கல்வி பற்றிய இந்திய மனநிலை:

கல்வி பற்றிய இந்திய மனநிலை:

நேற்று அலுவலகத்திலிருக்கும் போது கீழே விழுந்திருந்த புத்தகத்தைத் தெரியாமல் மிதித்து விட்டேன். நம்முடைய அனிச்சைச் செயலான புத்தகத்தைத் தொட்டு கும்பிட்டு விட்டு, அழுக்கைத் துடைத்து விட்டு மேலே எடுத்து வைத்தேன். அதைப் பார்த்துக் கொண்டிருந்த வேற்று நாட்டு நண்பர்,
“எதற்காக புத்தகத்தைத் தொட்டு இப்படி கன்னத்தில் போட்டுக் கொண்டாய்” என்றார்.

“அது படிக்கிற புத்தகம்… எங்கள் நாட்டில் புத்தகத்தையோ , ஏதேனும் நோட்டையோ மிதித்து விட்டால், அறிவு பெருகாதோ என்ற எண்ணத்தில் தவறை மன்னிக்க வேண்டுமென கும்பிடுவோம் என விளக்கமளித்தேன்.

“ஏ.. இது காமெடியா இருக்கு.. இதுக்கும் அறிவுக்கும் என்ன இருக்கு என்றான்.”

“உண்மைதான். அதை மிதிப்பதால் என் அறிவு குறையாது. ஆனால் நாங்கள் வளர்க்கப் பட்ட விதமும், எங்கள் நாட்டின் வழக்கமும் அப்படி” என்றேன்.

புருவத்தை லேசாகச் சுருக்கியவனிடம், “எங்கள் நாட்டில் வறுமை காரணமாகக் குழந்தைகளுக்குக் கல்வியைக் கொடுக்க முடியாத தந்தைகளும் உண்டு. கெட்ட பழக்க வழக்கங்களால் கல்வியைக் கொடுக்கும் கடமையில் தவறிய தந்தைகளும் உண்டு. ஆனால், இந்தியாவின் ஒட்டு மொத்த மனட்சாட்சியும் கல்வியைத் தெய்வமாகவே பார்க்கும் குணம் கொண்டது. எப்படியாவது தங்கள் குழந்தைகள் நிறைய படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்ற பேராவல் கொண்ட பெற்றோர்கள் நிறைந்த சமூகம்.. எங்கள் குழந்தைகளுக்கும் புத்தகத்தை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதை சிறு வயதிலேயே சொல்லிக் கொடுப்போம்” என்றேன்.

“அப்படியா… எனக்கு இது ரொம்பவே புதிதாக இருக்கிறது என்றான்.”

“ஆம்.. நாங்கள் கல்விக்கென ஒரு தெய்வத்தை வேண்டி ஒருநாள் அதற்காகவே சிறப்பு பூஜையே பண்ணுவோம் என்றேன். “

அவன் வேற்று மதமும், வேற்று நாட்டைச் சேர்ந்தவன் என்றாலும், என்னிடம் உண்மையிலேயே நான் வேடிக்கைக்காகவே கேட்டேன். ஆனால் உன் செய்கைக்குப் பின்னால் இருக்கும் கல்வியைத் தெய்வமாக வணங்கும் முறை எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. நல்ல விஷயம் என்றான். இந்தியா மிகப் பெரிய கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் கொண்ட நாடு என்பதை அவன் புரிந்து கொண்டான். ஆனால், மதத்தை துவேசிப்பவர்களுக்கும், பகுத்தறிவின் பெயரால் குதர்க்கமாகக் கேட்பவர்களுக்கும் தான் இந்தியாவின் ஒட்டு மொத்த மக்களின் கூட்டு மனட்சாட்சி எதற்காக ஒவ்வொரு விஷயத்தையும் செய்கிறது என்பதைப் புரியாதவர்களாக ஆக்கியுள்ளது.

I don’t know : (எனக்குத் தெரியாது)

I don’t know :

 i dont know

I don’t know. எனக்குத் தெரியாது. இதுதான் மனிதர்கள் பெரும்பாலும் உபயோகிக்கத் தயங்கும் கடினமான வார்த்தை. கனமான வார்த்தையாகவும் பார்ப்பதால்தான் கடினமாக உள்ளது.

ஒரு துறையில் அனுபவம் பெற்ற பிறகு துறை சார்ந்து எழுப்பப்படும் கேள்விகளுக்குத் தான் “எனக்குத் தெரியாது” என்ற பதிலைத் தரத் தயக்கம் காட்டுகிறார்கள். அவ்வாறு சொல்வதன் மூலம் இவருக்கு இது தெரியாது என மற்றவர்கள் தரக்குறைவாக எடை போடுவார்களோ என்ற அச்சமே பிரதானமான  காரணம். அதிலும் கூர்ந்து கவனித்தால் “எனக்குத் தெரியாது” என்ற பதிலை தன்னைவிட அனுபவத்தில் குறைந்தவர்கள் கேட்டால் பெரும்பாலும் சொல்ல மாட்டார்கள்.

