லெட்சுமியும் நாராயணசாமியும்

cinema theatre

கடந்த சில ஆண்டுகளாகவே ஊருக்கு செல்லும்போதெல்லாம் எனக்குக் கிடைக்கிற தகவல் லெட்சுமிக்கும் நாராயணசாமிக்கும் இன்னும் நேரம் சரியாக அமையவில்லை என்பதுதான். பார்க்க வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் ஒண்ணு லெட்சுமியைத் தனியாகப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. இல்லையென்றால் நாராயணசாமியைத் தனியாகப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. லெட்சுமியையும் நாராயணசாமியையும் எப்போது சேர்த்துப் பார்க்கப் போகிறேன் என்று தெரியவில்லை.

இசக்கிக்கிட்டே , ‘மக்கா இந்தத் தடவை லெட்சுமியைப் பார்க்க முடியுமா? நாராயணசாமியை மட்டுந்தான் பாக்க முடியுமான்னு?’ கேட்டேன். இன்னைக்கு, இல்ல நாளைக்குள்ள பாக்கப் போயிருவோம். ஏன்னா… நான் நாளாக்கழிச்சி மெட்ராசுக்குப் போயிருவேன்.

இந்தத் தடவை ஒனக்கு அந்தக் கொடுப்பினையும் இல்லல. லெட்சுமி, நாராயணசாமி ரெண்டு தியேட்டருமே இப்ப பூட்டிக் கெடக்கு.

எனக்கு அது அதிர்ச்சிச் செய்திதான். ஒருபோதும் ரெண்டு தியேட்டரையும் ஒண்ணா சீல் வச்சதோ அல்லது ரெண்டு பேருமே ஒரே நேரத்தில மூடியதோ கிடையாது. பெரும்பாலும் ஏ படம் போட்டோ அல்லது ஏதாவது குடும்பப் பிரச்சினை காரணமாகவோ மட்டுமே பூட்டுவார்கள். பதினைந்து இருபது நாட்களில் திறந்து விடுவார்கள்.

நாராயணசாமியும் லெட்சுமியும் அப்பா காலத்திலிருந்தே சாத்தான்குளத்தில் இருக்கிறது. நான் சிறுவனாக இருந்த போது தியேட்டருக்குக் கூட்டிட்டுப் போறேன்னு அம்மா சொல்லி விட்டால் வயிறு கூடப் பசிக்காது. அம்மா மிரட்டியே சாப்பிட வைப்பாள். அப்பா தியேட்டருக்குப் படம் பார்க்க என்னை இதுவரை அழைத்துக் கொண்டு சென்றதில்லை. அப்போது அவருக்கு இதற்கெல்லாம் நேரமும் கிடையாது.

ஊரே நல்ல படம் போட்டிருந்தால் செட்டிக்குளத்திலிருந்து ஒவ்வொரு நாளாகக் கிளம்பிச் செல்வார்கள். அப்பவெல்லாம் மதியம் ரெண்டரை மணி ‘மேட்னி ஷோ’ பார்க்கத் தான் பெண்கள், குழந்தைகளோடு போவார்கள். வேகாத வெயிலிலும் பேசிக்கொண்டே நடந்து செல்வார்கள். சில நேரங்களில் பேருந்தில் செல்வார்கள். நாராயணசாமி தியேட்டருக்கு அமுதுண்ணாக் குடி வழியாகப் போனால் அஞ்சு கிலோமீட்டர் நடந்து போனால் போதும். அமிர்தவிளை நகரை ஏன் அமுதுண்ணாக் குடின்னு கூப்பிடுறாங்கன்னு இன்னைக்கு வரைக்கும் காரணம் தெரியாது. ஆனால் லெட்சுமி தியேட்டருக்குப் போகணும்னா ஒரு கிலோமீட்டர்கூட நடக்கணும். அது சாத்தான்குளத்தோட அந்தக் கடைசியில் இருக்குது.

