பெண்மையை போற்றும் இந்தியா

பெண்மையை போற்றும் இந்தியா:
===============================

இந்தியாவில் பெண்களுக்கான இடத்தைப் புரிந்து கொள்ள இந்தியாவின் கலாச்சாரத்தை, பக்தி முறையை, இந்திய மனநிலையின் அடித்தளத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியப் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடுமைகளைப் பற்றி பேசுவது மட்டுமே “பெண்ணியம்” என இங்கே கருதப்படுகிறது. அவ்வாறு பேசுதலும் சரியானதே. அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்திலிருந்தும் பெண்ணியம் பேச இயலும் என்பதை வலியுறுத்தவே இக்கட்டுரை. எதிர்மறையான விஷயங்களிலிருந்து அணுகுவதற்குப் பதிலாக நேர்மறையான எண்ணங்களின் மூலமாகவும், மனதைத் தூய்மைப்படுத்துவதன் மூலமாகவும், செயல்களில் வெளிப்படுத்துதல் மூலமாகவும் பெண்ணியம் போற்றலாம்.

பெண்ணைத் தெய்வமாக வணங்கும் முறை:
———————————————————————–

பெண் வணங்குதலுக்குரியவள் என்பதன் வெளிப்பாடே இந்தியாவில் பூமியை “பூமி மாதாவாக” ஒப்பிடுவது. வீடுகளோ, வணிக வளாகங்களோ கட்டப்படும் போது பூமி மாதாவிற்குப் பூஜைகள் செய்யப்படுகின்றன. நதிகளைக் கூட கங்கா, காவேரி, யமுனா, கோதாவரி என பெண்களின் பெயர் சூட்டி அழகு பார்க்கிறோம். வணங்குகிறோம். “பாரத் மாதாக்கி ஜே” என பெண்ணின் பெயரிலேயே சுதந்திரப் போராட்டத்தின் போது கூட முழக்கங்கள் முன் வைக்கப்பட்டன. இவையெல்லாம் பெண்ணை எவ்வாறு வணங்கியுள்ளார்கள் என்று அறிவுறுத்துவது போல உள்ளதல்லவா? அதைத் தானே சுதந்திரப் போராட்டத்திலும் வெளிப்படுத்தினார்கள்.

இச்சமயத்தில் என்னுடைய சிறு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். சவூதியில் உள்ள நான் பணிபுரியும் நிறுவனம் கடந்த ஆண்டு கலாச்சார நாள் (Cultural Day) நடத்திய போது அதன் ஒருங்கிணைப்பாளர்களில் நானும் ஒருவன். இந்தியாவைப் பார்த்தவுடன் புரிந்து கொள்ள சில போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. மேலிருந்த போட்டோவில் மதர் இந்தியா (அன்னை இந்தியா), மகாத்மா காந்தி, காஷ்மீர் உள்ளடக்கிய வரைபடம், அனைத்து மத வழிபாட்டுத் தளங்களும் பெண் கடவுளர்களின் போட்டோக்களையும் வைத்தோம். நிறைய வெளிநாட்டு நண்பர்கள் சரஸ்வதி, லக்ஷ்மி, துர்காவின் படங்களைப் பார்த்து யார் இது என்றார்கள். கல்வி, செல்வம், வீரத்திற்கான தெய்வங்கள் என்று விளக்கிய போது மிகுந்த ஆச்சர்யத்துடன் பெண் தெய்வங்கள் உண்டா என்றனர். ஏனெனில் பெண் தெய்வங்கள் உண்டு என்பதை அவர்கள் அறிந்திருக்கவும் இல்லை. அவர்களின் வழிபாட்டில் பெண் இறைதூதரும் கிடையாது. பெண் கடவுள்களும் கிடையாது.

