மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்கள் சொல்லும் விஷயங்கள்

ஹரியானாவில் ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் பிஜேபி பெற்ற இடங்கள்:

 

ஹரியானா பற்றி நான் தேர்தல் முடிவுகளுக்கு முன்னமே எழுதியதால் தேர்தல் முடிவிலிருந்து எதையும் அலசவில்லை. அதை மனதில் கொண்டு படியுங்கள் நண்பர்களே.

6 Seats (1982), 16 seats (1987), 2 seats (1991), 11 seats(1996), 6 seats (2000), 2 seats(2005), 4 seats(2009)

ஹரியானாவின் சட்டசபை தேர்தலின் வரலாற்றில் ஒரேயோருமுறைதான் பிஜேபி எதிர்க்கட்சியாக வந்துள்ளது. 16 இடங்களில் 1987 தேர்தலில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது.  மற்ற அனைத்துத் தேர்தல்களிலும் அது மூன்று, நான்காம் இடத்தைப் பிடித்த கட்சியே!

ஆனால் இந்த வருடம் பிஜேபி தனித்த மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் வருகின்றன. ஹரியானாவில் எதிர்க்கட்சியாக இல்லாத கட்சி இன்று ஆட்சியைப் பிடிக்க முக்கியக் காரணம் என்னவாக உள்ளது?

  1. பொருளாதார வளர்ச்சியை முன்னிறுத்திய பிரச்சாரம்.
  2. காங்கிரஸ் மற்றும் இந்திய தேசிய லோக்தலின் ஊழல்.
  3. இரண்டைக் காட்டிலும் மோடி என்ற மனிதர் மீது மக்கள் வைத்துள்ள அபார நம்பிக்கை.

இந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டியது பிஜேபியின் கடமை. மத்திய பிரதேசத்திற்கு சிவ்ராஜ் சிங் சவானை அளித்தது போல சிறந்த முதல்வரை ஹரியானாவிற்கு அளிக்க வேண்டியது பிஜேபியின் கடமையாகும்.

அதைச் செய்தாலே பிஜேபி மீது இதர மாநிலங்களிலும் நம்பிக்கை பிறக்கும். பிஜேபி வளர்வதற்கான வாய்ப்புகள் பெருகும். இதை பிஜேபி உணர்ந்து செயல்படவேண்டும். ஒருவேளை மக்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றம் என்ற நிலையை உணர்ந்தால் பிஜேபி ஏற்கனவே வாங்கிய 2 இடங்களுக்குத் தானாகவே வந்து சேர்ந்து விடும்.

பாஜகவின் இந்த வளர்ச்சி மாநிலக் கட்சிகளுக்கு மிகுந்த எச்சரிக்கையை அளிக்க வல்லது. அதை உணராமல் காவிக்கட்சி, மதவாதக் கட்சின்னு புலம்பினால் மாநிலக் கட்சிகள் தம்மிடத்தை மேலும் இழக்கும். பாஜக முறையான ஆட்சியை தாம் ஆளும் மாநிலங்களில் வழங்கினாலே இதர மாநில மக்களுக்கு அக்கட்சியின் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படும். மேற்கு வங்கத்தில் கம்யுனிஸ்டின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது என்பதற்கான அனைத்து செய்கைகளும் நன்றாகவே தெரிகின்றன. பீகாரைப் பொறுத்தவரையிலும் இனி பிஜேபி ஆளும் அல்லது நேரடி எதிர்க்கட்சியாக வளரும். நேரடி எதிர்க்கட்சியாக வளர்கிற பட்சத்தில் அது மாநிலங்களில் பாஜகவிற்கான மிகச் சிறந்த பலத்தையும் அரசியல் எதிர்காலத்தையும் தரும். பாஜக மெல்ல மெல்ல ஒவ்வொரு மாநிலத்திலும் வளர்வதே கட்சிக்கு நல்லது.

 

தேர்தல் முடிவில் ஹரியானாவில் 47 இடங்களைப் பிடித்து பாஜக ஆட்சி அமைத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

http://eciresults.nic.in/PartyWiseResultS13.htm?st=S13

மகாராஷ்டிராவில் ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் பிஜேபி பெற்ற இடங்கள்:

14 seats ( 1980), 16 seats (1985), 42 seats (1990), 65 seats(1995), 56 seats(1999), 54 seats(2004), 46(2009) 122 seats (2014)

BJP Voting Percentage:

12.8  %  (1995),14.54 % (1999),13.67 % (2004), 14.02 %(2009),  27.8 % (2014),

Congress  Voting Percentage:

31.0  % (1995), 27.20  % (1999), 21.06 % (2004) , 21.01 %(2009), 18 %(2014)

கடந்த கால மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் மகாராஷ்டிரா காங்கிரசின் கோட்டை என்பது தெளிவாகப் புரிகிறது. 95 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 80 இடங்களையே பிடித்தாலும் அதன் வாக்கு வங்கி(31%),  ((சிவசேனா & பாஜக(29%)) கூட்டணியைக் காட்டிலும்  அதிகமாகவே வாங்கியுள்ளது. அத்தேர்தலில் தேசிய வாத காங்கிரஸ் என்ற கட்சி உருவாகவில்லை. இடங்களின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தைக் காட்டி பிஜேபி + சிவசேனா ஆட்சியைப் பிடித்துள்ளதும் தெரிகிறது. 1999 முதல் 2009 தேர்தல் வரை காங்கிரஸ் + தேசிய வாத காங்கிரசின் வாக்கு வங்கியும், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பலமும் போதிய அளவிற்கு இருந்தது.

