கற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3

கற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3:

கற்பனை மட்டுமே மனிதனுக்கும் மிருகங்களுக்கும் உள்ள வேறுபாடு. மற்ற எல்லா விஷயத்திலும் மனுஷன் ஒரு மிருகமே. உண்மையைச் சொல்லப்போனால் அதைவிடக் கேவலமானவன். இந்த கற்பனை சக்தியைக் கொண்டே மனிதன் நல்லது , கெட்டது, சரி, தவறு, ஹீரோ, வில்லன் என ஒவ்வொரு விஷயங்களையும் கலாச்சாரம் என்ற பெயரில் முன்வைக்கிறான்.

மனிதர்கள், சமூத்தில் நிலவும் INEQUALITY யை எதிர்த்துப் பேசிக் கொண்டே ஒப்பீடுகளையும், மதிப்பீடுகளையும், அதிகாரப்படிநிலையையும் அமைத்துக் கொண்ட யதார்த்தவாதிகளாகவே வாழ்கிறார்கள். அதாவது உயரிய நோக்கம் என்று சொல்லிக் கொண்டே, வேறுபாடுகளுடன் , கொள்கை முரணோடு உள்ளவர்களைக் காட்டிலும் தங்களின் கருத்தே சிறந்தது என நிறுவ மெனக்கெட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இயற்கையே சமத்துவத்தைப் பேணிக் கொண்டதில்லை. ஆனால் தன்னை ஏதோ சமத்துவத்தின் பிதாமகர்களாகக் காட்ட மனிதர்கள் போடும் வேடம் அலாதியானது. மனித சமூகம் சமத்துவம் ( Equality) பேசிக்  கொண்டே, மனிதர்கள் ஒவ்வொருவரையும்/ ஒவ்வொன்றையும் மதிப்பிடுகிறார்கள்(Value). மதிப்பிடுதல் என்பதன் அடுத்த நிலை ஒப்பீடு(Comparision). ஒருவரை மதிப்பீடு செய்தல் அல்லது ஒப்பிடுதல் என்பதே சமத்துவ சமூகத்திற்கு எதிரானக் கொள்கை முரண் தான்.

மதிப்பீடுகளின் வாயிலாக மனிதர்களே யார் மேலானவர்கள், கீழானவர்கள் என அளவிடுகிறார்கள்/ அடுக்குகளை வரிசைப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு படைப்பையும்(சினிமா, கதை, கலை….) மனிதர்கள் வரிசைப்படுத்துகிறார்கள். வரிசைப்படுத்துதல் என்பதனை அதிகாரப்படிநிலை (Hierarchical Structure) என சொல்லலாம். அதிகாரப்படிநிலையை மனித சமூகம் உள்ளூர விரும்புகிறது என்பதன் அடையாளங்களை மனித வாழ்வியலின் ஒவ்வொரு அங்கத்திலும் காண முடியும்.

படைப்புகளுக்கும் துறை சார்ந்தும் பல விருதுகள் வழங்கப்படுகின்றன. அவற்றில் மிக உயரிய விருது என்றும் சில விருதுகள் வழங்கப்படுகின்றன. மிக உயரிய விருது என்று சொல்லும் போதே அதை விடக் குறைந்த விருதுகளும் உண்டு என்ற பொருளாகிறது. மிக உயரிய விருதுகள், ஒருவர் தாம் சார்ந்த துறைக்கு செய்யும் சேவையின் அடிப்படையில் அவரைப் பாராட்டும் விதத்தில்தான் மிக உயரிய விருதுகள் வழங்கப்படுகின்றன என்பதே மனிதர்கள் சொல்லும் விளக்கம். உண்மையைச் சொல்லப்போனால் மனிதர்களுக்கு வரிசைப்படுத்துதலில் ஒரு வசீகரம் இருக்கிறது. அதாவது மானுட சமூகமே தங்களுக்குள்ளாக அதிகாரப்படிநிலையை உருவாக்கிக் கொள்கிறது.

மனிதர்கள் கற்பனையுடன் வலம் வரும் மிருகம் என்பதன் அடையாளங்களில் ஒன்றுதான் மிருகங்களையும் வரிசைப்படுத்திக் காண்பிப்பது. சிங்கம் வந்து இவனிடம் சொன்னதா, நான் தான் அரசனென்று. மிருகங்களுக்குத் தெரிந்தது எல்லாம் இயற்கையின் படைப்பில்/ இறைவனின் படைப்பில் ஒன்றேயொன்று தான். வயிறு பசித்தால் இரை வேண்டும். தான் எந்த மிருகத்தின் முன்னால் நின்றால் தன் உயிருக்கு ஆபத்து, தனது இரை எங்கேயுள்ளது என்பதனை மட்டும் அடையாளம் (Identitiy) காணும் சக்தி மட்டுமே!

Where the place Nobody values anything, There only everything is equal. அதாவது மதிப்பீடுகள் செய்யாத இடத்தில் மட்டுமே அனைவரும் சமமானவர்கள், அனைத்தும் சமம். மதிப்பீடுகள் என்று வந்துவிட்டாலே INEQUALITY வரும் என்று பொருள். மதிப்பீடுகளைத் துறந்த ஒரு சமூகமாக மனிதர்கள் இருக்கிறார்களா என்ன? புதிது புதிதான சித்தாந்தங்கள் உருவாவதன் பின்னணியை உற்று நோக்கினால் ஒரு கருத்து முன்வைக்கப்படும். முந்தைய சித்தாந்தத்தில் உள்ள குறைபாடுகளைக் களையவே புதிய சித்தாந்ததிற்கான பாதை அமைக்கப்பட்டுள்ளது என்று விளக்கங்கள் அளிக்கப்படும். ஆனால் மானுட சமூகம் மதிப்பீடுகளை உருவாக்கியும் அதைத் தக்க வைப்பதன் மூலமாகவும் INEQUALITY என்பது இருக்கும்.

