வெளிநாட்டு மக்களின் பணப்பரிமாற்றமும் தேவையான மாற்றங்களும்:

dilipratha

மனதில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவிற்குப் பணம் அனுப்புவது பற்றியும், அதனால் என்ன நன்மை என்று  எழுத வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் அது பற்றிய தரவுகளை நம்மால் தனிப்பட்ட முறையில் அதுவும் அத்தொழிலில் இல்லாத  போது சில விடயங்களை சுட்டிக் காட்ட இயலாது அல்லவா? ஆகையால் இந்தக் கட்டுரை எழுதக் காரணகர்த்தாவாக மட்டுமல்லாமல் அதற்காகவே உழைப்பவரைப் பற்றி முதலில் சொல்லி விட்டு கட்டுரையில் என்ன அறிய வேண்டியுள்ளது என்பதைப் பார்க்கலாம்.

திலிப் ராதா ஓர் இந்தியர், ஒரிய மண்ணின் மைந்தர். பொருளாதார வல்லுனர். அவர் உலக வங்கியில் பல்வேறு பொறுப்புகளில் உள்ளார்.   Manager, Migration and Remittances Unit and CEO, Global Knowledge Partnership on Migration and Development (KNOMAD), Development Prospects Group, World Bank போன்ற பொறுப்புகளை வகித்து வருகிறார். இந்தக் கட்டுரையில் வெளி நாடுகளில் சென்று பணிபுரியும் ஒவ்வொரு தேசத்து மக்களும் தமது தேசத்திற்குப் பணம் அனுப்புவதையும், இந்தியர்களின் பங்கு பற்றியும், பணம் அனுப்புவதற்காக வசூலிக்கும் வங்கிகளின் சேவைக் கட்டணம் ( Commission/Service Charge ) பற்றியும், அதைக் குறைத்தால் என்னென்ன பலன்கள் என்பதையும் பார்க்கலாம்.

பத்து வருடங்களுக்கு முன்பாக வெளிநாட்டில் பணி புரியும் தொழிலாளர்கள் வங்கிக் கணக்கை திறப்பதற்கான வசதிகள் மிகக் குறைவு. அதற்கான காரணங்கள் பல. தமது ஊரில் உள்ள வங்கிக்கும் தாம் வெளிநாட்டிலிருந்து அனுப்பக் கூடிய வங்கிக்கும் நேரடி ஒப்பந்தம் இருக்காது.  அம்மாதிரியான நேரத்தில் அனுப்பப்படும் பணத்திற்கு வெளிநாட்டில் உள்ள வங்கி இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு சில வங்கிகளுடன் மட்டும் ஒப்பந்தம் செய்திருக்கும். அவ்வங்கிக்கே முதலில் பணப்பரிமாற்றம் செய்யப்படும். பின்னர் நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியும் , வெளிநாட்டிலிருந்து பணம் நேரடியாக வந்த இந்திய வங்கிக்கும் உள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணப்பரிமாற்றம் செய்யப்படும். அதற்கு இங்குள்ள வங்கி சேவைக் கட்டணமாக ஒரு தொகையை வசூலிக்கும்.

Ex:

Your Bank AccountCanara Bank ICICI Bank  TiedWith  Foreign Bank Foreign Bank TiedWith ICICI Bank
Service Charge ServiceCharge

வெளி நாட்டில் வாழும் மக்கள் தத்தமது நாடுகளுக்கு பணம் அனுப்ப (Foreign Remittance)  வங்கிகள்  Commission Charge என ஒரு தொகையை வசூலிக்கும். இந்த Commission/Service Charge பற்றி சில நேரங்களில் சிந்திப்பதுண்டு.

என்னுடைய அனுபவத்திலிருந்து பகிர்ந்து கொள்கிறேன். சவுதியிலிருந்து இந்தியாவிற்குப் பணம் அனுப்ப ஒவ்வொரு பணப் பரிமாற்றத்திற்கும் (Transaction) 16- 20 SAR சேவைக் கட்டணமாக சவுதியிலுள்ள வங்கிக்குச் செலுத்த வேண்டியுள்ளது. அதிலும் Online Transaction (100SAR)/ Western Union Bank ( 32SAR) செலுத்த வேண்டும். இது நாட்டிற்கு நாடு வேறுபடும். இதிலுள்ள சிக்கல் யாதெனில், லட்சம் ரூபாய் அனுப்புபவனுக்கும் ( பல லட்சங்கள் அனுப்பினாலும் அதிக பட்சத் தொகை 50,000 Riyals) , ஆயிரம் ரூபாய் அனுப்புகிற ஏழைக்கும் சராசரியாக ஒரு Transaction க்கு 16- 20 சவூதி ரியாலை வங்கிகள் (வங்கிகளுக்கு ஏற்ப இத்தொகை மாறுபடும்) வசூலிக்கிறார்கள். இவ்வாறு வசூலிப்பது சரியா எனத் தோன்றியதுண்டு.

