மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்கள் சொல்லும் விஷயங்கள்

ஹரியானாவில் ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் பிஜேபி பெற்ற இடங்கள்:

 

ஹரியானா பற்றி நான் தேர்தல் முடிவுகளுக்கு முன்னமே எழுதியதால் தேர்தல் முடிவிலிருந்து எதையும் அலசவில்லை. அதை மனதில் கொண்டு படியுங்கள் நண்பர்களே.

6 Seats (1982), 16 seats (1987), 2 seats (1991), 11 seats(1996), 6 seats (2000), 2 seats(2005), 4 seats(2009)

ஹரியானாவின் சட்டசபை தேர்தலின் வரலாற்றில் ஒரேயோருமுறைதான் பிஜேபி எதிர்க்கட்சியாக வந்துள்ளது. 16 இடங்களில் 1987 தேர்தலில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது.  மற்ற அனைத்துத் தேர்தல்களிலும் அது மூன்று, நான்காம் இடத்தைப் பிடித்த கட்சியே!

ஆனால் இந்த வருடம் பிஜேபி தனித்த மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் வருகின்றன. ஹரியானாவில் எதிர்க்கட்சியாக இல்லாத கட்சி இன்று ஆட்சியைப் பிடிக்க முக்கியக் காரணம் என்னவாக உள்ளது?

  1. பொருளாதார வளர்ச்சியை முன்னிறுத்திய பிரச்சாரம்.
  2. காங்கிரஸ் மற்றும் இந்திய தேசிய லோக்தலின் ஊழல்.
  3. இரண்டைக் காட்டிலும் மோடி என்ற மனிதர் மீது மக்கள் வைத்துள்ள அபார நம்பிக்கை.

இந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டியது பிஜேபியின் கடமை. மத்திய பிரதேசத்திற்கு சிவ்ராஜ் சிங் சவானை அளித்தது போல சிறந்த முதல்வரை ஹரியானாவிற்கு அளிக்க வேண்டியது பிஜேபியின் கடமையாகும்.

அதைச் செய்தாலே பிஜேபி மீது இதர மாநிலங்களிலும் நம்பிக்கை பிறக்கும். பிஜேபி வளர்வதற்கான வாய்ப்புகள் பெருகும். இதை பிஜேபி உணர்ந்து செயல்படவேண்டும். ஒருவேளை மக்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றம் என்ற நிலையை உணர்ந்தால் பிஜேபி ஏற்கனவே வாங்கிய 2 இடங்களுக்குத் தானாகவே வந்து சேர்ந்து விடும்.

பாஜகவின் இந்த வளர்ச்சி மாநிலக் கட்சிகளுக்கு மிகுந்த எச்சரிக்கையை அளிக்க வல்லது. அதை உணராமல் காவிக்கட்சி, மதவாதக் கட்சின்னு புலம்பினால் மாநிலக் கட்சிகள் தம்மிடத்தை மேலும் இழக்கும். பாஜக முறையான ஆட்சியை தாம் ஆளும் மாநிலங்களில் வழங்கினாலே இதர மாநில மக்களுக்கு அக்கட்சியின் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படும். மேற்கு வங்கத்தில் கம்யுனிஸ்டின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது என்பதற்கான அனைத்து செய்கைகளும் நன்றாகவே தெரிகின்றன. பீகாரைப் பொறுத்தவரையிலும் இனி பிஜேபி ஆளும் அல்லது நேரடி எதிர்க்கட்சியாக வளரும். நேரடி எதிர்க்கட்சியாக வளர்கிற பட்சத்தில் அது மாநிலங்களில் பாஜகவிற்கான மிகச் சிறந்த பலத்தையும் அரசியல் எதிர்காலத்தையும் தரும். பாஜக மெல்ல மெல்ல ஒவ்வொரு மாநிலத்திலும் வளர்வதே கட்சிக்கு நல்லது.

