யேசப்பாவும் இசக்கிமுத்துவும்:

அந்தந்த மதத்தில் இருக்கிறவன் கூட அமைதியா இருப்பான். ஆனால் திடீர்னு மதம் மாறினவன் பண்ற அலும்பு இருக்கே, அது செம காமெடியா இருக்கும்.

எங்க கிராமத்தில இசக்கிமுத்துவும் அப்படி திடீர்னு தையல் மெசினுக்காக பெந்தேகொஸ்துக்கு மாறிட்டான். இசக்கியோட அப்பா கோயில்ல பூஜை பண்ணுபவர் என்பது கூடுதல் தகவல். இசக்கி மதம் மாறின பிறகு, எதுக்கெடுத்தாலும் யேசப்பான்னு சொல்லிக்கிட்டே இருந்தான்.

ஒருநாள் சாதாரணமா பேசிக்கிட்டிருக்கும் போது ஒரு பையன் ஒரு கெட்ட வார்த்தையைப் போட்டு திட்டிவுடனே இசக்கிமுத்து,

“ஏசப்பா…” ன்னு சொல்ல,

நம்ம பையன் உடனே கெட்ட வார்த்தை போட்டவன்கிட்டே ,

“ ஏல… அவன்தான் இன்னும் ஏச சொல்றாம்லா, நல்ல ஏசுன்னுன்னான் …”

(திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏசு என்பதற்கு திட்டு என்று பொருள்)

ஒரு வருஷத்துக்கு யேசப்பா சொன்ன இசக்கி, கொஞ்சமா தெளிஞ்சு அம்மன் கோயில் கொடைக்கு வந்தான்.

“ஏ… மக்கா… இங்கே வர்றீய… யேசப்பா.. எதுவும் சொல்ல மாட்டாரா” ன்னு ஒருத்தன் கேட்டதுக்கு, “எனக்கு எம்மதமும் சம்மதம்ன்னான் இசக்கி.

ஊழியம் செய்றதுக்காக இசக்கியை வாராவாரம் பெந்தேகொஸ்து காரன் வந்து கூப்பிட, மெல்ல எரிச்சலான இசக்கி அவன் வீட்டு முன்னாலேயே சண்டை போட்டான்.

“ஏலே… ஒரு தையல் மெசினைக் கொடுத்துட்டா நீ கூப்பிடுற இடத்துகெல்லாம் வரணுமோ… மயிரு.. நீயுமாச்சு ..ஒன் மெசினுமாச்சு… எடுத்துட்டு ஓடிப்போயிருன்னான்”.

“ வந்தவன் சுற்றிலும் இந்து ஆட்களாக இருக்காங்கன்னு தெரிஞ்சவுடனே ரொம்ப பஞ்சாயத்து பண்ணாம மெசினை தூக்கிட்டு போயிட்டான்.”

ரெண்டு நாள் கழிச்சு “ இசக்கிக்கிட்டே ஏ… என்ன அவன் கூட சண்டை போட்டுட்டியாமே…”

“ஆமாடே… அவனுக தொல்லை தாங்க முடியல… ஞாயிற்றுக் கிழமை ஆச்சுன்னா உயிரை எடுக்க ஆரம்பிக்கானுக. அதான் அவனுகளை விட்டு முதல்ல வெளியே வந்துருவோம்னு முடிவெடுத்து சண்டையை போட்டு அனுப்பிட்டேன்.”

“அப்ப… தையல் மெசின்…”

“ தையல் மெசின் நாலு மாசமா ரிப்பேராகிக் கிடக்கு.. அதை ரிப்பேர் பண்ணி அவன் வேற யாரையாவது ரிப்பேராக்கட்டும். நான் கொஞ்சம் காலம் ரிப்பேராகிக் கிடந்தேன்… இப்ப தெளிஞ்சுட்டேன்னான். “

இந்தியாவில் மோட்டார் சக்கர வாகனங்கள் உபயோகிப்பாளர்கள்:

இந்தியாவில் மோட்டார் சக்கர வாகனங்கள் பற்றிய கணக்கெடுப்பில் அதன் தேவையும் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பில் சொல்லப்பட்டுள்ள விவரங்கள் இதோ.

Passenger Vehicle ( அதிக பட்சமாக 9 பேர் வரையுள்ள கார்களை வைத்திருப்பவர்கள்) அதிகமாக உபயோகிப்பவர்களின் எண்ணிக்கையில் கர்நாடகா முதலிடத்திலும், குஜராத் இரண்டாமிடத்திலும், மகாராஷ்டிரா, ராஜஸ்தானை அடுத்து ஐந்தாம் இடத்தில் தமிழகமும் உள்ளது.

Two Wheeler அதிகமாக வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையில் குஜராத் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாமிடத்திலும் உள்ளது. அடுத்த இடங்களை முறையே கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளது.

வீட்டு உபயோகத்திலுள்ள Two Wheeler மோட்டார் வாகன உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 2001 -11 குட்பட்ட காலத்தில் இந்தியாவில் 11.7% லிருந்து 21% ஆக உயர்ந்துள்ளது. கிராமங்களைப் பொறுத்தவரையில் அது 14.3 % ஆக பத்து ஆண்டுகளில் இரட்டிப்பைக் காட்டிலும் அதிகமாக வாங்கியுள்ளார்கள். நகர இந்தியாவைக் கணக்கில் எடுத்தால், 24.7% to 35.2% ஆக உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Passenger Vehicle ஐப் பொறுத்தவரையில் 2001 -2011 குட்பட்ட காலத்தில் 2.5 % to 4.7% ஆக உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நகர இந்தியாவில் 9.7%, கிராம இந்தியாவில் 2.3% அளவிற்கும் உபயோகிப்பாளர்கள் உள்ளார்கள். இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் automobile நிறுவனங்கள் கொடுத்துள்ள தகவல் படி பார்த்தால் 13.4 million ( ஒரு கோடியே 34 லட்சம்) கார்கள் விற்கப்பட்டுள்ளன.

Bicycle ஐப் பொறுத்தவரையில் இந்தியாவில் 43.7% to 44.8% ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில் நகர இந்தியாவைப் பொறுத்தவரையில் சைக்கிள் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 46% to 41.9% ஆகக் குறைந்துள்ளது.