INEQUALITY என்பதை வெறும் பொருளாதாரத்தோடு ஒப்பிடுவதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். அறிவின் அடிப்படையில், திறமை, தகுதி, செயல்களின் அடிப்படையில், சாதி, மதம், மொழி, இனம் , பணம் என மானுட சமூகம் இந்த வேறுபாடுகள்(INEQUALITY or Diversity) அமைந்து விடும். ஏதோ ஒன்றை முன்னிலைப்படுத்த முனையும் போதும் , அதைத் தடுக்க முனையும் போதும் ஒரு விஷயம் தெளிவாகிறது. பேராசையின் ஒட்டு மொத்த வடிவம்தான் கற்பனையுடன் வலம் வரும் மிருகமான மனிதன் என்பது. மற்ற அனைத்து உயிரினங்களும் survival of the fittest என்ற தத்துவத்தை உள்வாங்கி வாழும் போது, மனிதன் புதிது புதிதாக பல மாற்றங்களைக் கொண்டு வர முனைவது போல் காண்பித்துக் கொண்டே , சுய நலத்துடன், பேராசையுடன், கற்பனையுடன் வலம் வரும் மிருகமாகத் தான் உள்ளான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இயற்கைஒரு போதும் ஹீரோ வில்லன் பாதிக்கப்பட்டவன் என்ற கருத்துகளுக்கு இடமளிப்பதில்லை. மனிதன் மட்டுமே இவ்வாறு ஒவ்வொன்றையும் பிரித்துப் பார்த்து தன் நலன்/ சார்ந்த பிரிவினரின் நலன் செழிக்க ஆயிரம் விளக்கங்களைக் கொடுத்துக்கொண்டு வாழும் பேராசைக் காரன். மனிதன் கற்பனையுடன் வலம் வரும் மிருகம் இன்னும் பயணிக்கும்.

மனிதன் கற்பனையுடன் வலம் வரும் மிருகம் பாகம் 2:

மனிதன் கற்பனையுடன் வலம் வரும் மிருகம் பாகம் 2:

கற்பனை மட்டுமே மனிதனுக்கும் மிருகங்களுக்கும் உள்ள வேறுபாடு. மற்ற எல்லா விஷயத்திலும் மனுஷன் ஒரு மிருகமே. இந்த கற்பனை சக்தியைக் கொண்டே மனிதன் நல்லது , கெட்டது, சரி, தவறு, ஹீரோ, வில்லன் என ஒவ்வொரு விஷயங்களையும் கலாச்சாரம் என்ற பெயரில் முன்வைக்கிறான்.

மிருகங்கள் தனக்குத் தண்ணீர் தாகமெடுத்தால் நேராகக் குளத்திற்குச் சென்று தண்ணீர் அருந்தித் தன் தாகத்தைப் போக்கிக் கொள்கிறது. மனிதனும் ஆதியில் அதையே செய்தான். ஆனால் அவனது கற்பனைத் திறன் அவனுக்குப் பானையை உருவாக்கித் தந்தது. பானையில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு வந்து வீட்டில் வைத்தான். பானை அவன் தாகத்தையும் குடும்பத் தாகத்தையும் ஒரு நாளுக்கோ இரு நாளுக்கோ போக்கியது. தண்ணீர் தீர்ந்தால் மீண்டும் குளம் நோக்கிச் செல்வான். தண்ணீரைப் பானையில் பிடித்து வருவான். கதையை இங்கு நிறுத்தி இப்படி கற்பனை செய்து கொள்வோம். விலங்குகள் தமக்குத் தேவையான போது தேவையான இரைக்கு அலைகிறது. மனிதன் அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்யும் பானையில் நீர் சேமிப்பதை குடும்பத்திற்கு தேவையான அளவிற்கு சேமிப்பதாகப் பொருள் கொள்வோம்.

இப்போது அடுத்த நிலை. மிருகங்கள் அக்குளத்தில் தண்ணீரில்லை எனத் தெரிந்தால் தண்ணீருள்ள வேறு இடம் நோக்கி நகரும். அவ்வளவே அது செய்யும். மனிதன் கற்பனை விரிந்தது. நான் ஏன் குளம் சென்று தண்ணீரைத் தினந்தோறும் மோந்து வர வேண்டும்?. அதற்குப் பதிலாக, பூமியைத் தோண்டினால் தண்ணீர் வருகிறதே என்று அறிந்தவுடன் வீட்டிலேயே கிணறு வெட்டினான். தேவைப்படும் போதெல்லாம் எனக்கானத் தண்ணீரை என் வீட்டிலேயே இறை(ரை ?)த்துக் கொள்கிறேன். பானையில் தண்ணீர் நிரப்ப அலைய வேண்டாமல் போனது. சேமிப்பிற்காக அலைய வில்லை. உழைப்பை எளிமைப்படுத்திக் கொண்டான் எனக் கற்பனை செய்து கொள்வோம்.

மனிதனுக்கு சிந்திக்கும் ஆற்றல் எவ்வளவு பெரிய சக்தி என சொன்னால் மனிதர்களின் கற்பனைத் திறனும் அவனைப் பற்றிய பாசிட்டிவான எண்ணங்களும் நமக்குத் தோன்றும் வகையில் சொல்லியுள்ளேன். இந்தக் கற்பனையைக் கொண்டு கேள்வியை இப்படி மாற்றிப் போடுகிறேன். மனிதன் மிருகத்தைக் காட்டிலும் எவ்வளவு மோசமானவன் என்று அக்கேள்வி எடுத்துக் காண்பிக்கும்.