நல்ல படங்கள், புதிய படங்களை வெள்ளிக் கிழமைதான் போடுவார்கள். வெள்ளியிலிருந்து செவ்வாய் வரை ஓடும். சுமாரான படமென்றால் ஞாயிற்றுக் கிழமையோடு தியேட்டரை விட்டுப் போயிரும். புதன், வியாழன் இரு தினங்களுக்கும் ஏதேனும் மொக்கை படங்களைப் போடுவார்கள். தெலுங்கு டப்பிங், ஹிந்தி டப்பிங், பழைய படங்களாகப் போடுவார்கள்.

பட போஸ்டர்களை செட்டிக்குளத்து பவுண்டு(மாடு அடைக்கும் கொட்டகை) சுவத்தில் தான் ஒட்டுவார்கள். பெரிய நடிகர்கள் படமென்றால் எழுத்துப் போஸ்டரோடு படத்துடன் கூடிய போஸ்டரையும் ஒட்டிச் செல்வார். அதில் ஒரு சுவாராஸ்யம் இருக்கிறது. ஊரே அடங்கித் தூங்கிக்கிட்டு இருக்கும் போது ராத்திரி ரெண்டு மணிக்குத் தான் ஒட்டிச் செல்வார்.

எங்கூர்ல குளிக்க, காலைக் கடனை முடிக்க பம்புசெட் பக்கம் காலையிலேயே ஆண்கள் செல்லும் வழக்கமுண்டு. அவர்களின் முதல் பணி , ஏதாவது படம் மாத்திருக்கான்னு பார்க்கிறதுதான். போஸ்டரில் உங்கள் அபிமான நாராயணசாமி திரையரங்கில் நவரச நாயகன் கார்த்திக், குஷ்பு, சார்லி, ஜனகராஜ் மற்றும் பலர் நடித்த “வருஷம் பதினாறு” என எழுதி, புத்தம் புதிய திரைப்படம் 70 mm என்று அடியில் போட்டிருப்பார்கள். பக்கத்தில் இன்னொரு போஸ்டரில் உங்களின் அபிமான லெட்சுமி திரையரங்கத்தில் பார்த்திபன், சீதா, வி.கே.ராமசாமி, நாசர் மற்றும் பலர் நடித்த “புதிய பாதையைப்” போட்டிருப்பார்கள். சிவாஜி, எம்ஜிஆர் படங்களுக்கு ஈஸ்ட்மென் கலரில், புதிய காப்பி என்ற அடைமொழியோடு போஸ்டரை ஒட்டி இருப்பார்கள். அதையே மூணு தடவை வாசிப்போம். டீக்கடை, டைலர் கடையில நின்னு எது நல்ல படம்னு ஆராய்ச்சி செஞ்சிக்கிட்டும் இருப்போம்.
ரெண்டு தியேட்டரிலும் போட்டிப் படங்களாக போடுவார்கள். நமக்குத் தான் எந்தப் படத்துக்குப் போறதுன்னு தெரியாது.

குளிச்சிட்டு வீட்டுக்குப் போகிறப்போ மல்லிகாக்கா கூப்பிடுவாங்க. ‘ஏப்பு… கணேஷ் படம் மாத்திட்டானா? என்ன படம்ப்பு போட்டுருக்கான்?’ நம்மதான் மல்லிக்காக்காவின் தகவல் தொடர்பு செயலாளர் என்கிற பெருமிதம் எப்பவுமே உள்ளே ஓடிக்கிட்டு இருக்கும். சில நேரங்களில் நல்ல போஸ்டரை மூணாவது நாள் அல்லது நாலாவது நாள், பயலுக பிளான் பண்ணி கிழிச்சிட்டுப் போயிருவானுக. பெரிசுகள் பார்த்தால் அவ்வளவுதான். திட்டுவாங்க. அதுக்குன்னே ஒரு குருப்பு அப்பப்ப கொஞ்சம் கொஞ்சமா கிழிச்சு வைக்கும். யாரும் பார்க்காத நேரத்தில் போஸ்டரை ஆட்டையைப் போட்டுருவானுக.

குறிப்பாக பொங்கல், தீபாவளி வரப்போகிறதென்றால் வீட்டில் அதைக் காரணம் காட்டியே படத்துக்குக் கூட்டிட்டுப் போக மாட்டாங்க. ‘ஏல… அம்மா சொல்றம்லா பொங்கலுக்குக் கூட்டிட்டுப் போறன்னு… சொன்னா கேளு’ என்பாள். ‘சாமி சத்தியமா?’ என்று கேட்டால் அதுக்கும் திட்டுவாள். ‘எதுக்குத் தான் சத்தியம் கேப்பன்னு ?’ சத்தியத்தை உப்பு சப்பில்லா காரணங்களுக்குக் கொடுப்பதும் கேட்பதும் அந்த வயதில் சர்வ சாதாரணம்!

