பொருளாதாரத்தில் திருப்பம் தரவல்ல திட்டம் – முத்ரா வங்கி

பிரதமரின் பெயரில் பல திட்டங்களை தற்போதைய மத்திய அரசு அறிவித்து வருகிறது. அவற்றில் குறுந்தொழில் நிறுவனங்களின் வணிகம் மிகச் சிறப்பாக நடந்தால்தான் இந்தியப் பொருளாதாரத்தை இன்னும் வலுப்படுத்த இயலும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் கொண்டு வரப்படுகின்ற திட்டமே முத்ரா வங்கி திட்டமாகும். இந்தத் திட்டம் உறுதியாக பொருளாதாரத்தில் மிகப்பெரிய திருப்பத்தைத் தரும் என பொருளாதார வல்லுனர்கள் பலரும் கருத்துரைத்துள்ளார்கள்.
முத்ரா வங்கி திட்டத்தைப் புரிந்து கொள்ளும் முன்பாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP) (Small , Micro Enterprise or Unincorporate) நிறுவனங்களே 50% க்குப் பங்களிப்பு செய்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு 12 to 14% மும், விவசாயம் மற்றும் அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தலா 18% மும் உள்ளது.

12 % to 14% இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் 40% அளவிற்குக் கடனுதவி பெறுகின்றன. ஆனால் மற்ற நிறுவனங்களோ குறைந்த அளவிற்கே கடனுதவியை வங்கியின் மூலம் பெறுகின்றன. பெரும்பாலும் வட்டி மூலமே தமது வணிகத்தை மேற்கொள்ள நடவைக்கைகளை எடுத்து வருகின்றன.

முத்ரா வங்கி திட்டம் ஏன் கொண்டுவரப்படுகிறது?
==========================================

1. கடன் நிதியுதவியை வங்கியின் மூலம் குறுந்தொழில் செய்பவர்களுக்கு வழங்குதல். அவர்களை முறையாகப் பதிவு செய்ய வைத்தல்.

2. தொழில் வளர்ச்சி பெருகுவதன் மூலம் அதிக வேலைவாய்ப்பை உருவாக்கல்.

3. நிதி அமைச்சகத்தின் தகவலின் படி 5.77 கோடி(57.7 million) சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள் உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. Economic Access 2014 ன் கணக்கின் படி, குறுந் தொழில் செய்பவர்களின் Gross Fixed Asset11.5 இலட்சம் கோடி ஆகும். கார்ப்பரேட் நிறுவனங்களை விட இவை மிகவும் திறம் வாய்ந்தவை. (Efficient one)

RBI யின் கணக்கின் படி, மைக்ரோ தொழில் செய்யும் நிறுவனங்கள், அவர்களின் Gross Fixed Asset ல் 55% (6.26 Laksh Crore) அதிக பங்கீட்டைத் தருவதாகவும், இந்தியக் கார்ப்பரேட் நிறுவனங்கள் வெறும் 36% தான் பங்கீடு தருகிறது எனவும் தெரிவிக்கிறது. இதுவரையிலும் வெறும் 4% அளவிற்கே வங்கிக் கடனாக மைக்ரோ தொழில் செய்பவர்கள் பெற்றுள்ளார்கள். அதாவது 11.5 Laksh Crore ல் வெறும் 46,000 கோடிதான் கடனாகப் பெற்றுள்ளார்கள். ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் 50 லட்சம் கோடியைக் கடனாக FDI , FII and வங்கிகள் மூலமாக 1991 லிருந்து 2011 வரைக்குள்ளான காலத்தில் பெற்றுள்ளார்கள். ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் கடந்த இருபது ஆண்டுகளில் (1991-2011) 29 மில்லியன் வேலை வாய்ப்புகளே பெருகியுள்ளது. அதாவது ஆண்டுக்குத் தோராயமாக ஒரு லட்சம் மக்களுக்கே வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. Economic Access 2014 ன் கணக்கின்படி, சிறு மற்றும் குறுந் தொழில் நிறுவனங்கள் (பெரும்பாலும் பதிவு செய்யப்படாத இந்த நிறுவனங்கள்) மூலம் 128 மில்லியன் வேலை வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கிறது. இதில் கட்டுமானப்பணியில் வேலை வாய்ப்பு பெற்றவர்களைக் கணக்கில்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கிறது.
இந்தியாவின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவது கார்ப்பரேட்டுகள் மட்டுமல்ல.. கார்ப்பரேட் அல்லாத கம்பெனிகள் என்பதைப் புரிந்துகொண்ட மத்திய அரசு செயல்படுத்த முன் வந்துள்ள திட்டமே முத்ரா வங்கி திட்டமாகும்.
கார்ப்பரேட் அல்லாத இந்த நிறுவனங்களின் பங்களிப்பு உற்பத்தித் துறையிலும் சேவைத் துறையிலும் அளப்பரியது. குறிப்பாக சேவைத் துறையில். கட்டுமானம், வணிகம், போக்குவரத்து, லாட்ஜ், உணவகங்கள், மளிகைக்கடைகள், ரியல் எஸ்டேட், சொந்தமாகத் தாமாகவே செய்துவரும் எலெக்ட்ரிசியன், ப்ளம்பர், மெக்கானிக், வக்கீல், ஆடிட்டர்கள் என சொந்தத் தொழில் செய்துவருபவர்களின் பங்களிப்பு 70 க்கும் அதிகமாக சேவைத் துறையில் உள்ளது.
நடைமுறை வாழ்க்கையில் சிறு மற்றும் குறுந்தொழில் செய்பவர்களைப் பாருங்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் காலையில் 100 ரூபாயைக் கடனாக வாங்கி மாலையில் 110ரூபாய் கொடுப்பவர்கள் உண்டு. இது உதாரணம் மட்டுமே. 10000 ரூபாய் கடன் வாங்குபவரை எடுத்துப்பார்த்தால் அவரின் வருட வட்டி விகிதம் குறைந்த பட்சம் 20 % to 30% க்கும் அதிகமாக இருக்கும். நம்மூரில் கந்து வட்டி முறையில் அரசிற்கும் பலனில்லாமல், சொந்தத் தொழில் செய்பவர்களும் முன்னேற முடியாமல் கறுப்புப் பணம் சம்பாதிப்பவர்களின் கைகளில் பணம் சென்று சேர்கிறது. கந்து வட்டி, சீட்டு உடன்படிக்கை, பத்திர ஒப்பந்தம் போட்டு கடன் கொடுத்தல் என பல வழிகளில் கடன் பெறுவோர் அதிகமிருப்பதை அன்றாடம் நாம் காண இயலும்.
இவர்களைக் கணக்கில்கொண்டே முத்ரா வங்கியின் மூலம் அவர்கள் பயன்பெறும் வகையில் குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் 5.77 கோடி சிறு தொழில் செய்பவர்கள் பலன் பெறுவார்கள்.
வங்கயில் இதன் ஆரம்ப முதலீடாக 20,000 கோடியையும், கடன் உத்தரவாதத்திற்கு 3000 கோடியும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடன் பெறுபவர்களை மூன்று வகையாகப் பிரித்துள்ளார்கள்.