மிருகம் அன்றைய தேவை கருதி எளிமையாக வாழ்கிறது. அது தனது உணவைக் கூட தமது எல்லைக்குட்பட்டு (காட்டை விட்டு அதுவாக ஊருக்குள் வருவதில்லை) தேடி அலைந்து பெற்றுக் கொண்டு வாழ்கிறது. நாளைக்கான உணவை அது இன்றே அடித்து வைத்துக் கொள்வதில்லை. மனிதன் பானையில் நீர் நிரப்ப குளத்திற்குச் சென்றதை அன்றாடத் தேவைக்கான உழைப்பென எடுத்துக் கொள்வோம். ஆனால் மோட்டார் வைத்து எனக்குத் தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர் எடுத்துக் கொள்வேன் என்பதை பானையில் நீர் எப்போதும் இருப்பது போல பார்த்துக் கொள்வது சொல்ல வரும் செய்தி இதுதான். மனிதன் பானையில் நீர் சேமிப்பது என்பதைப் பொருள் சேமிப்பதாகக் கொள்ளுங்கள். அது அவனது இன்றைய தேவையை மட்டுமல்ல. நாளைக்கு மட்டுமல்ல. அது ஏழேழு ஜென்மத்திற்கும் சேர்க்க ஆசைப்படுகிறது. அவனது குடும்பத்திற்கான சேமிப்பு மட்டுமல்ல. அவன் சேமிக்க ஆசைப்படும் ஒவ்வொன்றும் அவன் ஆயுள், அவனது குழந்தைகளின் ஆயுளுக்கும் சேர்த்து சேமிக்க (சம்பாதிக்க, சொத்து சேர்க்க), பேரக்குழந்தைகளின் ஆயுளுக்கும், கருணாநிதி போல ஏழேழு ஜென்ம வாரிசுகளுக்கும் இருப்பதுபோல சேமிக்க ஆசைப்படுகிறான்.

தான் சேமிப்பு என்ற பெயரில் சேர்த்து வைக்கிற பொருளனைத்தும் பேரக் குழந்தைகளின் சுகபோக வாழ்க்கைக்கும் சேர்த்தே என கற்பனையில் கேள்வியை மாற்றிப் போட்டால் மனிதன் எத்தனை பேராசைப் பிடித்தவன் என அமைந்து விடுகிறதல்லவா? மனிதன் கற்பனையுடன் வலம் வரும் மிருகம் இன்னும் பயணிக்கும்.

மனிதன் – கற்பனையுடன் வலம் வரும் மிருகம் பாகம் 1

மனிதன் – கற்பனையுடன் வலம் வரும் மிருகம்:
============================================

கற்பனை மட்டுமே மனிதனுக்கும் மிருகங்களுக்கும் உள்ள வேறுபாடு. மற்ற எல்லா விஷயத்திலும் மனுஷன் ஒரு மிருகமே. இந்த கற்பனை சக்தியைக் கொண்டே மனிதன் நல்லது , கெட்டது, சரி, தவறு, ஹீரோ, வில்லன் என ஒவ்வொரு விஷயங்களையும் கலாச்சாரம் என்ற பெயரில் முன்வைக்கிறான்.

இது பற்றி விளங்க ஒரு சிறுகதை. கழுகொன்று வாத்தைக் கொத்தித் தின்ன வந்ததாம். வாத்து அங்கு வந்த மனிதனிடம் என்னைக் காப்பாற்று என சொன்னதாம். வாத்தின் மீது இரக்கம் கொண்ட மனிதன், வாத்தைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டானாம்.

கழுகு மனிதனிடம் ஒரு கேள்வியை முன்வைத்தது. ” நீ ஏன் என் உணவைத் தடுக்கிறாய்?” என்றது.

மனிதன், “உனக்கு வேண்டுமானால் வேறு எதையாவது சாப்பிடு. வேண்டுமானால் வேறு வாத்தை சாப்பிடு.”

கழுகு கேட்டது. ” மற்ற உயிர்கள் இறந்தால் பரவாயில்லையா?”

மனிதன், ” சரி உனக்குத் தானியங்களைத் தருகிறேன். எதையும் கொல்ல வேண்டிய அவசியமில்லை”. தான் கருணையுள்ளம் கொண்டவன் என்றும் என்னிடம் இந்த வாத்து “உயிர்ப் பிச்சைக் கேட்டு வந்திருக்கிறது” என்றானாம்.

கழுகு ,” நீ நாளையே இறந்தால் நாளை இந்த வாத்து எனக்கோ, மற்றவருக்கோ இரையாகுமே. அப்போது என்ன செய்வாய்?”

கழுகு தொடர்ந்தது. “நீ ஹீரோ. எனக்கான உணவைத் தேட வந்த நான் வில்லன். வாத்து பாதிக்கப்பட்டவன்.” என்ற பிரமையை ஏன் ஏற்படுத்துகிறாய்.

அப்படியே கேள்வியை மாற்றிப் போடுங்கள். கழுகிற்கு அன்று கிடைக்கக்கூடிய உணவைத் தடுத்தவன் வில்லன் என்று கழுகு நினைத்தால்….. மனிதனின் கற்பனை, கேள்வியை எப்படி வேண்டுமானாலும் எடுத்துச் செல்கிறதல்லவா.

இதேபோல இன்னொரு கதையும் உண்டு. ஒரு சிறிய மீனைப் பெரிய மீன் தின்னப் போக அதைப்பார்த்துப் பரிதாபப்பட்ட மனிதனொருவன், நீ இந்த கடலில் கிடப்பதால் தானே உன்னை அந்த மீன் தின்னப் பார்க்கிறது. ஆகையால் உன்னை நான் வீட்டில் வைத்து வளர்க்கிறேன் என எடுத்துச் சென்றானாம்.

