வேலை வேண்டும் விஸ்வநாதா !

சென்னைக்கு வந்த புதிதில் அண்ணனோடும் என் அத்தானோடும் நானும் எனது நண்பர்கள் இருவரும் ஒட்டிக் கொண்டோம். வேலை கிடக்க போஸ்ட் ஆபீஸ் சென்று ஒவ்வொரு நிறுவனத்திற்கும் பயோ டேட்டா அனுப்புவதே எங்கள் வேலை. அதேபோல வேலையைத் தேட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஏரியாவாக செல்வோம். முதலில் சென்ற இடம் பெருங்குடி.

பெருங்குடியில் நாங்கள் மூவரும் நடந்தே சென்றோம். எங்கேயாவது எலெக்ட்ரிக்கல் என்றோ ஏலேக்ட்ரோனிக்ஸ் என்றோ எழுதி இருந்தால் உடனே அங்கு நமக்கு வேலை கிடைக்குமா என செக்குயுரிட்டியிடம் கேட்க ஆரம்பித்து விடுவோம். சில செக்குயுரிட்டி CV யை வாங்கிக் கொண்டு, நாங்கள் மனம் நோகக்கூடாது என்பதற்காக ஐயா வந்தவுடன் கொடுக்கிறேன். தேவையிருந்தால் call செய்வார்கள் என ஆறுதலாக சொல்வார்கள். சில சிறு நிறுவனங்களில் உள்ளே விடுவார்கள். சிலர் விரட்டி விடுவார்கள். சிலர் எரிந்து விழுவார்கள். ஏதாவது ஒரு நிறுவனத்தில் மானேஜரைப் பார்த்து அவரும் எங்களுடன் பேசி cvயை வாங்கி விட்டால் போதும்.

அங்கிருந்து வெளியே வந்தவுடன் , ஏ.. மக்கா நம்ம மூணு பேர்ல ஒருத்தனுக்கு வேலை கிடைச்சாலும் நல்லதுல. நம்ம செலவுக்காவாவது ஆகும் என கனவில் உள்ளதையெல்லாம் பேசிக்கொண்டே ரொம்ப சந்தோஷமாக செல்வோம். அப்படி நடந்து சென்ற போது கோவில்பட்டி பையன் டிப்ளோமா படிச்சவன், அண்ணே ஒத்தையில வேலை தேட ரொம்ப கஷ்டமா இருக்கு. பேசவே பயமாகவும் தயக்கமாகவும் இருக்கு. ஒங்க கூட வரட்டுமா என்றான்.

நம்ம ஏரியா பையன் , சரி வான்னு அவனையும் கூட்டிட்டுப் போனோம். ஒரு கம்பெனியில் வேலைக்கு ஆள் தேவை என்ற போர்டும், டிப்ளோமா இன் ஏலேக்ட்ரோனிக்ஸ் என்றும் எழுதி இருந்தது. உடனே அந்த டிப்ளோமா பையன் அண்ணே இங்கே கேட்போம்னே என்றான். மெல்ல உள்ளே போய்ப் பார்த்தால் யாருமில்லை.

சார்… சார் என கூப்பிட்டோம். ஒரு சத்தம் கூட வரலை.

அஞ்சு நிமிஷம் கழிச்சு, ஏ… மக்கா என்னல ஒரு ஆளைக் கூட காணோம். இங்கே அப்ப யாருதான் வேலைபாக்கா என்றான்.

திருப்பியும் சார்… சார் என கூப்பிட்டோம். ஒருத்தர் உள்ளே இருந்து வந்தார். நிறுவனர்.

அவருடைய பேச்சில் இருந்த அகங்காரமும், தோரணையையும் மறக்கவே முடியாது.

அந்தப் பையன்: சார்… வேலை காலின்னு போட்டிருந்தீங்க. நான் டிப்ளோமா தான்.

உடனே அவர் பதில்… அப்ப எதுக்கு இவனுங்க இங்கே நிக்கானுக.. அங்கே போய் நில்லுங்கன்னு எங்களுக்கு அட்வைஸ்.

பத்தடி தள்ளி நின்னோம்.

சரி… உனக்கு எந்த ஊரு?

அந்தப்பையன், சார் கோவில்பட்டி..

அப்படியா… வேலை கொஞ்சம் கஷ்டமானது. எங்கூட PCB போர்ட் செய்ய ஒத்தாசையா இருக்கணும். ப்ராஜெக்ட் முடிஞ்சவுடன் நான் சொல்ற காலேஜ்ல போய் கரெக்டா கொடுத்துட்டு வரனும். செய்வேன்னா சொல்லு.

ஓகே.. சார் செய்வேன் சார்.

என்ன சம்பளம் வேணும்?
சார்… 1500 ரூபாய் வேணும். (1998)

என்னது… ஆயிரத்தி ஐநூறா.. 650 ரூபாய் தர்றேன். வேணும்னா சரின்னு சொல்லு.