பள்ளிகளில் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலோர் தனக்குத் தெரியாத கேள்வியாக இருந்தால் பதில் எழுதாமல் விடுகிறார்களா என ஆய்வு செய்தால் அத்தகைய மாணவர்கள் மிக அரிதாகத் தான் இருப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் வகுப்பில் இது சம்பந்தமாகக் கேள்விப்பட்டது அல்லது கேள்விக்குத் தொடர்பான வார்த்தைகளுக்கு இணையான ஏதாவது பதிலை தம்முடைய ஞாபகத்திற்குக் கொண்டுவந்து எழுதி விடுவதைப் பார்க்கலாம்.

ஆசிரியர்கள் அறியாத/தெரியாத விஷயங்கள் பற்றி மாணவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மிக அரிதாகவே “எனக்குத் தெரியாது” என்று சொல்வதற்குப் பதிலாக “ பார்த்து விட்டு சொல்கிறேன். “ஞாபகத்தில் இல்லை” என்ற பதிலைத் தருவார்கள். பல நேரங்களில் மாணவர்களை அதிகப் பிரசிங்கித்தனமாகக் கேட்காதே என்றோ, அல்லது ஏதோ ஒரு பதிலைச் சொல்லி சமாளிப்பதைக் காணலாம்.

குறிப்பாக எதிர்காலத்தைக் கணிக்கும் ஜோசியர்களை நாம் கிண்டல் செய்வதுண்டு. ஆனால் பலதுறை நிபுணர்கள் எதிர்காலத்தைக் கணித்து சொல்வதையும் காணலாம். அதாவது பண்டிதர்கள், அரசியல் விமர்சகர்கள், அறிவாளிகள், சிந்தனையாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், பொருளாதார நிபுணர்கள், அறிவியலாளர்கள் இன்னபிற துறையைச் சார்ந்த வல்லுனர்கள் கூட எதிர்காலத்தில் என்ன நடக்கும் எனத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் யூகத்தின் அடிப்படையில், ஏதோ ஒரு கணக்கீட்டின் அடிப்படையில் ஏதாவது ஒரு கருத்தை சொல்லி வைப்பார்கள்.

கருத்தை சொல்கிறார்களா? அல்லது உளறி வைக்கிறார்களா என்பதை அறிய வேண்டுமானால் அவர்கள் கணித்த காலத்தில் சென்று பார்த்தால் மட்டுமே சரியா தவறா என சொல்ல இயலும்.

கணித்தல் அல்லது குறி சொல்லுதல் பற்றி நீல்ஸ் போர் என்பவர் இவ்வாறாகக் குறிப்பிடுகிறார். கணித்தல் என்பது மிகக் கடினமானது, அதிலும் எதிர்காலம் பற்றி கணித்தல் என்பது’ என்கிறார். அவ்வாறு எதிர்காலத்தில் கணிப்பது நடக்குமா எனத் தெரியாவிட்டாலும் வல்லுனர்கள் தமக்குத் தெரியும் என்பது போல ஏதாவது ஒன்றை சொல்லி வைப்பார்கள்.

ஒரு இலக்கியவாதி போகிற போக்கில் இந்தியைப் பள்ளிகளில் கொண்டுவந்தால் தமிழ் இலக்கியம் ஐம்பது ஆண்டுகளில் அழிந்து விடும் என்று சொல்லலாம். இன்னொருவர் ஆங்கில வழிக் கல்வியைப் படிப்பதால் தமிழ் அழியும் என்று ஆருடம் செய்யலாம். இதை அறிந்து கொள்ள நாம் ஐம்பது வருடங்கள் இருக்கமாட்டோம் என்கிற தைரியத்தில் சொல்கிறார்களோ?

பிலிப் டெட்லாக் என்பவர் ஓர் ஆய்வை மேற்கொண்டார். அவர் அரசியல் பண்டிதர்கள், பொருளாதார நிபுணர்கள், மிக உயரிய அரசு அதிகாரிகள், திட்டம் வகுப்பவர்கள் என பல்துறையைச் சேர்ந்தவர்களில் 300 பேரைத் தேர்ந்தெடுத்து அடுத்த இருபது ஆண்டுகளில் குறிப்பிட்ட சில நாடுகள் பொருளாதாரத்தில், முன்னேற்றத்தில், மக்கள் நலனில் என ஆயிரம் கேள்விகளைக் கேட்டிருந்தார்.