 

தேர்தல் முடிவில் ஹரியானாவில் 47 இடங்களைப் பிடித்து பாஜக ஆட்சி அமைத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

http://eciresults.nic.in/PartyWiseResultS13.htm?st=S13

மகாராஷ்டிராவில் ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் பிஜேபி பெற்ற இடங்கள்:

14 seats ( 1980), 16 seats (1985), 42 seats (1990), 65 seats(1995), 56 seats(1999), 54 seats(2004), 46(2009) 122 seats (2014)

BJP Voting Percentage:

12.8  %  (1995),14.54 % (1999),13.67 % (2004), 14.02 %(2009),  27.8 % (2014),

Congress  Voting Percentage:

31.0  % (1995), 27.20  % (1999), 21.06 % (2004) , 21.01 %(2009), 18 %(2014)

கடந்த கால மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் மகாராஷ்டிரா காங்கிரசின் கோட்டை என்பது தெளிவாகப் புரிகிறது. 95 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 80 இடங்களையே பிடித்தாலும் அதன் வாக்கு வங்கி(31%),  ((சிவசேனா & பாஜக(29%)) கூட்டணியைக் காட்டிலும்  அதிகமாகவே வாங்கியுள்ளது. அத்தேர்தலில் தேசிய வாத காங்கிரஸ் என்ற கட்சி உருவாகவில்லை. இடங்களின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தைக் காட்டி பிஜேபி + சிவசேனா ஆட்சியைப் பிடித்துள்ளதும் தெரிகிறது. 1999 முதல் 2009 தேர்தல் வரை காங்கிரஸ் + தேசிய வாத காங்கிரசின் வாக்கு வங்கியும், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பலமும் போதிய அளவிற்கு இருந்தது.

2014 ஆம் ஆண்டிற்கான இந்த சட்டசபை தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி 2009 ஆம் ஆண்டிற்கான வாக்கு வங்கியைக் காட்டிலும் இரட்டிப்பாக ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலைப் பொறுத்தவரையில் , Cong + NCP & SHS + BJP கூட்டணியாகப் போட்டியிட்டு இருந்தால் மக்களின் மனநிலை பிந்தையக் கூட்டணிக்கு அதிகமாக வெற்றி பெற உதவி இருக்கக்கூடும். ஆனால் இப்போது அதை ஒப்பிடுவது சரியாக அமையாது.

பாஜகவைப் பொறுத்தவரையில் இது மிகப் பெரிய வளர்ச்சி மட்டுமல்ல. தக்க வைக்க வேண்டிய அவசியமும் உள்ளடங்கிய வெற்றியுமாகும். 100 இடங்களுக்கு மேலாக தனிக் கட்சியாக 1990 ல் காங்கிரஸ் 141 இடங்களைப் பிடித்திருந்தது. 24 வருடங்களுக்குப் பிறகு தனிக் கட்சியாக பாஜக 122 இடங்கள் பிடித்துள்ளது என்பது கவனிக்கப் பட வேண்டியது.

பாஜக சிறு அரசியல் பிழை செய்தால்கூட காங்கிரஸ் எந்நேரமும் மகாராஷ்டிராவில் தனது பழைய பலத்திற்கு வந்துவிடும் என்பதைத் தான் பாஜக இத்தேர்தலின் வெற்றியில் கற்றுக் கொள்ள வேண்டியது. சிவசேனாவாலோ, MNS கட்சியாலோ இனி பிஜேபியை அவ்வளவு எளிதாக மிரட்ட முடியாது. சிவசேனா தான் மிக முக்கியமான அரசியல் பாலபாடத்தைக் கற்றுக் கொண்டிருக்கும் அல்லது கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

காங்கிரஸ் 15 வருடங்களில் உருவான புதிய இளம் வேட்பாளர்களைக் கவரவில்லை என்பதை அக்கட்சி உணரவேண்டும். 15 வருடத்திற்குப் பிறகே காங்கிரஸ் மீதான எதிர்ப்பலை பாஜகவிற்கு சாதகமாக்கி உள்ளது. சிவ சேனாவின் கெடுபிடியைப் பொறுத்துக் கொள்ளாமல், பாஜக தனித்து நிற்க எடுத்த முடிவு களத்தின் அடிப்படைதான் என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. பாவம், சிவசேனா தான் பாஜகவைத் தவறாக எடை போட்டு விட்டது.

பாஜக NCPயின் ஆதரவோடு ஆட்சி அமைக்கக் கூடாது. பழைய நண்பனான சிவா சேனாவுடன் கூட்டணி வைப்பதே எதிர்வருங்காலங்களில் சிற்சில அரசியல் தவறுகள் செய்தாலும், நல்லாட்சி புரிகிற பட்சத்தில் காங்கிரசை மேல்நோக்கி வளரவிடாமல் தடுக்க உதவும். என்னைப் பொறுத்தவரையில் காங்கிரசைக் காட்டிலும், பாஜகவிற்குத் தான் விஷப்பரிட்சையாக இருக்கும்.