சிசு : முதன் முதலாக தொழில் செய்யும் சிறு தொழில் செய்பவர்களுக்குக் கடனாக ரூபாய் 50,000 வழங்கப்படும்.

கிஷோர்: இந்த நிலையை அடைந்தவர்களுக்கு Rs 50,000 to Rs 5,00,000 வரையிலும் கடன் வழங்கப்படும்.

தருண்: இந்நிலையை அடைந்தவர்களுக்கு Rs 5,00,000 to Rs 10,00,000 வரை கடனுதவி கிடைக்கும்.
முத்ரா வங்கி இந்தப் பணம் கொடுத்தல், திரும்பப் பெறல், எப்படி பெறுவது என்பதற்கான சட்ட திட்டங்களை வகுத்து அதன் அடிப்படையில் செயல்படும் எனவும், இன்னும் ஒரு வருடத்திற்குள்ளாக இவற்றை முழுமையாக நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் சிபியின் துணையோடு செயல்படும் என்றும், பின்னர் தனி வங்கியாக செயல்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
குறுந் தொழில் செய்பவர்களில் 62% த்தினர் SC, ST and OBC வகையைச் சேர்ந்தவர்கள் என்றும் அரசே தெரிவித்துள்ளது. இவர்கள் பலன் பெறும் வகையில் கொண்டுவரப்பட்ட திட்டமே முத்ரா வங்கி திட்டமாகும். “Funding the unfunded companies “ என்பதை அருண் ஜெட்லி பட்ஜெட் உரையில் குறிப்பிடுகிறார். அதில் சிறு குறுந் தொழில் நிறுவனங்களுக்கு முறையாக பதிவு செய்ய வைத்தல் மற்றும் வங்கி மூலமாகக் கடன் உதவி செய்வதன் மூலம் அதிக வேலை வாய்ப்புகளையும், அதிகளவிற்கு உள் நாட்டு உற்பத்தியையும் பெருக்க இயலும் என்று அறிவித்தார்.
முத்ரா வங்கியின் முதலீட்டை இன்னும் மத்திய அரசு அதிகப்படுத்த வேண்டும். இதை முதலில் வெற்றிகரமாக அமல்படுத்தினாலே இந்தியா தமது பொருளாதாரத்தில் மிகப் பெரிய திருப்பத்துடன் கூடிய பெரிய வளர்ச்சியைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை. அதை நிச்சயமாக மோடி செய்வார் என்றே தோன்றுகிறது. 2016 ஏப்ரலுக்குள் முழுமையாக நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்த பட்ஜெட்டில் இதன் முழு வடிவம் பற்றிய தெளிவும் நமக்குக் கிடைக்கும்.

தமிழ்நாடு அங்காடி, தொழிலகம் & உணவகங்களுக்கான சட்டம் தேவையா?

TAMILNADU SHOPS AND ESTABLISHMENT ACT:
=====================================

மோடியிடம் சொல்லி முதலில் இந்தச் சட்டத்தை மாற்ற வேண்டும்.

தமிழக அரசின் Shops and establishment சட்டத்தைப் படித்தால் சிரிப்பு சிரிப்பாக வருகிறது. அந்தச் சட்டத்தில் என்ன சொல்லியுள்ளது என்பது பற்றிய சில முக்கியமான ரூல்ஸ் மட்டும் சொல்கிறேன். இந்த மாதிரி சட்டம் தேவையா என்பதே எனது கேள்வி?