2014 ஆம் ஆண்டிற்கான இந்த சட்டசபை தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி 2009 ஆம் ஆண்டிற்கான வாக்கு வங்கியைக் காட்டிலும் இரட்டிப்பாக ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலைப் பொறுத்தவரையில் , Cong + NCP & SHS + BJP கூட்டணியாகப் போட்டியிட்டு இருந்தால் மக்களின் மனநிலை பிந்தையக் கூட்டணிக்கு அதிகமாக வெற்றி பெற உதவி இருக்கக்கூடும். ஆனால் இப்போது அதை ஒப்பிடுவது சரியாக அமையாது.

பாஜகவைப் பொறுத்தவரையில் இது மிகப் பெரிய வளர்ச்சி மட்டுமல்ல. தக்க வைக்க வேண்டிய அவசியமும் உள்ளடங்கிய வெற்றியுமாகும். 100 இடங்களுக்கு மேலாக தனிக் கட்சியாக 1990 ல் காங்கிரஸ் 141 இடங்களைப் பிடித்திருந்தது. 24 வருடங்களுக்குப் பிறகு தனிக் கட்சியாக பாஜக 122 இடங்கள் பிடித்துள்ளது என்பது கவனிக்கப் பட வேண்டியது.

பாஜக சிறு அரசியல் பிழை செய்தால்கூட காங்கிரஸ் எந்நேரமும் மகாராஷ்டிராவில் தனது பழைய பலத்திற்கு வந்துவிடும் என்பதைத் தான் பாஜக இத்தேர்தலின் வெற்றியில் கற்றுக் கொள்ள வேண்டியது. சிவசேனாவாலோ, MNS கட்சியாலோ இனி பிஜேபியை அவ்வளவு எளிதாக மிரட்ட முடியாது. சிவசேனா தான் மிக முக்கியமான அரசியல் பாலபாடத்தைக் கற்றுக் கொண்டிருக்கும் அல்லது கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

காங்கிரஸ் 15 வருடங்களில் உருவான புதிய இளம் வேட்பாளர்களைக் கவரவில்லை என்பதை அக்கட்சி உணரவேண்டும். 15 வருடத்திற்குப் பிறகே காங்கிரஸ் மீதான எதிர்ப்பலை பாஜகவிற்கு சாதகமாக்கி உள்ளது. சிவ சேனாவின் கெடுபிடியைப் பொறுத்துக் கொள்ளாமல், பாஜக தனித்து நிற்க எடுத்த முடிவு களத்தின் அடிப்படைதான் என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. பாவம், சிவசேனா தான் பாஜகவைத் தவறாக எடை போட்டு விட்டது.

பாஜக NCPயின் ஆதரவோடு ஆட்சி அமைக்கக் கூடாது. பழைய நண்பனான சிவா சேனாவுடன் கூட்டணி வைப்பதே எதிர்வருங்காலங்களில் சிற்சில அரசியல் தவறுகள் செய்தாலும், நல்லாட்சி புரிகிற பட்சத்தில் காங்கிரசை மேல்நோக்கி வளரவிடாமல் தடுக்க உதவும். என்னைப் பொறுத்தவரையில் காங்கிரசைக் காட்டிலும், பாஜகவிற்குத் தான் விஷப்பரிட்சையாக இருக்கும்.

ஆனால் மேற்கண்ட இரு மாநிலத் தேர்தல்கள் காங்கிரசிற்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை மட்டுமல்ல. மக்கள் மாநிலக் கட்சிகளையும் சேர்த்தே இரு மாநிலங்களிலும் புறக்கணித்துள்ளார்கள்.  பாஜகவின் தேர்தல் பிரச்சார யுக்தி அவர்களுக்கு வெற்றியைத் தந்துள்ளது. அவர்கள் நல்லாட்சி புரிகிற பட்சத்தில் இதர மாநில மக்களும் பாஜகவை ஆதரிக்கத் தயங்க மாட்டார்கள். மாநிலக் கட்சிகள் இதை உணர்ந்து தம் மாநிலங்களில் ஆட்சி புரிய வேண்டிய கட்டாயமும் உள்ளது. எங்கெல்லாம் பாஜக வளர்ச்சி ஒருமுறை பெறுகிறதோ அங்கெல்லாம் பிரதான ஆளும் அல்லது எதிர்க்கட்சியாக பாஜக தன்னை வளர்த்து மாநிலக் கட்சிகளைப் பின் தள்ளி விட்டது என்பதே தேர்தல் வரலாறு. கர்நாடகாவில் இன்று பாஜக பிரதான எதிர்க்கட்சியாகி விட்டது. தேவகவுடா மூன்றாவது கட்சியாக மட்டுமே காலம் தள்ள வேண்டிய நிலை வந்துள்ளது. பீகாரும் அவ்வாறு மாறியுள்ளது. இதைத் தான் மாநிலக் கட்சிகளும் காங்கிரசும் மனதில் வைத்து செயல்பட வேண்டிய தருணம் இது. அதே போல பாஜகவும் தமது எல்லையை விரிக்க விரும்பினால் நல்ல முதல்வர்களைக் கொடுப்பதன் மூலமும், சிறந்த ஆட்சி வழங்குவதன் மூலமும் மட்டுமே வளர இயலும். இல்லையேல் அடுத்த தேர்தலிலேயே தமது இடத்தைப் பலமாக இழக்குமாதலால் மிகக் கவனமாக செயல்படவேண்டிய கடமை பிஜேபிக்கு உள்ளது.