இந்தியாவின் தொன்ம மதமான இந்துவில் ஆண் கடவுளர்கள் மட்டுமல்லாது பெண் தெய்வங்களும் உண்டு என விளக்கினேன். இந்தியாவில் மட்டுமே “அன்னை இந்தியா” என்று சொல்கிறீர்கள் என ஒரு நண்பர் ஆச்சர்யத்துடன் கூறினார். உலகின் தொன்ம மதத்தில்தான் பெண் தெய்வமாக வணங்கப்பட்டாள், வணங்கப்படுகிறாள். அந்தத் தொன்மக் கலாச்சராத்தை, பெண்ணை வழிபடும் முறையைக் கொண்ட நாடு என்பதிலிருந்து பெண்மையைப் போற்றும் தன்மை இயல்பாகவே இங்குள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் பெண்களுக்கான இடத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் முதலில் நாம் இதையெல்லாம் ஏன் இந்திய சமூகத்தின் கலாச்சாரத்தில் மட்டும் உள்ளது என்ற கேள்வியிலிருந்து விடை காண முனைய வேண்டும்.

உலகில் வேறெங்கும் இல்லாத ஒன்று. இந்திய மனநிலையிலிருந்து நோக்கினால் புரியும். தன் குடும்பத்தில் கன்னியாய் இருந்த பெண், மணமுடிக்கும் முன்பாகவே மரித்து விட்டால், கன்னி பூஜை என அவர்களை வணங்கும் முறையைக் கொண்ட சமூகம் இந்தியச் சமூகம். சுவாஷினி பூஜை செய்கிறோமே! வீட்டிற்கு சீதேவி வரவேண்டும் என்கிறோமே! இவையெல்லாமும் நமக்கு எதைக் கற்பிக்கிறது? அடிப்படையில் இந்தியாவில் பெண்கள் வணங்கப்படுகிறவர்கள் என்பதை உணர முடியவில்லையா?

பெண்ணையும் குடும்ப அமைப்பையும் வணங்கும்
————————————————————————
மனநிலை:
—————–

இன்றைய நடைமுறையில் குடும்பங்களில் என்ன நடக்கிறது? நம்முடைய குடும்பங்களில் சேமிப்பு நிகழ யார் முக்கியக் காரணம்? நன்றாக யோசித்துப் பாருங்கள். வீடு வாங்குங்கள், நகைகள் வாங்க வேண்டும், வங்கியில் பணம் போட்டு வையுங்கள். எப்படியேனும் சேமிக்க வேண்டும் என்ற அழுத்தத்தை ஆண்களுக்குக் கொடுப்பவர்கள் மனைவியும், தாயும்தானே! எனக்குத் தெரிந்து மேற்கூறிய மூன்று விஷயங்களில் நம்மை அழுத்தும் மனைவியோ, தாயோ எப்போதேனும் ஷேர் மார்க்கெட்டில் போடுங்கள் என சொன்னதுண்டா? பெரும்பாலும் அவர்கள் இது போன்ற விஷயத்தில் அறிவுறுத்துவதுமில்லை. பேராசைப் படுகிறாள் என்று சொல்கிற நாம் ஏன் ஒருபோதும் சூதாட்டத்தில் பங்கு கொள்ளுங்கள் என்று பெண்கள் சொல்லிக் கேள்விப்படுவதில்லை? இந்தியக் குடும்பங்களின் சேமிப்பில் தேசிய அளவில் 19 %லிருந்து 27 % ஆக இன்று உயர்ந்துள்ளது என்பதற்குக் காரணமான பெண்கள் வணங்குதலுக்கு உரியவர்கள் தானே!

பெண்ணை மதிப்பதில்லை, தன் விருப்பத்தில் செயல்படும் ஆண்கள், ஏன் பெண்ணின் அறிவுரைப்படி சேமிப்பிற்கான முதலீட்டில் மட்டும் பெண் சொன்னதற்குத் தலையை ஆட்டிக் கொண்டு செயல்படுகிறான். குடும்ப அமைப்பாக இந்தியா இருக்கும்வரை பாரதத்தின் குடும்ப சேமிப்பு குறையப்போவதில்லை. ஆனால் பிடிக்கவில்லையெனில் வெட்டிவிடு என்கிற கருத்தாக்கமே பெண்ணியம் என்று இங்கு போதிக்கப்படுகிறது. அவ்வாறு பேசுவது மட்டுமே முற்போக்கு என்றும் அழைக்கப்படுகிறது.