நிபுணர்களிடம் உங்கள் கணிப்பை சொல்லுங்கள் என வேண்டுகோள் வைத்தார். அதில் எவரும் “எனக்குத் தெரியாது” என்ற பதிலைத் தரவில்லை. அவர்கள் பதில் அளித்ததன் மூலம் , முதலில் ஒரு முடிவுக்கு வந்தார். “ அவர்கள் அறிந்ததைக் காட்டிலும் எல்லாம் தெரிந்தவர்கள் போல காட்டும் மேட்டிமைத் தனம் தெரிவதை” கண்டுகொண்டார். இதை இன்று எந்த சமூகப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, அது கல்வியாகட்டும், பொருளாதாரம் சார்ந்த பிரச்சினையாகட்டும், விலையேற்றம், வரி, கட்டமைப்பு, அரசின் திட்டங்கள் என அனைத்திற்கும் சமூக ஆர்வலர்களாக வலம் வருபவர்கள் , எழுத்தாளர்கள் என பலரும் “எனக்குத் தெரியாது” என சொல்வதற்குப் பதிலாக தாம் படித்த, அனுபவங்களின் வாயிலாகவே எந்த பிரச்சினைக்கும் தயங்காமல் கருத்து சொல்வதை அன்றாடம் ஊடகங்களில் நாம் காண்கிறோம்.

மீண்டும் டெட்லாக்கின் ஆய்வு முடிவுகள் பற்றி காண்போம். நிபுணர்களும் குரங்குகளும் ஏறத்தாழ ஒன்றாகவே எதிர்காலத்தைக் கணித்துள்ளது என கிண்டலாகக் குறிப்பிடுகிறார். குரங்குகளையும் மனிதர்களையும் நான்கில் ஒன்றைத் தேர்வு செய்யுங்கள் என சில கடந்த கால வரலாறைப் பற்றியோ, அறிவியல், இன்னபிற நடப்பு உண்மைகளின் அடிப்படையில் கேள்விகளை வைத்தால் மனிதர்களைக் காட்டிலும் குரங்குகள் பல நேரங்களில் சரியான விடையைத் தருகின்றன என பலமுறை நடந்துள்ளதோடு ஒப்பிட்டு , அதைப் போலவே உள்ளது நிபுணர்கள், பலதுறை பண்டிதர்கள் எதிர்காலம் பற்றி கணித்துச் சொல்லுதலும் என்ற முடிவை இருபது ஆண்டுகள் கழித்து அறிந்து கொள்கிறார். இதன் மூலம், “எனக்குத் தெரியாது” என்ற வார்த்தையை உபயோகிக்கத் தயங்குவதுதான் என்று சொல்கிறார்.

இதைப் போலவே இன்னொரு ஆய்வை CXO Advisory Group ம் , பங்குச் சந்தை நிபுணர்களை வைத்து 6000 க்கும் அதிகமான எண்ணிக்கையில் கணிக்கச் சொன்னார்கள். அவர்களின் கணிப்பு 47% தான் சரியாக இருந்துள்ளது என்பது தெரிய வந்தது. இந்த நிபுணர்கள் தமது துறையைச் சார்ந்த விடயங்களில் எதிர்காலம் பற்றி தயங்காமல் எதிர்காலத்தில் இப்படி நடக்கும் என்று சொல்வதற்கு மூல காரணமாக இருப்பது “ அவர்களின் அதீத நம்பிக்கையே”. அதீத நம்பிக்கையுடையவர்கள் ஒரு காலத்திலும் “எனக்குத் தெரியாது” என சொல்வார்களா?

“எனக்குத் தெரியாது” என்று சொல்வதற்குப் பதிலாக எதிர்காலத்தைக் கணிப்பதால் சில நேரங்களில் மிகப் பெரிய வல்லுனராக நீங்கள் அறியப்படலாம். பங்குச் சந்தையில் எதில் முதலீடு செய்ய வேண்டுமென ஒரு நண்பர் தயங்காமல் ஒரு கருத்தை சொன்னார். நீங்கள் இந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்தால் அடுத்த 18 மாதத்தில் மூன்று மடங்கு உங்கள் பங்குகள் பெருகி இருக்கும் என்றார்.

எப்படி இவ்வளவு தைரியமாக சொல்கிறீர்கள் என்று கேட்டேன். என்னுடைய கணிப்பின் படி நடந்து விட்டால் “என்னை மிகப் பெரிய அளவில் கொண்டாடுவார்கள்” என்றார். என்னுடைய கணிப்பிற்குப் பணம் தரவும் தயாராக இருப்பார்கள்.

ஒருவேளை நடக்காமல் போனால் என்ன செய்வீர்கள்?

கவலையே வேண்டாம். ஒன்று  என்னை மறந்திருப்பார்கள். பெரும்பாலும் மக்கள் தவறான கணிப்புகளை மறந்திருப்பார்கள். சரியான கணிப்பை மட்டும் எடுத்துக் கொண்டே வாழ்க்கையை நடத்த விரும்புவார்கள். என்னையும் இவன் பண்டிதன் அல்ல போல. இவனும் பத்தோடு ஒண்ணு தான் போல என நினைத்துக் கொண்டு மற்ற வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விடுவார்கள்.