கொஞ்ச நாளில் மீன் பெரிதாக பெரிய தொட்டி ஒன்றை வடிவமைத்தானாம். மீண்டும் பெரிதாக என்ன செய்வதெனத் தெரியாமல், நீ பெரியதாகி விட்டாய். உன்னை யாரும் அடித்துத் தின்ன மாட்டார்கள். ஆகையால் உன்னை ஆற்றில் விடுகிறேன் என சொன்னானாம்.

இரு கேள்விகள். பெரிய மீனாக மாறிய இந்த மீன், சின்ன மீனை சாப்பிடும் என்றோ, கடலில் போய் இந்த மீன் சேர்ந்தால் இதைவிட பெரிய மீன் இதைத் தின்னும் என்கிற அளவிற்கு அடிப்படையில்லாமால் இரக்கம் காட்டுகிறேன் என்ற பெயரில் முன் வந்தது சரியா? இந்த அடிப்படை கூட புரியாமல் அதை எடுத்து வளர்த்தானே, இவன் முட்டாளா? மனிதனின் கற்பனையில் விளைந்த ஒவ்வொரு கதையிலும் இன்னொரு கேள்வி எழுகிறது.

இயற்கையும், இயற்கையையும் உயிரினங்களையும் படைத்தவனைத் தவிர்த்து அனைத்துமே மனித கற்பனையில் விளைந்தவையாகக் கூட இருக்கலாம். கலாச்சாரம் தொடங்கி …… மனிதன் கற்பனையுடன் வலம் வரும் மிருகம் மட்டுமே. இதைத் தவிர்த்து மனிதனுக்கும் விலங்கிற்கும் எந்த வேறுபாடும் கிடையாது.

சர்வைவலுக்காக அன்றாடம் ஓடிக்கொண்டிருப்பதே விலங்கின் தன்மை. அதைத் தவிர்த்த எந்த குரூர எண்ணமும் விலங்கிற்குக் கிடையாது. மனிதனுக்கு மட்டுமே கற்பனையில் எண்ணியதை நிறைவேற்றவும், அவன் விதித்த கற்பனைக்கும், விதிகளுக்கும் உட்பட்டு வராத அத்தனை பேரையும் தகுதியற்றவர்களாக, தரங்கெட்டவர்களாக அடையாளம் காட்டி வாழ்வதுமே மனித நாகரிகம் என பெருமையாக அழைக்கப்படுகிறது.

பொன்னம்மாள் ஆச்சி

பொன்னம்மாள் ஆச்சி:

பொன்னம்மாள் ஆச்சி தவறி விட்டாள் என்ற தகவலை பிரபுதான் ஆபிசுக்குப் போன் பண்ணி எனக்குத் தெரிவித்தான். அப்போதெல்லாம் செல்போன் டெக்னாலஜி வந்திருக்கவில்லை. எந்த அவசரம் என்றாலும் அலுவலக எண்ணுக்கே தொடர்பு கொள்ள வேண்டும்.

கணேசா… உன்னையும் என்னையும் அப்பா இன்னைக்கேக் கிளம்பி வரச் சொல்லிட்டார். கோபால் மாமா அப்பாகிட்டே ஏற்கனவே சொல்லிட்டாங்களாம். ஆபிஸ்ல பெர்மிசன் போட்டுட்டு உடனே கிளம்பி வா என்றான்.

பிரபு எனக்கு மாமா பையன். ஒரு வயசுதான் வித்தியாசம். அதனால் பேர் சொல்லிக் கூப்பிட்டே பழகிட்டேன். சீக்கிரம் கெளம்பு ஆறு மணிக்கெல்லாம் பாரிஸ் கார்னர் போனால்தான் டிடிசி பஸ்ஸை பிடிச்சு காலைக்குள் திருநெல்வேலி போய் சேர முடியும் என்றான்.

“கணேசா. இந்தப் பஸ்ல போலாமா”

“ இது சாதாரணப் பேருந்து. சூப்பர் டீலக்ஸ் வீடியோ கோச் பஸ்ல போகலாம்”

“ டேய்… ஆச்சி இறந்திருக்கா. நீ என்னடான்னா வீடியோ கோச்ல போகலாம்கிற.”

அவனுக்கு சோகமெல்லாம் ஒன்றும் இல்லை. இருந்தாலும் சோகமாய் இருப்பதாக வெளிப்படுத்த முயற்சி செய்தான். டேய்… பன்னிரெண்டு மணிநேரம் படம் பாக்காம எல்லாம் என்னால வரமுடியாது என்று சொல்லிக் கொண்டே, வீடியோ கோச் பஸ் கண்டக்டர்கிட்டே போய், என்ன படம்னே இன்னைக்குப் போடுவீங்கன்னேன்.

தொர என்ன படம்னு சொன்னாதான் வருவீகளோ… சொல்ல முடியாது. இஷ்டம்னா ஏறுன்னார் அரசாங்க ஊழியர் என்ற தோரணையில். நானும் ஒங்க பஸ் மட்டுந்தான் திருநெல்வேலிக்குப் போவுதுன்னு நெனைப்போ. இது இல்லன்னா இன்னொன்னு.

இன்னொரு கண்டக்டர் படத்தைச் சொன்னார். பிரபு மீண்டும் ஏ மாப்ள… ஆச்சி இறந்திருக்கான்னு சொல்றேன். நீ என்னடான்னா…

பிரபு நீ வேணா உள்ளே போனதும் கண்ணை மூடிக்கோ. நான் மட்டும் படம் பாக்கேன்னேன். சும்மா சொன்னேம்ல என்று ஜகா வாங்கிக் கொண்டான்.

