பித்தத்தில் ஆம் ஆத்மியும் மோடி வெறுப்பாளர்களும்:

ஆம் ஆத்மி கட்சியும் மோடி வெறுப்பு வெறியர்களும் ஒரு பொய்யைப் பிரதானமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதாவது மோடி 3,00,000 க்கும் அதிகமான போலி வாக்காளர்களை தமது கட்சிக்காக சேர்த்துத்தான் வெற்றி பெற்றார் என்பதே. இது பற்றிய எனது ஆய்வையும், வாக்கு விவரங்களை இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்திலிருந்து எடுத்தே முன்வைக்கிறேன்.

வாரணாசி 2009 மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை = 15,61,854

வாரணாசி 2014 மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை = 17,66,487

வாரணாசி வாக்காளர் வித்தியாசம் (2014 -2009) = 2,04,633

2009 தேர்தல் வாக்கு சதவீதம்/பதிவான வாக்குகள் = 42.6 % ( 6,70,891)

2014 தேர்தல் வாக்கு சதவீதம்/பதிவான வாக்குகள் = 58.35 % (10,30,685)

பதிவான வாக்குகள் வித்தியாசம் 2014 – 2009 = 15.75% ( 3,59,794)

BSP ஓட்டு வித்தியாசம் (2009 -2014 தேர்தல்) = 1,85,882 – 60,534= 1,25,348(இழப்பு ஓட்டுகள்)

SP ஓட்டு வித்தியாசம் (2009 – 2014 ) = 1,23,826 – 45,266 = 78,560(இழப்பு ஓட்டுகள்)

Congress ஓட்டு வித்தியாசம் (2009 – 2014) = 66,352 -75541 = -9189 (அதிக ஓட்டுகள் 2009 –யோடு compare செய்தால்)

ஆம் ஆத்மி 2009 தேர்தலில் நிற்கவில்லை = 2,09,111 (2014 தேர்தலில் பெற்ற ஓட்டுகள்)

ஆம் ஆத்மி இல்லாமல் பிரதான கட்சிகளான BSP + SP + Cong கட்சிகள் 2009 ல் பெற்ற ஓட்டுகள் = 3,76,060

ஆம் ஆத்மியையும் சேர்த்து இந்த கட்சிகள் 2014 ல் பெற்ற ஓட்டுகள் = 4,23,746

அப்னா தள் (2009ல் பெற்ற ஓட்டுகள்) = 65,907 (2014 ல் பாஜக கூட்டணியில் வந்துவிட்டது.)

பாஜக 2009 ல் பெற்ற வாக்குகள் = 2,02,969 + 65,907 = 2,67,907

மோடி பெற்ற வாக்குகள் = 5,80,423

இந்த விடயங்களை ஆராய்ந்தால் சில விஷயங்கள் புலப்படும்.

1. ஓட்டு சதவீதம் 15.75 % கடந்த தேர்தலைக் காட்டிலும் இந்தத் தேர்தலில் அதிகரித்துள்ளது.

2. புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 2009 தேர்தலோடு ஒப்பிடுகையில் 2,04,633 அதிகரித்திருப்பது + 3,59,794 வாக்குகள் 2014 தேர்தலில் அதிகமாகப் பதிவாகி இருப்பது கவனிக்க வேண்டியது. இது ஏதோ வாரணாசியில் மட்டும் அதிகரித்த வாக்காளர்களின் எண்ணிக்கையோ/ வாக்கு சதவீத வித்தியாசமோ அல்ல. இந்தியா முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் அதிகரித்துள்ளது.