Click to access Census2011-AutoSector_PINC_150312.pdf

கடலில் ஓர் இந்து ஆலயம் -Trinidad

shiv temple

மேற்கிந்திய தீவுகள் நாட்டில் trinidad என்ற இடத்தில் கிரிக்கெட் விளையாட்டு நடக்கும் என்பது மட்டுமே நமக்குத் தெரிந்த விஷயம். நமக்கு மேற்கிந்திய தீவுகளின் அணியில் சந்தர்பால், நரேன், சர்வான், ராம்பால் போன்ற பெயர்களை அறியும்போதெல்லாம் இந்திய வம்சாவழியினர் என அறிந்து கொண்டதைத் தவிர வேறெதுவும் தெரியாதல்லவா?

இதைத்தாண்டி அங்கு இந்து ஆலயம் எழுப்ப சிவ்தாஸ் சாது (Sewdass Sadhu )என்பவர் பல இன்னல்களுக்கு இடையேயும் அங்கு சிவன் ஆலயம் எழுப்ப அவர்பட்ட கஷ்டங்களுக்கான வரலாறை நாமறிய வேண்டும்.

இந்து மதத்தில் மூத்தாரை வழிபடும் விஷயங்கள் மத வழிபாட்டு முறைகளில் ஒன்று. இன்று tininidad ல் sewdas sadhu வால் சிவன் கோவில் கட்டப்பட்டதால் அக்கோவிலுக்கு அவரையும் நினைவிற்கொண்டு ஆலயத்திற்கு வைக்கப்பட்ட பெயரே Sewdass Sadhu Shiv Temple என்பதாகும். இதைப் போல சில உதாரணங்களை நம்மூரில் கூட நாம் காண இயலும். ஏரல் அருணாச்சல நாடாரின் நற்செயலை நினைவு கூறும் விதமாக அவரின் பெயரிலேயே வணங்கும் வழிபாடுகள் இந்து மதத்தில் மூத்தாரையும், நீத்தாரையும் அவர்தம் பெருமைக்காக வணங்கும் வழிபாடுகள் இயல்பானதாகவே உள்ளது.

இனி trinidad ல் எவ்வாறு சிவ ஆலயம் அமைக்கப்பெற்றது என்ற வரலாற்றை அறிவோம். 1800 களில் கூலி வேலைக்காக இந்திய ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஏழை மக்களைக் கடத்திக் கொண்டு சென்று வேலை வாங்குவது தான் ஆங்கிலேயர்கள் தங்கள் நிறுவனங்களை வளர்க்கச் செய்யும் யுக்தி. மனித வளமிகுந்த இந்தியாவில் வேண்டுமென்றே பஞ்சத்தை உருவாக்கி அதிலிருந்து விடுபட வேலைக்கு ஆள் எடுத்துச் செல்வதைப் போல மக்களை உலகின் பிற பிரதேசங்களுக்குக் கொண்டு சென்று இந்தியர்களின் உழைப்பை உறிஞ்சும் வரலாறு நாமறிந்ததே.

ஸ்பெயின்,டச்சு, பிரான்ஸ் போன்ற நாடுகளின் காலனி ஆதிக்கத்திற்குப் பிறகு இத்தீவுகள் இங்கிலாந்தின் கைக்குள் வந்தது. அங்குள்ள கரும்புத் தோட்டத்தில் வேலை செய்யவே இந்தியாவிலிருந்து இந்து ஏழைகள் கொண்டுவரப்பட்டனர். தீவுகளிலுள்ள பல கோவில்களை அங்குள்ள கிருத்துவ அமைப்புகள் பல இந்து ஆலயங்களை இடித்துத் தள்ளின.

வாரணாசி சிவன் ஆலயத்தை வணங்க சில ஆண்டுகளுக்கொருமுறை வந்து சென்ற சிவ்தாஸ் சாது , நாமே ஒரு சிவன் ஆலயத்தைக் கட்டலாம் என முடிவு செய்தார்.

கடற்கரையின் ஓரத்தில் சற்றுதள்ளி சிவன் ஆலயம் எழுப்பும் முயற்சிகளை ஆரம்பித்தார். தனியொருவராக தினமும் செங்கலை சைக்கிளில் கொண்டு சென்று ஆலயம் கட்ட ஆரம்பித்தார்.கரும்புத் தோட்ட முதலாளி தமது நிலத்தில் கோவிலைக் கட்டுகிறார் என சொல்லி அவ்வாலயத்தை இடிக்கச் செய்தார். இது விஷயமாகக் கோர்ட்டிலும் வழக்குப் பதிவு செய்தார் நில முதலாளி. கோவிலைத் தம்மால் இடிக்க இயலாது எனச் சொல்ல சிறைத்தண்டனையை அனுபவிக்கிறார். அதற்காக 14 நாட்கள் சிறைத்தண்டனையையும் , 400 Dollar அபராதமும் விதிக்கப்படுகிறது. மறுபுறம் அவர் எழுப்பிக் கொண்டிருந்த ஆலயமும் நில உடமையாளரால் இடிக்கப்படுகிறது.

சிறையிலிருந்து வெளிவந்த சாது உங்கள் நிலப்பகுதி என்பதால்தானே இடிக்கிறீர்கள். என் சிவனுக்கு ஆலயத்தைக் கடலில் கட்டினால் யார் உரிமை கொண்டாட முடியும் என்றுரைத்து விட்டு, இம்முறை கோவிலைக் கடலிலேயே எழுப்பி விடுவோம் என முடிவெடுக்கிறார். அலைகள் குறைவாக அடிக்கும் இடத்தில் கோவிலைத் தனியாளாக கட்டுகிறார்.

அதுபற்றிய செய்தி: His tools were simple – two buckets and a bicycle with a carrier at the back. In the buckets, he placed rocks, sand and cement. Balancing the buckets on the two handles of the bicycle, Sewdass Sadhu would push the bicycle out to the mandir site located some 500 feet off the shore into the sea at Waterloo Bay. Sometimes family and villagers assisted him, but largely, it was an almost single handed “Hanumanian” effort. இதை அப்படியே சொல்வதே உத்தமம்.