பஸ் விக்கிரவாண்டி வந்ததும் டீ காபிக்காக நின்றது. பிரபுவிடம் மசாலா டீயும் முறுக்கும் சாப்பிடலாமா என்றேன். பிரபு மீண்டும் சோகத்தைக் காட்ட ஆரம்பித்தான். சரி, நான் மட்டும் குடிக்கிறேன் என்றேன். இப்படி ஒவ்வொரு தடவையும் நான் மட்டும்னு சொன்னவுடன் பிரபு என் வழிக்கே வந்து விடுவான்.

பிரபு நேரடியாகவே கேட்டான். “மாப்ள அன்னைக்கு யாரோ ஒருத்தன் ரோட்ல அடிப்பட்டு கிடந்தப்போ அழுத… அவனை ஆஸ்பத்திரியில் சேர்க்க அந்த ஓட்டம் ஓடின” . இன்னைக்கு படம் பாத்துக்கிட்டே போவோம்கிற. என்ன மனுசனோ நீ.

ஏல.. அன்னைக்கு அடிப்பட்டுக் கிடந்தவன் வயசு 20ல. ஆச்சிக்கு வயசு என்னல? 87 வயசுல ஆச்சி போயிருக்கா. பொன்னம்மா ஆச்சிக்கு என்னல குறை? ஆச்சி அண்டக் கருப்பு. தாத்தாவுக்கு சுண்டுனா ரத்தம் வந்துரும். ஆச்சி நம்ம குடும்பத்தில் மகன் பிள்ள, மக பிள்ள, பேரப் பிள்ளைகளுக்கு, பேரப் பிள்ளைகளோட பிள்ளைன்னு மூணு தலைமுறைக்கு பேர்காலம் பாத்துருக்கா. குறைஞ்சது 40 பிள்ளைகளுக்கு மேலேயாவது பாத்திருக்க மாட்டா. அத்தனை பேரை ஒருத்தி தன் தலைமுறையில் பாக்க கொடுத்து வச்சிருக்கனும்ல. மருமகள்களை எல்லாம் மகள்கள் போல பாத்துருக்கா. யாராவது இந்தக் குடும்பத்துல ஆச்சியைத் தப்பா பேசுனதுண்டால. பொன்னம்மாள் ஆச்சியைப் போல ஒருவரைக் காண்பது அரிது. கடைசி வரைக்கும் படுக்கையில் விழாமல், யாருக்கும் பாரம் இல்லாமல் போய் சேந்திருக்கா.

ஆச்சி சில நேரங்களில் பேசுறத கேக்கிறப்போ காமெடியா இருக்கும். யாராவது தப்பு செஞ்சா, அம்மாகிட்டே சொல்லும் போது குரலைத் தாழ்த்தி குசுகுசுவென மெதுவா சொல்வாள். நான் வெளையாட்டுக்கு ஆச்சியிடம், யாச்சி நீ சொல்றது கல்லிடைக்குறிச்சியிலுள்ள அவனுக்குக் கேக்கவா போவுது. அந்த இடம் வந்தவுடன் இவ்வளவு மெல்ல சொல்ற. அம்மா உடனே கோபித்துக்கொண்டு, பெரியவங்க பேசுற இடத்தில ஒனக்கு என்னல வேண்டிக்கிடக்கு. தூரப்போ என்று விரட்டுவாள்.

ஆச்சியை மருமகள்கள் கூட தாங்குவார்கள். யாரிடமும் கோபப்பட்டதில்லை. நாத்தனார் சண்டையைக் கூட அவள் ரசிக்க விரும்ப மாட்டாள். குடும்ப ஒற்றுமைக்கு எதிராக யார் பேசினாலும் அன்போடு அறிவுறுத்துவாள். குடும்பத்தில் மகன் வழி பிள்ளைகளில் முதல் ஆண் குழந்தைக்குத் தாத்தா பிரம்மநாயகம் பிள்ளையின் பெயரையும், முதல் பெண் குழந்தைக்கு பொன்னம்மாள் ஆச்சி பெயருந்தான் வைத்திருந்தார்கள். ஆச்சியும் தாத்தாவும் தங்கள் குழந்தைகளுக்கு தெய்வநாயகம், கோமதி சங்கரன், தியாகராஜன், திருநாவுக்கரசு, சுந்தரி, மங்கையர்க்கரசி, திலகவல்லி, மோகனா என்று அழகான பெயர்களைச் சூட்டி இருந்தார்கள். இப்படி ஆச்சியின் பழம்பெருமைகளைப் பேசிக்கொண்டே போனோம்.

அப்பத்தான் பிரபு என்கிட்டே கேட்டான். ஏ மாப்ள.. நீ தெய்வு பெரியப்பா இறந்தப்ப பின்னால் போய் நின்னு அழுறவங்களைப் பாத்து சிரிச்சாயாமே அப்படியா?

“யாருல ஒனக்கு இதைச் சொன்னது?”

“ திலகா அத்தைதான்”

“ ஓ… எங்கம்மா தான் சொன்னாங்களா?”
அதுல பெரிய கதை இருக்குல. ஏ பிரபு ஒனக்கு ஒண்ணு தெரியுமா. எங்கம்மா ஒவ்வொரு தடவையும் ஊருக்குப் போகும் போதெல்லாம், ஏலே… ஒரு எட்டு எட்டிப் போய் எங்க அம்மையைப் பாத்துட்டு வாயம்ல.. ஆச்சிக்கு ரொம்ப வயசாகிக்கிட்டே போவுதுன்னு சொல்லிக்கிட்டே இருந்தா. நான்தான் யம்மா.. அடுத்தத் தடவ போறேன். இப்ப நேரமில்ல. நாளைக்கே கம்பெனியில் வாரேன்னு சொல்லி இருக்கேன். லீவு கிடைக்கலன்னு சொல்லி தட்டிக் கழிச்சேன்.