ஆனால் மேற்கண்ட இரு மாநிலத் தேர்தல்கள் காங்கிரசிற்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை மட்டுமல்ல. மக்கள் மாநிலக் கட்சிகளையும் சேர்த்தே இரு மாநிலங்களிலும் புறக்கணித்துள்ளார்கள்.  பாஜகவின் தேர்தல் பிரச்சார யுக்தி அவர்களுக்கு வெற்றியைத் தந்துள்ளது. அவர்கள் நல்லாட்சி புரிகிற பட்சத்தில் இதர மாநில மக்களும் பாஜகவை ஆதரிக்கத் தயங்க மாட்டார்கள். மாநிலக் கட்சிகள் இதை உணர்ந்து தம் மாநிலங்களில் ஆட்சி புரிய வேண்டிய கட்டாயமும் உள்ளது. எங்கெல்லாம் பாஜக வளர்ச்சி ஒருமுறை பெறுகிறதோ அங்கெல்லாம் பிரதான ஆளும் அல்லது எதிர்க்கட்சியாக பாஜக தன்னை வளர்த்து மாநிலக் கட்சிகளைப் பின் தள்ளி விட்டது என்பதே தேர்தல் வரலாறு. கர்நாடகாவில் இன்று பாஜக பிரதான எதிர்க்கட்சியாகி விட்டது. தேவகவுடா மூன்றாவது கட்சியாக மட்டுமே காலம் தள்ள வேண்டிய நிலை வந்துள்ளது. பீகாரும் அவ்வாறு மாறியுள்ளது. இதைத் தான் மாநிலக் கட்சிகளும் காங்கிரசும் மனதில் வைத்து செயல்பட வேண்டிய தருணம் இது. அதே போல பாஜகவும் தமது எல்லையை விரிக்க விரும்பினால் நல்ல முதல்வர்களைக் கொடுப்பதன் மூலமும், சிறந்த ஆட்சி வழங்குவதன் மூலமும் மட்டுமே வளர இயலும். இல்லையேல் அடுத்த தேர்தலிலேயே தமது இடத்தைப் பலமாக இழக்குமாதலால் மிகக் கவனமாக செயல்படவேண்டிய கடமை பிஜேபிக்கு உள்ளது.

வெளிநாட்டு மக்களின் பணப்பரிமாற்றமும் தேவையான மாற்றங்களும்:

dilipratha

மனதில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவிற்குப் பணம் அனுப்புவது பற்றியும், அதனால் என்ன நன்மை என்று  எழுத வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் அது பற்றிய தரவுகளை நம்மால் தனிப்பட்ட முறையில் அதுவும் அத்தொழிலில் இல்லாத  போது சில விடயங்களை சுட்டிக் காட்ட இயலாது அல்லவா? ஆகையால் இந்தக் கட்டுரை எழுதக் காரணகர்த்தாவாக மட்டுமல்லாமல் அதற்காகவே உழைப்பவரைப் பற்றி முதலில் சொல்லி விட்டு கட்டுரையில் என்ன அறிய வேண்டியுள்ளது என்பதைப் பார்க்கலாம்.

திலிப் ராதா ஓர் இந்தியர், ஒரிய மண்ணின் மைந்தர். பொருளாதார வல்லுனர். அவர் உலக வங்கியில் பல்வேறு பொறுப்புகளில் உள்ளார்.   Manager, Migration and Remittances Unit and CEO, Global Knowledge Partnership on Migration and Development (KNOMAD), Development Prospects Group, World Bank போன்ற பொறுப்புகளை வகித்து வருகிறார். இந்தக் கட்டுரையில் வெளி நாடுகளில் சென்று பணிபுரியும் ஒவ்வொரு தேசத்து மக்களும் தமது தேசத்திற்குப் பணம் அனுப்புவதையும், இந்தியர்களின் பங்கு பற்றியும், பணம் அனுப்புவதற்காக வசூலிக்கும் வங்கிகளின் சேவைக் கட்டணம் ( Commission/Service Charge ) பற்றியும், அதைக் குறைத்தால் என்னென்ன பலன்கள் என்பதையும் பார்க்கலாம்.