கோவிலின் பணி முடிவடையும் முன்பாக 1970 ல் வயது முதுமையால் இறந்து விடுகிறார். சில ஆண்டுகளுக்கு அக்கோவில் அப்படியே இருக்கிறது. பின்னர் 1985 ஆம் ஆண்டில் கோவிலை முடிக்கும் பணியை அங்குள்ள இந்து சமுதாயக் கூட்டமைப்பு முன்னெடுக்கிறது. அரசும் கோவில் எழுப்ப அனுமதி அளிக்கிறது. 1995 ஆம் ஆண்டு கோவிலும் கடலில் கட்டி முடிக்கப்படுகிறது. சாது நினைவாக ஆலயத்திற்கு Sewdas Sadhu Shiv Temple என்ற பெயரில் இந்து பக்தர்களால் வழிபடப்படுகிறது.

கூடுதல் தகவல், இன்று Trinidad, Tobogo வில் 18.3% மும், Guyanaவில் 22% இந்துக்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கோவில் போட்டோவே நீங்கள் பார்ப்பது.

இஸ்லாமியர்களில் சாதிகள்/வகுப்பு இல்லையா?

கடந்த சில நாட்களாக தாய் மதம் திரும்புபவர்களுக்கு என்ன சாதியைக் கொடுப்பீர்கள் என்று கிண்டலுடன் கூடிய பதிவுகளும் கார்ட்டூன்களும் கண்ணில் படுகின்றன. குறிப்பாக இஸ்லாம் சமூகத்திலிருந்து திரும்புபவர்களுக்கு என்ன சாதியைக் கொடுப்பீர்கள் என்பதுதான் அது. ஏறத்தாழ கிருத்துவ மதத்தில் சாதிகள் உண்டு என்பது போலவும், இஸ்லாம் சமூகத்திலிருந்து வருபவர்களை எங்கு அடைப்பீர்கள் என்பதுதான் இவர்கள் கேட்கும் கேள்விகள்.

முஸ்லிம்கள் இந்திய இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும், வாழ்வியல் முறையிலும் சாதியற்று இருக்கிறார்களா என அறிய வேண்டியுள்ளது. உண்மை அவ்வாறல்ல என்பதே! முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் தாங்களே உயர்வானவர்கள் என சொல்லிக் கொள்வதுண்டு. குறிப்பாக Syed மற்றும் Shaik வகையைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் தாங்கள் அரபிலிருந்து வந்த வழியினர் என்றும், Mughals and Pathans வகையைச் சேர்ந்தவர்கள் தாங்கள் துருக்கி, ஆப்கான் வழிவந்தவர்களாகவும், முஸ்லிம் மன்னர்களின் ஆட்சியில் Foreign Extraction வாயிலாக வந்தவர்களை அஷ்ரப் (Ashraf) என்றும் தாங்களே இஸ்லாமிய சமூகத்தின் உயர்நிலைப் பிரிவினர் எனவும் அழைக்கிறார்கள். இவர்களோடு இந்து சமயத்திலிருந்து மதமாற்றம் செய்யப்பட்ட /மதமாற்றமான இஸ்லாமியர்கள் உயர் சாதி/வகுப்பிற்குள்ளும் வருகின்றனர்.

Ajlaf என்ற பிரிவினர் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறிய இடைநிலைச் சாதிகள் என்பதால் அவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலும், Arzal என்ற பிரிவினர் வண்ணான், தலித், சவரம் செய்பவர்கள், பழங்குடியினர் மற்றும் மிகப் பின்தங்கிய நிலையிலிருந்த சாதிகள் இந்துமதத்திலிருந்து இஸ்லாம் தழுவியவர்கள் ஆவார்கள். இவர்களைப் பெரும்பாலும் ஏழ்மையைப் பயன்படுத்தியே மதம் மாற்றப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் இவர்களின் கல்வி, சமூக பொருளாதார நிலை இன்றளவிலும் மிக மோசமாகவே உள்ளது.

இந்தியாவில் 82 இஸ்லாம் வகுப்பினர்(சாதிகளாகத் தொகுக்கப்பட்டு) OBC பிரிவிலும், மேற்கூறிய ashraf வகையினர் போன்றோர் NON-OBC பிரிவிற்குள்ளாகவும் வருகிறார்கள். இஸ்லாமியர்களில் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் அனைத்து முஸ்லிம்களையும் சாதிப் பிரிவுகளுக்குள் அடக்கக் கூடாது எனவும் இஸ்லாமிய மார்க்கத்தின் படி அனைவரையும் ஒரே பிரிவினராகக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை ஒருபுறமும், தாழ்த்தப்பட்ட, சமூகத்தில் பின் தங்கிய OBC quotaவில் சிக்கிக் கொண்ட arzal வகையினர் தங்களை SC/ST பிரிவிற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைக்கின்றனர்.

ஒருபுறம் ரங்கராஜ் மிஸ்ரா கமிஷன் படி சாதிகளின்/வகுப்பின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையையும் (SC/ST பிரிவை தங்களுக்கும் தர வேண்டுமெனவும்), இன்னொரு புறம் அதை நீக்கி அனைத்து இஸ்லாமியர்களுக்கும் உள்இட ஒதுக்கீடு கொடுத்தால் போதுமென்ற இரு முரணான கோரிக்கைகளும் முன் வைக்கப்படுகின்றன.

சட்டத்தின் படி குறிப்பாக ஏழை இந்துக்களை மதம் மாற்றம் செய்வதால்தான் இஸ்லாம் மதத்திற்குப் போகிறவர்களுக்கு OBC பிரிவின் கீழ் மட்டுமே இடம் கொடுக்க முடியும் என சட்டம் சொல்கிறது. அதேபோல உயர்சாதியில் பிறந்த ஒருவர் இஸ்லாம் மதத்திற்கு மாறி BC வகுப்பினுள் நுழைவது வெறும் சலுகைகளுக்காக அமைந்து விடக்கூடாது என்பதாலேயே அவர்கள் மதம் மாறினாலும் NON-OBC(OC) பிரிவில் மட்டுமே வருவர் என இது குறித்த வழக்கொன்று சென்னை உயர்நீதி மன்றத்தால் 2011 ல் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இணைப்பு இதோ.

