வழக்கிற்குள் ஓர் வழக்கு:

வழக்கிற்குள் ஓர் வழக்கு:

மோகனுக்கும் திவ்யாவிற்கும் நடந்தது என்னவோ காதல் கல்யாணம்தான். திவ்யாவை கல்லூரியில் படிக்கும்போதுதான் சந்தித்தான். திவ்யா அழகு தேவதை. அவள் நடந்து சென்றால் சீனியரில் ஆரம்பித்து ஜூனியர் வரை முன்னழகை மட்டும் ரசித்துவிட்டு பார்வையை எடுப்பதில்லை. பின்னழகு அதற்குமேல். அதற்குமேலென்றால் எப்படியென்று கேட்கக்கூடாது. கற்பனைக்குதிரையால் அவ்வழகை ரசித்துக்கொள்ள வேண்டியதுதான்.

அப்படியான அழகு தேவதையைத் தான் மோகன் கவர்ந்து விட்டான். திவ்யாவிடம் காதலைச் சொன்னவர்கள் கல்லூரியில் மட்டும் ஐந்துபேர் இருக்கும். ஆனால் மோகனைத் தேர்ந்தெடுத்ததற்கு ஒரே காரணம், அவனுடைய அப்ரோச். மோகனுக்கு  அழகுப் பெண்கள் என்றால் அத்தனை பிடிக்கும். ஆனால் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டான். கல்லூரியில் படித்தபோது திவ்யாதான் அழகு. அவளைக் காட்டிலும் வேறு அழகி எவளுமில்லை. மோகன் அவளிடம் வழியவில்லை. படிப்பில்வேறு கெட்டிக்காரன். அவள் அவனது பேச்சில் மயங்கினாள்.

காதலில் உள்ளவர்கள் தமது பாசிட்டிவான எண்ணங்களையே வெளிப்படுத்துவார்கள். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. தன்னை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ள அதைவிட அரிய வாய்ப்பு அவர்களுக்குக் கிடையாது. தன்னிடம் எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது என்பதை காண்பிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். மோகனும் அதைத் தான் செய்தான். நட்பாய் பழகியவர்கள் படிப்பு முடிந்து திருமணமும் செய்து கொண்டார்கள்.

மோகன் நல்லவன்தான். ஏழைகளுக்கு உதவுவது, ரத்ததான முகாம் நடத்துவது, தமது தெருவில் தண்ணீர் பிரச்சினை என்றால் அதைத் தீர்த்து வைப்பது என அனைத்துப் பொதுக் காரியங்களிலும் வலியச் சென்று பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பான். இதில்தான் திவ்யா விழுந்திருந்தாள். இது மோகனின் ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் தனக்குத் திருமணமாகி விட்டது என்பதை மறந்து வேறு ஏதேனும் அழகுப் பெண்கள் கிடைத்தால் அவர்களை வளைக்க வேண்டும் என்று எண்ண ஆரம்பித்து விடுவான். அதுதான் அவனுடைய வீக்னெஸ். அது மட்டுமே! அப்படி அவன் பல பெண்களை வளைத்துள்ளான். அவன் நற்செயல்களை செய்வதால் பெண்களை வீழ்த்துவதும் அவனுக்கு எளிதாகவே இருந்தது.

திவ்யாவிற்கு எந்த வகையிலும் தொல்லை கொடுப்பவன் அல்ல. திவ்யாவையும் நன்றாகவேக் கவனித்துக் கொள்வான். புகை பிடித்தல், மது அருந்துதல் என மற்ற எந்தக் கெட்ட பழக்கமும் அவனிடம் கிடையாது. ஒருநாள் அவன் சட்டையில் குங்குமக்கரை படிந்ததைத் துவைக்கும் போது பார்த்து விட்டாள். மெல்ல அவன் யார் யாரிடம் பேசுகிறான் என்ன செய்கிறான் என்று கவனிக்க ஆரம்பித்தாள். பல பெண்களிடமும் பேசுவதை அவள் அறிந்ததால் சற்று சந்தேகம் கொண்டாள்.

