சாதிகள் மட்டும் தேவையற்றதா என்ன ?
உலகெங்கும் மக்கள் தம் பாதுகாப்பு கருதி இனக்குழுக்களான வாழ்க்கை முறைக்கு பழகி இருந்தனர். ஆகையால் தான் மதம், சாதி, மொழி, இனம் என மனிதர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய, அரசியல் அதிகாரத்தைப் பெற என ஏதோ ஒன்றை கெட்டியாகப் பிடித்துள்ளனர். இதில் சாதிதான் பிரச்சினை, இது ஒழிந்தால் சமத்துவம் மலரும் என்பது சுத்த பைத்தியக்காரத் தனம்.
குழு வாழ்க்கையில் இதர குழுக்கள் மீது தமது அதிகாரத்தை நிலைநாட்ட சில தவறுகள் எல்லை மீறி இருந்தது என்னவோ உண்மைதான். அதிலிருந்து விடுபட எம்மாதிரியான சமூக மாற்றங்கள் பலன் அளிக்கும் என்பதே நாம் செய்ய வேண்டியது. அதை விடுத்து சாதி தான் பிரச்சினைக்குக் காரணம் என்று சொல்பவர்கள் பல ஆயிரக்கணக்கான சாதிகளால் ஏற்பட்ட பிரச்சினைகளைக் காட்டிலும் சியா, சுன்னி என இரு இனக்குழுவினரிடையே நடக்கும் அசம்பாவிதங்களும் கொலைகளும் இன்று கணக்கிலடங்கா என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அதிக இனக் குழு வாழ்க்கை என்பதற்கு மொழியும், சாதியும் மட்டுமே சிறந்த உதாரணம். வெவ்வேறு நிலப்பகுதியில் வாழும் மக்கள் தமக்கான மொழி, தமக்கான சாதிய பழக்க வழக்கங்களோடு வாழ்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஏற்றத்தாழ்வைக் குறைக்க வழி செய்தல் என்பதைத் தான் புத்திசாலிகள் செய்திருப்பார்கள். அதை விடுத்து இது இருப்பதால் தான் பிரச்சினை, ஆகையால் இது ஒழிந்து விட்டால் பிரச்சினையில்லை , நாமெல்லாம் ஒரே இனமாகி விடுவோம் என்பது ஆகப் பெரிய பொய். அதை அம்பேத்காரே வழியுறுத்தி இருந்தால் கூட இந்தியாவின் இனக்குழு வாழ்க்கையை இதர இனக்குழுக்களிடம் பிரச்சினைகளில் எம்மாதிரியான இழப்பை உலகம் சந்தித்தது எனக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மேம்போக்காக சாதி மட்டுமே இந்து மதத்தின் பிரச்சினையாக அடையாளம் காட்டினார்கள். ஒரேயொரு மொழியைத்தான் ஒரு தேசம் கொள்ள வேண்டும் என்ற சொல்லாடல் எவ்வளவு பிழையாகக் கருதப்படுமோ அவ்வாறுதான் சாதிகளற்ற சமுதாயம் ஏற்றத்தாழ்வை அழித்து விடும் என சொல்வதும் ஒன்று தான்.
அதிக எண்ணிக்கையில் சாதிகள் இருக்கும் பட்சத்தில் ஒரு சாதியும் இன்னொரு சாதியும் தமது அதிகாரத்தை நிலைநாட்ட அடித்துக் கொள்ளும் பட்சத்தில் ஏற்படுகிற இழப்பு இன்னொரு நிலப்பகுதிக்கு பரவாது. ஆனால் வெறும் இரு பிரிவினர் மட்டுமே இருந்தால் பிரச்சினைகள் இருக்காது என்பதற்கு ஏதேனும் சான்றுகள் உள்ளதா? இன்னும் சொல்லப்போனால் மக்கள் இரு இனப் பிரிவுகளில் ஒரே தேசத்தில் அதிகமாக இருந்த போது மட்டுமே மிகப் பெரிய கலவரங்கள் மொழியின் பெயரால், மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால் மிகப் பெரிய அழிவுகளை வரலாறு தந்துள்ளது என்பதே உண்மை.
இந்து மதத்தை வெறுப்பதற்குக் காரணம் சாதிய அடுக்கு முறை என்பவர்கள் வேறு மதத்தில் இது போன்ற பிரச்சினைகள் இல்லை என்று சொல்வதைக் காட்டிலும் முட்டாள்தனம் வேறு எதுவும் கிடையாது. அம்பேத்காரிலிருந்து , ஈ.வெ.ரா நாயக்கர் வரை பௌத்தத்திற்கோ இஸ்லாமிற்கோ மாறுங்கள் என்று இந்துக்களை அறைகூவல் விடுத்தது என்னைப் பொறுத்தவரையில் சுத்த பைத்தியக்காரத்தனம். சாதி ஒழியவேண்டும் என்பவர்கள் அதிக பிரிவைக் கொண்ட பல்வேறு சாதி இனக்குழுக்களால் ஏற்பட்ட பேரழிவைக் காட்டிலும் ஒவ்வொரு மதத்திற்குள்ளும் இருக்கும் பலம் வாய்ந்த இரு குழுவினர் அடித்துக் கொண்டதைப் பற்றியோ, இரு மொழி பேசும் தேசத்தில் தான் மொழியால் அதிகாரப்பிரச்சினையால் பல உயிர் இழப்புகளைப் பற்றியோ அதிகம் பேசாமல் இந்தியாவின் சாதியை ஒழிப்பதை மட்டும் தங்கள் லட்சியமாக செயல்படுவது போல காண்பிப்பது என்பது பிரச்சினைக்கானத் தீர்வு என்ன என்பதை நோக்காது செயல்பட்டதால் தான் நாம் அதே இடத்தில் சாதியோடு நின்று கொண்டிருக்கிறோம்.
குழு வாழ்க்கையில் நன்மைகளும் உள்ளது, சில தீமைகளும் உள்ளது என்கிற புரிதல் இல்லாதவர்கள் தான் சாதிகள் ஒழிய வேண்டும் எனக் குரல் கொடுப்பார்கள். எவ்வாறு வேறொரு சாதிக்காரர்களை மதித்து நடக்க வேண்டும் என்ற விழிப்புணர்வே இன்றைய தேவையே ஒழிய சாதி ஒழிப்புக் கோஷங்கள் வெறும் மேடைப் பிரச்சாரங்களாக மட்டுமே இருக்க உதவும் என்பதே திண்ணம். இதிலும் ஒரு சில அறிவாளிகள் பல மொழிகள் சரியென்பார்கள், மதங்கள் மட்டும் கூடாதென்கிறார்கள்/ தேவையற்றது என்கிறார்கள். ஆக, இங்குள்ள ஒவ்வொருவரும் தமக்கான பாதுகாப்பை, அரசியல் அதிகாரத்தை, தமது பண்பாட்டை, கலாச்சராத்தை வேறு மொழிகள் புகுந்தால் அழித்து விடும் என்பவர்கள், கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும் பல சாதிகளின், மதங்களின் பங்களிப்பு இல்லை என்று சொல்ல வருகிறார்களா? என்னே ஒரு புத்திசாலித்தனம்!. பல மொழிகள் ஒரு தேசத்தில் இருப்பதால் பிரச்சினை இல்லை என்றால், பல மதங்கள் ஒரு தேசத்தில் இருப்பது தவறில்லை என்றால் பல சாதிகள் மட்டும் இருந்தால் என்ன தவறு என்பதே கேள்வி?