1. கடைகளை வாரத்தில் எந்த நாளும் திறக்கலாம். உதாரணமாக உணவகங்களை எடுத்துக்கொள்வோம். அங்கு பணிபுரிபவர் அதிக பட்சமாக NT = 48HRS/week & Including OT = 54/week. தான் பணி செய்யச் சொல்ல வேண்டும். இது எந்த ஊர்ல நடக்குதுன்னு சொல்லுங்க.

2. நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை one Hour break கொடுக்க வேண்டும். இல்லையெனில் அது சட்டமீறல் என்கிறது சட்டம்.

3. வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். (இது ஓரளவுக்கு உண்டு)

4. பெயிண்ட் அடிச்சுருக்கனும். தீ பிடிக்காமல் இருக்கவும், தீப்பிடித்தால் அதை அணைக்கக் கூடிய உபகரணங்களை வைத்திருக்க வேண்டும்.

5. ventilation proper ஆக இருக்கனும். அதாங்க காற்றோட்டத்துடன் இருக்கனும்.அரசு இன்ஸ்பெக்டர் வந்து விசிட் பண்ணும் போது இவையெல்லாம் இல்லையெனில், இன்ஸ்பெக்டர் சொல்வதே சரி எனக் கொள்ளப்படும். அபராதமும் விதிக்கப்படும்.

6. கடையைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மழை பெய்தால் ஒழுகக்கூடாது. எலி வரக்கூடாது. மீறினால் அபராதம்.

7. வருஷத்துக்கு 12 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை , மேலும் 12 நாட்களுக்கு sick லீவ் எடுத்துக்கலாம். முதலாளி முறையாகச் சம்பளம் கொடுக்க வேண்டும்.

8. குழந்தைகள் (14 வயதுக்குக் குறைந்தவர்களை) பணியில் அமர்த்தக்கூடாது.

9. பெண்களை காலை ஆறு மணியிலிருந்து மாலை ஏழு மணி வரை மட்டுமே இருக்கும் வகையில் (8 மணி நேரம் தான், எந்த நேரத்தில் கடைகளோ, ஹோட்டலோ, எதுவாக இருந்தாலும்) தான் வேலை வாங்க வேண்டும்.

10. பெனால்டி எவற்றிற்கு உண்டு என அடுக்கியுள்ளார்கள். பெரும்பாலும் மேலே சொல்லப்பட்ட விஷயங்களை முதல் தடவை சரியாக இல்லையெனில் 25 Rs ம், இரண்டாவது முறை கண்காணிப்பில் செய்யாமல் இருந்தால் Max of rs 250 வரையிலும் அபராதம் விதிக்கலாம். இது தெரியாமல் நம்மிடம் 500 Rs முதல் 1000Rs வரை லஞ்சமாகப் பெறுவார்கள்.

11. தொழிலாளிக்கு மீதமுள்ள சம்பளத்தைக் கொடுக்காமலோ, ஒரு மாத முன்னறிவிப்புச் செய்யாமலோ வேலையை விட்டுத் தூக்கினால் சிறைத் தண்டனை உண்டு.

சட்டம் எழுதியிருப்பதெல்லாம் ஓகே. ஆனால் நடைமுறையில் இவைதான் ஊழலுக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக point no 4 to 9 , அதிகாரிகள் விசிட் பண்ணிட்டு லஞ்சப் பணம் வாங்கிட்டுப் போக மட்டுந்தான் உதவுது. என்னைக் கேட்டால் இந்த மாதிரி இந்தியாவிற்கு நடைமுறையில் பலனளிக்காத சட்டங்களைத் தூக்கி விட்டாலே லஞ்சம் வாங்க முடியாது. அதற்குப் பதிலாக Shops and establishment சட்டத்தை மிக எளிமையாக்கி விடலாம்.

என்னுடைய யோசனை என்னவென்றால் ஒன்று முறையாக கடையைப் பதிவு செய்வது, அதற்கு ஆண்டுதோறும் வரி செலுத்துவது, பணியாட்களுக்கு கையெழுத்துடன் கூடிய சம்பளக் கவர் வழங்குதல், தவறினால் அந்தத் தொழிலாளி வழக்குப் போட்டு வெற்றி பெறும் பட்சத்தில் அதற்கான செலவையும் முதலாளி ஏற்றுக் கொள்ளல், கடைகளுக்கு இன்சுரன்ஸ் செய்து விடுதல், அதற்குக் கட்டாயமாக அரசுக்கு ஆண்டுதோறும் வரியோடு ஒரு தொகையைச் செலுத்தச் செய்தல் (தீ விபத்து போன்றவையால் பாதிக்கப்பட்டால்) போன்றவையே போதுமானது. அதிகாரிகள் பதிவு செய்யும் போது, அதை வழங்கும் போது மட்டும் கடையில் மேற்கூறிய விஷயங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா எனப் பார்த்தால் போதும். எப்ப வேணும்னாலும் போகலாம் என்று இருப்பதால்தான் கை அரிக்கும் போது காசைப் பிடுங்க வருவார்கள். சில யோசனைகள் எனக்குத் தோன்றாமல் போயிருக்கலாம்.