குடும்ப அமைப்பு முறையே இந்தியாவின் பலம் என்பதற்குச் சின்ன உதாரணம். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அந்நிய முதலீட்டின் மூலம் இந்தியாவிற்குக் கிடைத்த பணவரவைக் காட்டிலும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அனுப்புகிற பணம் இரு மடங்கு என்பது எதைக் காட்டுகிறது? தன் குடும்பத்திலுள்ள சகோதரிக்குத் திருமணம் நடக்க கஷ்டப்படும் அண்ணன்கள், மகள்களுக்கு சிறந்த முறையில் கல்வி, திருமணம் நடத்தித் தர கஷ்டப்படும் தந்தைகள், தங்கள் குடும்பம் பொருளாதார அளவிலும் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் ஆண்கள் சர்வ நிச்சயமாகப் பெண்களை மதிக்கத் தெரிந்தவர்கள் என்பதைத் தான் இந்தியக் குடும்ப அமைப்புகள் கற்றுக்கொடுத்த பாடம் என்பதாகப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. பெண்களை மதிக்கும் சமூகத்தில் மட்டுமே சேமிக்கும் பழக்கம் இருக்கமுடியும். இந்தியாவை இப்படித்தான் புரிந்து கொள்ளவும், வெளிப்படுத்தவும் நாம் முயற்சிக்கவேண்டும்.
கிராமங்களில் முன்பெல்லாம் பெரியோரின் முன்பாக சிகரெட் பிடித்தல் தவறு. குறிப்பாக பெண்களின் முன்பாக சிகரெட்டோ மது அருந்துதலோ தவறு. பெண் முன்பாகத் தகாதசொற்கள் பேசினால் அங்கேயே அவன் அவமதிப்புக்கு உள்ளாவான். ஏனெனில், பெண்ணின் முன்பாக ஆண் ஒழுக்கத்துடன் நடக்க வேண்டும் என்கிற படிப்பினையைத் தான் இன்று மீட்டெடுக்க வேண்டியுள்ளது. நகரமயமாதலில் இன்றைய பெண்களின் முன்பாக எந்தத் தயக்கமும் இன்றி சிகரெட் பிடித்தலும், இரட்டை அர்த்தப்பேச்சையும் பேசுதல்தான் பெண்மையை இகழ்வதைப் போன்றது. பெண்களும் இவ்விஷயத்தைத் தன் கண் முன்னால் செய்யும் ஆணுடன் பேசுவதைத் தவிர்த்தாலே ஆண்கள் இயல்பாகவே பெண்ணுக்கு என்ன மரியாதைத் தரவேண்டும் என்று உணர ஆரம்பிப்பார்கள். தன் முன்னாலேயே ஓர் ஆண் எதையெல்லாம் செய்தால் அது தன்னை அவமதிக்கும் செயல் என எண்ணி இன்றைய பெண்கள் ஒதுக்குகிறார்களோ, அடுத்த கணமே ஆண்கள் தங்களின் வரம்பு மீறலைக் குறைப்பார்கள். ஒரு மரியாதை எண்ணமும் வளரும்.