விஷேச நாட்களில் என்ன படம் வரப் போகிறது என்பதை இருபது நாட்கள் முன்னமே டிக்கெட் கொடுக்கிறவங்கக் கிட்டேயிருந்து மேனேஜர் வரைக்கும் கேட்டுத் தெரிஞ்சுக்குவாங்க. அந்த நியூஸ் கொடுக்கிறவர் கூட ஊர்ல பெரிய ஆள் தான்.

‘ஏலே… பாண்டி அண்ணன்கிட்ட கேளு. அவருக்குத் தான் நாராயணசாமியில என்ன படம் வருதுன்னு தெரியும். ஏம்னா அவரு பிரண்டுதான் மேனேஜரா இருக்காரு. பாண்டி அண்ணனுக்கும், முருகன்னனுக்கும் அந்த டயத்துல கிராக்கிதான்.’

விஷேச நாட்களுக்குரிய போஸ்டரை மட்டும் ஊருக்குள் சந்தியிலுள்ள சக்தி கோயில், வடக்குத் தெரு முத்தையா தேவர் வீட்டு சுவத்திலேயும் ஒட்டுவார்.

பெரும்பாலும் குடும்பத்தோடு சென்றால் கூட பொம்பளை ஆட்களும், குழந்தைகளும் பெண்கள் வரிசையில் நிற்பார்கள். ஆண்கள் அந்தப்பக்கம் வழியாக உள்ளே செல்வார்கள். சில நேரங்களில் மட்டுமே வேற்று பெண்களோடு வரவில்லைஎன்றால் கணவனை நச்சரித்து குடும்பத்தோடு டிக்கெட் எடுத்து உள்ளே செல்வார்கள். ஒரு நிமிஷம் தாமதமானாக் கூட டிக்கெட் எடுக்கும் போதே படம் போட்டாச்சா என்ற கேள்வியோடே எடுப்பார்கள்.

எழுத்து ஆரம்பிப்பதற்குள்ளாக தியேட்டருக்குள் இருக்க வேண்டும். எழுத்துப் போட்டுட்டான்னா இசக்கிக்குக் கெட்ட கோபம் வரும். இப்ப என்னடேன்னு அந்த நேரம் எவனாவது கேட்டுத் தொலச்சான்னா அந்தால ஒரு அறை தான் விழும். படம் போடலன்னா மட்டும் இசக்கிய தைரியமா எதுக்குடே இவ்வளவு டென்சன் ஆகிற ன்னு அன்னாவி மாதிரி சங்கர் கேள்வி கேப்பான். இசக்கிக்கு மட்டுமல்ல. நம்மில் பலருக்கும் படம் ஆரம்பிக்குமுன்னேயே உள்ளே போய் நல்ல இடம் பார்த்து பேனுக்கு அடியில உட்காரணும்.

ரொம்ப சின்னப்பயலா இருக்கும் போது திரைக்குப் பக்கத்தில் உட்காரணும், கொஞ்சம் பெரிய பயலாயிட்டா அதை விடப் பின்னுக்கு உக்காரணும், பெரிய ஆளாயிட்டா காசு இருக்கிறதுக்குத் தகுந்த மாதிரி ஒரு நல்ல இடம் பாத்து உட்காரணும். அவ்வளவுதான்.

ரெண்டு தியேட்டரிலும் தரை டிக்கெட் மூணு ரூவா, பென்ச் டிக்கெட் அஞ்சு ரூவா, சேர் ஏழு ரூவா, சோபா சேர் பத்து ரூவா எனக் கேட்பார்கள். நல்ல படம்னா மட்டும் சோபா சேர் முதல்லேயே நிரம்பும். பெரும்பாலும் ‘பர்ஸ்ட் ஷோ’ப்ப தான் சோபா சேர் நிரம்பும். (evening show வை அப்படித் தான் சொல்வோம்).