திவ்யா இதுகுறித்து மோகனிடம் நேரடியாகக் கேட்கவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் கேட்டு அதுவே குடும்பத்தில் குழப்பத்திற்குக் காரணமாகிவிடக்கூடும் என அவள் நினைத்திருக்கலாம். ஆனால் அதைக் கண்டுபிடித்து கையும் களவுமாகப் பிடித்துவிட்டே பஞ்சாயத்து பண்ண வேண்டும் என்று நினைத்து விட்டாளோ என்னவோ? அப்போதுதான் அவளுக்கு ஒரு யோசனை பிறந்தது. நாமும் ஏன் டிவியில் காண்பிப்பது போல டிடெக்ட்டிவ் ஏஜென்சி மூலமாகக் கண்டுபிடிக்கக்கூடாது என எண்ணினாள்.

அப்போது விவேக்கும், கேசனும் இது போன்று செயல்படுபவர்களைக் இலவசமாகக் கண்டுபிடித்துத் தருபவர்கள். மெத்தப்படித்து விட்டு மிகப் பெரிய நிறுவனத்தில் இருவரும் பணியாற்றவும் செய்கிறார்கள். மோகனைப் போலவே நற்செயல்கள் பல செய்து வருபவர்கள். அனாதை இல்லம் வைத்தும் நடத்தி வருகிறார்கள். அவர்களின் தொண்டு நிறுவனத்தின் மூலமே மிகப் பிரபலமானார்கள். கூடவே குடும்பம் மற்றும் சிக்கலில் உள்ள காதலர்களின் பிரச்சினையை யாருக்கும் தெரியாமல் முடித்து வைக்கிறார்கள் என்பதை திவ்யா பல நாளிதழ்களிலும் மாத இதழ்களிலும் படித்திருந்தாள்.

ஆதலால் அவர்களையே அணுகுவோம், தமது பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்று எண்ணினாள். விவேக்கும் கேசனும் அவளுக்கு உறுதி அளித்தார்கள். திவ்யாவிற்கு இன்னொரு யோசனையும் தோன்றியது. மோகன் தனது வீட்டிலேயே தான் இல்லாத நேரத்தில் வேறு பெண்ணை எப்படி அணுகுவான்? வெளியேதான் இப்படியா? நான் இல்லையென்றால் தன் வீட்டிலேயே மயங்கி விடுகிறானா என்று எண்ணியவள் தமது வீட்டிலேயே மோகனைப் பற்றி கண்டுபிடியுங்கள் என்று விவேக்கிடம் சொல்லி விட்டாள்.

தான் தன் தோழி வீட்டிற்குப் போய் வருவதாகக் கூறிச் சென்று விட்டாள். இன்று தனது காதலனின் உண்மையான முகத்தைக் கண்டுபிடித்து விடலாம் என்று எண்ணிக்கொண்டாள். மாலை விவேக்கிடம் ஆதாரத்தைக் கலெக்ட் பண்ணி விட வேண்டியதுதான் என்று எண்ணிக்கொண்டாள்.

மாலையில் வீட்டிற்கு வந்தவளுக்குப் பேரதிர்ச்சி. மோகன் தற்கொலை பண்ணி இறந்து கிடந்தான். திவ்யாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. போலீசுக்குக் கூப்பிட்டாள். அனைத்து விவரங்களையும் சொன்னாள். கதறி அழுதாள். மோகனை அனாவாசியமாக சந்தேகப்பட்டு விடக்கூடாது என்பதால்தான் டிடெக்டிவ் ஏஜென்சியை அணுகியதாகச் சொன்னாள். மோகன் தற்கொலை ஏன் செய்து கொண்டான் என்று தமக்குத் தெரியவில்லை என்று அத்தனையும் ஒப்புவித்தாள்.

வழக்கு கோர்ட்டிற்கு வந்தது. முதற்கட்ட விசாரணையில் போலிசால் எதையும் உறுதியாக சொல்ல முடியவில்லை. தங்கள் சந்தேகம் திவ்யா, விவேக் மற்றும் கேசன் மூன்று பேரின் மேலும் உள்ளது. ஆகையால் அவர்களைத் தனித்தனியாக விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்கள்.

விசாரணையை போலீசார் விவேக்கிடமும் கேசனிடமும் ஆரம்பித்தார்கள்.

“மோகன் தற்கொலை பற்றி தெரியுமா?”

“ டிவியில் பார்த்தோம் சார்… “

“ ஏன் தற்கொலை செய்திருப்பான் என்று நினைக்கிறீர்கள்?”