பெண்ளுக்கான வாக்குரிமை:
———————————————

வாக்குரிமையைப் பெண்களுக்கு வழங்கலாமா என்ற விவாதமே இந்தியா சுதந்திரம் பெற்றபோது ஏற்படவில்லை. சுதந்திரம் வாங்கிய போதே பெண்கள் வாக்கு பெறும் உரிமையைப் பெற்றார்கள். சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கும் அளப்பரியதல்லவா! காலனி ஆதிக்கத்தின் கீழ் சென்ற நாடுகளை விடுங்கள். 1779 ஆம் ஆண்டிலிருந்து ஜனநாயகம் என்று பெருமை பேசிக்கொள்ளும் அமெரிக்காவில் பெண்களுக்கான வாக்குரிமை 1920 ல் தான் நடைமுறைபடுத்தப்பட்டது. ஸ்விட்சர்லாந்தில்1974 ஆம் ஆண்டில்தான் பெண் வாக்குரிமை நடைமுறைக்கு வந்தது. இங்கிலாந்திலும் 1928 ஆம் ஆண்டில்தான் நடைமுறையில் வந்தது. குறிப்பாக தங்களின் புண்ணிய இடம் என சொல்லும் வாடிகன் சிட்டியிலும் (போப்) , சவுதியிலும் பெண்களுக்கு இன்றுவரை வாக்குரிமை வழங்கப்படவில்லை. இணைப்பில் போய் படித்தால் ஒவ்வொரு நாட்டிலும் பெண்களுக்கு வாக்குரிமை எப்போது வழங்கப்பட்டது என்பது தெரியவரும்.
http://en.wikipedia.org/wiki/Women%27s_suffrage#India

இந்திய மனச்சாட்சியின் வெளிப்பாடு:
———————————————————–

2012 டிசம்பரில் இந்தியத் தலைநகர் டெல்லியில் பெண் கற்பழிக்கப்பட்ட நிகழ்வு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. மேற்கத்திய நாடுகளும் சில ஊடகங்களும் இந்தியாவில் படிப்பறிவின்மை, காமவெறி யுள்ளவர்கள் அதிகம் உள்ளனர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் அளவிற்குக் காட்சிப்படுத்தின. இந்த விஷயம் மிகப்பெரிய அளவில் வெளிநாட்டு ஊடகங்களிலும் விவாதத்திற்கு வந்தது. அவை வன்புணர்வை மட்டும் பேசின. ஆனால் அத்தகைய பரப்புரைகளை முறியடிக்கும் செயல் இந்தியாவில் நடந்தேறியது. மக்கள் தெருவில் வந்து போராடினார்கள். பெண்ணை மதிக்கக் கோரி ஊர்லவலங்களை நடத்தி ஆண்களும் பெண்களும் டெல்லியை ஸ்தம்பிக்கச் செய்தார்கள். வழக்கும் விசாரணையும் வெகு விரைவாக முடுக்கிவிடப்பட்டது. ராணுவம் அவ்வாண்டு ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடப்போவதில்லை என அறிவித்தது. அண்டை மாநிலங்களான பஞ்சாபும், ஹரியானாவும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை ரத்து செய்தன. இதைத் தான் நாம் இங்கு பார்க்கவேண்டும். பெண்ணுக்கு இழைக்கப்பட்ட வன்புணர்விற்கு எதிராக ஓர் சமூகம் போராடுவது என்பது பெண்மைக்கான இடம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று சொல்லும் இந்தியச் சமூகத்தின் மனச்சாட்சியாகப் பார்க்கவேண்டாமா?. ஊடகங்கள் டெல்லி சம்பவத்தைப் பற்றி மக்களுக்கு எடுத்துக் காட்டியது சரிதான். ஆனால் ஓர் சமூகம் தனது எதிர்வினையை எவ்வாறு காட்டியது என்பதைப் பற்றி இங்கு அதைப் பாராட்டும் விதமாக ஊடகங்கள் விவாதிக்காதது எதைக் காட்டுகிறது? அச்சம்பவம் ஒட்டி ஏதோ ஓர் அரசியல்வாதி தன் குறுக்குப்புத்தியிலிருந்து தவறான கருத்துரைத்தால் அதை மணிக்கணக்காக ஊடகங்கள் விவாதம் செய்வதன் வாயிலாக நமது (இந்தியாவின்) இமேஜை உடைப்பது மட்டுமா ஊடகத்தின் பணி. நாம் முதலில் நம்மை(இந்தியாவை) எப்படி முன்னெடுக்கிறோமோ (ப்ரொஜெக்ட்) செய்கிறோமோ, அதைப் பொறுத்தே நம்மைப் பற்றிய எண்ணத்தை மற்ற நாடுகள் மேற்கொள்ளும். ஏன், நாமே கூட இந்தியாவைப் பற்றி தாழ்வாகக் கருதாமல், தவறு நிகழ்ந்ததற்கு நம்முடைய எதிர்வினை எப்படி இருக்கவேண்டும்? நம்முடைய செயல்முறைகளில்தான் அதை மீட்டெடுக்க முடியும் என்கிற புரிதல்தான் இன்றைய தேவை.