ஆனால் பிறப்பில் அவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்களோ அதன் அடிப்படையில் தான் அவர்கள் OBC or NON OBC பிரிவிற்குள் வருகிறார்கள். சட்ட ரீதியாக இது ஒருபுறமிருக்கட்டும். முஸ்லிம்கள் இதர பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்களை திருமணம் போன்ற விஷயங்களில் சேர்த்துக் கொள்கிறார்களா என்ன? ஆகவே தாய் மதம் திரும்புபவர்கள் பிராமணர்களாகவே இதர உயர்த்தப்பட்ட சாதிகளாகவோ கூட வரட்டும். எந்த பிரிவில் இருந்து வந்தாலும் எந்த சாதியில் சேர்ப்பீர்கள் என்பதில் ஒரு பிரச்சினையும் இல்லை, ஹிந்து என்ற உண்மையான மதச்சார்பின்மையே இங்கு முக்கியம். இதில் வேடிக்கை என்னவென்றால் சாதி ஒழிப்புப் போராளிகளின் கவலைதான் மதம் மாறி வருபவர்களுக்கு எந்த சாதியை ஒதுக்குவீர்கள் என்று கேள்வி எழுப்புவது. உங்கள் சாதி ஒழிப்பில் தீயைத் தான் வைக்க வேண்டும்.

தனிப்பட்ட முறையில் எனக்கு மதமாற்றத்தில் நம்பிக்கைக் கிடையாது. மதம் மாறுபவர்களுக்கு என்ன சாதி ஒதுக்குவார்கள் என்று கேலி செய்பவர்கள், முஸ்லிம்கள் தரப்பில் OBC/ NON-OBC யில் எத்தனை சாதிகள் உள்ளன என்பது பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். அவர்களை வகுப்பு(சாதி) வாரியாகத் தான் இட ஒதுக்கீட்டில் உள்ளது என்பதை உணர வேண்டும். மாநில வாரியாக இஸ்லாமியர்களின் வகுப்பு/சாதி பற்றிய பட்டியலுக்கான இணைப்பு இதோ.

தற்போதைய இட ஒதுக்கீடு என்பது பிறப்பு அடிப்படையிலான சாதியின் அடிப்படை என சொல்ல முனைவதால் தாய் மதம் மாறுபவர்களுக்கு என்ன சாதி எனக் கொடுப்பதில் என்ன சிக்கல் இருக்க இயலும் என்பதே நமது கேள்வி.

வேலை வேண்டும் விஸ்வநாதா !

சென்னைக்கு வந்த புதிதில் அண்ணனோடும் என் அத்தானோடும் நானும் எனது நண்பர்கள் இருவரும் ஒட்டிக் கொண்டோம். வேலை கிடக்க போஸ்ட் ஆபீஸ் சென்று ஒவ்வொரு நிறுவனத்திற்கும் பயோ டேட்டா அனுப்புவதே எங்கள் வேலை. அதேபோல வேலையைத் தேட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஏரியாவாக செல்வோம். முதலில் சென்ற இடம் பெருங்குடி.

பெருங்குடியில் நாங்கள் மூவரும் நடந்தே சென்றோம். எங்கேயாவது எலெக்ட்ரிக்கல் என்றோ ஏலேக்ட்ரோனிக்ஸ் என்றோ எழுதி இருந்தால் உடனே அங்கு நமக்கு வேலை கிடைக்குமா என செக்குயுரிட்டியிடம் கேட்க ஆரம்பித்து விடுவோம். சில செக்குயுரிட்டி CV யை வாங்கிக் கொண்டு, நாங்கள் மனம் நோகக்கூடாது என்பதற்காக ஐயா வந்தவுடன் கொடுக்கிறேன். தேவையிருந்தால் call செய்வார்கள் என ஆறுதலாக சொல்வார்கள். சில சிறு நிறுவனங்களில் உள்ளே விடுவார்கள். சிலர் விரட்டி விடுவார்கள். சிலர் எரிந்து விழுவார்கள். ஏதாவது ஒரு நிறுவனத்தில் மானேஜரைப் பார்த்து அவரும் எங்களுடன் பேசி cvயை வாங்கி விட்டால் போதும்.

அங்கிருந்து வெளியே வந்தவுடன் , ஏ.. மக்கா நம்ம மூணு பேர்ல ஒருத்தனுக்கு வேலை கிடைச்சாலும் நல்லதுல. நம்ம செலவுக்காவாவது ஆகும் என கனவில் உள்ளதையெல்லாம் பேசிக்கொண்டே ரொம்ப சந்தோஷமாக செல்வோம். அப்படி நடந்து சென்ற போது கோவில்பட்டி பையன் டிப்ளோமா படிச்சவன், அண்ணே ஒத்தையில வேலை தேட ரொம்ப கஷ்டமா இருக்கு. பேசவே பயமாகவும் தயக்கமாகவும் இருக்கு. ஒங்க கூட வரட்டுமா என்றான்.

நம்ம ஏரியா பையன் , சரி வான்னு அவனையும் கூட்டிட்டுப் போனோம். ஒரு கம்பெனியில் வேலைக்கு ஆள் தேவை என்ற போர்டும், டிப்ளோமா இன் ஏலேக்ட்ரோனிக்ஸ் என்றும் எழுதி இருந்தது. உடனே அந்த டிப்ளோமா பையன் அண்ணே இங்கே கேட்போம்னே என்றான். மெல்ல உள்ளே போய்ப் பார்த்தால் யாருமில்லை.

சார்… சார் என கூப்பிட்டோம். ஒரு சத்தம் கூட வரலை.

அஞ்சு நிமிஷம் கழிச்சு, ஏ… மக்கா என்னல ஒரு ஆளைக் கூட காணோம். இங்கே அப்ப யாருதான் வேலைபாக்கா என்றான்.

திருப்பியும் சார்… சார் என கூப்பிட்டோம். ஒருத்தர் உள்ளே இருந்து வந்தார். நிறுவனர்.

அவருடைய பேச்சில் இருந்த அகங்காரமும், தோரணையையும் மறக்கவே முடியாது.

அந்தப் பையன்: சார்… வேலை காலின்னு போட்டிருந்தீங்க. நான் டிப்ளோமா தான்.

உடனே அவர் பதில்… அப்ப எதுக்கு இவனுங்க இங்கே நிக்கானுக.. அங்கே போய் நில்லுங்கன்னு எங்களுக்கு அட்வைஸ்.

பத்தடி தள்ளி நின்னோம்.

சரி… உனக்கு எந்த ஊரு?

அந்தப்பையன், சார் கோவில்பட்டி..

