அவளுக்கு அப்போது இருபத்தி மூன்று வயதிருக்கும். அவளைப் பற்றி நிறைய வர்ணிக்கலாம். அவளை உள்ளத்தில் உள்ளபடி வர்ணிக்கப் போய் பெண்ணியவாதிகள், வக்கிரப் புத்தியின் வெளிப்பாட்டை எழுத்தில் கொண்டு வந்துள்ளார் என்று போராட ஆரம்பித்து விடக்கூடாது என்பதால் அவள் எப்படி இருக்கக்கூடும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிட வேண்டியதுதான்!
அவள் ஒருவனைக் காதலித்தாள். அவன் பக்கத்தூர்க்காரன். இரவோடு இரவாக ஓடிவிட வேண்டியது என்று முடிவெடுத்து விட்டார்கள். ஒரே காம்பவுண்டில் மூன்று தனித்தனி வீடுகள் உண்டு. இரண்டு வீடுகள் இரு சித்தப்பாக்களுடையது. அவர்கள் வெளியூர்களில் வணிகம் காரணமாக சென்று விட, இவர்களே அவர்களின் வீட்டையும் உபயோகித்து வந்தார்கள்.
அன்றிரவும் இரவுச் சாப்பாடு முடிந்து வழக்கம்போல சித்தப்பா வீட்டில் படுக்கப்போவது போல போனவள், மெல்ல சிறிது நேரம் கழித்து பின் வழியாக கொல்லைப்புறம் செல்வது போல வெளியேறி விட்டாள். மணி தோராயமாகப் பத்தரையாகியிருக்கும். அம்மாக்காரி பத்துப்பாத்திரங்களை துலக்கி விட்டு மகளிருக்கும் வீட்டுக்குச் சென்றவளுக்கு அதிர்ச்சி.
“என்னங்க உங்க மகளைக் காணோம்.”
“பின்னால எங்கேயாவது போயிருப்பா… செத்த வெயிட் பண்ணுடி”
கால் மணிநேரம் கடந்தும் வரவில்லை என்றவுடன், மெல்ல யாருக்கும் தெரியாமல் காதோடு காதாக சிலரை அழைத்துக் கொண்டு பஸ் ஸ்டாப்பை நோக்கிச் சென்றார் ஓடிப்போனவளின் தந்தை.
பக்கத்து ஊர்க்காரன் அவள் சாதியின் உட்பிரிவில் வேறொரு சாதி. இங்குக் கூட அவளுடைய சாதியைக் குறிப்பிடலாம். ஆனால் ஊர் மாற்ற வைத்து விட்டால் என்ன செய்வது! ஆகையால் அவள் என்ன சாதியாக இருக்கும் என்பதையும் நீங்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டியதுதான். வேறு வழியில்லை.
எப்போதும் வரக்கூடிய இறுதிப் பேருந்து அன்று வராமல் போனதுதான் அவர்களின் துரதிருஷ்டம். எப்போதெல்லாம் அவள் மாவட்டத்தின் தலைநகரில் ஏதேனும் கலவரங்களோ, சண்டைகளோ ஏற்பட்டால் இரவு ஒன்பது மணிக்கு மேலே செல்லும் வெளியூர்ப் பேருந்துகளை பெரும்பாலும் அரசே நிறுத்தி விடும். அதுவும் சில சிறு ஊர்களுக்குப் போகும் பேருந்தென்றால் கேட்கவே வேண்டாம். அதுவும் இவள் ஊருக்குச் செல்லும் ரூட்டில் உள்ள பஸ்களைத் தான் முதலில் நிறுத்துவார்கள். இப்போதும் அந்தப் பிரச்சினை தான்.
ஓடி வந்தவர்களின் கெட்ட நேரம் அன்றுதான் அப்பகுதியில் கலவரம் வெடித்திருந்தது. பேருந்து வராத காரணத்தால் எங்கு செல்வது என்று முடிவெடுப்பதற்குள்ளாகவே இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தவர்கள், கூப்பிட்டு ஓடிப் போக வந்தவனை ஒழுங்கா ஊர்ப் போய் சேரு என்று அறிவுறுத்தி விட்டு எதுனாலும் பிறகு சொல்றோம்னு சொல்லி அவளைக் கையோடு இழுத்துச் சென்று விட்டார்கள்.