3. நாட்டின் பிரதம வேட்பாளர் என அறிவித்துக் கொண்ட இரண்டு தலைவர்கள் நேருக்கு நேர் மோதுகிறார்கள். அங்கு இயல்பாகவே இருதரப்பு ஆதரவாளர்களும் வாக்களிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆதலால் பிரதமராக யார் வரவேண்டும் என மக்கள் நினைக்கிறார்களோ அவர்களுக்கு அதிக வாக்குகளை அளிப்பார்கள் என்பது நிதர்சனம். இந்தியா முழுவதும் மோடி என்ற மனிதன் மீது நம்பிக்கை வைத்து பாஜகவை இந்தியா முழுக்க பாஜகவே கனவில் காணாத தனிப் பெரும்பான்மையை மக்கள் அளித்துள்ளார்கள் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது. நிச்சயமாக 25,000 to 30,000 வரை போலி வாக்காளர்கள் இருக்கக் கூடும் இது வாரணாசி என்கிற ஒரு தொகுதிக்கு மட்டும் பொருத்தமல்ல.

4. SP, BSP ஆகிய இரு கட்சிகளும் தமது வாக்கைப் பெருமளவுக்கு இந்தத் தேர்தலில் உத்திரப்பிரதேசம் முழுவதுமே இழந்திருந்தார்கள். அவர்கள் ஆதரவு ஓட்டுகளை வாரணாசியில் (2,03,908) இந்த முறை இழந்ததையும் , புதிய வாக்காளர்களையும்தான் (2,04,633) மோடியும் கெஜ்ரிவாலும் பகிர்ந்துள்ளார்கள் என்பதை மேற்கூறிய எண்ணிக்கை வித்தியாசத்திலிருந்து நம்மால் உணர இயலும்.

5. கேஜ்ரிவாலுக்கு விழுந்த ஓட்டுகள் எங்கிருந்து வந்தது என்பதை அவர்தான் விளக்க வேண்டும். டெல்லி சட்டசபைத் தேர்தலில் ,2008 தேர்தலைக் காட்டிலும் 10 சதவீதம் வாக்குகள் 2013 தேர்தலில் விழுந்ததற்காக குதுகலித்தவர் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதே மாநிலத்தில் 10 % அதிக அளவுக்கு வாக்குகள் பதிவானதற்குக் காரணம் என்றாரே. இப்போது இரு பிரதம வேட்பாளர்கள் நிற்கிற வாரணாசியில் 15% அதிகரித்திருப்பதற்கு மட்டும் போலி வாக்காளர் வாக்குப் பதிவு என எப்படி சொல்ல இயலும்.

மோடியை வெல்ல இயலாதவர்கள் மோடியின் வெற்றி போலியானது என்று சொல்ல முனைவது இந்திய வாக்காளர்களை முட்டாள்கள் என்று சொல்ல முனைவதற்கு சமம்தான். ஆம் ஆத்மிக்கு எதிராக டெல்லி தேர்தல் முடிவுகள் சொல்லும். அப்போதும் மோடி மக்களை ஏமாற்றுகிறார் என சொல்லிக் கொண்டு மனதைத் தேற்றுவது ஒன்றே ஆம் ஆத்மி ஆதரவாளர்களும் மோடி வெறுப்பாளர்களும் செய்ய வேண்டி இருக்கும்.

நேரு மாமாவும் பொது சிவில் சட்டமும்:

நேரு மாமாவின் பிறந்த நாளில் அவரின் கனவு என சொல்லிக் கொண்ட ஒன்றான அனைவருக்கும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர பிஜேபி இந்நாளில் அனைத்து மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அழைப்பு விடுக்க வேண்டும்.

பொது சிவில் சட்டம் பற்றி பேசுமுன் இந்து சமயச் சீர்திருத்த சட்டங்கள் காலத்திற்குத் தகுந்தாற்போல மாறிக்கொண்டே வர வேண்டும் அல்லது மாற்றங்கள் தேவைதானா என்ற அடிப்படையில் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும் என்பதே எனது பார்வை. அவ்வாறு தான் இந்து மக்கள்” அரசுகளும், மன்னர்களும் செய்ய விரும்பியதை ஏற்றுக்கொண்டு செயல்பட்டுள்ளார்கள் என்பதே வரலாறு. ஒவ்வொரு காலத்திலும் அதற்கேற்றாற்போல சடங்கு, வழிபாட்டு முறைகள் என தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்டும், சமய ஆன்மிகவாதிகளின் துணை கொண்டு இந்து மதம் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் புதுப்பொலிவுடன் தன்னிடத்தை இழந்து விடாமல் இந்து மதம் பாதுகாத்துக் கொள்ளும் என்று ஆழமாக நம்புகிறேன். இனி பொது சிவில் சட்டம் ஏன் கொண்டு வரப்பட வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் 44 ஆவது பிரிவு ” இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து பிரிவு மக்களுக்கும் (இந்து, கிருத்துவ, இஸ்லாமிய, சீக்கிய, பௌத்த, ஜைன, யூத, பார்சி) பொது சிவில் சட்டம் அளிக்க அரசாங்கம் பாடுபடும் ” என்று தெரிவித்தது.