அப்படியா… வேலை கொஞ்சம் கஷ்டமானது. எங்கூட PCB போர்ட் செய்ய ஒத்தாசையா இருக்கணும். ப்ராஜெக்ட் முடிஞ்சவுடன் நான் சொல்ற காலேஜ்ல போய் கரெக்டா கொடுத்துட்டு வரனும். செய்வேன்னா சொல்லு.

ஓகே.. சார் செய்வேன் சார்.

என்ன சம்பளம் வேணும்?
சார்… 1500 ரூபாய் வேணும். (1998)

என்னது… ஆயிரத்தி ஐநூறா.. 650 ரூபாய் தர்றேன். வேணும்னா சரின்னு சொல்லு.

இல்லை சார். குறைஞ்சது 1300 ஆவது தாங்க சார்.

ஏ… என்ன வெளையாடுதியா? அதெல்லாம் தரமுடியாது. 650 தான் தருவேன்.

சீக்கிரம் முடிவைச் சொல்லுன்னவர்… உங்களுக்கு எந்த ஊருடேன்னார். நாங்க திருநெல்வேலிகாரங்க.

படிச்சு முடிச்சுட்டா பையைத் தூக்கிட்டு மெட்ராஸ் வந்துர்றது. ஏன் அங்கெல்லாம் வேலை தேட முடியாதோ. சார், அங்கே எங்க படிப்புக்கு ஏத்த வேலை இல்லை.

நண்பன் அவரிடம் சார் உங்களுக்கு எந்த ஊர்ன்னான். எனக்கா எனக்கும் அந்தப்பக்கம்தான் தூத்துக்குடி. இங்கே வந்து இருபது வருஷமாச்சுன்னவர்…

ஏ.. என்ன , என்ன முடிவெடுத்திருக்கே… சீக்கிரம் சொல்லு. ஊர்ல இருந்து இங்கே வந்துட்டு இந்தச் சம்பளம் கொடுக்கேன்னு சொன்னதுக்கப்புறமும் பெரிய எல்லாந்தெரிஞ்சவன் மாதிரி யோசிக்க… பெருசா வந்துட்டானுக, பையைத் தூக்கிக்கிட்டு… ஊர்லயே இருந்துத் தொலைய வேண்டியதுதானே என்று மீண்டும் அறிவுரை.

உடனே எனக்கும் நண்பனுக்கும் சரியான கோபம். சார்.. அங்கே வேலை கிடைச்சா இந்த ஊர்ல வந்து எதுக்கு சார் வேலை தேடுறோம். அங்கே கிடைக்கலன்னுதானே இங்கே வந்திருக்கோம். பையைத் தூக்கிக்கிட்டு வந்துருக்கோம்னு, எப்படி சார் நா கூசாம சொல்றீங்க.

அதெல்லாம் இருக்கட்டும் சார்… எங்களை பையைத் தூக்கிக்கிட்டு வந்துட்டானுகன்னு சொல்றீங்களே.. நீங்க எதுக்கு இந்த ஊருக்கு வந்தீய.. நீங்க அங்கே கம்பெனி ஆரம்பிச்சிருந்தா நாங்களும் இங்கே வந்து தேட மட்டோம்லா.

உன் friendக்கு வேலை வேணுமா வேண்டாமா? என அதே கேள்விக்குப் போனார்.

அந்தப் பையன் இல்ல சார், இது ரொம்ப கம்மி சாலரிசார், நான் வரலன்னான்.

திருப்பியும் நால்வரையும் ஒருமையில் திட்ட ஆரம்பித்தார். வந்துட்டானுக தாலிய அறுக்க…

டேய்… இங்கே இவர் மட்டுந்தான் இருக்காருடா.. எங்கே முன்னாலேயே உன்னை இப்படி பேசுறாருன்னா தனியா இவருகிட்டே மாட்டினே, நீ செத்த..
வேற இடத்தில் வேலை தேடலாம்னோம்.

நேரத்தை வீணடிச்ச வெறும்பையளுகளா வெளியே போங்கடன்னார்.

அப்படி சொன்னவுடன், யோவ் மரியாதையா பேசு… இங்கே உன்னை அடிச்சுப் போட்டுட்டு போனோம்னா ஒரு பைய இங்கே கெடையாது. கேட்க நாதியில்லாத இடத்தில இருக்க, ஏன் உன் கம்பெனியில ஒரு பைய கூட இல்லன்னு இப்ப தெரியுதுன்னு சொல்லிட்டு வெளியே வந்தோம்.

அவ்வளவு ரணகளம் நடந்து வெளியே வந்தவுடன் நண்பன் சொன்னான்.

மயிராண்டிகளா.. கொஞ்சம் பொறுமையா டீல் பண்ணி இருந்தா , அவன் ஆபீசெலேயே தண்ணி குடிச்சிருப்பேன்னு சொரணை இல்லாமலேயே சொல்லிக் கொண்டு எங்களைத் கோபத்துடன் திட்டிக் கொண்டே கூட வந்தான்.

அந்த டிப்ளோமா பைய இனி நம்ம கூட வருவானா என்ன? என இன்னொருத்தன் சொன்னான். மக்கா இப்படி நடந்து போச்சுன்னு நாம சோர்ந்து போயிறக் கூடாதுடா… நாளைக்கு கிண்டி போறோம். அங்கே நெறைய கம்பெனி இருக்காம்.

நாளைக்கு கிண்டி அனுபவத்தைக் கிண்டுவோம்.

கொள்ளையடிப்பதில் என்னென்ன முறைகளையெல்லாம் பயன்படுத்துகிறார்கள்?

கடந்த சில நாட்களுக்கு முன்பாக சவுதியில் EXTRA என்ற elctronics கடையில் big sale with upto 50% offer, இது நான்கு நாட்கள் மட்டுமே என அறிவித்திருந்தார்கள். வணிகத்தில் என்னென்ன சூட்சமமெல்லாம் மேற்கொள்கிறார்கள், இனி offer ல் பொருள் வாங்கும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தான் நாம் கற்க வேண்டியது.