கடைசியா ஒரு தடவை நானே யம்மா … நாளைக்கு வேணா நான் போய் ஆச்சியைப் பாத்துட்டு வந்துருதேன்னு சொன்னேன். சொல்லி அஞ்சு நிமிஷமாகல. தெய்வு மாமா தவறிட்டான்னு பாபனாசத்திலிருந்து தகவல் வருது. சரிம்மா.. அப்ப ஆச்சியை அங்கேயே வச்சி பாத்துற வேண்டியதுதான்னேன்.

தெய்வு மாமா ரொம்ப ரிசெர்வ்டு டைப். வரி ஆபிசர் மாமே என்றே கூப்பிடுவோம். இன்கம் டாக்ஸ் ஆபிசர்னு சொல்லி இருந்திருக்கலாம். பெரியவங்கெல்லாம் அவரை வரி ஆபிசர் அண்ணேன்னு சொன்னதால் அவர் வரி ஆபிசர் மாமா என்றே அழைக்கப்பட்டார். குழந்தைகளிடம் எல்லாம் நெருங்கி வரமாட்டார். குடும்ப விழாக்களுக்குக் கூட காலையில் வந்துவிட்டு அன்றே கிளம்பி விடுவார். ஆகையால் மற்ற மாமாக்களிடம் நான் ஒட்டியது போல தெய்வு மாமாவிடம் ஒட்டியது கிடையாது.

மாமாவிடம் குறைபட்டவர்களெல்லாம் கதறி பதறி அழுதது எனக்கென்னவோ கிலேசியாக தோணுச்சு. அது எனக்குள் சிரிப்பை வரவழைத்தது. அதை அம்மாவிடம் அவ்வப்போது சொல்லிக் கிண்டலடிச்சேன். அதைத் தான் ஒன்கிட்டே சொல்லி இருக்கா என்றேன்.

“அதுசரி. நீதான் கடைசியில் பெரியப்பாவோட அஸ்தி கரைக்கப் போனியாமே. எல்லாரும் சொன்னாங்க.”
அதை ஏன் கேக்க? மருமகன்களில் யாராவது போகனும்கிறதுதான் சடங்காம். அமரன் சின்னவன், ராமக்கிட்டு கல்யாணம் ஆயிருச்சு. இன்னைக்கி ராமக்கிட்டுக்கு உடம்புக்கு வேற முடியல. அதனால நீயே போயிட்டு வான்னு அப்பாவும் சொல்லிட்டார். நானும் நமக்குத் தான் travel னா ரொம்ப பிடிக்குமேன்னு சரின்னு சொல்லித் தொலைச்சிட்டேன்.

சரின்னு சொன்னதுக்கப்புறம்தான் தெரியுது. பக்கத்து வீட்டுக் கல்யாணி மாமா சொல்றாரு… ஏல கன்னியாகுமரியில போய் அஸ்தியைக் கரைக்கிற வரைக்கும் நீ யார்கிட்டேயும் பேசக் கூடாது. எதுவும் சாப்பிடக் கூடாதுன்னுட்டார்.

“பிரபு… நெனச்சுப் பாரு இந்த ரெண்டும்தான் எனக்குக் கஷ்டம்னு ஒனக்குத் தெரியுமே. என்ன பண்றதுன்னு ஒத்துக்கிட்டோமேன்னு போனேன்.”

“மாப்ள… எப்படில பேசாம இருந்தே. பசி தாங்க மாட்டிய. எப்படி சமாளிச்ச.”

வள்ளியூர்ல பஸ் மாறனும்ல. ஏ அவருக்கு எந்த பஸ் போகும்னு தெரியல. நான்தான் பாத்துக்கிட்டு, ம் … ம்… ம்…. ன்னு செய்கையால் ஏறுவோம்னு சொன்னேன். அவரு என்னடான்னா ஏ அதுல ரெண்டு பேர் ஒக்கார்ற சீட்ல எடம் இல்லலா . அடுத்த பஸ்ல போவோம்கிறார். ஏன்னு சைகையில கேட்டா… ஒன்கிட்டே எவனாவது பேச்சுக் கொடுத்து நீ பேசிட்டேன்னா.. அடுத்த பஸ் அரைமணிநேரம் கழிச்சு வருது. ஒரு வழியா அஸ்தியைக் கரைச்சு முடிச்சு பாபநாசம் வரும் போது மணி ராத்திரி பதினொன்னு ஆகிருச்சு.

லோகாம்பாள் அத்தைதான் , கணேஷ் தான் அவுக அஸ்தியைக் கரைக்கனும்னு இருந்துருக்கு. ஒன் பையன் கரைச்சதுல எனக்கு ரொம்ப சந்தோசம்னு அத்தை சொன்னதாக அம்மா சொன்னாள்.

இப்படி பேசிக்கிட்டே கல்லிடைக்குறிச்சியை வந்து சேர்ந்து விட்டோம். கோமு மாமா வீட்டில் வைத்தே ஆச்சி இறந்திருந்தாள். ஆச்சி தன்னோட சொந்த ஊர்ல, ரெண்டாவது பையன் வீட்டில் வைத்துத் தான் காலமாகி இருந்தாள். பெரும்பாலான காலத்தை கோமு மாமா வீட்டில்தான் ஆச்சி கழித்திருந்தாள்.
அங்குபோய் பார்த்தால் மருமகள்கள் எல்லாம் கதறி அழுது கொண்டிருந்தார்கள்! அத்தை…. அம்மாவா இருந்து எங்களைப் பார்த்தியளே… இப்படி விட்டுட்டுப் போயிட்டேளே என ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள். மகள்கள் எல்லாம் அழுது கொண்டிருந்த போதிலும், அவர்களே ஒவ்வொருவரிடமும் மதினி அழாதீங்க… அம்மாவுக்குத் தான் வயசாயிட்டே. அழாதீங்க என்று சமாதானம் செய்து கொண்டிருந்தார்கள்.