இதைப்பற்றி விவாதம் ஆரம்பிக்கப்பட்டபோது சபையில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. குறிப்பாக முஸ்லிம் உறுப்பினர்கள் பெரும் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். இதை அம்பேத்கார் பலமாக எதிர்த்தார்.

ஆகையால் முதலில் இந்து சமயச் சீர்திருத்த சட்டம் மட்டும் கொண்டு வரலாம் என்ற முடிவில் அதை விவாதிக்க ஆரம்பித்தனர். அதற்கு இந்து அடிப்படைவாதிகளிடமிருந்து பலத்த எதிர்ப்பு வந்தது. குறிப்பாக ராஜேந்திர பிரசாத் போன்றவர்களிடமிருந்து எதிர்ப்பு வந்தது. RSS இந்து சமய சீர்திருத்தம் மட்டும் தனியாக ஏன் என தனது எதிர்ப்பைக் காட்டியது. இறுதியாக மசோதா நிறைவேறமுடியாமல் போனதில் அம்பேத்காருக்கு நேரு மீது மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. ஆகையால் அவர் காங்கிரசிலிருந்து வெளியேறி தனிக்கட்சி ஆரம்பித்தார்.

1952 தேர்தலில் காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றி அடைந்ததையடுத்து நேரு மீண்டும் இந்து சட்ட மசோதாவை முன் வைக்கிறார். இப்போது எதிர்ப்பு பலமாக இல்லை. 1954 – 56 காலக்கட்டத்தில்தான் ஒவ்வொரு இந்து சமய சட்ட சீர்திருத்த மசோதா நிறைவேறுகிறது. இறுதியாக ஒவ்வொரு சட்டமாக ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் இந்து சட்ட மசோதாவில் விவாகரத்து, ஒருவனுக்கு ஒருத்தி, பெண்களுக்கான சொத்துரிமை என மசோதா அமலுக்கு வந்தது.

1947 லிலிருந்து 1956 வரையாகியும் முஸ்லிம்கள் மீதான சமய சீர்திருத்த சட்டத்தைக் கொண்டு வர எந்த முயற்சியையும் நேரு மேற்கொள்ளவில்லை. அதற்கு அவர் சொன்ன காரணம் விசித்திரமானது. பிரிவினைக்குப் பின் இங்கு தங்கிவிட்ட முஸ்லிம்களை பாதுகாப்பற்ற உணர்விற்கு ஆழ்த்தி இருப்பதாகவும், இந்த நிலையில் முஸ்லிம்கள் புனிதமாகக் கருதிய மரபு நெறியில், அல்லாவின் திருவசனம் என்றே கருதியதில் குறுக்கிடுவது இஸ்லாமியர்களுக்கு மிகுந்த வலியைத்தரும் , மேலும் அவர்களைப் பாதுகாப்பின்மைக்கு உள்ளாக்கும்” என தெரிவிக்கிறார்.

