யேசப்பாவும் இசக்கிமுத்துவும்:

அந்தந்த மதத்தில் இருக்கிறவன் கூட அமைதியா இருப்பான். ஆனால் திடீர்னு மதம் மாறினவன் பண்ற அலும்பு இருக்கே, அது செம காமெடியா இருக்கும்.

எங்க கிராமத்தில இசக்கிமுத்துவும் அப்படி திடீர்னு தையல் மெசினுக்காக பெந்தேகொஸ்துக்கு மாறிட்டான். இசக்கியோட அப்பா கோயில்ல பூஜை பண்ணுபவர் என்பது கூடுதல் தகவல். இசக்கி மதம் மாறின பிறகு, எதுக்கெடுத்தாலும் யேசப்பான்னு சொல்லிக்கிட்டே இருந்தான்.

ஒருநாள் சாதாரணமா பேசிக்கிட்டிருக்கும் போது ஒரு பையன் ஒரு கெட்ட வார்த்தையைப் போட்டு திட்டிவுடனே இசக்கிமுத்து,

“ஏசப்பா…” ன்னு சொல்ல,

நம்ம பையன் உடனே கெட்ட வார்த்தை போட்டவன்கிட்டே ,

“ ஏல… அவன்தான் இன்னும் ஏச சொல்றாம்லா, நல்ல ஏசுன்னுன்னான் …”

(திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏசு என்பதற்கு திட்டு என்று பொருள்)

ஒரு வருஷத்துக்கு யேசப்பா சொன்ன இசக்கி, கொஞ்சமா தெளிஞ்சு அம்மன் கோயில் கொடைக்கு வந்தான்.

“ஏ… மக்கா… இங்கே வர்றீய… யேசப்பா.. எதுவும் சொல்ல மாட்டாரா” ன்னு ஒருத்தன் கேட்டதுக்கு, “எனக்கு எம்மதமும் சம்மதம்ன்னான் இசக்கி.

ஊழியம் செய்றதுக்காக இசக்கியை வாராவாரம் பெந்தேகொஸ்து காரன் வந்து கூப்பிட, மெல்ல எரிச்சலான இசக்கி அவன் வீட்டு முன்னாலேயே சண்டை போட்டான்.

“ஏலே… ஒரு தையல் மெசினைக் கொடுத்துட்டா நீ கூப்பிடுற இடத்துகெல்லாம் வரணுமோ… மயிரு.. நீயுமாச்சு ..ஒன் மெசினுமாச்சு… எடுத்துட்டு ஓடிப்போயிருன்னான்”.

“ வந்தவன் சுற்றிலும் இந்து ஆட்களாக இருக்காங்கன்னு தெரிஞ்சவுடனே ரொம்ப பஞ்சாயத்து பண்ணாம மெசினை தூக்கிட்டு போயிட்டான்.”

ரெண்டு நாள் கழிச்சு “ இசக்கிக்கிட்டே ஏ… என்ன அவன் கூட சண்டை போட்டுட்டியாமே…”

“ஆமாடே… அவனுக தொல்லை தாங்க முடியல… ஞாயிற்றுக் கிழமை ஆச்சுன்னா உயிரை எடுக்க ஆரம்பிக்கானுக. அதான் அவனுகளை விட்டு முதல்ல வெளியே வந்துருவோம்னு முடிவெடுத்து சண்டையை போட்டு அனுப்பிட்டேன்.”

“அப்ப… தையல் மெசின்…”

“ தையல் மெசின் நாலு மாசமா ரிப்பேராகிக் கிடக்கு.. அதை ரிப்பேர் பண்ணி அவன் வேற யாரையாவது ரிப்பேராக்கட்டும். நான் கொஞ்சம் காலம் ரிப்பேராகிக் கிடந்தேன்… இப்ப தெளிஞ்சுட்டேன்னான். “