இப்போது கூட அவளின் உண்மைப் பெயரைச் சொல்லி விடலாம்தான். ஆனால் மத அடிப்படைவாதிகளின் மனம் புண்பட்டுவிடக்கூடாது என்பதால் அவளுக்குப் பெயரையும் நீங்களே சூட்டி விடுங்கள்.
இழுத்து வந்தவளை அவளது அம்மா மட்டும் ரெண்டு விடு விட்டாள். ஏங்க எங்க சொந்தக் காரப்பயலுக்குத்தான் கொடுக்கணும்னு சின்னப் பிள்ளையா இருந்தப்பவே முடிவெடுத்திருக்கோம். இந்தக் கழுதையை அவனுக்கும் ரொம்பப் பிடிக்கும். சீக்கிரமா கல்யாணம் செஞ்சு வச்சிற வேண்டியதுதான். நானே அவுங்கக்கிட்டே மிச்சத்தைப் பேசிக்கிறேன்.
அவளுக்கும் யதார்த்தம் புரிய ஆரம்பித்திருந்தது. சொந்தக்காரனைத் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டாள். ஓடிப்போனவள் என்பதெல்லாம் அவளைக் கட்டியவனுக்கும் முக்கியமாகப் படவில்லை. காரணம் அவளின் உடல் அமைப்பும் நிற அழகும் அப்படி!
ஒரே ஒற்றுமை, ஓடிப் போன இருவருக்கும் ஒரே நாளில் திருமணம், சொந்தக்கார உறவினர் ஒருவரோடே! அவளது கணவனும் அவளும் நெடுந்தூரம் சென்று வணிகம் செய்து பிழைக்கும் வகையில் ஏற்பாடாகி இருந்தது. ஆரம்பத்தில் வணிகமும் நன்றாக சென்றது. குடும்ப வாழ்க்கையும் நன்றாகவே சென்றது.
அவனுடைய குடிப்பழக்கம் நாளுக்கு நாள் மெல்ல மெல்லக் கூடியது. இதற்கிடையில் அவர்களுக்கு இரண்டு ஆண்குழந்தைகளும் பிறந்து பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தார்கள்.
இப்போது அவளது மகன்களில் மூத்தவனுக்குப் பத்து வயதும், இளையவனுக்கு ஏழு வயதுமாகி விட்டிருந்தது. குடி கூடியதன் விளைவு கடையை அவன் ஒழுங்காகத் திறப்பதில்லை. பின்னர் அவளே கடையைத் திறக்க ஆரம்பித்தாள். குடியை வைத்து இருவருக்கும் அவ்வப்போது சண்டை வருவதும், அவள் தனது ஊருக்குச் சென்று பின்னர் இருவரும் சமாதானமாவதும் இயல்பாகவே நடந்தது.
இரவானால்தான் அவனால் கண்ட்ரோல் பண்ணமுடிவதில்லை. கடைக்கு வந்து விட்டால் ஒழுங்காக வியாபாரத்தைக் கவனிப்பான். அவள் கடையைத் திறந்த போது கூட பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அதுதான் அவனுக்கு வில்லங்கம் ஆகப்போகிறது என்பதை ஆரம்பத்தில் அவன் உணரவில்லை.
அவளுக்குக் குடும்பம், கணவன் , குழந்தைகள் இருக்கிறது என்பதையெல்லாம் இருபத்து நான்கு வயதுப் பக்கத்துக் கடைக்கார இளைஞனிடம் பார்க்கும்போது தோன்றுவதில்லை. அவனின் சேட்டைகளையும் சில்மிஷங்களையும் ரசிக்கவும் ஆரம்பித்தாள். இடம் கொடுக்கவும் ஆரம்பித்திருந்தாள்.