எனக்குத் தெரியாது என்று சொல்வதைக் காட்டிலும் எதையாவது நம் பதில் அல்லது கருத்து என்ற அடிப்படையில் சொல்வதே தன்னைப் புத்திசாலியாக அடையாளப்படுத்தும் என்றே சாதாரணமானவர்களிலிருந்து பண்டிதர்கள் வரை நினைக்கிறார்கள்.

நானெல்லாம் எனக்குத் தெரியாததை தெரியாது என்று சொல்பவர்களுக்காக :

எனக்குத் தெரியாது என்பதை யாரிடம் சொல்வார்கள் எனப் பார்த்தால் தான் யாரிடம் report பண்ணுகிறோமோ அவரிடம் மட்டும் எனக்குத் தெரியாது என்று சொல்வதைக் காணலாம். பணி சார்ந்த இடங்களில் எனக்கு முறையான பயிற்சி தந்தால் பண்ண இயலும் என்றும், முயற்சி செய்கிறேன் முடியவில்லைஎன்றால் உதவிக்குத் தெரிந்தவர்களை அனுப்புங்கள் என சொல்லுவதன் பின்னால், ஒரு விஷயம் ஒளிந்து கிடக்கிறது. தமது வாடிக்கையாளர்கள் தம்மை முட்டாள் என சொல்வதற்கு முன்பாக தன்னுடைய மேலதிகாரியிடம் சொல்லி விட்டால் பிரச்சினை தீர்ந்தது என நினைப்பதே அடிப்படைக் காரணம்.

மேலதிகாரி அறிவுரை செய்யும் போது ரொம்ப எளிதாக உபயோகிக்கும் சொல், “It is easy to say I don’t know; but rather saying to I don’t know, please try to say positively that I will try and I can”. இதை மேலதிகாரி சொல்வதன் பின்னால் கிடக்கும் விஷயம் அதைவிட புரிந்து கொள்வதற்கு மிக எளிதானது. வேலையை எவனையாவது வைத்து முடித்து விட்டால் போதுமென நினைப்பதே!

எனக்குத் தெரியாது என்பதை சொல்வதால் தவறு ஒன்றுமில்லை. ஆனால் பணி செய்யுமிடங்களில் எனக்குத் தெரியாது என்று சொல்கிற கையோடு முயற்சி செய்கிறேன் என சொல்வதன் மூலம் நீங்கள் உங்கள் மேலதிகாரியின் மதிப்பிற்குரியவராகிறீர்கள்.

“எனக்குத் தெரியாது” என்ற சொல்லை உபயோகிக்கத் தயங்குவதை இவ்வாறு சொல்லி நிறைவு செய்யலாம். “தயக்கம்” , “அச்சம்” “அவமானமாகக் கருதுதல்” “தரக்குறைவாக எண்ணுவார்கள் என நினைத்தல்” “ அதீத நம்பிக்கை” என்று சொல்லலாம். எதிர்காலம் கணிக்கும் நிபுணர்களை இப்படியும் சொல்லலாம். “ இவன் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல” என்றும் சொல்லி வைப்போம்.

நரேந்திர மோடியின் புத்தாண்டு கொண்டாட்டம் 2015

பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி அவர்கள் ஆங்கில புத்தாண்டுக் கொண்டாட்டத்தை தமது பிரதம அலுவலக அதிகாரிகளுடன் கொண்டாடிய போது சில சுவாராஸ்யமான உரையாடல்களும், சில கேள்விகளுக்கு மோடி நகைச்சுவையாகவும், ஊக்கமளிக்கும் பதிலாகவும் அமைந்துள்ளதைப் படிக்கும் போதே நம்மால் உணர இயலும்.

இந்த நிகழ்ச்சிக்கு முதன்மைச் செயலாளரில் ஆரம்பித்து, குறைந்த நிலையில் உள்ளவர் வரை அழைக்கப்பட்டிருந்தார்கள்.

மோடி குஜராத் முதல்வராக இருந்த போதே தமது துறை அதிகாரிகளுடன் அவ்வப்போது உரையாடுவதற்கு இதுபோன்ற கொண்டாட்ட மனநிலையில் அவர்களது கருத்தை ஆழமாகவும் திறந்த மனதுடனும் முன் வைப்பார்கள் என்பதை புரிந்து கொண்டே இது போன்ற கொண்டாட்டங்களை அவ்வப்போது மேற்கொள்வார்.

மோடிக்கு தமது அதிகாரிகள் சர்வ நிச்சயமாக பல யோசனைகளை வைத்திருக்கக் கூடும், அதை அவர்களின் சிந்தனைகளைத் தம்முடன் பகிர்வதன் மூலம் நாட்டுக்குத் தேவையான நலத்திட்டங்களை முன்னெடுக்க உதவும் எனத் தீவிரமாக நம்புகிறார்.

பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அழைத்துள்ளார். ஒரேயொரு சாம்பிள் மட்டும் இப்போது.