“ தெரியலையே சார்….”

“ அவருடைய மனைவி கேட்டுக் கொண்டதன் பேரில், சேல்ஸ் கேர்ள் போல ஓர் அழகுப் பெண்ணை அவன் வீட்டிற்கு அனுப்பி வைத்தோம். அவன் அவளின் வலையில் விழுந்து விட்டான். அதை அவருடைய மனைவிக்குத் தெரியப்படுத்தவே வீடியோ ஆதாரத்தை டவுன்லோட் செய்து கொண்டிருக்கும் போதே , மோகன் தற்கொலை செய்து கொண்ட செய்தியை டிவியில் பார்த்து அதிர்ந்தோம்… மற்ற படி எங்களுக்கு எதுவும் தெரியாது சார்….”

“ஓகே… வேறு தகவல் தேவைப்பட்டால் கேட்கிறோம்” என்று சொல்லி விட்டு காவல்படை அங்கிருந்து நகர்ந்தது.

போலீசார் திவ்யாவின் வீட்டை முற்றிலுமாகச் சோதனை போட்டார்கள். அப்போதுதான் கண்ணுக்குத் தெரியாமல் ஒரு கேமரா இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். கேமரா பற்றி திவ்யாவிடம் கேள்வி எழுப்பினார்கள். திவ்யாவிற்கு இதற்கு மேலும் உண்மையைச் சொல்லாவிட்டால் நம்முடைய கதை அவ்வளவுதான் என்ற முடிவுக்கு வந்தாள்.

சார்… மோகனின் நடவடிக்கையைக் கண்காணிக்கவே நான்கு நாட்களுக்கு முன்னதாக வீட்டில் கேமராவை செட் செய்தேன். வெளியே செல்லும் போது மோகன் யாரையும் அழைத்து வருகிறானா என்பதையெல்லாம் கேமரா காட்டிக் கொடுத்துவிடும். ஆதாரத்துடன் பஞ்சாயத்தை வைத்துக் கொள்ளலாம் என்று எண்ணியே செய்தேன் என்றாள்.

“அப்புறம் எதுக்குமா தனியார் ஏஜென்சியை அணுகினீர்கள்? “

இல்ல சார்… மோகனின் வெளி நடவடிக்கைகளை யாராவது சீக்கிரமாகக்  கண்டுபிடித்துத் தந்தால் நல்லது என்று எண்ணியே விவேக்கையும் கேசனையும் அணுகியதாகச் சொன்னாள்.

“போலீசார் கேமராவில் என்ன ரெக்கார்ட் ஆகியிருக்கிறது என்பதைப் பார்த்து விட்டு கோர்ட்டில் சமர்ப்பிக்கிறோம் என்றார்கள்.”

வீடியோ பார்த்த கையோடு விவேக்கையும் கேசனையும் காவல்துறை அரெஸ்ட் செய்தது. அரெஸ்ட் செய்தி கேட்டவுடன் நாடு முழுவதும் அதுபற்றியே பேச்சு. சமூகத்தில் எவ்வளவு சேவை செய்தார்கள். அவர்கள் என்ன தவறு செய்திருக்கக் கூடும் என்று பொது மக்களில் பெரும்பாலோர் பேசினார்கள். விவேக்கும் கேசனும் கூட தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்றார்கள்.

வீடியோவில் சேல்ஸ் கேர்ளை அனுப்பி விட்டு ஆதாரத்தைக் கலெக்ட் செய்த கையோடு விவேக்கும் கேசனும் திவ்யாவின் வீட்டிற்குள் வருகிறார்கள். மோகன் உங்கள் மனைவிக்கு இந்த விஷயம் தெரிந்தால் என்ன ஆகும் என்று தெரியுமா என்று மிரட்ட ஆரம்பிக்கிறார்கள். மோகன் பயத்தில் தயவு செய்து திவ்யாவிடம் சொல்லி விடாதீர்கள் என்று கெஞ்சுகிறான்.