மருமகள்கள் உண்மையான அன்போடு அழுது கொண்டிருக்கும் அளவிற்குப் பெருமை பொன்னம்மாள் ஆச்சியை விட்டால் வேறு யாருக்குத் தான் கிடைக்கும்? அதைவிட உண்மை, பொன்னம்மாள் ஆச்சியைப் போல அனைவரிடமும் அன்போடு நடந்துகொள்ளும் ஒருவரை எவர்தான் வெறுப்பர்? யாருக்குந் தெரியாமல் என் கண்ணிலிருந்தும் உப்புநீர் வழிந்தோடிருந்தது.

காங்கிரஸ் ஏன் RSS ஐத் தடை செய்யவில்லை?

இரு தினங்களுக்கு முன்பாக நண்பர்கள் இணைந்து அரசியல் பேசிக் கொண்டிருந்த போது குழுவில் ஒரு இஸ்லாமிய நண்பரும் இருந்தார். அப்போது ஒரு நண்பர் பாஜக ஆட்சியில் RSS போன்ற இந்து அமைப்புகள் தங்கள் இஷ்டத்திற்கு அதிகமாகப் பேசுகிறார்கள் என்று சொன்னபோது, இதை எங்களுடன் இருந்த இஸ்லாமிய நண்பர் மறுத்தார் என்பதுதான் ஆச்சர்யமான உண்மை.

அவர் சில கேள்விகளை கேள்வி எழுப்பிய இந்து நண்பரிடம் தொடுத்தார். அவர் பேசியதன் சாராம்சம் இதுதான்.

1. RSS தலைவர் மோகன் பகவத் இந்தியா இந்து ராஷ்டிரா என்ற கருத்தை ஏதோ இன்று பேசுவது போல சொல்வதைக் காட்டிலும் அபத்தம் வேறேதுமில்லை.

2. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அவர் பங்கெடுத்தக் கூட்டங்களில், விழாக்களில் இன்னொரு ஆட்சி இருக்கிறது என்பதற்காகத் தமது கொள்கையை எங்கும் மாற்றிப் பேசி இருப்பாரா? அப்போதும் அவர் இந்தியாவை இந்து ராஷ்டிரம் என்று சொல்வதே பெருமை என்று பேசினார், பேசி இருப்பார். RSS ஒருபோதும் தமது பார்வையை ஆட்சிகளுக்குப் பயந்து மாற்றிக் கொண்டுள்ளது என்பதை எவரும் நம்பப்போவதில்லை.

3. கடந்த UPA ஆட்சியில் கம்யுனிஸ்ட் கூட முதல் ஐந்து வருடங்களுக்குக் கூட்டணியில் இருந்தது. அவர்கள் ஏன் RSS என்ற அமைப்பை இந்திய மக்களை மத அடிப்படையில் பெரும்பான்மை பலத்தைக் காட்டி நாட்டில் பிளவை உண்டு பண்ணுகிறது என்று சொல்லி நாடு முழுவதும் RSS ஐ தடை செய்து மதச்சார்பின்மையை நிருபித்திருக்கலாமே! போலி மதச்சார்பின்மையைப் பேசுபவனுக்கும், போலி சமத்துவம் பேசுகிற கட்சிகளும் செய்கிற ஏமாற்று வேலைக்கு சின்ன உதாரணம், விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு மட்டும் இதே காங்கிரஸ் ஆட்சி தடை நீடித்ததே அது ஏன்?

4. காங்கிரஸ் அரசு மட்டும் ஊழல் செய்யவில்லை. இந்தியாவையே ஒரு corrupt country ஆக ஆக்கி வைத்திருந்தது. அதனால்தான் வரலாறு காணாத தோல்வியை பாராளுமன்றத் தேர்தலில் பெற்றது. பாஜகவின் மோடி அரசு ஊழல் வழக்குகளில் சிக்காமல் தேச வளர்ச்சியை உறுதி செய்தாலே போதும். ஏனெனில் என்னைப் பொறுத்தவரையில் இஸ்லாமியர்கள் தமக்கான இட ஒதுக்கீட்டையோ மற்ற சலுகைகளையோ பாஜக பிடுங்கி விடும் என நான் நம்பப் போவதில்லை. பாஜக இதுவரை மிகத் தெளிவாகவே நிலக்கரி ஏலம் என அனைத்திலும் முடிந்தவரை transparency செயல்படுகிறது.

5. ஆங்காங்கே மத அடிப்படையிலான குரல்கள் எழுவது இந்தியாவிற்கு ஒன்றும் புதிதல்ல. ஆகவே இந்து குரல்கள் இன்று தான் ஆடுகிறது என்பது ஊடகங்களால் பெரிது படுத்திப் பேச உதவுகிற அருமையான சமாச்சாரம் என்பதால் தான் ஏதோ, இப்போதுதான் மோகன் பகவத் இந்தியா இந்து ராஷ்டிரம் என்ற குரலில் பேசுவது போல சொல்வதைக் காட்டிலும் அபத்தம் வேறெதுவும் இருக்க முடியாது என்றார் அந்த முஸ்லிம் நண்பர்.

நாலு குழந்தைகள் பெற்றுக் கொள்ளக்கூடாதா?