பொது சிவில் சட்டம் கொண்டு வருவதில் என்ன சிக்கல் என்று கேட்ட போது நேருவின் பதில் இதுதான். “1956 ல் (ஏறத்தாழ 7 வருடங்கள் கழிந்தும்) அப்போதைய சூழலில் பொது சிவில் சட்டம் நிறைவேற்ற காலம் கனியவில்லைஎன்றும், ஆனால் பொது சிவில் சட்டம் கொண்டு வர தமது ஆதரவு உண்டு என்றும், இந்த இந்து சட்ட மாற்றங்கள் (இந்துக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு கொண்டு வரப்பட்ட மாற்றங்கள்) அதற்கான தளத்தை உருவாக்க அமையும் ” என்றும் பதில் அளித்தார்.

சிலர் நேருவின் எச்சரிக்கை உணர்வை தமது பார்வையில் மிகத் தெளிவாக எதிர்ப்பைப் பதிவு செய்தனர். குறிப்பாக சியாமா பிரசாத் முகர்ஜி.

தற்காலிக நாடாளுமன்றத்தில், “ஒருவருக்கு ஒருதாரம் என்பது வேறு எவருக்குமல்ல. அது இந்துக்களுக்கும், சீக்கியர்களுக்கும், பௌத்தர்களுக்கும் மட்டுமே; எல்லாருக்கும் ஒருதார மனச் சட்டம் என்று கொண்டு வருவதில் கூடவா அரசுக்கு இயலவில்லை.இந்தக் கேள்வியைக் கேட்ட பிறகு சியாமாவே பதிலும் அளித்தார்.

“நான் இந்த விஷயத்தில் தலையிடப்போவதில்லை. ஏனென்றால் இந்த மசோதாவைக் (இந்து மசோதாவை மட்டும்) கொண்டு வந்தவர்களுடைய பலவீனம் எனக்குத் தெரியும். முஸ்லிம்களை சிறுபான்மை என சொல்லிக் கொண்டு அவர்கள் விஷயத்தைத் தொட மாட்டீர்கள். ஏனெனில் இந்துக்களைப் போல அல்லாது , அவ்வாறு சின்ன சட்ட மாற்றத்தை நீங்கள் கொண்டு வர முயற்சி செய்தால் கூட இந்தியா முழுவதிலுமிருந்தும் இந்த அரசாங்கத்திற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பும். மிகப் பெரிய போராட்டங்கள் வெடிக்கும். ஆனால் சர்வ நிச்சயமாக நீங்கள் இந்து சமய விஷயத்தில் மட்டும் என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் எதையும் செய்யலாம் ” என்றார்.

1956 லிருந்து இன்று வரை பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது யார்? காங்கிரஸ் காரர்கள்தானே. மதச் சார்பற்றவர்கள் எனக் காட்டிக் கொள்ளும் இந்தியாவின் அனைத்து மதச் சார்பற்ற கட்சிகள் தானே. சிறுபான்மை மக்களின் உணர்வுகள் பாதிக்கப்படக்கூடாது என்பது தான் மதச் சார்பின்மைபோல!

ஆகவே நேரு மாமாவின் பிறந்த நாளில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர நேரு மாமாவின் ஆசி அதற்கு உண்டு என சொல்லி பாஜக அரசு இந்த விவாதத்தை நேருவின் பெயரை முன்வைத்தே எடுத்துச் செல்ல வேண்டும்.

உண்மையாக அனைவருக்கும் பொது சிவில் சட்டம் வேண்டும் என்று சொல்பவர்களை மட்டும் இந்து அடிப்படைவாதிகள் என்ற கூண்டுக்குள் அடைக்க மட்டுமே பாஜக எதிர்ப்பாளர்களும் நடுநிலை என்று சொல்லிக்கொண்டு பாஜக மீது எதிர்ப்பு விஷ வார்த்தைகளைத் துவுபவர்களும் செய்வார்கள். அதுதான் இந்த தேசத்தில் நடக்கும்.

இந்து அடிப்படைவாதிகள் இந்தியாவில் மீண்டும் குழப்பத்தைக் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன் வைத்து பொது சிவில் சட்டம் வேண்டும் என்பவர்களையும் வாயடைக்கச் செய்ய நீ இந்து அடிப்படை வாதி என்பதால்தான் இதை வர வேண்டும் என்கிறாய் என சொல்லியும் பொது சிவில் சட்டம் தேவையென்று சொன்னால், தாம் சிறுபான்மை மக்களின் பாதுகாவலன் என்று சொல்ல இயலாமல் போய் விடும் என்று கருதி எதையாவது பிதற்றுவார்கள்.