அப்படியா… அப்படி என்றால் நீங்கள் எங்களுக்கு இருபது லட்சம் ஏற்பாடு செய்து தாருங்கள்… உங்களை நல்லவர் என்று சொல்லி விடுகிறோம் என்று மிரட்டுகிறார்கள். தம்மிடம் அவ்வளவு பணமில்லை… புரட்டவும் முடியாது எனக் கெஞ்சுகிறான். திவ்யாவிடம் காண்பித்து விடாதீர்கள். பெண்கள் விஷயத்தைத் தவிர நான் எந்தத் துரோகமும் திவ்யாவிற்கு செய்யவில்லை. எனக்கென சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்து இருக்கிறது என்று கதறி அழுகிறான். அதை அவர்கள் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. நாளைக்குள் சொன்னால் அதற்கேற்ப உங்கள் அன்பு காதலியிடம் விஷயத்தின் தன்மை மாற்றிச் சொல்லப்படும் என்று சொல்லி விட்டு வெளியேறுகிறார்கள்.

தன்னால் பணம் புரட்ட முடியாது என்று தெரிந்தவுடன், தன் மனைவியிடம் மாட்டிக் கொள்வோமே… சமூகத்தில் தான் எடுத்த நற்பெயருக்குக் களங்கம் வந்து வாழ்வதை விட இறப்பதே மேல் என்ற முடிவுக்கு வந்தவனாய் தற்கொலை செய்து கொள்கிறான்.

சிகரெட், மது அருந்துதல் போன்ற கெட்ட பழக்கவழக்கங்கள் மனைவிக்குத் தெரியவந்தால் பெரிதாகப் படித்த யுவன்களும் யுவதிகளும் அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் அது மற்ற பெண் ஆண் விஷயத்தில் வீக்னெஸ் என்றால் படித்த ஆணும் பெண்ணும் கையாளத் தெரியாமல் நகரத்தில் தடுமாறுவது எளிதாகத் தெரியும். கிராமத்தில் கூட சில  சமயங்களில் இதுபோன்ற தகாத கெட்ட பழக்க வழக்கம் உள்ள நபர்களைக் காண முடியும். அங்குள்ள படிக்காத பெண் இவ்விஷயத்தை தைரியமாக பெரும்பாலும் எதிர்கொள்கிறாள். அவள் கணவனுக்கு அறிவுறுத்துகிறாள். அவள் மட்டுமல்ல. அது சமூகமாகச் செயல்படுவதால் , தவறிழைக்கும் ஆணுக்குக் கூட்டாக அறிவுறுத்தல் நடக்கிறது. இனி இது மாதிரி செய்யாதே … அதுக்காடா கல்யாணம் பண்ணி வச்சிருக்கு… நீ என்ன நாயா என்ற கேள்விகளுடன் நேரடியாகவே அறிவுறுத்தப்படுகிறது.

படித்தவர்கள் இவ்விஷயத்தில் மட்டும் மானம் போய் விட்டது போல உணர்கிறார்கள். அவ்வாறானால் எம்மாதிரியான கல்வி இங்கு போதிக்கப்படுகிறது? கற்றவர்கள் வாழ்க்கையை ஏன் இவ்வளவு சிக்கலாகப் பார்க்கிறார்கள்? நேரடியாக, பக்குவமாகக் கையாளத் தெரியாமல் இதுபோன்ற முகம் தெரியாத மனிதர்களை வைத்துக் கண்டுபிடிக்க முயன்றதன் விளைவுதான் மோகனின் உயிர். ஒருவேளை திவ்யா இவ்விஷயத்தை இப்படி அணுகி இருந்திருக்கலாம்.

“மோகன்.. உண்மையிலேயே நீங்கள் நல்லவர். உங்களைத் திருமணம் செய்ததற்கு நான் கொடுத்து வைத்திருக்கிறேன். ஆனால் நீங்கள் பெண்கள் விஷயத்தில் மட்டும் வீக் என்பதாகக் கேள்விபடுகிறேன். எனக்கு நீங்கள் துரோகம் செய்ய மாட்டீர்கள் என்று முழுமையாக நம்புகிறேன்.. ஒருவேளை நீங்கள் இது போன்ற கெட்ட பழக்கமுடையவராக இருந்தால் அதை மட்டும் திருத்திக் கொள்ளுங்கள். நம் வாழ்வே அமைதியாகச் செல்லும். இதையும் மீறி நீங்கள் மற்ற பெண்களுடன் சகவாசம் என்றால் உங்களை விட்டுப் பிரிய வேண்டி வரும் என்று சொல்லி இருந்தால் கூட மோகன் திருந்தி இருக்கலாம். அவனை அவளுக்கு மிகவும் பிடித்தும், இன்று இந்த விஷயத்தைக் கையாளத் தெரியாமல் ஒரு உயிர் பறிபோகச் செய்ததில் அவளின் பங்கும் அறியாமல் விளைந்திருக்கிறது.