இன்ஸ்பெக்டர் வரும்போதெல்லாம் மேற்பார்வை என்ற பெயரில் லஞ்சம் வாங்க மட்டுமே இச்சட்டம் நடைமுறையில் உதவுகிறது. இதன் மூலமாக தொழிலாளி அடைந்த பலன் என்ன? வாடிக்கையாளர்கள் கடை சுத்தம், காற்றோட்டம் என அடைந்த பலன்கள் இவர்கள் இன்ஸ்பெக்ட் பண்ணியதால் கிடைத்தது என ஒன்று கூட கிடையாது. முதலாளிகள் தங்கள் கடைக்கு வாடிக்கையாளர்கள் வந்தால் , வர வேண்டுமானால் என்ன வசதியை தற்காலத்தில் செய்து கொடுத்தால் வருவார்கள் என்று தெரியும். அதை வைத்து அவர்களே அதை நிறைவேற்றிக் கொள்வார்கள். ஆகவே முதலில் இதுபோன்ற சட்டங்களை அரசு அதிகாரிகள் மேற்பார்வை என்ற பெயரில் லஞ்சம் வாங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சட்டமாகக் கொண்டு வர வேண்டும். மோடி தேவையற்ற சட்டங்கள் நீக்கப்படும் என சொல்லியுள்ளார். முதலில் இதுபோன்ற கதைக்குதவாத சட்டங்களைப் பிடுங்கி எளிதாகக் கொண்டு வாங்க. தேசம் போற்றும்.

http://nics.in/wp-content/uploads/2014/03/TN-Shop-act.pdf
இதைப் பற்றி அறிய விரும்புபவர்கள் மேலுள்ள லிங்கில் சென்று படித்துப் பாருங்கள். முக்கியமான விஷயங்கள் மட்டுமே சொல்லியுள்ளேன்.

ஐரோப்பா VS இந்தியா எதிர்காலப் பொருளாதாரம் :

பொருளாதாரத்துக்கும் நிதி திட்டமிடலுக்கும் சேமிப்பும், முதலீடும் இரு கண்கள். அப்படி வைத்துப் பார்க்கும் போது இங்கிலாந்து மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் Household Savings எடுத்துப்பார்த்தால் படு மோசம். இதுக்கு என்ன காரணம்னு எல்லாம் ரொம்ப மெனக்கெட வேண்டியதில்லை. குடும்ப அமைப்புகள் வலுவில்லாத பயலுகளுக்கு சேமிப்புப் பழக்கம் எப்படி இருக்கும்? கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்வதற்கு புதுசா கண்டு பிடிச்ச பெயர்தான் Single Parenting சிஸ்டம். லெஸ்பியன்கள் கல்யாணம் பண்ணிக்கலாம், gay கல்யாணம் பண்ணிக்கலாம் என்று வேறு இதில் வரவேற்பார்களாம். அமெரிக்காவில் அப்பாவை எதிர்த்து மகன் போட்ட வழக்கில் , இருவருக்கும் டைவர்ஸ் கொடுத்து எகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

பற்றாக்குறைக்கு குடும்பத்தையே Nationalise ஆக்கிட்டு பென்சன் திட்டத்தையும் முழுவதுமாக அரசே மேற்கொள்வதால் பல சிக்கலை இன்று ஐரோப்பிய நாடுகள் எதிர் கொண்டுள்ளது. டென்மார்க் Household savings விஷயத்தில் -.2 ஆகவும், நம்மை ஆண்ட பரம்பரை இங்கிலாந்து 3% க்கும் குறைவாகவே savings உள்ளது. இந்தியாவின் குடும்ப சேமிப்பு சராசரியாக எடுத்துக்கொண்டால் கூட 25% இருக்கிறது.

Demography Changes விஷயத்திலும், ஐரோப்பிய நாடுகளுக்குச் சிக்கல்தான். அங்குள்ளவர்களின் சராசரி ஆயுள் 82 to 85 ஆக உயர்ந்துள்ளது. அரசு அதனால் ஓய்வு வயதை 65 ஆக மாற்றி உள்ளது. ஆனால் வயதானவர்கள் ஓய்வுக் காலத்தில் கொடுக்கிற சம்பளத்தை(பென்சன்) எடுத்துக்கிட்டு வேற நாடுகளுக்கு சுற்றுலா கிளம்பி விடுகிறார்கள். இன்னொரு விஷயம் மக்களின் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே செல்கிறது. அரசுகள் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளச் சொல்லி முக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதுக்கு முதலில் குடும்பமாக வாழ வேண்டுமே. இதனால் அங்குள்ள அரசுக்கு வரவைக் காட்டிலும் செலவு அதிகமாகிறது.

இது எதையும் புரிந்து கொள்ளாமல் , இந்தியாவை முதலில் எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்று புரிந்து கொள்ளாமல் இங்கே ஒரு குரூப் நீயா நானாவில் வந்து உட்கார்ந்து கொண்டு, எத்தனை நாளைக்குத் தான் குடும்பங்களைக் கட்டிக்கிட்டு அழுவீங்க. பிடிக்கலன்னா வெட்டி விடுங்கன்னு சொல்லிட்டுத் திரியுறாங்க. இந்தியாவை இப்படி புரிந்து கொண்டவர்கள்தான் இங்கு முற்போக்குவாதிகள்.