பத்து வருடங்களுக்கு முன்பாக வெளிநாட்டில் பணி புரியும் தொழிலாளர்கள் வங்கிக் கணக்கை திறப்பதற்கான வசதிகள் மிகக் குறைவு. அதற்கான காரணங்கள் பல. தமது ஊரில் உள்ள வங்கிக்கும் தாம் வெளிநாட்டிலிருந்து அனுப்பக் கூடிய வங்கிக்கும் நேரடி ஒப்பந்தம் இருக்காது.  அம்மாதிரியான நேரத்தில் அனுப்பப்படும் பணத்திற்கு வெளிநாட்டில் உள்ள வங்கி இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு சில வங்கிகளுடன் மட்டும் ஒப்பந்தம் செய்திருக்கும். அவ்வங்கிக்கே முதலில் பணப்பரிமாற்றம் செய்யப்படும். பின்னர் நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியும் , வெளிநாட்டிலிருந்து பணம் நேரடியாக வந்த இந்திய வங்கிக்கும் உள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணப்பரிமாற்றம் செய்யப்படும். அதற்கு இங்குள்ள வங்கி சேவைக் கட்டணமாக ஒரு தொகையை வசூலிக்கும்.

Ex:

Your Bank AccountCanara Bank ICICI Bank  TiedWith  Foreign Bank Foreign Bank TiedWith ICICI Bank
Service Charge ServiceCharge

வெளி நாட்டில் வாழும் மக்கள் தத்தமது நாடுகளுக்கு பணம் அனுப்ப (Foreign Remittance)  வங்கிகள்  Commission Charge என ஒரு தொகையை வசூலிக்கும். இந்த Commission/Service Charge பற்றி சில நேரங்களில் சிந்திப்பதுண்டு.

என்னுடைய அனுபவத்திலிருந்து பகிர்ந்து கொள்கிறேன். சவுதியிலிருந்து இந்தியாவிற்குப் பணம் அனுப்ப ஒவ்வொரு பணப் பரிமாற்றத்திற்கும் (Transaction) 16- 20 SAR சேவைக் கட்டணமாக சவுதியிலுள்ள வங்கிக்குச் செலுத்த வேண்டியுள்ளது. அதிலும் Online Transaction (100SAR)/ Western Union Bank ( 32SAR) செலுத்த வேண்டும். இது நாட்டிற்கு நாடு வேறுபடும். இதிலுள்ள சிக்கல் யாதெனில், லட்சம் ரூபாய் அனுப்புபவனுக்கும் ( பல லட்சங்கள் அனுப்பினாலும் அதிக பட்சத் தொகை 50,000 Riyals) , ஆயிரம் ரூபாய் அனுப்புகிற ஏழைக்கும் சராசரியாக ஒரு Transaction க்கு 16- 20 சவூதி ரியாலை வங்கிகள் (வங்கிகளுக்கு ஏற்ப இத்தொகை மாறுபடும்) வசூலிக்கிறார்கள். இவ்வாறு வசூலிப்பது சரியா எனத் தோன்றியதுண்டு.

இது ஒருபுறம் இருக்கட்டும். இதனால் ஏற்பட்ட தீமைகளை /முறைகேடற்ற செயல்கள் என்னவென்பது அதை விட முக்கியமாகிறது.

பல்வேறு நாடுகளில் வங்கிகள் commission charge என்ற பெயரில் கொள்ளையடிப்பதைத் தான் தாவுத் இப்ராஹிம் போன்ற கடத்தல் கும்பல்கள், பணத்தை உங்கள் வீட்டிற்குப் பத்திரமாகச் சேர்த்து விடுவோம், கவலைப்படாதீர்கள் என ஏழைகளைகச் சம்மதம்(convince) பெறச்செய்து அவர்கள் வழியாக பணத்தைத் தங்கள் ஊருக்குப் பல ஏழைகள் அனுப்பினர். நமக்கு ஏமாற்றமில்லை என்பது மட்டுமே ஏழையின் பிரச்சினை. ஆனால் அதைப் பயன்படுத்தியே ஹவாலா மன்னன் என்று பெயரெடுத்த ஹர்ஷத் மேத்தா  போன்ற கடத்தல் பேர் வழிகள் பல கோடிகளைச் சம்பாதித்தது. இவ்வாறு முறையற்ற வழியில் பணம் அனுப்பியதைத் தான் உண்டியல் வழியாக அனுப்பினேன் என்பார்கள். இன்று ஓரளவுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் இதைத் தீவிரமாகக் கண்காணித்து ஒழித்துள்ளார்கள் அல்லது குறைத்துள்ளார்கள்.