ஏழு வயது சிறுமி தனது மூன்று வயது தம்பியைத் தூக்கிக் கொண்டு மலை உச்சிக்கு ஏறிச் சென்றாள். அங்கு ஒரு துறவியைக் கண்ட போது துறவிக்கும், சிறுமிக்கும் நடந்த உரையாடல்.

துறவி: உன் தம்பியைத் தூக்கிக் கொண்டு இவ்வளவு உயரத்திற்குத் சுமந்து கொண்டே வந்தாயே? உனக்கு அயர்ச்சியாக இல்லையா? என்று கேட்டார்.

சிறுமி: அயர்ச்சியாக இல்லை.

துறவி: உண்மையிலேயே அயர்ச்சியாக இல்லையா?

சிறுமி: இல்லை. ஏனெனில் அவன் என் தம்பி.

துறவி: மீண்டும் அதே கேள்வி.

சிறுமி: மீண்டும் அதே பதில்.

இந்தக் கதையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆங்கில புத்தாண்டுக் கொண்டாட்டத்தை தமது அலுவலக அதிகாரிகளோடு கலந்து கொண்ட போது, ஓர் அதிகாரி ஒவ்வொருவருவம் எவ்வாறு ஊக்கத்துடன் பணியாற்ற வேண்டும் என்ற கேள்விக்குப் பதில் அளிக்கையில், பாரத தேசத்து மக்களின் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் பூர்த்தி செய்ய உங்களைத் தான் நம்புகிறார்கள் என நீங்கள் எண்ணும் போது நமது பணியில் ஒருபோதும் நமக்கு அயர்ச்சியும் வருவதில்லை, சுமையாகவும் தோன்றாது என மேற்கோள் காட்டிப் பேசியது அனைவருக்கும் சர்வ நிச்சயமாக அதிகாரிகளுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும் அல்லவா?

இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்குக் காரணமென்ன?

1. வணிகத்தில் அதிக அளவிலாக ஏற்படும் பற்றாக்குறை:

இந்தியாவின் இறக்குமதியின் மதிப்பு ஏற்றுமதியைக் காட்டிலும் அதிகமாவதால் வணிகத்தில் ஏற்படும் பற்றாக்குறையால் ரூபாயின் மதிப்பு விழும்.

2. குறைந்த அளவிலான அன்னிய முதலீடு:

இந்தியா மிகப்பெரிய அளவிற்கு அன்னிய முதலீட்டைக் கவரும் வகையில் இருந்தாலும், முதலீடுகள் குறைவாகவும், வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பண வரவிற்குப் பிறகும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இயலாமல் போவதால் இந்திய பணத்தின் மதிப்பு வீழும்.

3. டாலர் வீழ்ச்சியைப் பயன்படுத்தி நடக்கும் சூதாட்டம்:

இந்திய பணமதிப்பு ஓரளவுக்கு நன்றாக இருக்கும் பட்சத்தில், ஏற்றுமதியாளர்கள் டாலரை வெளிநாட்டிலேயே வைத்திருந்து, இந்திய பணத்தின் மதிப்பு கீழே விழுந்தால் இந்தியாவிற்கு டாலரை ரூபாயாக மாற்றலாம் என பதுக்குவார்கள்.

அந்நிய முதலீட்டாளர்கள் டாலருக்கான தேவையை அதிகரிக்கச் செய்து அதன் மூலம் கையிருப்பு இந்திய பணத்தை அதிக விலைக்குக் கொடுக்கும் சூழ்நிலையை உருவாக்கி டாலரைத் தமது நாட்டிற்கு கொண்டு செல்வதற்காக இந்திய பணத்தின் மதிப்பு வீழும் சூழலை உருவாக்க/அல்லது காத்திருந்து டாலராக மாற்றுவார்கள்.

Demand and Supply க்கு இடையே ஏற்படும் அதிக இடைவெளியும் இந்திய பணத்தின் மதிப்பை வீழ்த்தும். இதை சின்ன உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் கடந்த வருடம் நீங்கள் நூறு ரூபாய்க்கு மூன்று சட்டைகள் வாங்கிய அதே தரத்திற்கு இப்போது நீங்கள் இரண்டு சட்டைகள் மட்டும்தான் வாங்க முடியுமென்றால் அதுவே பணவீக்கம் அதிகரித்தால் ஏற்படக்கூடியது. அதாவது ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தைக் கொண்டு முன்பு வாங்கியதை விட குறைந்த அளவே பொருள் வாங்க இயலும் என்பதே பண வீக்கம் அதிகரித்ததற்க்கான பொருள். அதாவது பொருளின் விலைக்கான கிராக்கியை ஏற்படுத்த வேண்டும். supply குறைந்தால் தானாகவே demand அதிகரிக்கும். இதன் மூலமாகவும் பணத்தின் மதிப்பு வீழும்.