இறுதியாக ஒரு செய்தி, கடந்த 2000 ஆண்டு பொருளாதார வரலாற்றை எடுத்துப் பார்த்தால் , ஒவ்வொரு நாட்டின் GDPயையும் வைத்துப் பார்த்தால் இந்தியா தான் 14 ஆம் நூற்றாண்டு வரை முதலிடத்தில் இருந்துள்ளது. 15 ஆம் நூற்றாண்டிலிருந்து சீனாவும் இந்தியாவும் மாறி மாறி முதல் இரு இடங்களில் இருந்துள்ளது. 1750 வரையிலான காலக்கட்டத்தில் வெறும் 0.2 சதவீதம் இருந்த UK வும், 1.7 % இருந்த அமெரிக்காவும் பல நாடுகளை காலனி ஆதிக்கத்தில் கொண்டு வந்த பிறகே பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்றுள்ளார்கள். இந்தியா சுதந்திரம் அடையும் போது உலக GDP யில் 1.6 % மே நமது பங்கு ஆகும். அதாவது மற்ற நாடுகளைச் சுரண்டி தங்கள் பொருளாதாரத்தை வளர்த்துக் கொண்டவர்கள் இன்று மீண்டும் திணறி வருகிறார்கள். 200 ஆண்டுகளில் நம்மை முழுவதுமாகச் சுரண்டி வளர்ந்தவர்கள் இன்று சுரண்ட வழியில்லாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவைப் பொறுத்தவரையில் Demography மற்றும் தொழில் நுட்பத்தை வைத்து தாக்குப்பிடிப்பார்கள். ஆனால் ஐரோப்பிய நாடுகளின் கதிதான் அதோகதியாக மாறுகிறது.

இந்த பொருளாதார மந்த நிலை பற்றி கேள்வி எழுப்பிய போது ஸ்பெயின் அமைச்சர் சொன்ன தகவல் தான் பெரிய காமெடி. எங்கள் பொருளாதாரம் என்ன, உகண்டா போல மோசமானதா? பெல்ஜியம் நாங்கள் கிரீஸ் அல்ல என்று சொல்வதிலிருந்து என்ன தெரிகிறது. கப்பல் கவிழப் போகுது. அதற்கு முன்பாக ஒருவரையொருவர் ஒப்பிட்டுக் கொள்கிறார்கள்.

எழுதி வச்சுக்கோங்க, இன்னும் இருபது to முப்பது வருடத்திற்குள்ளாக நம்மை ஆண்ட பரம்பரையின் பொருளாதாரம் இந்தியப் பொருளாதாரத்தை ஒப்பிடும் போது அதள பாதாளத்தில் கிடக்கும் என்பது மட்டும் உறுதி. இதுபற்றி விளக்கமாக இன்னும் எழுத வேண்டும்.

தாய்லாந்திற்கு தெரிகிற கலாச்சார அடையாளம் இந்தியாவிற்குத் தெரியாமல் போனதேன்?

thailand manthan photo 4

ஒவ்வொரு நாட்டின் கலாச்சார அடையாளங்கள் (Cultural Identity) என்பது வேறு. வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுவதும், கடவுளை வழிபடும் (Worshiping God) தன்மையும் வேறாக இருக்கலாம். ஆனால் அந்த நாடு தன்னை எவ்வாறு அடையாளப்படுத்துகிறது என்பதில்தான் கலாச்சாரப் பெருமை அடங்கியுள்ளது.

இந்தோனேசியா பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். இப்போது இன்னொரு உதாரணம் தாய்லாந்து. தாய்லாந்து நாட்டில் பௌத்த மதத்தைப் பின்பற்றுகிற மக்கள் 94 %. முஸ்லிம் மதத்தைப் பின்பற்றுகிற மக்கள் 5%. இந்து மதம் 0.09%. ( கவனியுங்கள் 0.1 % க்கும் குறைவு). ஆனால் தாய்லாந்திற்குத் தமது கலாச்சார அடையாளம் எது என்பதைப் பெருமையாக சொல்வதில் எந்தத் தயக்கமுமில்லை. அதற்கு அடையாளமாக தாய்லாந்தின் பன்னாட்டு விமான நிலையத்திற்கு அரசு சூட்டியுள்ள பெயர் “சுவர்ண பூமி ” ( சோழர்கள் ஆண்ட பூமி), தமிழில் இதன் பொருள் தங்க பூமி. விமான நிலையத்தில் ஆமையின் மீது வீற்று இருக்கும் “சமுத்ரா மந்தன் (விஷ்ணு)” சிலையையும் சுற்றிலும் தேவர்கள் சிலையையும் அமைக்கவே பல ஆண்டுகள் ஆகியுள்ளது. தாய்லாந்தின் தேசிய அடையாளமாக இன்று வரையிலும் “கருடா” உள்ளது.

இந்தியாவில்தான் மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்தியாவிற்குப் போலி அடையாளங்களுடன் வெளிவருவதற்குப் பகிரதப்பிரயத்தனங்களை முற்போக்கு, போலி செக்குலரிய வாதிகள் மூச்சிரைக்க பதைக்கிறார்கள். இவர்களைக் கண்டு அஞ்சாது இந்திய அரசு தமது கலாச்சார அடையாளங்களை மீட்டெடுக்கவும் முன்னெடுத்தும் செல்வதில் எந்தத் தயக்கமும் காட்டக்கூடாது.