Common civil code

சாதிகள் மட்டும் தேவையற்றதா என்ன ?

சாதிகள் மட்டும் தேவையற்றதா என்ன ?

உலகெங்கும் மக்கள் தம் பாதுகாப்பு கருதி இனக்குழுக்களான வாழ்க்கை முறைக்கு பழகி இருந்தனர். ஆகையால் தான் மதம், சாதி, மொழி, இனம் என மனிதர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய, அரசியல் அதிகாரத்தைப் பெற என ஏதோ ஒன்றை கெட்டியாகப் பிடித்துள்ளனர். இதில் சாதிதான் பிரச்சினை, இது ஒழிந்தால் சமத்துவம் மலரும் என்பது சுத்த பைத்தியக்காரத் தனம்.

குழு வாழ்க்கையில் இதர குழுக்கள் மீது தமது அதிகாரத்தை நிலைநாட்ட சில தவறுகள் எல்லை மீறி இருந்தது என்னவோ உண்மைதான். அதிலிருந்து விடுபட எம்மாதிரியான சமூக மாற்றங்கள் பலன் அளிக்கும் என்பதே நாம் செய்ய வேண்டியது. அதை விடுத்து சாதி தான் பிரச்சினைக்குக் காரணம் என்று சொல்பவர்கள் பல ஆயிரக்கணக்கான சாதிகளால் ஏற்பட்ட பிரச்சினைகளைக் காட்டிலும் சியா, சுன்னி என இரு இனக்குழுவினரிடையே நடக்கும் அசம்பாவிதங்களும் கொலைகளும் இன்று கணக்கிலடங்கா என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அதிக இனக் குழு வாழ்க்கை என்பதற்கு மொழியும், சாதியும் மட்டுமே சிறந்த உதாரணம். வெவ்வேறு நிலப்பகுதியில் வாழும் மக்கள் தமக்கான மொழி, தமக்கான சாதிய பழக்க வழக்கங்களோடு வாழ்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஏற்றத்தாழ்வைக் குறைக்க வழி செய்தல் என்பதைத் தான் புத்திசாலிகள் செய்திருப்பார்கள். அதை விடுத்து இது இருப்பதால் தான் பிரச்சினை, ஆகையால் இது ஒழிந்து விட்டால் பிரச்சினையில்லை , நாமெல்லாம் ஒரே இனமாகி விடுவோம் என்பது ஆகப் பெரிய பொய். அதை அம்பேத்காரே வழியுறுத்தி இருந்தால் கூட இந்தியாவின் இனக்குழு வாழ்க்கையை இதர இனக்குழுக்களிடம் பிரச்சினைகளில் எம்மாதிரியான இழப்பை உலகம் சந்தித்தது எனக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மேம்போக்காக சாதி மட்டுமே இந்து மதத்தின் பிரச்சினையாக அடையாளம் காட்டினார்கள். ஒரேயொரு மொழியைத்தான் ஒரு தேசம் கொள்ள வேண்டும் என்ற சொல்லாடல் எவ்வளவு பிழையாகக் கருதப்படுமோ அவ்வாறுதான் சாதிகளற்ற சமுதாயம் ஏற்றத்தாழ்வை அழித்து விடும் என சொல்வதும் ஒன்று தான்.