1. ஒரு சில பொருட்களின் விலையை அதிக விலைக்கு ஒட்டி பின்னர் அதை க்ராஸ் symbol போட்டு, புதிய விலையை எழுதி offer —% என போட்டு விற்பதை மயங்கித் தான் நாம் பொருள் வாங்குகிறோம். அவ்வாறே செய்வதில் என்ன சூட்சமம் செய்தார்கள் என்றால் , சில பொருட்களுக்கு ஒரிஜினல் விலையைக் காட்டிலும் அதிக விலைக்குப் போட்டு, அடித்து எழுதிய போது மற்ற கடைகளைப் போலவும், சில பொருட்களுக்குத் தள்ளுபடி செய்தும் விற்றார்கள்.

2. இதையும் எப்படிச் செய்தார்கள் என்றால் அவர்களின் அனைத்து கிளைக்கடைகளிலும் செய்யாமல் ஒரு சில கடைகளில் மட்டும் இந்த ஏமாற்று வேலையைச் செய்திருந்தார்கள். இது குறித்த புகார்கள் எழுந்தவுடன் அக்கடைகளை அரசாங்கம் உடனடியாக மூடச் செய்தது.

3. சில பொருட்களுக்கான விலையை மற்ற கடைகளில் விற்பனை செய்யும் விலைக்கு மேலாகவும் அதாவது மிக அதிக விலையைப் போட்டு, அதையடித்து அதையும் மற்ற கடைகளைக் காட்டிலும் அதிக விலைக்கு போட்டும் விற்பனை செய்துள்ளார்கள்.

4. இது போன்ற ஏமாற்று வேலைகளைத் தான் நமது மாநில அரசும் வேலை இடங்களை நிரப்பும் போது செய்யும். அதாவது 100 காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டுமானால் 25 to 50 இடங்கள் வரை எந்த கையூட்டும் வாங்காமல் பணிக்கு எடுப்பார்கள். மீதி இருக்கிற 50 to 75 காலி இடங்களை லஞ்சம் வாங்கி பணியமர்த்துவார்கள். இதுமாதிரியாக வேலை கிடைத்தவர்களில் ஒரு குறிப்பிட்ட தரப்பினர், நான் நையா பைசா கொடுக்காமல் சேர்ந்தேன் என சொல்வதன் வாயிலாக அரசாங்கம் நேர்மையாக நடந்த பிரமையை ஏற்படுத்த செய்வார்கள்.

இந்த ஏமாற்று வேலையைத் தான், இந்தக் கடையும் செய்திருக்கிறது. சில பொருட்களில் கொள்ளை விலைக்கும், சில பொருட்களைத் தள்ளுபடி விலைக்கும்(மிகக்குறைந்த தள்ளுபடி விலையிலும் அதிக தள்ளுபடி விலையிலும்), சில பொருட்களை மார்க்கெட் விலைக்கும் வைத்து விற்பதன் மூலம், வாங்கியவர்கள் நண்பர்களிடம் சொல்வதன் வாயிலாக வாடிக்கையாளர்களை கடைகளை நோக்கி வரச் செய்யும் தந்திரத்தைக் கையாளவே offer BIG SALE என போட்டு வரச் செய்கிறார்கள். ஆகவே offer ல் நீங்கள் வாங்கப் போகும் பொருளை வாங்குமுன் மற்ற கடைகளில் என்ன விலை போட்டிருக்கிறார்கள் எனப் பார்த்து விட்டு வாங்கினால் மட்டுமே நாம் தப்பிக்க இயலும் என்பதே நாமறியவேண்டியது.

பாப்பாரப்பட்டி கீரிப்பட்டி பற்றி பேச வருகிற வாயால் மேல்விஷாரம் பற்றி பேசாமல் இருப்பதுதான் முற்போக்கா?

பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி பற்றிய சாதிய ஒடுக்குமுறை பற்றி பல காலமாக ஊடகங்கள் விவாதித்தது அரசியலில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் மேல்விஷாரம் பற்றி ஒரு கேசை சுப்பிரமணியன் சுவாமி போட்டது தெரியுமா? சு.சா போட்ட கேஸ் யாதெனில் மேல்விஷாரத்திலுள்ள முஸ்லிம் மக்கள் கீழ் விஷாரத்திலுள்ள இந்துக்களுக்கு எந்த சலுகையையும் வணங்காது அனுபவித்து வருவதாகவும், சலுகைகளோ வசதிகளோ வேண்டுமென்றால் மதம்மாறுங்கள் என வற்புறுத்தப்படுவதாக மனு அளித்து, கீழ் விஷாரத்தை(ராசாத்திபுரத்தை) மேல் விஷாரத்திலிருந்து பிரிக்க வேண்டுமென 2009 ல் கேஸ் போட்டார்.

இதையடுத்து உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு ஓர் ஆணையைப் பிறப்பித்தது. இது விஷயமாக சரியான நடவடிக்கையை எடுக்க வேண்டுமெனவும், முஸ்லிம்களால் பாதிக்கப்படும் இந்து மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரியும் ஆணை பிறப்பித்தது.

இதையடுத்து தமிழக அரசு மேல்விஷாரத்தையும், கீழ் விஷாரத்தையும் வேலூர் நகராட்சியோடு இணைத்தது. தனி மூன்றாம் தர முனிசிபாலிட்டியாக இருப்பதால்தான் பிரச்சினை என்பதால் அதை வேலூர் நகராட்சியின் கீழ் இணைத்து ஓர் ஆணையை G.O Jan 3rd, 2010 ல் தமிழக அரசு பிறப்பித்தது.

இதில் சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும்.

1. பாதிக்கப்பட்ட கீழ்விஷாரம் மக்கள் 16 வருடங்களாகத் தேர்தலைப் புறக்கணித்தார்கள். 2011 ல் வேலூர் நகராட்சியுடன் இணைந்த பிறகே தேர்தலில் நின்றார்கள்.

2. ஒரேயொரு தொகுதியில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மை(25000 ) என்ற இடத்தில் 10000 க்கும் அதிகமான மக்களுக்கு சலுகைகளை வழங்க இயலாது எனவும் மதம் மாறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

3. தலித் மற்றும் வன்னிய சாதியைச் சேர்ந்தவர்களே இங்கு வாழ்ந்து வந்த இந்துக்கள். இரு சாதியினரின் பாதுகாவலராக அடையாளம் காட்டும் பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் இம்மக்களுக்காக எதையும் செய்யவில்லை.