இந்தியாவை மட்டம்தட்டிக் கொள்கிற விவாதங்களை அமெரிக்காவும் லண்டனும் செய்தபோதுதான் எமெர் ஓ டூல் ( Emer O Toole) The Guardian இதழில் ஒரு கட்டுரை எழுதினார். அதில் அவர் மேற்கத்திய நாடுகள் தங்களை உயரிய பீடத்தில் வைத்துக் கொண்டும், இந்தியாவை மட்டம் தட்டியும் விவாதிக்கும் விவாதங்கள் தகுதியற்றவை என்பதை ஆதாரப்பூர்வமாகத் தகர்த்தெறிந்தார். இந்தியாவில் இயல்பாகவே பெண்களை மதிக்கும் தன்மையும், அரசுக்கு எதிராகப் போராடும் ஜனநாயகமும் இருப்பதால்தான் ஒரு பெண்ணுக்கு நிகழப்பட்ட வன்கொடுமையை எதிர்த்து தெருவில் இறங்கி போராடும் சமூகம் உள்ளது என்று கட்டுரை வடித்துள்ளார்.

இக்கட்டுரையில் அவர் அமெரிக்காவில் ஓர் இளம்பெண்ணைக் கால்பந்து விளையாட்டு வீரர்கள் (மாணவர்களே) 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேங் ரேப் பண்ணியதைப் பற்றி எழுதி அதில் பல கேள்விகளைக் கேட்டுள்ளார். அமெரிக்காவில் நடந்த இச்சம்பவம் பற்றி நமக்கு துளியளவாவது தெரிந்திருந்ததா? மேலும் அமெரிக்காவில் நடந்த கற்பழிப்பையும், இந்தியாவில் அதே போன்ற நிகழ்வு ஏற்பட்ட போது ஏற்பட்ட கொந்தளிப்பையும் ஒப்புமைப்படுத்தி கட்டுரை எழுதியுள்ளார். அதன் இணைப்பு இதோ. http://www.theguardian.com/commentisfree/…/delhi-rape-damini

இந்தியாவின் இமேஜை எதிர்மறையாகக் காண்பிப்பது அந்நிய உணர்வுடன் செயல்படும் சில ஊடகங்களும், தேசத்தைத் தரக்குறைவாகவே பேசுபவர்கள் செய்தாலும் இந்தியாவின் அடிப்படை மனநிலை பெண்ணுக்கு ஆதரவாகவும், பெண்மையை மதிக்கும் குணம் கொண்டது என்பதைத் தான் நாம் முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு தொடர்ந்து செயல்படுதலின் வாயிலாகவே நம்மை உலகிற்கு அடையாளப்படுத்த வேண்டும்.

இந்தியா பெண்மையைப் போற்றும் விதமாக இறை வழிபாட்டிலிருந்து, தம் வீட்டுப் பெண்களை வணங்கும் குணத்திலிருந்து என அனைத்தையும் தமது சடங்கு முறைகளிலும், கலாச்சாரத்திலும் கொண்டுள்ளது என்பதைப் புரிந்து கொண்டு ஏற்கனவே மழுங்கடிக்கப் பட்ட மனநிலையிலிருந்து வெளிவரச் செய்ய வேண்டியதற்கு நமது சிந்தனைகளில் மாற்றம் தேவைப்படுகிறது. அதற்கு குடும்ப அமைப்பு முறையும்,இந்தியாவின் கலாச்சார அடையாளங்களைப் புரியவைப்பதன் மூலமே மீட்டெடுக்க முடியும். பெண்ணியம் பேசுதல் என்பது நேர்மறையாக அவர்களாலும் அவர்களுக்காகவும் செயல்படுதலில் உள்ளது என்பதே நாம் உணரவேண்டியது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s