4. குறைந்த அளவிலான நாட்டின் வளர்ச்சியும் அதிக அளவிலான பண வீக்கமும்:

மிகக் குறைந்த அளவிலான நாட்டின் வளர்ச்சியும், அதிக பண வீக்கமும் அந்நிய முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும்.
இந்தியப் பங்கு சந்தையின் வீழ்ச்சியும், ரூபாயின் வீழ்ச்சியும் சேர்ந்து அந்நிய முதலீடு செய்ய எவரும் முன் வர மாட்டார்கள். சில நிறுவனங்கள் பங்கு சந்தை வீழ்ச்சி காரணமாகத் தங்கள் பங்குகளைத் திரும்பப் பெறுவதாலும் அந்நிய முதலீடு திரும்ப எடுக்கப்படுவதாகவே உள்ளது. இத்தகைய காரணங்களால் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதில் தயக்கம் காட்டும். மேலும் பண வீக்கம் அதிகரிக்க உணவுப் பொருட்களின் விலையேற்றமும், ஆயிலின் விலையேற்றமும் மேலும் பண வீக்கத்தை அதிகப்படுத்துவதன் மூலம் இந்திய பணத்தின் மதிப்பு வீழும்.

5. ரூபாயை ஊக வணிகத்தில் ஈடுபடுத்தும் ரிசேர்வ் வங்கி எடுக்கும் முயற்சிகள்:

சில நேரங்களில் ரிசேர்வ் பேங்க் ஆப் இந்தியாவே டாலரை விற்கும் முயற்சியை சந்தையில் செய்ய முயற்சி செய்யும். Currency exchange செய்யும் வணிகர்களும் ஊகம் கொள்பவர்களும் இந்தியாவின் வங்கி பணத்தை பரிமாற்றம்(dollar = rupee) செய்வதில் சிக்கலில் உள்ளது என்பதை உணரும் போது அதில் ஈடுபடாமல் விலகிக் கொள்வார்கள். ஆகையால் பண மதிப்பு வீழும்.

6. நடப்பாண்டு கணக்கில் ஏற்படும் பற்றாக்குறை:
நடப்பாண்டு கணக்கில் ஏற்படும் பற்றாக்குறை , வணிகத்தில் ஏற்படும் பற்றாக்குறை போன்ற விஷயங்களால் மேலும் இந்திய பணத்தின் மதிப்பு வீழும்.

7. மக்கள் தொகையின் அதிகரிப்பு காரணமாக உணவு உற்பத்தியும் அதிகமாக வேண்டும். குறிப்பாக ஏற்றுமதி செய்கிற பொருட்களின் தேவை உள்நாட்டில் அதிகமாவதாலும், உற்பத்தியை அதிகப்படுத்தாமல் இருந்தாலோ , முன்பு ஏற்றுமதி செய்த அளவிற்கு ஒரு புறம் இந்தியாவால் ஏற்றுமதி செய்ய இயலாமல் போவதும், அதேபோல மக்கள் உபயோகிக்கிற பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் அவற்றை அதிக அளவிற்கு முன்பைக் காட்டிலும் இறக்குமதி செய்ய வேண்டி வருவதாலும் ஏற்றுமதி இறக்குமதி விகிதாச்சாரம் அதிகமாதல், Demand-supply போன்ற விஷயங்களை ஈடுகொடுக்க இயலாத காரனங்களால்தான் இந்திய பணத்தின் மதிப்பு வீழ்கிறது.

இன்று இறக்குமதி செய்கிற பொருட்களைத் தவிர்க்க இயலாது என்பது கண்கூடாகத் தெரிகிறது. ஆகையால் இதை உணர்ந்து மத்திய அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். மக்களின் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, ஏற்றுமதி அதிகரிக்க வழி செய்தல், பண வீக்கத்தைக் குறைக்க வழி செய்தல் என அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக செய்ய வேண்டியது அவசியம்.

அவன் :

அவன் நன்றாகப் பேசுவான். அவனால் அரசியல், சமூகம், வரலாறு, சினிமா, விளையாட்டு, கலை, விஞ்ஞானம், எலெக்ட்ரானிக்ஸ் என அனைத்து விஷயங்களைப் பற்றியும் நண்பர்களிடத்து எளிதாக பேச இயலுகிறது. அவன் பேசுகிற விஷயங்களில் பத்தில் ஒரு பங்கிற்குக் கூட அவனுடைய நண்பர்களால் பேச இயலாது. விஷயம் எளிதானது. அவர்களின் அறிவு சினிமா, விளையாட்டு, மொபைல் போனில் விளையாடுதல் மற்றும் சில பொழுது போக்குகளோடு அவர்களின் நாட்கள் கழிந்து விடுகின்றன.

இவனாக சில நேரங்களில் சில விஷயங்களை நண்பர்களோடு விவாதிக்கலாம் என எடுத்தால் கூட எதிர்த் தரப்பில் பேச ஒருவருக்கும் தெரிந்திருக்காது.