money

ஏழையைப் பொறுத்தவரையில் இங்குள்ள வங்கியில் வங்கிக் கணக்கு திறக்க வேண்டும். அடுத்து நான் ஏற்கனவே குறிப்பிட்ட தமது இந்திய வங்கிக்கும், தாம் பணிபுரியும் வெளி நாட்டு வங்கிக்கும் ஒப்பந்தம், ஒப்பந்தம் இல்லாத பட்சத்தில் இரு வங்கிகளுக்கு சேவைக்கட்டணம் , பற்றாக்குறைக்கு பணம் தமது வங்கிக்குப் போய் சேர ஒரு வாரமாகலாம்.  இந்த இன்னல்களை அனுபவிக்க விரும்பாத ஏழைகள் உண்டியல் வழியாகப் பணம் அனுப்பினால் தந்தையின் கைக்கோ. மனைவியின் கைக்கோ அடுத்த நாளே நேரடியாகக் கிடைப்பதைப் பேருதவியாக எண்ணினார்கள். மேலும் சேவைக்கட்டணமும் குறைவு. இதைத் தான் தாவுத் இப்ராஹீம் போன்றவர்கள் பயன்படுத்தினார்கள்.

இப்போது உலகில் வாழும் வெளிநாட்டு மக்கள் அனுப்பிய பணப் பரிமாற்றத்தைக் காணலாம். கடந்த வருடம் உலகம் முழுவதும் உள்ள வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளிகள் தங்கள் நாடுகளுக்கு அனுப்பிய பணத்தின் மதிப்பு 413 பில்லியன் டாலர். (இந்திய மதிப்பில் 24,78,000 கோடி இந்தியன் ரூபாய்களாகும். ). உலக வங்கி ஏழை மற்றும் உலக நாடுகளுக்கு இயற்கைச் சீற்றம், நோயிலிருந்து விடுபட என உதவி நிதியாக ஒதுக்கும் தொகையைக்(135  பில்லியன் டாலர்) காட்டிலும் மூன்று மடங்கு பணம் சொந்த தேசத்திற்கு மக்கள் அனுப்புகிறார்கள்.

413 பில்லியன் டாலரில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மூலம் கடந்த ஆண்டில் இந்தியாவிற்கு வந்த பண மதிப்பு 72 பில்லியன் டாலர்களாகும். ( இந்திய மதிப்பில் 4,32,000 கோடி ரூபாய்களாகும்).  வெளிநாட்டிலிருந்து  தங்கள் நாடுகளுக்கு பணம் அனுப்புவதில் 17%  அளவிற்கு பணம் வெளிநாட்டு வாழ் இந்தியர்களால் அனுப்பப் பட்டுள்ளது. மேலும் உலகில் அதிக அளவிற்கு வெளிநாட்டில் இருக்கும் தங்கள் பிரஜைகளால் அதிக பணத்தைப் பெற்ற நாடாக இந்தியாவே விளங்குகிறது. இதற்கு அடுத்த படியாக சீனாவிற்கு 64 பில்லியன் டாலர்கள் வரை அந்நாட்டு மக்களால் அனுப்பப்பட்டுள்ளது.

உலகமயமாதலில் தீமைகளும் உண்டு. நன்மைகளும் உண்டு. இது Globalisation னில் இந்தியாவிற்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மை. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP), FDI மூலம் இந்தியாவிற்குக் கிடைத்த வருவாயைக் காட்டிலும் ஏறத்தாழ  இரு மடங்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மூலம் இந்தியாவிற்குக் கிடைக்கிறது. இதை உலகமயமாதலில் Mobility effect மற்றும் Labour effect என்பார்கள். இந்த இரு விஷயமும் இந்தியாவிற்கு உலகமயமாதலின் வரப்பிரசாதமாகவே பார்க்க வேண்டும். இனி மீண்டும் விஷயத்திற்கு வருவோம்.

இந்த commission charge உலக வங்கிகள் பிரிக்கிற வசூலில் 8% , அதாவது நாம் அனுப்புகிற பணத்தில் 8% வங்கிகள் எடுத்துக் கொள்கின்றன. அதுவும் post office to banks, banks to banks ன் commission charge இதில் சேர்த்தி இல்லை. இதன் பொருள் என்னவென்றால் நாம் அனுப்புகிற வெளி நாட்டு வங்கிக்கும் நம்முடைய account உள்ள இந்திய வங்கிக்கும் நேரடி ஒப்பந்தம் இல்லாத இடங்களுக்கு 8% பொருந்தாது. அதையும் சேர்த்தால் இன்னும் உயரும். தற்போதைய நிலவரப் படி, 30 பில்லியன் டாலர்கள் வங்கிகளின் Commission Charge ஆக செல்கிறது என்பதே.

இந்த 8% கொள்ளையைக் குறைக்கவும் , முறையற்ற வழியில் பணம் அனுப்புவதைத் தடுக்கவும் திலிப் சில யோசனைகளை முன் வைக்கிறார்.