அவள் முழுமையாகத் தனக்கென ஒரு குடும்பம் இருக்கிறது என்பதை மெல்ல மறக்க ஆரம்பித்தாள். கணவன் காலையில் எழுந்து விடக்கூடாது என்றெண்ணினாள். ஆதலால் அவன் குடிப்பதற்கு மறுப்பேதும் சொல்லவில்லை. இறுதியாக இருபத்து நான்கு வயது இளைஞன் அவளது அழகில் மயங்கினானா? அவள் காமத்தில் கிறங்கினாளா என்ற கேள்விக்கெல்லாம் இடமில்லாமல் அவளது கடந்த கால முடிவான ஓடிப்போவதை இருவரும் தீர்மானித்து விட்டார்கள்.
இது பெரிய ஊர், இரவில் கணவனும் குடித்து விடுவது அவளுக்கு மிகுந்த நிறைவைத் தந்தது. இது ஒன்றும் அவளது கிராமம்போல சிறிய ஊரும் அல்ல என்பதால் இம்முறை அவர்கள் இருவரும் ஓடிப்போவதில் எந்தத் தடங்கலும் ஏற்படவில்லை.
ஓடிப்போனவர்கள் இரு வாரத்திற்கு எந்தக் கவலையுமில்லாமல் வாழ்க்கையை ஓட்டினார்கள். ஆசை தீர்ந்தவுடன் அந்த இளைஞனுக்கு உரைத்தது. நான் ஏன் ஏற்கனேவே திருமணமான குழந்தை பெற்றவளுடன் வாழ வேண்டும். எனக்கென்ன ஊருக்குப் போனால் பெண்ணா கிடைக்காது என்று எண்ணிய மறு நிமிடம் அவன் அவளை விட்டு விலகி ஓடி விட்டான்.
யாருந்தெரியாத ஊரில் அவள் அனாதையாகி விட்டிருந்தாள். அப்படிச் சொல்வதைக் காட்டிலும் அனாதையாக்கிக் கொண்டாள் என்பதே பொருத்தமாக இருக்கும். குடும்பத்தை அனாதையாக்கி வந்தவள் இப்போது அனாதையாகி விட்டாள்.
தனது நிலைக்குப் பெற்றோரும், கணவரும், இறுதியாக தன்னை ஏமாற்றிய காதலனும்தான் காரணம் என்றெழுதி வைத்து விட்டு தன்னை மாய்த்துக் கொண்டாள். அவள் மாய்த்துக் கொண்டதை ஊடகங்கள் மாய்ந்து மாய்ந்து விவாதம் செய்தன.
அவள் ஆரம்பத்திலிருந்து குடும்பத்தைப் பற்றி கவலைப் படாமல் ஓடிப் போனாள், கணவனைப் பிடிக்கவில்லைஎன்றால் நல்லதொரு பெண் முறையாக விவகாரத்து வாங்கிவிட்டே தமது அடுத்தத் துணையை நிலையாகத் தேர்ந்தெடுத்திருப்பாள், முறை தவறி நடந்தவளுக்கும் வக்காலத்து வாங்குவது எப்படி, குற்றம் செய்தவளின் கருத்தை வைத்து விவாதம் செய்வதே வேண்டாத வேலை என்று கேள்வி கேட்டவர்கள் பிற்போக்குவாதிகளாக அடையாளப்படுத்தப்பட்டார்கள்.
ஒரு பெண்ணின் ஆரம்பக் கால விருப்பத்தைத் தடுத்த பெற்றோர்களே முதல் குற்றவாளி, குடிக்கும் கணவனால்தான் அவள் தனக்கான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க முனைந்தாள், பெண்ணின் உடலுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் ஆணாதிக்கமே அவளின் உயிரிழப்பிற்குக் காரணமென கருத்துரைத்தவர்கள், அப்பெண்ணின் உளவியல் மாற்றங்களுக்கான காரணங்களைத் தான் நாம் ஆராய வேண்டும் என்றவர்கள் முற்போக்குவாதிகளாகவும் அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.
இப்போது நீங்கள் பிற்போக்குவாதியா முற்போக்குவாதியா என்பதையும் உங்கள் பார்வைக்கே விட்டுவிட வேண்டியதுதான்.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...