அதிக எண்ணிக்கையில் சாதிகள் இருக்கும் பட்சத்தில் ஒரு சாதியும் இன்னொரு சாதியும் தமது அதிகாரத்தை நிலைநாட்ட அடித்துக் கொள்ளும் பட்சத்தில் ஏற்படுகிற இழப்பு இன்னொரு நிலப்பகுதிக்கு பரவாது. ஆனால் வெறும் இரு பிரிவினர் மட்டுமே இருந்தால் பிரச்சினைகள் இருக்காது என்பதற்கு ஏதேனும் சான்றுகள் உள்ளதா? இன்னும் சொல்லப்போனால் மக்கள் இரு இனப் பிரிவுகளில் ஒரே தேசத்தில் அதிகமாக இருந்த போது மட்டுமே மிகப் பெரிய கலவரங்கள் மொழியின் பெயரால், மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால் மிகப் பெரிய அழிவுகளை வரலாறு தந்துள்ளது என்பதே உண்மை.

இந்து மதத்தை வெறுப்பதற்குக் காரணம் சாதிய அடுக்கு முறை என்பவர்கள் வேறு மதத்தில் இது போன்ற பிரச்சினைகள் இல்லை என்று சொல்வதைக் காட்டிலும் முட்டாள்தனம் வேறு எதுவும் கிடையாது. அம்பேத்காரிலிருந்து , ஈ.வெ.ரா நாயக்கர் வரை பௌத்தத்திற்கோ இஸ்லாமிற்கோ மாறுங்கள் என்று இந்துக்களை அறைகூவல் விடுத்தது என்னைப் பொறுத்தவரையில் சுத்த பைத்தியக்காரத்தனம். சாதி ஒழியவேண்டும் என்பவர்கள் அதிக பிரிவைக் கொண்ட பல்வேறு சாதி இனக்குழுக்களால் ஏற்பட்ட பேரழிவைக் காட்டிலும் ஒவ்வொரு மதத்திற்குள்ளும் இருக்கும் பலம் வாய்ந்த இரு குழுவினர் அடித்துக் கொண்டதைப் பற்றியோ, இரு மொழி பேசும் தேசத்தில் தான் மொழியால் அதிகாரப்பிரச்சினையால் பல உயிர் இழப்புகளைப் பற்றியோ அதிகம் பேசாமல் இந்தியாவின் சாதியை ஒழிப்பதை மட்டும் தங்கள் லட்சியமாக செயல்படுவது போல காண்பிப்பது என்பது பிரச்சினைக்கானத் தீர்வு என்ன என்பதை நோக்காது செயல்பட்டதால் தான் நாம் அதே இடத்தில் சாதியோடு நின்று கொண்டிருக்கிறோம்.

குழு வாழ்க்கையில் நன்மைகளும் உள்ளது, சில தீமைகளும் உள்ளது என்கிற புரிதல் இல்லாதவர்கள் தான் சாதிகள் ஒழிய வேண்டும் எனக் குரல் கொடுப்பார்கள். எவ்வாறு வேறொரு சாதிக்காரர்களை மதித்து நடக்க வேண்டும் என்ற விழிப்புணர்வே இன்றைய தேவையே ஒழிய சாதி ஒழிப்புக் கோஷங்கள் வெறும் மேடைப் பிரச்சாரங்களாக மட்டுமே இருக்க உதவும் என்பதே திண்ணம். இதிலும் ஒரு சில அறிவாளிகள் பல மொழிகள் சரியென்பார்கள், மதங்கள் மட்டும் கூடாதென்கிறார்கள்/ தேவையற்றது என்கிறார்கள். ஆக, இங்குள்ள ஒவ்வொருவரும் தமக்கான பாதுகாப்பை, அரசியல் அதிகாரத்தை, தமது பண்பாட்டை, கலாச்சராத்தை வேறு மொழிகள் புகுந்தால் அழித்து விடும் என்பவர்கள், கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும் பல சாதிகளின், மதங்களின் பங்களிப்பு இல்லை என்று சொல்ல வருகிறார்களா? என்னே ஒரு புத்திசாலித்தனம்!. பல மொழிகள் ஒரு தேசத்தில் இருப்பதால் பிரச்சினை இல்லை என்றால், பல மதங்கள் ஒரு தேசத்தில் இருப்பது தவறில்லை என்றால் பல சாதிகள் மட்டும் இருந்தால் என்ன தவறு என்பதே கேள்வி?