ஆகையால்தான் இந்தியாவைக் கலாச்சாரத்தில் இந்து என்றும், வழிபாட்டில் மற்ற மதங்களைப் பின்பற்றுகிறார்கள் என்றும் இந்துத்துவா சொல்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கலாச்சராத்தை விட்டுத் தராத இன்னும் சில நாடுகள் உள்ளன. அவற்றைப் பற்றி பின்னொரு நாளில் பேசுவோம்.thailand manthan photo 2

பொன்னம்மாள் ஆச்சி

பொன்னம்மாள் ஆச்சி:

பொன்னம்மாள் ஆச்சி தவறி விட்டாள் என்ற தகவலை பிரபுதான் ஆபிசுக்குப் போன் பண்ணி எனக்குத் தெரிவித்தான். அப்போதெல்லாம் செல்போன் டெக்னாலஜி வந்திருக்கவில்லை. எந்த அவசரம் என்றாலும் அலுவலக எண்ணுக்கே தொடர்பு கொள்ள வேண்டும்.

கணேசா… உன்னையும் என்னையும் அப்பா இன்னைக்கேக் கிளம்பி வரச் சொல்லிட்டார். கோபால் மாமா அப்பாகிட்டே ஏற்கனவே சொல்லிட்டாங்களாம். ஆபிஸ்ல பெர்மிசன் போட்டுட்டு உடனே கிளம்பி வா என்றான்.

பிரபு எனக்கு மாமா பையன். ஒரு வயசுதான் வித்தியாசம். அதனால் பேர் சொல்லிக் கூப்பிட்டே பழகிட்டேன். சீக்கிரம் கெளம்பு ஆறு மணிக்கெல்லாம் பாரிஸ் கார்னர் போனால்தான் டிடிசி பஸ்ஸை பிடிச்சு காலைக்குள் திருநெல்வேலி போய் சேர முடியும் என்றான்.

“கணேசா. இந்தப் பஸ்ல போலாமா”

“ இது சாதாரணப் பேருந்து. சூப்பர் டீலக்ஸ் வீடியோ கோச் பஸ்ல போகலாம்”

“ டேய்… ஆச்சி இறந்திருக்கா. நீ என்னடான்னா வீடியோ கோச்ல போகலாம்கிற.”

அவனுக்கு சோகமெல்லாம் ஒன்றும் இல்லை. இருந்தாலும் சோகமாய் இருப்பதாக வெளிப்படுத்த முயற்சி செய்தான். டேய்… பன்னிரெண்டு மணிநேரம் படம் பாக்காம எல்லாம் என்னால வரமுடியாது என்று சொல்லிக் கொண்டே, வீடியோ கோச் பஸ் கண்டக்டர்கிட்டே போய், என்ன படம்னே இன்னைக்குப் போடுவீங்கன்னேன்.

தொர என்ன படம்னு சொன்னாதான் வருவீகளோ… சொல்ல முடியாது. இஷ்டம்னா ஏறுன்னார் அரசாங்க ஊழியர் என்ற தோரணையில். நானும் ஒங்க பஸ் மட்டுந்தான் திருநெல்வேலிக்குப் போவுதுன்னு நெனைப்போ. இது இல்லன்னா இன்னொன்னு.

இன்னொரு கண்டக்டர் படத்தைச் சொன்னார். பிரபு மீண்டும் ஏ மாப்ள… ஆச்சி இறந்திருக்கான்னு சொல்றேன். நீ என்னடான்னா…

பிரபு நீ வேணா உள்ளே போனதும் கண்ணை மூடிக்கோ. நான் மட்டும் படம் பாக்கேன்னேன். சும்மா சொன்னேம்ல என்று ஜகா வாங்கிக் கொண்டான்.

பஸ் விக்கிரவாண்டி வந்ததும் டீ காபிக்காக நின்றது. பிரபுவிடம் மசாலா டீயும் முறுக்கும் சாப்பிடலாமா என்றேன். பிரபு மீண்டும் சோகத்தைக் காட்ட ஆரம்பித்தான். சரி, நான் மட்டும் குடிக்கிறேன் என்றேன். இப்படி ஒவ்வொரு தடவையும் நான் மட்டும்னு சொன்னவுடன் பிரபு என் வழிக்கே வந்து விடுவான்.

பிரபு நேரடியாகவே கேட்டான். “மாப்ள அன்னைக்கு யாரோ ஒருத்தன் ரோட்ல அடிப்பட்டு கிடந்தப்போ அழுத… அவனை ஆஸ்பத்திரியில் சேர்க்க அந்த ஓட்டம் ஓடின” . இன்னைக்கு படம் பாத்துக்கிட்டே போவோம்கிற. என்ன மனுசனோ நீ.

ஏல.. அன்னைக்கு அடிப்பட்டுக் கிடந்தவன் வயசு 20ல. ஆச்சிக்கு வயசு என்னல? 87 வயசுல ஆச்சி போயிருக்கா. பொன்னம்மா ஆச்சிக்கு என்னல குறை? ஆச்சி அண்டக் கருப்பு. தாத்தாவுக்கு சுண்டுனா ரத்தம் வந்துரும். ஆச்சி நம்ம குடும்பத்தில் மகன் பிள்ள, மக பிள்ள, பேரப் பிள்ளைகளுக்கு, பேரப் பிள்ளைகளோட பிள்ளைன்னு மூணு தலைமுறைக்கு பேர்காலம் பாத்துருக்கா. குறைஞ்சது 40 பிள்ளைகளுக்கு மேலேயாவது பாத்திருக்க மாட்டா. அத்தனை பேரை ஒருத்தி தன் தலைமுறையில் பாக்க கொடுத்து வச்சிருக்கனும்ல. மருமகள்களை எல்லாம் மகள்கள் போல பாத்துருக்கா. யாராவது இந்தக் குடும்பத்துல ஆச்சியைத் தப்பா பேசுனதுண்டால. பொன்னம்மாள் ஆச்சியைப் போல ஒருவரைக் காண்பது அரிது. கடைசி வரைக்கும் படுக்கையில் விழாமல், யாருக்கும் பாரம் இல்லாமல் போய் சேந்திருக்கா.