  1. குறைந்த அளவு பணம் அனுப்புபவர்களுக்குக் குறைந்த commission charge என திலிப் சொல்கிறார். அவர் குளோபல் ஆக பார்ப்பதால் பொதுவாக சொல்லி இருக்கிறார்.

ஏழைகளுக்கு 20 SAR என்பது இன்றைய தேதியில் 320 ரூபாயாகும். அது அவர்களைப் பொறுத்தவரையில் மிகப் பெரிய தொகை. அனுப்புகிற 2000ரூபாய்க்கும் 3000ரூபாய்க்கும் வங்கிகள் வசூலிக்கும் இத்தொகை மிகக் கொடுமையானதும் கூட!

இதை வலியுறுத்திச் சொல்ல மேலும் சில காரணங்கள் உண்டு. நமக்கே தெரியும், ஏழைகள் வெளிநாட்டு வேலை கிடைத்தால் ஏஜென்ட் , டிக்கெட், விசா செலவு என ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை செலவழித்தே வருகிறார்கள். அவர்களின் வெளிநாட்டு வருமானத்திலிருந்து குறைந்த பட்சம் இரு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு இக்கடனை செலுத்தவே உழைக்க வேண்டி இருக்கிறது. அடுத்ததடுத்த ஆண்டுகள் பணி புரியும் பட்சத்தில் மட்டுமே அவர் சேமிப்புக்கோ, குடும்பச் செலவுக்கோ பணம் அனுப்ப இயலும்.

  1. இந்திய அரசே வங்கிகளிடம் வெளிநாட்டிலிருந்து ஒரு நபர் அனுப்பும் பணம் குறிப்பிட்ட லட்சத்திற்கு மேல் இருந்தால் மக்கள் நலனுக்கான நலத் திட்டம் என்ற பெயரில் 2% to 3% பிடித்தால் கூட அது பெருமளவு Infrastructure க்குப் பயன்படும். திலீப் தமது மத்திய அரசு கொண்டு வருகிற bullet train மற்றும் மலேரியா ஒழிப்பு போன்ற திட்டங்களுக்கு இதுமாதிரி வசூல் செய்யலாம், அவ்வாறு வசூல் செய்தால் அதில் தமது பங்கும் இருக்கும் என்கிறார். மேலும் அதிக பணம் சம்பாதிக்கிற வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் உவகையுடன் செய்வார்கள்.
  2. இந்த 8% சேவைக்கட்டணத்தை 1%க்குக் கொண்டு வந்தாலே வங்கிகளுக்கு எவ்விழப்பும் கிடையாது என்கிறார்.

தகவல்களுடன் உணர்வோடு பேசிய பேச்சு ரொம்பவே பாராட்டுக்குரியது. TED இணையதளத்திலும் உள்ளது. உலக வங்கியில் அவர் எழுதும் பிளாக்கில் ஏராளமான தகவல்கள் உள்ளன.

முறையற்ற வழியில் பணம் அனுப்புவதைத் தடுக்கவும், வங்கிகள் ஏழைகளுக்கு மிகக் குறைந்த சேவைக் கட்டணத்தை வசூலிப்பதன் மூலம் இன்னும் பல்வேறு குடும்ப , சமூக நலத்திட்டங்கள் உலக நாடுகளுக்குக் கிடைக்கும் என்பதே நாமறிந்து கொள்ள வேண்டியது. அதற்கான முயற்சியில் தான் திலீப் ராதாவும் உள்ளார் என்பது பெருமைப்பட வேண்டியதும் கூட.

தற்கொலைகள்

sucide 1

தற்கொலைகள் பற்றி நான் எழுதிய கட்டுரை ஆழத்தில் வெளிவந்துள்ளது. திரு மருதனுக்கும், ஆழத்திற்கும் எனது நன்றிகள். கட்டுரையின் முழு வடிவம் கீழே.

