இஸ்லாமியர்களில் சாதிகள்/வகுப்பு இல்லையா?

கடந்த சில நாட்களாக தாய் மதம் திரும்புபவர்களுக்கு என்ன சாதியைக் கொடுப்பீர்கள் என்று கிண்டலுடன் கூடிய பதிவுகளும் கார்ட்டூன்களும் கண்ணில் படுகின்றன. குறிப்பாக இஸ்லாம் சமூகத்திலிருந்து திரும்புபவர்களுக்கு என்ன சாதியைக் கொடுப்பீர்கள் என்பதுதான் அது. ஏறத்தாழ கிருத்துவ மதத்தில் சாதிகள் உண்டு என்பது போலவும், இஸ்லாம் சமூகத்திலிருந்து வருபவர்களை எங்கு அடைப்பீர்கள் என்பதுதான் இவர்கள் கேட்கும் கேள்விகள்.

முஸ்லிம்கள் இந்திய இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும், வாழ்வியல் முறையிலும் சாதியற்று இருக்கிறார்களா என அறிய வேண்டியுள்ளது. உண்மை அவ்வாறல்ல என்பதே! முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் தாங்களே உயர்வானவர்கள் என சொல்லிக் கொள்வதுண்டு. குறிப்பாக Syed மற்றும் Shaik வகையைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் தாங்கள் அரபிலிருந்து வந்த வழியினர் என்றும், Mughals and Pathans வகையைச் சேர்ந்தவர்கள் தாங்கள் துருக்கி, ஆப்கான் வழிவந்தவர்களாகவும், முஸ்லிம் மன்னர்களின் ஆட்சியில் Foreign Extraction வாயிலாக வந்தவர்களை அஷ்ரப் (Ashraf) என்றும் தாங்களே இஸ்லாமிய சமூகத்தின் உயர்நிலைப் பிரிவினர் எனவும் அழைக்கிறார்கள். இவர்களோடு இந்து சமயத்திலிருந்து மதமாற்றம் செய்யப்பட்ட /மதமாற்றமான இஸ்லாமியர்கள் உயர் சாதி/வகுப்பிற்குள்ளும் வருகின்றனர்.

Ajlaf என்ற பிரிவினர் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறிய இடைநிலைச் சாதிகள் என்பதால் அவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலும், Arzal என்ற பிரிவினர் வண்ணான், தலித், சவரம் செய்பவர்கள், பழங்குடியினர் மற்றும் மிகப் பின்தங்கிய நிலையிலிருந்த சாதிகள் இந்துமதத்திலிருந்து இஸ்லாம் தழுவியவர்கள் ஆவார்கள். இவர்களைப் பெரும்பாலும் ஏழ்மையைப் பயன்படுத்தியே மதம் மாற்றப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் இவர்களின் கல்வி, சமூக பொருளாதார நிலை இன்றளவிலும் மிக மோசமாகவே உள்ளது.

இந்தியாவில் 82 இஸ்லாம் வகுப்பினர்(சாதிகளாகத் தொகுக்கப்பட்டு) OBC பிரிவிலும், மேற்கூறிய ashraf வகையினர் போன்றோர் NON-OBC பிரிவிற்குள்ளாகவும் வருகிறார்கள். இஸ்லாமியர்களில் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் அனைத்து முஸ்லிம்களையும் சாதிப் பிரிவுகளுக்குள் அடக்கக் கூடாது எனவும் இஸ்லாமிய மார்க்கத்தின் படி அனைவரையும் ஒரே பிரிவினராகக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை ஒருபுறமும், தாழ்த்தப்பட்ட, சமூகத்தில் பின் தங்கிய OBC quotaவில் சிக்கிக் கொண்ட arzal வகையினர் தங்களை SC/ST பிரிவிற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைக்கின்றனர்.

ஒருபுறம் ரங்கராஜ் மிஸ்ரா கமிஷன் படி சாதிகளின்/வகுப்பின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையையும் (SC/ST பிரிவை தங்களுக்கும் தர வேண்டுமெனவும்), இன்னொரு புறம் அதை நீக்கி அனைத்து இஸ்லாமியர்களுக்கும் உள்இட ஒதுக்கீடு கொடுத்தால் போதுமென்ற இரு முரணான கோரிக்கைகளும் முன் வைக்கப்படுகின்றன.

சட்டத்தின் படி குறிப்பாக ஏழை இந்துக்களை மதம் மாற்றம் செய்வதால்தான் இஸ்லாம் மதத்திற்குப் போகிறவர்களுக்கு OBC பிரிவின் கீழ் மட்டுமே இடம் கொடுக்க முடியும் என சட்டம் சொல்கிறது. அதேபோல உயர்சாதியில் பிறந்த ஒருவர் இஸ்லாம் மதத்திற்கு மாறி BC வகுப்பினுள் நுழைவது வெறும் சலுகைகளுக்காக அமைந்து விடக்கூடாது என்பதாலேயே அவர்கள் மதம் மாறினாலும் NON-OBC(OC) பிரிவில் மட்டுமே வருவர் என இது குறித்த வழக்கொன்று சென்னை உயர்நீதி மன்றத்தால் 2011 ல் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இணைப்பு இதோ.

ஆனால் பிறப்பில் அவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்களோ அதன் அடிப்படையில் தான் அவர்கள் OBC or NON OBC பிரிவிற்குள் வருகிறார்கள். சட்ட ரீதியாக இது ஒருபுறமிருக்கட்டும். முஸ்லிம்கள் இதர பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்களை திருமணம் போன்ற விஷயங்களில் சேர்த்துக் கொள்கிறார்களா என்ன? ஆகவே தாய் மதம் திரும்புபவர்கள் பிராமணர்களாகவே இதர உயர்த்தப்பட்ட சாதிகளாகவோ கூட வரட்டும். எந்த பிரிவில் இருந்து வந்தாலும் எந்த சாதியில் சேர்ப்பீர்கள் என்பதில் ஒரு பிரச்சினையும் இல்லை, ஹிந்து என்ற உண்மையான மதச்சார்பின்மையே இங்கு முக்கியம். இதில் வேடிக்கை என்னவென்றால் சாதி ஒழிப்புப் போராளிகளின் கவலைதான் மதம் மாறி வருபவர்களுக்கு எந்த சாதியை ஒதுக்குவீர்கள் என்று கேள்வி எழுப்புவது. உங்கள் சாதி ஒழிப்பில் தீயைத் தான் வைக்க வேண்டும்.

தனிப்பட்ட முறையில் எனக்கு மதமாற்றத்தில் நம்பிக்கைக் கிடையாது. மதம் மாறுபவர்களுக்கு என்ன சாதி ஒதுக்குவார்கள் என்று கேலி செய்பவர்கள், முஸ்லிம்கள் தரப்பில் OBC/ NON-OBC யில் எத்தனை சாதிகள் உள்ளன என்பது பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். அவர்களை வகுப்பு(சாதி) வாரியாகத் தான் இட ஒதுக்கீட்டில் உள்ளது என்பதை உணர வேண்டும். மாநில வாரியாக இஸ்லாமியர்களின் வகுப்பு/சாதி பற்றிய பட்டியலுக்கான இணைப்பு இதோ.

தற்போதைய இட ஒதுக்கீடு என்பது பிறப்பு அடிப்படையிலான சாதியின் அடிப்படை என சொல்ல முனைவதால் தாய் மதம் மாறுபவர்களுக்கு என்ன சாதி எனக் கொடுப்பதில் என்ன சிக்கல் இருக்க இயலும் என்பதே நமது கேள்வி.