் நாடார் அவர்கள் கோயிலுக்கு வரும் படி விழாக்கமிட்டியார் அழைக்கிறார்கள். முத்தையா தாத்தா எங்கிருந்தாலும் உடனடியாக அம்மன் கோயிலுக்கு வரும்படி விழாக் கமிட்டியார் அழைக்கிறார்கள். இந்த மாதிரி டையலாக் மட்டும் வந்துக்கிட்டே இருக்கும்.

பொன்பாண்டி இதையெல்லாம் சொல்லச் சொல்ல நான் புரிஞ்சுக்கிட்டது இதுதான். பிழைப்பைத் தேடி பெரும்பாலும் வெளியில் சென்ற குடும்பங்கள் கொடுக்கிற பெருமாள் கோயில் கொடையில், அவர்கள் ஊருக்கு வர்றதையே விருந்துக்கு வந்து செல்வதுபோல ஆகி இருக்கிறார்கள். அவர்களில் வசதி படைத்த, படைக்காத ரெண்டு குடும்பங்களுக்கும் இது பொருந்தும். அம்மன் கோயில் கொடையைப் பொறுத்தமட்டில், பெரும்பாலோர் இன்னமும் மண்ணின் மைந்தர்களாக அவர்களும் அவரது வாரிசுகளும் ஊரையே உலா வருவதால் இன்னமும் கோயில் கொடை அன்னைக்கு அதே உற்சாகத்தோடு கொண்டாடுகிறார்கள்.

கடைசியா பொன்பாண்டி சொன்ன செய்தி, எல்லாரும் கூடி மகிழத்தான கொடை கொடுக்கிறோம். அப்ப நமக்கு எப்ப சவ்ர்யமோ அப்ப கொடுக்கிறதில என்னண்ணே தப்பு இருக்கு.. இன்னொன்னையும் சொன்னான், நாங்க பொழப்ப தேடி வெளிய போனதால, எங்கே நம்ம பிள்ளைகள் சொந்த ஊரை மறந்துருமோங்கிற பயத்தில தான் வைகாசிக்கு கொடை கொடுக்க சம்மதித்ததாக நாடார் சமூக ஆண்கள் சொன்னதாக பொன் பாண்டி கடைசியில் சொன்னான். கோயில் கொடைகள் கூடி மகிழ, அப்ப தான நம்ம ஆட்கள் அத்தனைப் பேரையும் பார்க்க முடியும்னு சொன்ன போதுதான் பெருமாள் நிச்சயம் இந்த பக்தர்களின் வேண்டுதலை ஏத்துக்குவார் என்று நம்ப ஆரம்பித்தேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s