தற்கொலைகள்:

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் தற்கொலையில் இறப்பவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. தற்கொலைகள் பெரும்பாலும் தூக்கு, விஷம் அருந்துதல், தீக்குளித்தல், அதிகக் குடியினால் தன்னிலை மறந்த நிலை, தன்னைத் தானே சுட்டுக் கொல்லுதல், கட்டடங்களின் மேலிருந்து குதித்தல், பாலங்களின் மேலிருந்து குதித்தல், தண்ணீரில் குதித்தல் போன்ற செயல்களால் கணப்பொழுதில் நிறைவேறி விடுகின்றன. இவ்வாறு தற்கொலைகள் செய்பவர்கள் யாரென உற்று நோக்கினால் பிரச்சினைகளை எதிர் கொள்ள இயலாமல் மன அழுத்தத்திற்கு உள்ளானவர்கள், விளிம்பு நிலை சமூகத்திலுள்ளவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், அடுத்தவர்களுக்குப் பாரமாய் இருக்க விரும்பாத வயதினர், காதல் தோல்வியுற்றவர்கள், தேர்வில் தோல்வியுற்றவர்கள், வேலை வாய்ப்பற்றவர்கள், ஏமாற்றத்தைத் தாங்க இயலாதவர்கள், வேலையிலிருந்து திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், வணிகக் கடனாளிகள், குடும்ப வறுமை, தலைவர்களின் இறப்புகளையோ, தமக்கு நெருக்கமானவர்களின் இறப்பைத் தாங்கிக் கொள்ளாதவர்கள், சமூகம் கொடுக்கிற அழுத்தம் மற்றும் ஊடக வெளிச்சத்தால் அவமானத்திற்குள்ளானவர்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் மன அழுத்தத்தைத் தாங்க இயலாதவர்கள், வாழ்வில் நம்பிக்கையை இழந்தவர்கள் என்று தற்கொலையில் இறப்பவர்களைச் சுருக்கி விடலாம். தற்கொலையில் இறந்து போனவர்களைப் பற்றிய சில செய்திகள் நமக்கு அதிர்ச்சியையும், விட்டில் பூச்சிகளாய் கணப்பொழுதில் இறந்து போகிறவர்களைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விகளும் தானாய் எழுகின்றன.

தற்கொலைகள் பற்றிய உலக சுகாதார அமைப்ப்பின் தகவல்கள்:

1. உலக சுகாதார அமைப்பின் தகவல் படி, உலகில் ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்.

2. வருடத்திற்கு 8,00,000 க்கும் அதிகமானோர் உலகெங்கிலும் தற்கொலையால் இறந்துள்ளார்கள் எனவும் உ.சு.அ சொல்கிறது. தற்கொலையால் இறந்து போனவர்களைக் காட்டிலும் தற்கொலை செய்ய முயற்சி செய்தவர்களின் எண்ணிக்கை இதை விட அதிகமாம்.

3. ஆச்சர்யத்துக்குரிய செய்தி! அதிக வருவாயுள்ள நாடுகளில் தற்கொலையால் இறந்து போகிறவர்களின் எண்ணிக்கையை விகித அளவில் ஒப்பிட்டால் நடுத்தர மற்றும் குறைந்த வருவாயுள்ள நாடுகளைக் காட்டிலும் அதிகம்.

4. அதிக வருவாய் உள்ள நாடுகளில் சராசரியாக 12.7 பேரும் (ஒரு லட்சம் பேர் என்ற விகிதத்திற்கு), நடுத்தர மற்றும் குறைந்த வருவாயுள்ள நாடுகளில் 11.2 பேரும் (ஒரு லட்சம் பேர் என்ற விகிதத்திற்கு) தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

5. 2012 ஆம் ஆண்டின் கணக்கின் படி அதிக வருவாய் நாடுகளாக அடையாளப்படுத்தப்பட்ட நாடுகளில் 24.5% (1,97,200பேர் ), நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் நாடுகளாக அடையாளப்படுத்தப்பட்ட நாடுகளில் 74.5% (6,06,700 பேர்) தற்கொலையால் இறந்தவர்களாவர்.

6. உலகெங்கும் தற்கொலையால் இறப்பவர்களை சராசரியாகக் கணக்கிட்டால் 11.4 பேர் (ஒரு லட்சம் பேர் என்ற விகிதத்திற்கு) இறந்தாலும் ஆண்களின் எண்ணிக்கை பெண்களின் தற்கொலை எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் இரு மடங்கு அதிகமாக உள்ளது என்கிறது ஆய்வறிக்கை.

7. போரினாலோ, இயற்கைச் சீரழிவுகளால் இறப்பவர்களைக் காட்டிலும் தற்கொலைகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

8. 15 – 29 வயதுக்குட்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கையில் தற்கொலைகள் தான் இரண்டாமிடம் வகிக்கிறது. தற்கொலை செய்பவர்களில் பெரும்பாலோர் 70 வயதையொட்டிய ஆண் பெண்களேயாவர்.