இல்லை சார். குறைஞ்சது 1300 ஆவது தாங்க சார்.

ஏ… என்ன வெளையாடுதியா? அதெல்லாம் தரமுடியாது. 650 தான் தருவேன்.

சீக்கிரம் முடிவைச் சொல்லுன்னவர்… உங்களுக்கு எந்த ஊருடேன்னார். நாங்க திருநெல்வேலிகாரங்க.

படிச்சு முடிச்சுட்டா பையைத் தூக்கிட்டு மெட்ராஸ் வந்துர்றது. ஏன் அங்கெல்லாம் வேலை தேட முடியாதோ. சார், அங்கே எங்க படிப்புக்கு ஏத்த வேலை இல்லை.

நண்பன் அவரிடம் சார் உங்களுக்கு எந்த ஊர்ன்னான். எனக்கா எனக்கும் அந்தப்பக்கம்தான் தூத்துக்குடி. இங்கே வந்து இருபது வருஷமாச்சுன்னவர்…

ஏ.. என்ன , என்ன முடிவெடுத்திருக்கே… சீக்கிரம் சொல்லு. ஊர்ல இருந்து இங்கே வந்துட்டு இந்தச் சம்பளம் கொடுக்கேன்னு சொன்னதுக்கப்புறமும் பெரிய எல்லாந்தெரிஞ்சவன் மாதிரி யோசிக்க… பெருசா வந்துட்டானுக, பையைத் தூக்கிக்கிட்டு… ஊர்லயே இருந்துத் தொலைய வேண்டியதுதானே என்று மீண்டும் அறிவுரை.

உடனே எனக்கும் நண்பனுக்கும் சரியான கோபம். சார்.. அங்கே வேலை கிடைச்சா இந்த ஊர்ல வந்து எதுக்கு சார் வேலை தேடுறோம். அங்கே கிடைக்கலன்னுதானே இங்கே வந்திருக்கோம். பையைத் தூக்கிக்கிட்டு வந்துருக்கோம்னு, எப்படி சார் நா கூசாம சொல்றீங்க.

அதெல்லாம் இருக்கட்டும் சார்… எங்களை பையைத் தூக்கிக்கிட்டு வந்துட்டானுகன்னு சொல்றீங்களே.. நீங்க எதுக்கு இந்த ஊருக்கு வந்தீய.. நீங்க அங்கே கம்பெனி ஆரம்பிச்சிருந்தா நாங்களும் இங்கே வந்து தேட மட்டோம்லா.

உன் friendக்கு வேலை வேணுமா வேண்டாமா? என அதே கேள்விக்குப் போனார்.

அந்தப் பையன் இல்ல சார், இது ரொம்ப கம்மி சாலரிசார், நான் வரலன்னான்.

திருப்பியும் நால்வரையும் ஒருமையில் திட்ட ஆரம்பித்தார். வந்துட்டானுக தாலிய அறுக்க…

டேய்… இங்கே இவர் மட்டுந்தான் இருக்காருடா.. எங்கே முன்னாலேயே உன்னை இப்படி பேசுறாருன்னா தனியா இவருகிட்டே மாட்டினே, நீ செத்த..
வேற இடத்தில் வேலை தேடலாம்னோம்.

நேரத்தை வீணடிச்ச வெறும்பையளுகளா வெளியே போங்கடன்னார்.

அப்படி சொன்னவுடன், யோவ் மரியாதையா பேசு… இங்கே உன்னை அடிச்சுப் போட்டுட்டு போனோம்னா ஒரு பைய இங்கே கெடையாது. கேட்க நாதியில்லாத இடத்தில இருக்க, ஏன் உன் கம்பெனியில ஒரு பைய கூட இல்லன்னு இப்ப தெரியுதுன்னு சொல்லிட்டு வெளியே வந்தோம்.

அவ்வளவு ரணகளம் நடந்து வெளியே வந்தவுடன் நண்பன் சொன்னான்.

மயிராண்டிகளா.. கொஞ்சம் பொறுமையா டீல் பண்ணி இருந்தா , அவன் ஆபீசெலேயே தண்ணி குடிச்சிருப்பேன்னு சொரணை இல்லாமலேயே சொல்லிக் கொண்டு எங்களைத் கோபத்துடன் திட்டிக் கொண்டே கூட வந்தான்.

அந்த டிப்ளோமா பைய இனி நம்ம கூட வருவானா என்ன? என இன்னொருத்தன் சொன்னான். மக்கா இப்படி நடந்து போச்சுன்னு நாம சோர்ந்து போயிறக் கூடாதுடா… நாளைக்கு கிண்டி போறோம். அங்கே நெறைய கம்பெனி இருக்காம்.

நாளைக்கு கிண்டி அனுபவத்தைக் கிண்டுவோம்.