இது தெரியாதா எனக் கேட்டால், எனக்கு நேரமே இல்லை… ரொம்ப பிஸி என நண்பர்களும், உனக்கு எப்படி இவ்வளவு நேரம் கிடைக்கிறது என நண்பர்கள் இவனிடமும் மாற்றி மாற்றி கேட்டு விட்டு எதையும் விவாதிக்காமல் அமைதியாகி விடுவார்கள்.

அனைவருக்கும் அறிந்த விஷயங்களிலும் விவாதங்கள் நிகழும். அப்போது இவனது வாதத் திறமையைக் கண்டு , “நீ ஏன் விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது?” என்றோ “ நீ ஏன் மேடையில் பேசக்கூடாது” என்றோ நண்பர்கள் சில நேரங்களில் கேள்வி எழுப்புவதுண்டு.

எனக்கு மேடையில் பேச ரொம்ப கூச்சம். சாதாரணமாக நண்பர்களோடு விவாதிக்கும் போது யதார்த்தமாக விவாதிக்கிறேன். கத்திப் பேசலாம். உணர்ச்சியை உள்ளபடியே வெளிக்காட்ட இயலுகிறது. ஆனால் மேடையில் பேசும்போது கூச்சமும், பயமும் சில நேரங்களில் போலியாகவே உணர்ச்சி வெளிப்பாட்டைக் கொட்டி பேச வேண்டும். அது தன்னால் இயலாது என்றான்.

பேசத் தானே கூச்சமாக, பயமாக இருக்கிறது.. நீ பேசுகிற விஷயத்தை எழுதலாம்தானே! இந்த யோசனை நண்பர்களால் கொடுக்கப்பட்ட பிறகே அவனும் , நாம் எழுதினால்தான் என்ன என்று யோசிக்க ஆரம்பித்தான்.

மனதில் தோன்றும் , அறிந்த , கற்ற விடயங்களை உலகிற்கு வழங்குவது மகத்தான செயல் என்று உணர்ந்தவன் தனக்கென பிளாக் ஒன்று ஆரம்பித்தான். முதல் கட்டுரை சமூகத்திற்கு பலனளிக்கக் கூடிய கட்டுரையாக, மக்களின் கல்வி சார்ந்து எழுதுவோம் என்று முடிவெடுத்து எழுத ஆரம்பித்தான்.

அரசின் கல்விக்கொள்கையையும், அரசே ஆங்கில வழிக் கல்விக்கு உயர் கல்வியில் கொடுக்கும் பிரதிநிதித்துவம் கொடுப்பது தவறா சரியா என எழுத ஆரம்பித்தான். நான்கு வரிகள் வரை எழுத முடிந்தவனுக்கு அதன் பின்னர் அதை எப்படி எழுதுவது என்று தெரியவில்லை.

பேசும் போதும், விவாதிக்கும் போதும் மணிக்கணக்காக விவாதிக்கிற எனக்கு ஏன் நான்கு வரிகளைத் தாண்டி எழுத முடியவில்லை? அவ்வாறானால் விவாதங்களில் அரைத்த மாவைத் தான் அரைக்கிரோமா? எனக்குத் தெரிந்தது இவ்விடயத்தில் இவ்வளவுதானா? பெரும்பாலான விவாதங்களை நண்பர்களோடு செய்த போது தலைப்பிற்கும், விவாதம் போகிற திசைக்கும் எந்த சம்பந்தமுமில்லாததை மெல்ல உணர ஆரம்பித்தான். கட்டுரையை எப்படி படைப்பது? எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்? கட்டுரைக்கு எது தேவை? என்பதில் குழப்பமடைந்தான்.

கட்டுரை பற்றி பல அறிஞர்கள் எழுதியதைப் படிக்க ஆரம்பித்தான். ஒரு சின்ன கட்டுரையைப் படைக்க ஐம்பதுக்கும் அதிகமான கட்டுரைகளையும் அரசின் கொள்கைகளையும் படிக்க வேண்டியிருந்தது. அதன் பிறகே ஒரு வழியாகக் கட்டுரையை எழுத முடிகிறது என்பதை முதல் கட்டுரையை முடித்த போது முழுமையாக உணர்ந்திருந்தான். இவ்வளவு நாள் நமக்குத் தெரிந்தது எல்லாம் ஊடகங்களில் வரும் செய்தியறிவின் அடிப்படை மட்டுந்தான். ஆனால் அறிவு பெற தேடல் அவசியம் என்பதை உணர்ந்தான்.

அனுபவங்கள்,கதைகள் தவிர்த்த இதர கட்டுரைகளுக்கு மெனக்கெடல் கொஞ்சமாவது வேண்டுமென்பதை அறிந்து கொண்டான்.

