கல்வி பற்றிய இந்திய மனநிலை:

கல்வி பற்றிய இந்திய மனநிலை:

நேற்று அலுவலகத்திலிருக்கும் போது கீழே விழுந்திருந்த புத்தகத்தைத் தெரியாமல் மிதித்து விட்டேன். நம்முடைய அனிச்சைச் செயலான புத்தகத்தைத் தொட்டு கும்பிட்டு விட்டு, அழுக்கைத் துடைத்து விட்டு மேலே எடுத்து வைத்தேன். அதைப் பார்த்துக் கொண்டிருந்த வேற்று நாட்டு நண்பர்,
“எதற்காக புத்தகத்தைத் தொட்டு இப்படி கன்னத்தில் போட்டுக் கொண்டாய்” என்றார்.

“அது படிக்கிற புத்தகம்… எங்கள் நாட்டில் புத்தகத்தையோ , ஏதேனும் நோட்டையோ மிதித்து விட்டால், அறிவு பெருகாதோ என்ற எண்ணத்தில் தவறை மன்னிக்க வேண்டுமென கும்பிடுவோம் என விளக்கமளித்தேன்.

“ஏ.. இது காமெடியா இருக்கு.. இதுக்கும் அறிவுக்கும் என்ன இருக்கு என்றான்.”

“உண்மைதான். அதை மிதிப்பதால் என் அறிவு குறையாது. ஆனால் நாங்கள் வளர்க்கப் பட்ட விதமும், எங்கள் நாட்டின் வழக்கமும் அப்படி” என்றேன்.

புருவத்தை லேசாகச் சுருக்கியவனிடம், “எங்கள் நாட்டில் வறுமை காரணமாகக் குழந்தைகளுக்குக் கல்வியைக் கொடுக்க முடியாத தந்தைகளும் உண்டு. கெட்ட பழக்க வழக்கங்களால் கல்வியைக் கொடுக்கும் கடமையில் தவறிய தந்தைகளும் உண்டு. ஆனால், இந்தியாவின் ஒட்டு மொத்த மனட்சாட்சியும் கல்வியைத் தெய்வமாகவே பார்க்கும் குணம் கொண்டது. எப்படியாவது தங்கள் குழந்தைகள் நிறைய படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்ற பேராவல் கொண்ட பெற்றோர்கள் நிறைந்த சமூகம்.. எங்கள் குழந்தைகளுக்கும் புத்தகத்தை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதை சிறு வயதிலேயே சொல்லிக் கொடுப்போம்” என்றேன்.

“அப்படியா… எனக்கு இது ரொம்பவே புதிதாக இருக்கிறது என்றான்.”

“ஆம்.. நாங்கள் கல்விக்கென ஒரு தெய்வத்தை வேண்டி ஒருநாள் அதற்காகவே சிறப்பு பூஜையே பண்ணுவோம் என்றேன். “

அவன் வேற்று மதமும், வேற்று நாட்டைச் சேர்ந்தவன் என்றாலும், என்னிடம் உண்மையிலேயே நான் வேடிக்கைக்காகவே கேட்டேன். ஆனால் உன் செய்கைக்குப் பின்னால் இருக்கும் கல்வியைத் தெய்வமாக வணங்கும் முறை எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. நல்ல விஷயம் என்றான். இந்தியா மிகப் பெரிய கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் கொண்ட நாடு என்பதை அவன் புரிந்து கொண்டான். ஆனால், மதத்தை துவேசிப்பவர்களுக்கும், பகுத்தறிவின் பெயரால் குதர்க்கமாகக் கேட்பவர்களுக்கும் தான் இந்தியாவின் ஒட்டு மொத்த மக்களின் கூட்டு மனட்சாட்சி எதற்காக ஒவ்வொரு விஷயத்தையும் செய்கிறது என்பதைப் புரியாதவர்களாக ஆக்கியுள்ளது.