ஆச்சி சில நேரங்களில் பேசுறத கேக்கிறப்போ காமெடியா இருக்கும். யாராவது தப்பு செஞ்சா, அம்மாகிட்டே சொல்லும் போது குரலைத் தாழ்த்தி குசுகுசுவென மெதுவா சொல்வாள். நான் வெளையாட்டுக்கு ஆச்சியிடம், யாச்சி நீ சொல்றது கல்லிடைக்குறிச்சியிலுள்ள அவனுக்குக் கேக்கவா போவுது. அந்த இடம் வந்தவுடன் இவ்வளவு மெல்ல சொல்ற. அம்மா உடனே கோபித்துக்கொண்டு, பெரியவங்க பேசுற இடத்தில ஒனக்கு என்னல வேண்டிக்கிடக்கு. தூரப்போ என்று விரட்டுவாள்.

ஆச்சியை மருமகள்கள் கூட தாங்குவார்கள். யாரிடமும் கோபப்பட்டதில்லை. நாத்தனார் சண்டையைக் கூட அவள் ரசிக்க விரும்ப மாட்டாள். குடும்ப ஒற்றுமைக்கு எதிராக யார் பேசினாலும் அன்போடு அறிவுறுத்துவாள். குடும்பத்தில் மகன் வழி பிள்ளைகளில் முதல் ஆண் குழந்தைக்குத் தாத்தா பிரம்மநாயகம் பிள்ளையின் பெயரையும், முதல் பெண் குழந்தைக்கு பொன்னம்மாள் ஆச்சி பெயருந்தான் வைத்திருந்தார்கள். ஆச்சியும் தாத்தாவும் தங்கள் குழந்தைகளுக்கு தெய்வநாயகம், கோமதி சங்கரன், தியாகராஜன், திருநாவுக்கரசு, சுந்தரி, மங்கையர்க்கரசி, திலகவல்லி, மோகனா என்று அழகான பெயர்களைச் சூட்டி இருந்தார்கள். இப்படி ஆச்சியின் பழம்பெருமைகளைப் பேசிக்கொண்டே போனோம்.

அப்பத்தான் பிரபு என்கிட்டே கேட்டான். ஏ மாப்ள.. நீ தெய்வு பெரியப்பா இறந்தப்ப பின்னால் போய் நின்னு அழுறவங்களைப் பாத்து சிரிச்சாயாமே அப்படியா?

“யாருல ஒனக்கு இதைச் சொன்னது?”

“ திலகா அத்தைதான்”

“ ஓ… எங்கம்மா தான் சொன்னாங்களா?”
அதுல பெரிய கதை இருக்குல. ஏ பிரபு ஒனக்கு ஒண்ணு தெரியுமா. எங்கம்மா ஒவ்வொரு தடவையும் ஊருக்குப் போகும் போதெல்லாம், ஏலே… ஒரு எட்டு எட்டிப் போய் எங்க அம்மையைப் பாத்துட்டு வாயம்ல.. ஆச்சிக்கு ரொம்ப வயசாகிக்கிட்டே போவுதுன்னு சொல்லிக்கிட்டே இருந்தா. நான்தான் யம்மா.. அடுத்தத் தடவ போறேன். இப்ப நேரமில்ல. நாளைக்கே கம்பெனியில் வாரேன்னு சொல்லி இருக்கேன். லீவு கிடைக்கலன்னு சொல்லி தட்டிக் கழிச்சேன்.

கடைசியா ஒரு தடவை நானே யம்மா … நாளைக்கு வேணா நான் போய் ஆச்சியைப் பாத்துட்டு வந்துருதேன்னு சொன்னேன். சொல்லி அஞ்சு நிமிஷமாகல. தெய்வு மாமா தவறிட்டான்னு பாபனாசத்திலிருந்து தகவல் வருது. சரிம்மா.. அப்ப ஆச்சியை அங்கேயே வச்சி பாத்துற வேண்டியதுதான்னேன்.

தெய்வு மாமா ரொம்ப ரிசெர்வ்டு டைப். வரி ஆபிசர் மாமே என்றே கூப்பிடுவோம். இன்கம் டாக்ஸ் ஆபிசர்னு சொல்லி இருந்திருக்கலாம். பெரியவங்கெல்லாம் அவரை வரி ஆபிசர் அண்ணேன்னு சொன்னதால் அவர் வரி ஆபிசர் மாமா என்றே அழைக்கப்பட்டார். குழந்தைகளிடம் எல்லாம் நெருங்கி வரமாட்டார். குடும்ப விழாக்களுக்குக் கூட காலையில் வந்துவிட்டு அன்றே கிளம்பி விடுவார். ஆகையால் மற்ற மாமாக்களிடம் நான் ஒட்டியது போல தெய்வு மாமாவிடம் ஒட்டியது கிடையாது.