ஆரம்பத்தில் அவனது கட்டுரைகள் படிக்கப்படுகிறதா என்பதை பிளாக்கில் பார்த்தவனுக்கு அதிர்ச்சி. ஐம்பது பேர் கூட படிக்கவில்லை. ஆனால் அவனுக்குள் எழுதுவது பிடிக்க ஆரம்பித்திருந்தது. நண்பர்களிடம் தான் இதுகுறித்து கட்டுரை எழுதியுள்ளேன். சமூக வலைத்தளங்களில் கூட பகிர்ந்துள்ளேன். படித்தீர்களா என நண்பர்கள் படிக்கிறார்களா? என அறிய விரும்பியவனுக்குக் கிடைத்த பதில் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது.

நீ ரொம்ப பெரிதாக எழுதுகிறாய். நானெல்லாம் மேலும்… Continue Reading, See more… என வந்துவிட்டால் அதைப்படிப்பதில்லை என்ற பதிலே அவனுக்குக் கிடைத்தது.

சொல்ல வர்றதை ரத்தினச் சுருக்கமாக சொன்னால் போதாதா என்றும் கிண்டல்கள் வந்தன. சில கேலியாக, மொக்கையாக, அர்த்தமற்ற விடயங்களை பகடியாக அவன் எழுதும் போது லைக்குகளும், கமெண்டுகளும் வந்து குவிந்தன.

அவன் மக்கள் அறிந்து கொள்ளவேண்டுமென நான்கு நாட்களாக பல இணைப்புகளில் அறிந்ததையும், தனது சொந்தப் பார்வையையும் வைத்து ஆழமாக எழுதிய கட்டுரைகள் அலமாரியில் தூங்கும் புத்தகங்களாக மட்டுமே கிடந்தது. எந்த கட்டுரையெல்லாம் மக்களால் படிக்கப்படவில்லையோ அக்கட்டுரைகள்தான் அவனுக்கு மன நிறைவைத் தந்தவை என்றால் நம்புவீர்களா?

தமது பிளாக்கில் எழுதுவதால்தான் நிறைய பேர் படிப்பதில்லை, இதழ்களில் வந்தால் படிப்பார்களா என எண்ணி சில கட்டுரைகள் பத்திரிக்கைகளில் வந்தன. பின்னர் தொடர்ச்சியாக பல கட்டுரைகளும் கதைகளும் எழுத ஆரம்பித்தான்.

தன்னுடைய கட்டுரை வெளிவந்ததை தானே விளம்பரம் செய்தான். நுகர்வு மனநிலை என்பது இதுதானா? விளம்பர மோகம், புகழைத் தேட அலையும் செயல் இதுதானா என தனக்குள்ளாகவே கேட்டுக் கொண்டான்.

அவ்வாறு எழும் கேள்விகள் சரியென அவனுக்குத் தெரியும். ஆனால் அனைவரும் பயன்பெறுவதற்கு எழுதிய கட்டுரைகள் படிக்க விளம்பரம் செய்வது தவறல்ல என சுய சமாதானம் செய்து கொள்வான்.

மெல்ல மெல்ல சமூகம் சார்ந்த விஷயங்களை கடுமையாக எழுதினான். அவனுக்கும் கணிசமாக வாசகர்கள் கிடைத்தார்கள். வாசகர் எண்ணிக்கை அதிகமானால் அரசியல் அழுத்தங்களும் அதிகமாகும் என்பதை அனுபவிக்கும் துர்பாக்கிய நிலையை அடைந்தான். அரசின் கையாலாத்தனம் என்ற தலைப்பில் ஆளும் அரசை எதிர்த்து கட்டுரைகள் எழுதிய கட்டுரைக்காக இடையில் ஒருவரியில் முதல் அமைச்சரின் கையாலாகத்தனம் என்ற வார்த்தை தனி நபர் தாக்குதல் என காரணம் கண்டுபிடித்து கைதுக்குள்ளானான். ஒரே நாளில் பிரபலமானான்.

இப்படியாக பல கட்டுரைகளை எழுதிக் குவித்தவனுக்கு ஒரு கட்டத்தில் அவன் கருத்து இந்த விஷயத்தில் என்னவென சொல்லவேண்டும் என வாசகர்கள் விரும்பினார்கள். ஆரம்பத்தில் தமது திறமையையும் அனுபவத்தையும் வைத்தே எழுதினான். ஒரு கட்டத்தில் சில விஷயங்களை அவன் எழுதாவிட்டால், இதுபற்றி உங்கள் கருத்தென்ன என்ற அரசியல் அழுத்தங்கள் கூடுதலாகின. ஆகையால் எல்லாவற்றின் மீதும் வெறுப்பு வந்தது. முதலில் எழுதியதை நிறுத்தினான்.

தான் தற்போது இயல்பாய் இல்லையென்பதை உணர்ந்தான். மன அமைதிக்காக எங்கோ சென்றான். ஒருவேளை இப்போது போதிமரத்தடி புத்தனாகி இருக்கக்கூடும்.