இது ஒருபுறம் இருக்கட்டும். இதனால் ஏற்பட்ட தீமைகளை /முறைகேடற்ற செயல்கள் என்னவென்பது அதை விட முக்கியமாகிறது.

பல்வேறு நாடுகளில் வங்கிகள் commission charge என்ற பெயரில் கொள்ளையடிப்பதைத் தான் தாவுத் இப்ராஹிம் போன்ற கடத்தல் கும்பல்கள், பணத்தை உங்கள் வீட்டிற்குப் பத்திரமாகச் சேர்த்து விடுவோம், கவலைப்படாதீர்கள் என ஏழைகளைகச் சம்மதம்(convince) பெறச்செய்து அவர்கள் வழியாக பணத்தைத் தங்கள் ஊருக்குப் பல ஏழைகள் அனுப்பினர். நமக்கு ஏமாற்றமில்லை என்பது மட்டுமே ஏழையின் பிரச்சினை. ஆனால் அதைப் பயன்படுத்தியே ஹவாலா மன்னன் என்று பெயரெடுத்த ஹர்ஷத் மேத்தா  போன்ற கடத்தல் பேர் வழிகள் பல கோடிகளைச் சம்பாதித்தது. இவ்வாறு முறையற்ற வழியில் பணம் அனுப்பியதைத் தான் உண்டியல் வழியாக அனுப்பினேன் என்பார்கள். இன்று ஓரளவுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் இதைத் தீவிரமாகக் கண்காணித்து ஒழித்துள்ளார்கள் அல்லது குறைத்துள்ளார்கள்.

money

ஏழையைப் பொறுத்தவரையில் இங்குள்ள வங்கியில் வங்கிக் கணக்கு திறக்க வேண்டும். அடுத்து நான் ஏற்கனவே குறிப்பிட்ட தமது இந்திய வங்கிக்கும், தாம் பணிபுரியும் வெளி நாட்டு வங்கிக்கும் ஒப்பந்தம், ஒப்பந்தம் இல்லாத பட்சத்தில் இரு வங்கிகளுக்கு சேவைக்கட்டணம் , பற்றாக்குறைக்கு பணம் தமது வங்கிக்குப் போய் சேர ஒரு வாரமாகலாம்.  இந்த இன்னல்களை அனுபவிக்க விரும்பாத ஏழைகள் உண்டியல் வழியாகப் பணம் அனுப்பினால் தந்தையின் கைக்கோ. மனைவியின் கைக்கோ அடுத்த நாளே நேரடியாகக் கிடைப்பதைப் பேருதவியாக எண்ணினார்கள். மேலும் சேவைக்கட்டணமும் குறைவு. இதைத் தான் தாவுத் இப்ராஹீம் போன்றவர்கள் பயன்படுத்தினார்கள்.

இப்போது உலகில் வாழும் வெளிநாட்டு மக்கள் அனுப்பிய பணப் பரிமாற்றத்தைக் காணலாம். கடந்த வருடம் உலகம் முழுவதும் உள்ள வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளிகள் தங்கள் நாடுகளுக்கு அனுப்பிய பணத்தின் மதிப்பு 413 பில்லியன் டாலர். (இந்திய மதிப்பில் 24,78,000 கோடி இந்தியன் ரூபாய்களாகும். ). உலக வங்கி ஏழை மற்றும் உலக நாடுகளுக்கு இயற்கைச் சீற்றம், நோயிலிருந்து விடுபட என உதவி நிதியாக ஒதுக்கும் தொகையைக்(135  பில்லியன் டாலர்) காட்டிலும் மூன்று மடங்கு பணம் சொந்த தேசத்திற்கு மக்கள் அனுப்புகிறார்கள்.

413 பில்லியன் டாலரில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மூலம் கடந்த ஆண்டில் இந்தியாவிற்கு வந்த பண மதிப்பு 72 பில்லியன் டாலர்களாகும். ( இந்திய மதிப்பில் 4,32,000 கோடி ரூபாய்களாகும்).  வெளிநாட்டிலிருந்து  தங்கள் நாடுகளுக்கு பணம் அனுப்புவதில் 17%  அளவிற்கு பணம் வெளிநாட்டு வாழ் இந்தியர்களால் அனுப்பப் பட்டுள்ளது. மேலும் உலகில் அதிக அளவிற்கு வெளிநாட்டில் இருக்கும் தங்கள் பிரஜைகளால் அதிக பணத்தைப் பெற்ற நாடாக இந்தியாவே விளங்குகிறது. இதற்கு அடுத்த படியாக சீனாவிற்கு 64 பில்லியன் டாலர்கள் வரை அந்நாட்டு மக்களால் அனுப்பப்பட்டுள்ளது.