சில நாட்களில் குடும்பத்தோடு திருச்செந்தூர் கோயிலுக்கோ வெளியூரோ வேனில் சென்று வருகிற குடும்பம் அன்னைக்கு மட்டும் சோபா சேர் டிக்கெட் தான் எடுப்பாங்க. அதுதான் எழுதப்படாத விதி. அதுகூட என்ன மாதிரியான மனநிலையோ?

சோபா சேர்ல தான் அதிகமா மூட்டை கடிக்கும்கிறது தெரிய ஆரம்பிச்சவன் அதுல போய் உட்கார மாட்டான்.

“ஏ.. என்னப்பா ஒரே மூட்டையா இருக்குன்னு தியேட்டர்காரன்கிட்ட கேட்டா , ஆமாவே நாங்க தான் ஒங்க குண்டியைக் கடிக்கட்டும்னு கொண்டு வந்து விடுதோமொன்னு” எரிஞ்சு விழுவார். ஒரு விஷயத்தைக் கூர்ந்து கவனியுங்கள். உங்களுக்கேப் புரியும். ஒரே கேள்விக்கான பதிலைத் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் ரெண்டாவது தடவையாக ஒரே கேள்வியைப் புரியலன்னு கேட்டால் எரிஞ்சு விழுவார்கள். அது கண்டக்டர், பேங்க் என எல்லா இடங்களிலும் அப்படித்தான்.

இதெல்லாம் கூட நார்மல்தான். லேடீஸ் பக்கம் உள்ள ஸ்க்ரீனுக்கு இந்தப் பக்கமா ஆண்கள் பக்கம் உட்கார்ந்து பார்க்கும் போதுதான் சுவாராஸ்யமா இருக்கும். கதாநாயகியையோ , ஹீரோவோட அம்மாவையோ வில்லன் கொல்லும் போது, ச்சச்சோ…. அடப்பாவிப் பய இப்படிக் கொல்லுதானே… இப்ப பார்த்து இவன் (ஹீரோவை) எங்க போய்த்தொலஞ்சான் என்று பெண்கள் உச்சுக் கொட்டுவார்கள். கிளைமாக்சில் ஹீரோ வில்லனைப் புரட்டி எடுக்கும் போது, ‘அப்படித்தான்… கொல்லு… விடாத அவனை… ‘ என தமது கோபத்தை சத்தம் போட்டுக் கொட்டுவார்கள். பெண்களுக்கு அவர்கள் குழந்தையாக இருந்தாலும் சரி, வேற வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும் சரி, ஏதேனும் பாட்டுக்கு நன்றாக ஆடிவிட்டால் முத்தம் கொடுத்து மகிழ்வார்கள். அப்படியே யக்கா… ஒங்களுக்கு எந்த ஊரு… பிள்ளை நல்லா ஆடுதானே’ என்று பாராட்டுவார்கள்.

ஆண்கள் பக்கம் பேப்பரைக் கிழித்துப் பறக்க விடுவதும் கைதட்டுவது, விசிலடிப்பது, முடிஞ்சா தலைவனோட படம்னா திரைக்கு முன்னேயே சென்று ஹீரோ வருகிற காட்சியில் ஆட்டமும் போடுவார்கள்.

இன்னொரு குருப்பு சோகக் காட்சியில் கண்ணீரைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டிருக்கும். சிரிப்புக் காட்சியில் நல்ல சத்தம் போட்டு சிரித்துக் கொண்டிருக்கும்.

மனிதர்களில்தான் எத்தனை வகை? உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் உள்ள வித்தியாசங்களை எங்களூர் தியேட்டரிலேயே பார்க்க முடியும். சில நேரங்களில் திடீரென சண்டையும் நடக்கும். சண்டை நடக்கிறதுக்கு ஒரே காரணம் தான். காலைத் தூக்கி முன்னே இருக்கிற பெஞ்சில் வைப்பது, தலை மறைக்குதுன்னு சொன்னா அட்ஜஸ்ட் பண்ணாம இருந்தாக் கூட தியேட்டரில் ரகளைதான். மதியக் காட்சி நடக்கும் போது எவனாவது கதவை வெளியே போகும் போது பூட்டலன்னாக் கூட கத்துவார்கள்.