4. சுப்ரமணிய சுவாமி சட்டத்தின் வாயிலாக பல காரியங்களைச் சாதித்துள்ளார். இதை அவரின் பார்வைக்குக் கொண்டு சென்ற பிறகே வழக்கின் மூலம் வென்று அம்மக்களும் ஜனநாயகத் தேர்தலில் பங்கு பெற முன் வந்துள்ளார்கள்.

5. மேல்விஷாரம் பற்றி எத்தனை ஊடகங்களில் இது பற்றிய கருத்துகள் விவாதிக்கப்பட்டன. அது ஏன் ஏதேனும் தலையங்கமாவது வந்ததா? பிரச்சினைகள் தீர்ந்தால் கூட , ஒப்பீடு செய்ய இளவரசன்- திவ்யா என இன்னும் பல ஆண்டுகளுக்கு நினைவில் வைத்து உதாரணம் பேசும் முற்போக்குவாதிகள் இதுகுறித்து என்றாவது பேசுவார்களா? தமிழ் ஹிந்து இணைய இதழும், விஜயவாணி மட்டுமே இது பற்றி எழுதின.

பி.கு: சாதி ரீதியானப் பிரச்சினைகளாக இருந்தால் விழுந்து விழுந்து பேசும் புரட்சியாளர்கள்/முற்போக்குவாதிகள், எனக்குத் தெரிந்து மேல்விஷாரத்தில் பெரும்பான்மை முஸ்லிம்கள் இந்து மக்களை ஒதுக்கித் தள்ளியதற்கு எம்மாதிரியாகக் குரல் கொடுத்தீர்கள் என்பதை உங்கள் மனச்சாட்சியோடு கேளுங்கள் என்பதற்கே இந்த நிலைக்கூற்றை இப்போது காலம் கடந்த விஷயமானாலும் அறிவுறுத்த வேண்டியுள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் மத்திய அரசைச் சூழ்ந்துள்ள சவால்கள் :

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டிற்கும் தீர்ப்பிற்கும் முன்பாக நாம் மத்திய அரசின் சில சட்ட திருத்த நடவடிக்கைகளை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. நிலக்கரி உள்ள நிலப்பகுதியில் சுரங்கத் தொழிலில் தனியார் நிறுவனங்கள் முறையாக செயல்படவில்லையென்பதைக் கணக்கில் கொண்ட மத்திய அரசு தனியார் நிறுவனங்கள் உரிமை கொண்டாட இயலாது என அறிவித்து 1973 ஆண்டு Coal mines Nationalisation act என்ற சட்டத்தின் வாயிலாக ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தது. அதன்கீழ் 1975 ஆம் ஆண்டில் அனைத்து நிலக்கரி சுரங்கத் தொழிலும் கோல் இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. 1973 to `1993 வரை கோல் இந்தியா நிறுவனம் மட்டுமே சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வந்தது. ஆனால் நிலக்கரியை மின் உற்பத்திற்குத் தேவையான அளவு உற்பத்தி செய்வதிலுள்ள பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதன் பொருட்டு 1993 ஆம் ஆண்டு மின்சாரத் துறையில் ஈடுபடும் நிலக்கரி, இரும்பு, எஃகிரும்பு, சிமெண்ட் .போன்ற துறைகளில் ஈடுபடும் நிறுவனங்களும் பங்கேற்க வழி செய்யும் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இதில்தான் அதிக அளவு ஊழல்கள் நடந்தன என்று மத்திய அரசின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் உள்ள முறைகேடு தொடர்பான வழக்கில் 1993 to 2010 வரையிலான காலக்கட்டத்தில் மொத்தம் 218 நிறுவனங்களுக்கு மத்திய அரசுகள் தான்தோன்றித்தனமான முடிவுகளை சுரங்க ஒதுக்கீடு விஷயத்தில் எடுத்துள்ளன என அறிவுறுத்தி நான்கு நிறுவனங்களைத் தவிர்த்து இதர நிறுவனங்களுக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்ப்பை உச்சநீதி மன்றம் செப்டம்பர் 24,2014ல் அளித்தது. அனுமதியுள்ள நான்கு நிறுவனங்களும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள SAIL மற்றும் NTPC யே ஆகும். இது தவிர 36 நிலக்கரி சுரங்கங்களில் பணிபுரியும் நிறுவனங்கள் 31-03-15 வரை மட்டுமே செயலாற்ற வேண்டுமெனவும் அதன் பின்னர் அந்த சுரங்கங்கள் கோல் இந்தியாவின் சொந்த பொறுப்பிற்கு சென்று விடும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

கோல் இந்தியா 01-04-15 க்கு முன்னதாகவே சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். கோல் இந்தியா பற்றி சொல்வதானால் உலகிலேயே மிகப் பெரிய நிலக்கரி நிறுவனம் என்ற பெருமையுடையது. அதேபோல கோல் இந்தியாவும் அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள் கொண்ட நிறுவனங்களில் ஒன்று. நிலக்கரி துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கோல் இந்தியா நிறுவனத்தில் 3,46, 638 ( As on April 2014) தொழிலாளிகள் பணி புரிகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 429 நிலக்கரிச் சுரங்கங்களைக் கோல் இந்தியா கொண்டுள்ளது. 2013 – 2014 ஆம் நிதியாண்டில் 462.62 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது. 89,374.5 கோடி அளவிற்கு மொத்த விற்பனை செய்துள்ளது.

நிலக்கரி சுரங்கப் பணிகள் தங்கு தடையின்றி செயல்படவேண்டும். ஒருவேளை நிலக்கரி சுரங்கப் பணிகள் நிறுத்தப்பட்டால், தற்போது நிலக்கரியை இறக்குமதி செய்வதைக் காட்டிலும் அதிகமாக இறக்குமதி செய்ய வேண்டிய நிலை வரும். மேலும் மின் உறபத்தியில் தடை ஏற்படும். அது அரசுகளுக்கு மிகுந்த நெருக்கடியைத் தரும். தொழிற்சாலைகளில் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்படும். ஏனெனில் இந்தியாவின் மின் உற்பத்தியில் ஏறத்தாழ 68% நிலக்கரியை மூலதனமாகக் கொண்ட அனல் மின் நிலையம் வாயிலாக என்பது குறிப்பிடத்தக்கது.