உலகமயமாதலில் தீமைகளும் உண்டு. நன்மைகளும் உண்டு. இது Globalisation னில் இந்தியாவிற்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மை. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP), FDI மூலம் இந்தியாவிற்குக் கிடைத்த வருவாயைக் காட்டிலும் ஏறத்தாழ  இரு மடங்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மூலம் இந்தியாவிற்குக் கிடைக்கிறது. இதை உலகமயமாதலில் Mobility effect மற்றும் Labour effect என்பார்கள். இந்த இரு விஷயமும் இந்தியாவிற்கு உலகமயமாதலின் வரப்பிரசாதமாகவே பார்க்க வேண்டும். இனி மீண்டும் விஷயத்திற்கு வருவோம்.

இந்த commission charge உலக வங்கிகள் பிரிக்கிற வசூலில் 8% , அதாவது நாம் அனுப்புகிற பணத்தில் 8% வங்கிகள் எடுத்துக் கொள்கின்றன. அதுவும் post office to banks, banks to banks ன் commission charge இதில் சேர்த்தி இல்லை. இதன் பொருள் என்னவென்றால் நாம் அனுப்புகிற வெளி நாட்டு வங்கிக்கும் நம்முடைய account உள்ள இந்திய வங்கிக்கும் நேரடி ஒப்பந்தம் இல்லாத இடங்களுக்கு 8% பொருந்தாது. அதையும் சேர்த்தால் இன்னும் உயரும். தற்போதைய நிலவரப் படி, 30 பில்லியன் டாலர்கள் வங்கிகளின் Commission Charge ஆக செல்கிறது என்பதே.

இந்த 8% கொள்ளையைக் குறைக்கவும் , முறையற்ற வழியில் பணம் அனுப்புவதைத் தடுக்கவும் திலிப் சில யோசனைகளை முன் வைக்கிறார்.

  1. குறைந்த அளவு பணம் அனுப்புபவர்களுக்குக் குறைந்த commission charge என திலிப் சொல்கிறார். அவர் குளோபல் ஆக பார்ப்பதால் பொதுவாக சொல்லி இருக்கிறார்.

ஏழைகளுக்கு 20 SAR என்பது இன்றைய தேதியில் 320 ரூபாயாகும். அது அவர்களைப் பொறுத்தவரையில் மிகப் பெரிய தொகை. அனுப்புகிற 2000ரூபாய்க்கும் 3000ரூபாய்க்கும் வங்கிகள் வசூலிக்கும் இத்தொகை மிகக் கொடுமையானதும் கூட!

இதை வலியுறுத்திச் சொல்ல மேலும் சில காரணங்கள் உண்டு. நமக்கே தெரியும், ஏழைகள் வெளிநாட்டு வேலை கிடைத்தால் ஏஜென்ட் , டிக்கெட், விசா செலவு என ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை செலவழித்தே வருகிறார்கள். அவர்களின் வெளிநாட்டு வருமானத்திலிருந்து குறைந்த பட்சம் இரு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு இக்கடனை செலுத்தவே உழைக்க வேண்டி இருக்கிறது. அடுத்ததடுத்த ஆண்டுகள் பணி புரியும் பட்சத்தில் மட்டுமே அவர் சேமிப்புக்கோ, குடும்பச் செலவுக்கோ பணம் அனுப்ப இயலும்.

  1. இந்திய அரசே வங்கிகளிடம் வெளிநாட்டிலிருந்து ஒரு நபர் அனுப்பும் பணம் குறிப்பிட்ட லட்சத்திற்கு மேல் இருந்தால் மக்கள் நலனுக்கான நலத் திட்டம் என்ற பெயரில் 2% to 3% பிடித்தால் கூட அது பெருமளவு Infrastructure க்குப் பயன்படும். திலீப் தமது மத்திய அரசு கொண்டு வருகிற bullet train மற்றும் மலேரியா ஒழிப்பு போன்ற திட்டங்களுக்கு இதுமாதிரி வசூல் செய்யலாம், அவ்வாறு வசூல் செய்தால் அதில் தமது பங்கும் இருக்கும் என்கிறார். மேலும் அதிக பணம் சம்பாதிக்கிற வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் உவகையுடன் செய்வார்கள்.
  2. இந்த 8% சேவைக்கட்டணத்தை 1%க்குக் கொண்டு வந்தாலே வங்கிகளுக்கு எவ்விழப்பும் கிடையாது என்கிறார்.

தகவல்களுடன் உணர்வோடு பேசிய பேச்சு ரொம்பவே பாராட்டுக்குரியது. TED இணையதளத்திலும் உள்ளது. உலக வங்கியில் அவர் எழுதும் பிளாக்கில் ஏராளமான தகவல்கள் உள்ளன.

முறையற்ற வழியில் பணம் அனுப்புவதைத் தடுக்கவும், வங்கிகள் ஏழைகளுக்கு மிகக் குறைந்த சேவைக் கட்டணத்தை வசூலிப்பதன் மூலம் இன்னும் பல்வேறு குடும்ப , சமூக நலத்திட்டங்கள் உலக நாடுகளுக்குக் கிடைக்கும் என்பதே நாமறிந்து கொள்ள வேண்டியது. அதற்கான முயற்சியில் தான் திலீப் ராதாவும் உள்ளார் என்பது பெருமைப்பட வேண்டியதும் கூட.