அன்னைக்கும் சரி, இன்னைக்கும் சரி எல்லாரும் சொல்ற ஒரே டையலாக். தியேட்டரில் இருக்கும் சினாக்ஸ் கடைக்காரன் என்னா… கொள்ளையடிக்கான் என்பதுதான். ஆனாலும் அங்கே வாங்கித் திங்கலன்னா தெய்வக் குத்தம்லா என்பான் அமச்சியார். நம்பல நம்பித்தாம்ல லீசுக்கு எடுத்து நடத்துறான். ‘பொலச்சிப் போகட்டும்னு..’ ராயலா டையலாக் விடுவான்.
படம் முடிஞ்ச பிறகு தான் வெயிலில் மதியம் வந்த உடம்பு வலி தெரியும். சைக்கிளை மிதித்து சாத்தையைக் கடந்தவுடன் வலியை மறந்து அந்தப் படத்துக் கதையை ஊர்ப் போய் சேர்ற வரைக்கும் பேசுவோம். சில நேரம் மறுநாள் கூட அதைப் பத்தியே பேசுவோம். குறிப்பாக மறக்காமல் கேட்கிற கேள்வி, ‘ஏலே… உனக்கு எந்த சீன்ல பிடிச்சிருக்கு’ .
ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு காட்சியாக சொல்லும் போது… ஆமால எனக்கும் அது பிடிச்சிருக்கு என இடையிடையே சொல்லிக் கொள்வார்கள்.

சின்னப் பயலா இருக்கும் போது படம் பிடிச்சிருந்ததான்னு அம்மா கேட்டால், ம்ம்… நல்லா இருந்தது என்று மட்டுமே சொல்லி இருக்கிறேன். எது நல்ல படம் என்று அறியாத வயதில் குழந்தைகளுக்கு சண்டைப்படங்களும், அவர்களுக்குப் புரியிற மாதிரியான காமெடிப் படங்களும் கதை எப்படி இருக்குதுன்னு கவலை இல்லாமல் பிடிக்கும் மாயம் இன்று வரை எனக்குப் புலப்படாத ஒன்று. அதை இன்று என் மகள் ரூபத்திலும் பார்க்கிறேன்.

தியேட்டர் என்பது 80 – 2000 வரை வாழ்வின் மிக முக்கியமான இடம். அது கூட ஒரு கோயில்தான். இப்போதும் லெட்சுமி, நாராயணசாமியில் எந்தப் படம் ஓடுகிறது என்பதற்காக இசக்கியோடும் நண்பர்களோடும் போவதில்லை.
அது சாத்தான்குளத்துடனான எனது உறவு. விஷாலாட்சி அம்மன் கோயில், நான் படித்த பள்ளிக் கூடம், படிக்கிற ஸ்தலமான ஊருணிப் பிள்ளையார் கோயில், மாலையில் அமர்ந்து பேசிய ஆறுகண் பாலம் அனைத்தையும் இந்த வருஷமும் பார்த்தாச்சு. ரெண்டு தியேட்டரும் பூட்டி இருக்குனு சொன்னப்போ என்னையும் அறியாமல் எனக்குள் ஏற்பட்ட பதற்றம் சொல்லிப் புரியக்கூடியதல்ல. அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே அந்த வலி புரியும்.

மறுநாள் காலையில் குளிக்கப் போவோம்னு போகும் போது என்னையும் அறியாமல் கண் பவுண்டு சுவத்தை நோக்கிப் போனது. “ சதுரங்க வேட்டை ” மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்கும் பொருட்டு உங்கள் லெட்சுமியில் என்று ஒட்டி இருந்தார்கள்.

இசக்கியோடு லெட்சுமியை இந்த வருடமும் பார்த்து விட்டேன். நாங்கள் எப்பவும் உட்காரும் இடத்திற்கு எந்தப் போட்டியும் இல்லை. மனிதர்கள் இப்போது ரொம்பவே மாறி இருக்கிறார்கள். ஆனால் லெட்சுமி மட்டும் தன்னைப் புதுப்பிக்காமல் அப்படியே இன்னமும் இருக்கிறாள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s