மாமாவிடம் குறைபட்டவர்களெல்லாம் கதறி பதறி அழுதது எனக்கென்னவோ கிலேசியாக தோணுச்சு. அது எனக்குள் சிரிப்பை வரவழைத்தது. அதை அம்மாவிடம் அவ்வப்போது சொல்லிக் கிண்டலடிச்சேன். அதைத் தான் ஒன்கிட்டே சொல்லி இருக்கா என்றேன்.

“அதுசரி. நீதான் கடைசியில் பெரியப்பாவோட அஸ்தி கரைக்கப் போனியாமே. எல்லாரும் சொன்னாங்க.”
அதை ஏன் கேக்க? மருமகன்களில் யாராவது போகனும்கிறதுதான் சடங்காம். அமரன் சின்னவன், ராமக்கிட்டு கல்யாணம் ஆயிருச்சு. இன்னைக்கி ராமக்கிட்டுக்கு உடம்புக்கு வேற முடியல. அதனால நீயே போயிட்டு வான்னு அப்பாவும் சொல்லிட்டார். நானும் நமக்குத் தான் travel னா ரொம்ப பிடிக்குமேன்னு சரின்னு சொல்லித் தொலைச்சிட்டேன்.

சரின்னு சொன்னதுக்கப்புறம்தான் தெரியுது. பக்கத்து வீட்டுக் கல்யாணி மாமா சொல்றாரு… ஏல கன்னியாகுமரியில போய் அஸ்தியைக் கரைக்கிற வரைக்கும் நீ யார்கிட்டேயும் பேசக் கூடாது. எதுவும் சாப்பிடக் கூடாதுன்னுட்டார்.

“பிரபு… நெனச்சுப் பாரு இந்த ரெண்டும்தான் எனக்குக் கஷ்டம்னு ஒனக்குத் தெரியுமே. என்ன பண்றதுன்னு ஒத்துக்கிட்டோமேன்னு போனேன்.”

“மாப்ள… எப்படில பேசாம இருந்தே. பசி தாங்க மாட்டிய. எப்படி சமாளிச்ச.”

வள்ளியூர்ல பஸ் மாறனும்ல. ஏ அவருக்கு எந்த பஸ் போகும்னு தெரியல. நான்தான் பாத்துக்கிட்டு, ம் … ம்… ம்…. ன்னு செய்கையால் ஏறுவோம்னு சொன்னேன். அவரு என்னடான்னா ஏ அதுல ரெண்டு பேர் ஒக்கார்ற சீட்ல எடம் இல்லலா . அடுத்த பஸ்ல போவோம்கிறார். ஏன்னு சைகையில கேட்டா… ஒன்கிட்டே எவனாவது பேச்சுக் கொடுத்து நீ பேசிட்டேன்னா.. அடுத்த பஸ் அரைமணிநேரம் கழிச்சு வருது. ஒரு வழியா அஸ்தியைக் கரைச்சு முடிச்சு பாபநாசம் வரும் போது மணி ராத்திரி பதினொன்னு ஆகிருச்சு.

லோகாம்பாள் அத்தைதான் , கணேஷ் தான் அவுக அஸ்தியைக் கரைக்கனும்னு இருந்துருக்கு. ஒன் பையன் கரைச்சதுல எனக்கு ரொம்ப சந்தோசம்னு அத்தை சொன்னதாக அம்மா சொன்னாள்.

இப்படி பேசிக்கிட்டே கல்லிடைக்குறிச்சியை வந்து சேர்ந்து விட்டோம். கோமு மாமா வீட்டில் வைத்தே ஆச்சி இறந்திருந்தாள். ஆச்சி தன்னோட சொந்த ஊர்ல, ரெண்டாவது பையன் வீட்டில் வைத்துத் தான் காலமாகி இருந்தாள். பெரும்பாலான காலத்தை கோமு மாமா வீட்டில்தான் ஆச்சி கழித்திருந்தாள்.
அங்குபோய் பார்த்தால் மருமகள்கள் எல்லாம் கதறி அழுது கொண்டிருந்தார்கள்! அத்தை…. அம்மாவா இருந்து எங்களைப் பார்த்தியளே… இப்படி விட்டுட்டுப் போயிட்டேளே என ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள். மகள்கள் எல்லாம் அழுது கொண்டிருந்த போதிலும், அவர்களே ஒவ்வொருவரிடமும் மதினி அழாதீங்க… அம்மாவுக்குத் தான் வயசாயிட்டே. அழாதீங்க என்று சமாதானம் செய்து கொண்டிருந்தார்கள்.

மருமகள்கள் உண்மையான அன்போடு அழுது கொண்டிருக்கும் அளவிற்குப் பெருமை பொன்னம்மாள் ஆச்சியை விட்டால் வேறு யாருக்குத் தான் கிடைக்கும்? அதைவிட உண்மை, பொன்னம்மாள் ஆச்சியைப் போல அனைவரிடமும் அன்போடு நடந்துகொள்ளும் ஒருவரை எவர்தான் வெறுப்பர்? யாருக்குந் தெரியாமல் என் கண்ணிலிருந்தும் உப்புநீர் வழிந்தோடிருந்தது.