9. உலக அளவில் இறந்து போகிறவர்களின் எண்ணிக்கையில் , 2012 ஆம் ஆண்டின் கணக்கின் படி தற்கொலைகள் 15ஆவது இடத்திலும், இறப்பவர்களில் 1.4 % தற்கொலையால் இறந்து போயுள்ளார்கள் என உ.சு.அ வின்  அறிக்கை தெரிவிக்கிறது.

sucide

இந்தியாவில் தற்கொலைகள்:

இந்தியாவில் 2012 ஆம் ஆண்டின் கணக்கின் படி, ஏறத்தாழ 2,60,000 பேர் தற்கொலையால் இறந்துள்ளார்கள். உலகில் எண்ணிக்கையளவில் அதிகமாகத் தற்கொலையால் இறந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவை விட மக்கள் தொகையில் கூடுதலான சைனாவைக் காட்டிலும்(1,20,000 பேர்) இரு மடங்கிற்கும் அதிகமாக இந்தியாவில் தற்கொலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை உள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா 9.2% என்ற விகித அளவில் தான் தற்கொலையில் இறப்பவர்களைக் குறைத்துள்ளது. சைனாவோ அதே காலக்கட்டத்தில் 59% அளவிற்குக் குறைத்துள்ளது.

இந்தியாவில் ஆண்கள் 1.6 மடங்கு பெண்களைக் காட்டிலும் அதிகமாகத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.15-29 வயதுள்ள இந்தியர்களில் லட்சத்திற்கு 35 – 38 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
உலக நாடுகளில் அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்ததில் முன்னிலையில் உள்ள நாடுகள்:

உலக நாடுகளில் 1,00,000 பேருக்கு அதிக எண்ணிக்கையில் சராசரியாக இறந்தவர்களின் எண்ணிக்கை விவரம்.

Guyana (44.2 per 100,000), followed by North and South Korea (38.5 and 28.9 respectively).

Sri Lanka (28.8), Lithuania (28.2), Suriname (27.8), Mozambique (27.4), Nepal and Tanzania

(24.9 each), Burundi (23.1), India (21.1), and South Sudan (19.8). Next were Russia and

Uganda (both with 19.5), Hungary (19.1), Japan (18.5), and Belarus (18.3).
தற்கொலைகளைத் தடுக்க என்ன செய்யலாம்?

தற்கொலை செய்து கொள்பவர்களை மேற்குறிப்பிட்ட சூழலில் தனித்து விடாமல் முன்னெச்செரிக்கையாகக் கவனித்துக் கொள்ளுதல் அவர்களுக்கு அவ்வெண்ணத்திலிருந்து விடுபட உதவும். கடை நிலை மனிதர்களின் கஷ்டத்தைப் புரிந்து கொள்ளுதலும், மன அழுத்ததிற்குள்ளானவர்களுக்கு நேர்மறையான ஆலோசனைகளும், ஆறுதல்களும், உதவிகளையும் செய்வதன் வழியாகவும் தற்கொலை எண்ணத்திலிருந்து காக்கலாம். ஊடகங்கள் செய்திகளை sensational ஆக்குதலை விடுத்து responsible ஆக செயல்படுதல், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்தான் அவசியம். மேலும் அரசுகள் விளிம்பு நிலை மக்களுக்கு(விவசாயம்,நெசவு, இன்னபிற தொழில்களில் ஈடுபட்டவர்களுக்கு முறையான திட்டங்களையும், ஆரோக்கியத்தைப் பேணிக் காக்கும் முறையான மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தல் தற்கொலை எண்ணத்திலிருந்து ஒருவரை விடுபடச் செய்ய உதவும். சமூகம் தமது கட்டமைப்பின் மூலம் தனி ஒருவனுக்குக் கொடுக்கிற அழுத்தம் அதாவது பொருளாதாரம், மான அவமானச் சின்னங்களை உருவாக்குவதன் மூலமும் பெரும்பாலான நேரங்களில் தற்கொலைகள் நடந்து விடுகின்றன. அதிலிருந்து விடுபட சமூகமே அம்மனிதர்களை அரவணைத்தல் மட்டுமே ஒருவனை இதிலிருந்து விடுபடச் செய்யும்.

தற்கொலையும் ஒரு நோய் என்பதைப் பற்றிய விழிப்புணர்வும், மன தைரியத்தைக் கொண்டு வர தியானம், நேர்மறை சிந்தனைகளைப் பெறச் செய்தல், ஆரோக்கிய வாழ்வு பற்றிய விழிப்புணர்வு, உதவிகள் மூலமாக பெருமளவு குறையச் செய்யலாம் என்பதே நாமறிந்து கொள்ள வேண்டியது.