1990 வரையிலும் இந்தியா நிலக்கரியை இறக்குமதி செய்யவில்லை. ஆனால் அதன் பிறகு மின்தேவையைப் பூர்த்தி செய்ய ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக இறக்குமதி செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டது. கடந்த 2013 ஆம் ஆண்டில் 21% (142 Million tones with the worth of 16 Billion Dollars) அளவிற்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளிலிருந்தே நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தோனேசியாவிடமிருந்தே 50% க்கும் அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறோம். அதிகரித்து வரும் மின்தேவையால் இந்த ஆண்டில் 170 million tones அளவிற்கு இறக்குமதி செய்ய வேண்டி வரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. நிலக்கரி இறக்குமதியை எந்த அளவுக்குக் குறைக்க வேண்டுமோ அந்த அளவிற்குக் குறைக்க மத்திய அரசும் கோல் இந்தியாவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

Kotak Institutional Equities செய்த பரிந்துரையில், 600-800Rs/Tonneஅளவிற்கு captive coal உற்பத்திக்கு செலவாகிறது என்றும் அதையே இறக்குமதி செய்வதாக இருந்தால் 3500 Rs/tonne வரை செலவாகும் என்றும் தெரிவித்துள்ளது. ஏறத்தாழ ஐந்து முதல் ஆறு மடங்கு அதிக பொருட்செலவில் இறக்குமதி செய்வதால் மின் உற்பத்தி செலவும் அதிகரிக்கும். உள்நாட்டில் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மோடியின் அரசு செயல்பட முனைய வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் நிறைய வேலை வாய்ப்புகளையும் எளிதாக உருவாக்க இயலும்.

நிலக்கரி இறக்குமதி மாபெரும் சுமையை அரசுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் ஏற்படுத்துகின்றன என்பது ஒருபுறம். மற்றொரு புறம் அதிக அளவிற்கு நிலக்கரி இறக்குமதியைச் செய்கிற அளவிற்கு இந்தியாவிடம் முறையான port வசதிகளும், coal linkage வசதிகளும் இல்லை என்பது சிக்கலாக உள்ளது. இந்திய ரயில்வே துறையால் இந்தியாவின் பல்வேறு முனைகளிலுள்ள மின் உற்பத்தி மையங்களுக்குக் கொண்டு செல்கிற அளவிற்கு முறையான வசதிகள் இல்லை. இவ்விடத்தில் சின்ன விஷயத்தை மேற்கோள் காட்ட வேண்டியுள்ளது. உடன்குடியில் அனல் மின் நிலையம் அமையப் பெறும் என தமிழக மாநில அரசு அறிவித்தும் இன்று வரையிலும் அதன் coal linkage திட்டமிடப்படவில்லை. Environmental clearance ம் இன்று வரை பெறவில்லை.

Enam Securities மதிப்பீட்டின் படி 37,000 கோடி அளவிற்கு சுரங்க பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் அளித்துள்ளது. நிலக்கரி சுரங்க நிறுவனங்களின் மீதான ரத்து நடவடிக்கையை அடுத்து வங்கிகள் மிகப் பெரிய அழுத்தத்திற்குள்ளாகும் நிலை வந்துள்ளது. குறிப்பாக ஆந்திர வங்கியும் UCO வங்கியும் தான் தொழில்துறை கடனாக நிலக்கரி சுரங்கத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு 13 % அதிகமாக வழங்கியுள்ளதால் மிகப் பெரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

நிலக்கரி சுரங்கத் தொழிலிலும் , நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களுக்கு environment clearance மிகப் பெரிய சவாலாக உள்ளது. மேலும் அதற்கான நிலத்தை ஆக்கிரமிப்பதிலும், பகுதி மக்களை ஏற்றுக் கொள்ள செய்யவும் மத்திய அரசும் மாநில அரசும் போராட வேண்டியுள்ளது.

உச்ச நீதி மன்றத் தீர்ப்பையடுத்து மத்திய அரசு மின்னணு முறையில் இ ஏலம்(E auction) என்ற முறையைக் கையாளப்போவதாக அறிவித்துள்ளது. அது வெளிப்படையான(Transparency) தன்மையைத் தரும் என்று அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். இதன் மூலம் என்.டி.பி.சி. மற்றும் நில மின்சார வாரியங்களுக்கும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு செய்யப்படும். சுரங்க ஒதுக்கீடு வெளிப்படையாக நடைபெறும். அனைத்து ஏல நடவடிக்கைகளும் மாநில அரசு மூலமாகவே நடைபெறும். மேலும் சிமெண்ட், ஸ்டீல், மின்சாரத் துறையில் இயங்கி வரும் தனியார் நிறுவனங்களுக்கும் போதிய நிலக்கரிச் சுரங்கங்கள் இ-ஏலம் மூலம் விடப்படும்.

இதன் மூலம் ஒடிசா, சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், தெலுங்கானா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், லிக்னைட் மூலமாக தமிழ்நாடு என மாநில அரசுகளுக்கு நிறைய வருவாய் கிடைக்கும். மாநிலங்களுக்கு நலன் அளிக்கக்கூடிய வகையில் முடிவெடுத்துள்ள மோடி அரசு பாராட்டுக்குரியதே. அவசரச் சட்டம் வாயிலாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் மத்திய அரசு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நிறுவனங்களுக்கு இ ஏலம் விடுவதில் தொடங்கி, தேவையான அளவிற்கு உற்பத்தி, ஊழலுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுதல், இறக்குமதியைக் குறைக்க நடவடிக்கை, வங்கிகளுக்கான சிக்கலைத் தீர்த்தல், இறக்குமதி வசதிகள், மாநில நலன்கள், மின் உறபத்தியில் தங்குதடையின்மை, முறையாகவும் விரைவாகவும் வழித்தடங்களை அமைத்தல், நிலக்கரியை மூலப் பொருளாகக் கொண்ட அனல் மின் நிலையங்களை சுரங்கத்திற்கு அருகிலுள்ள பகுதியில் அமைக்க ஆவண செய்தல், சுற்றுச் சூழல் தடைநீக்கம் பெறுதல் என சுற்றிலும் அக்னி வலைகள் நிரம்பி உள்ளன என்பதை உணர்ந்து செயல்படவேண்டிய இடத்தில் மோடி தலைமையிலான மத்திய அரசும் கோல் இந்தியா நிறுவனமும் உள்ளது என்பதே தற்போதைய நிலை.