“ கோர்ட்டில் வீடியோ ஆதாரத்துடன் போலீசார் சமர்பிக்கிறார்கள்.”

நீதிபதி “ஏன் இப்படி செய்தீர்கள்?” என்று கேசனிடமும் விவேக்கிடமும்  கேட்கிறார்.

அப்போது அதிர்ச்சியான பல தகவல்களை விவேக்கும் கேசனும் தெரிவிக்கிறார்கள். டிவியில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் காண்பிப்பதைப் பார்த்தே எங்களுக்கும் இதுமாதிரி செய்ய வேண்டும். அதன் மூலம் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற யோசனை வந்தது. ஆனால் யாருக்கும் தெரிய வந்தால் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதால் ரகசியமாக ஆரம்பத்தில் நாங்களே பல ஆண்களுக்கு பெண்களை அனுப்பி அவர்கள் வீழ்கிறார்களா? என்று பார்ப்போம். சில நேரங்களில் பணக்கார வீட்டுப் பெண்களுக்கும் இம்மாதிரி அழகான ஆண்களை அனுப்பி மாட்டிக் கொண்டால் பேரம் பேசுவோம்.

அவ்வாறு வலையில் விழுந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். இப்படி செய்தால் மாட்டிக்கொண்டால் ரொம்ப அசிங்கமாகி விடும், நமக்கென சொசைட்டியில் முதலில் நல்ல பெயர் வாங்குமளவுக்கு ஏதாவது செய்ய வேண்டும். அதற்கு சிறந்த வழி சமூக சேவை என்பதே. ஆகவே நாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் உதவிகளும் கொஞ்சம் செய்தோம்.

உதவி செய்ய வேண்டும் என்ற யோசனை எப்படி வந்தது? ஏன் வந்தது  என்று நீதிபதி குறுக்குக் கேள்வி கேட்டார். சமூக சேவை செய்பவர்கள் புனிதமானவர்கள் என்ற பிம்பம் இங்கு அருமையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வி சேவை என்ற பெயரில் ஆரம்பத்தில் சமூக சேவையுடன் வந்து பின்னர் பணத்திற்காக இயங்கும் பல அமைப்புகள் தேசத்திற்கு எதிராகக் கூட செயல்படுகிறது என்பதைப் பற்றியெல்லாம் அறிந்தோம். வெளிநாட்டுக் கைக்கூலிகள் எல்லாம் சமூக சேவகர்களாக வலம் வருகிறார்கள். ஆகவே சமூக சேவை செய்தால் நம்மீது சந்தேகம் ஏற்படாது , மேலும் இதுபோன்ற பிரச்சினைகள் வந்தால் மக்கள் ஆதரவு நமக்கு எளிதாகக் கிட்டும் என்ற எண்ணத்தில்தான் அனாதை இல்லம், கல்வி சேவை போன்றவற்றை நடத்தவும் ஒரு தொகையைச் செலவு செய்தோம்.

துரதிருஷ்டவசமாக திவ்யா கேமரா செட் பண்ணுகிற அளவிற்குப் புத்திசாலியாக இருக்கமாட்டார் என்று எண்ணியே அவர் வீட்டிற்கே ஆள் அனுப்ப ஒத்துக் கொண்டோம். விதி, இன்று மாட்டிக்கொண்டோம்.

விசாரணையை முடித்து வைத்த நீதிபதி விவேக்கிற்கும் கேசனுக்கும் பத்தாண்டுகள் சிறைத் தண்டனை வழங்கினார். திவ்யா போன்ற படித்த பெண்கள் கெட்ட பழக்கமுள்ள ஒருவரைத் திருத்த இதுபோன்ற அந்நியர்களை நம்பி இறங்குவதற்குப் பதிலாக தாமே செய்யலாம் அல்லது உறவினர்களிடம் சொல்லி திருத்த முயற்சிக்கலாம் என்று அறிவுறுத்தினார். திவ்யா இப்போது மோகனின் நினைவுகளோடு வாழ ஆரம்பித்தாள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s