இஸ்லாமிய நண்பரின் விளக்கங்கள் பற்றிய பார்வையே இந்தப்பதிவின் நோக்கம். அவருடன் ஏற்பட்ட ஒரு அனுபவத்தையும் இங்குக் குறிப்பிட்டாக வேண்டும். சாக்சி மகாராஜ் ஒவ்வொரு இந்து பெண்ணும் நான்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற போது, அவரிடம் இது குறித்து சில கேள்விகளை நான் கேட்ட போது அவர் சொன்ன பதில்கள் இவைதான். அவர் சொன்ன கருத்துகளில் முரண்படுபவர்கள் இங்கு உங்கள் பார்வையை முன்வைக்கலாம்.

நான்: “சார்… சாக்ஷிமகாராஜ் என்பவர் ஒரு இந்து பெண் நான்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்வது சரியா… தவறா “ என்றேன்.

அவர்: இந்து பெண் என்ற வார்த்தையை எடுத்து விட்டு, இந்தியக் குடும்பங்கள் என்று பார்த்தால் அவர் சொல்வது ஒரு விதத்தில் சரிதான் என்றார்.

நான்: ஒரு பெண் எத்தனைக் குழந்தைகளைப் பெற வேண்டும் என்பதைப் பெண் தான் தீர்மானிக்க வேண்டும், பெண்ணின் சுதந்திரத்திலும் முடிவிலும் தலையிடும் ஆணாதிக்கம் என்று பெண்ணியம் பேசுபவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில்: இல்லை. சாக்சி மகாராஜ், பெண்கள் குழந்தை பெறுவதால் தான் ஒரு பெண்ணை வைத்து சொல்லி இருக்கிறார் என்றே பொருள் கொள்ள வேண்டும். அவர் ஒவ்வொரு குடும்பமும் நான்கு குழந்தைகளைப் பெற வேண்டும் என்று சொன்னதாகவேப் பொருள் கொள்ள வேண்டும். அவ்வாறு பார்த்தால் இந்தியக் குடும்பக் கட்டமைப்பில் நான்கு குழந்தைகளுக்கு முறையான கல்வி, குடும்பச் செலவு என அனைத்தும் ஆணின் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்பு , ஆகவே இன்றைய நிலையில் ஒவ்வொரு ஆணுக்கும் இது மிகப் பெரிய சுமை என்று ஏன் எந்தப் பெண்ணியம் பேசுபவர்களும் பேசுவதில்லை என்றார். ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒன்றை வைத்து தமது பக்க நியாயம் பேச வேண்டும். அதன் ஒரு பகுதியே இது பெண்ணின் பிரச்சினை என்று சுருக்கிப் பார்க்கும் பெண்ணியவாதிகளின் கருத்துகள் என்றார்.

நான்: சார்… எப்படி பார்த்தாலும் நான்கு குழந்தைகளை இந்த globalized காலத்தில் பெற்றுக் கொள்ளச் சொல்வது சுமை தானே, அதை சரி என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்.

அவர்: இப்போதும் சொல்கிறேன். இந்துவிற்கு மட்டும் சொன்னதாகக் கருதாமல் இந்திய சமூகத்திற்கு என்று எடுத்துக் கொண்டால் அவரின் கருத்தில் தவறில்லை என்பதே எனது கருத்து. நான்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது சுமை என்றால், இன்று ஒரு குழந்தையோ, இரு குழந்தையோ பெற்றுக் கொள்ளும் பெற்றோர்கள் குழந்தைகளுக்குத் தேவைக்கு அதிகமாக வாங்கிக் கொடுக்கிறார்களே? தேவையை மட்டும் பூர்த்தி செய்தால் என்று ஒரு பெற்றோர் நினைத்தால் நான்கு குழந்தைகள் என்பது சுமையல்ல. குழந்தைகளுக்கு தேவைக்குப் பதிலாக விருப்பத்திற்காகவும், என்னுடைய பிள்ளையின் அனைத்து ஆசைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுகிறேன் என்பதை பெருமையாகக் கருதுவதுதான் தவறு. globalized உலகத்தில் ஒரு குழந்தை பெற்றுக் கொள்கிற பெற்றோர்கள் தான் இறுதிக் காலத்தில் தனித் தீவுகளாக விடப்பட்டுள்ளார்கள் என்பதை இன்றுள்ள முதல் தலைமுறை உணராது. அவர்கள் தங்கள் குழந்தைகள் செல்லுமிடத்திற்குப் போக விரும்பாமல் போனாலோ, அவர்களின் ஒற்றை எண்ணிக்கை என்ற தாரக மந்திரத்தில் வெளிவந்த குழந்தை எதிர்காலத்தில் இவர்களை அதிகம் கவனிக்காமல் போனால் அதிகமாக மன உளைச்சலுக்கு ஆளாகப் போவது இந்தப் பெற்றோர்களே! அதிகக் குழந்தைகளோடு பெற்ற காலங்களில் இறுதிக் காலத்தில் தமக்கு முடியாத வயதில் ஏதேனும் ஒரு குழந்தை தமது சுகவீனத்தைப் புரிந்து தமக்கு பரிவு காட்டும். ஏதோ ஒரு குழந்தையின் அரவணைப்பில் இறுதிக் காலத்தைக் கழிக்கும் நிலையை இன்றைய தலைமுறை எதிர்காலத்தில் உணராமல் போகலாம். தமக்கான தேவைக்குப் பணம் சேமிப்பது மட்டுமே இறுதிக் காலத்திற்குப் போதுமானது என்று நினைப்பவர்கள் இறுதியில் தாம் அனாதையாக்கப் பட்டுள்ளோம் என்பதை உணர்வது மிகுந்த வலியுடன் கூடியது. ஆகையால் ஒற்றைக் குழந்தை என்பதைத் தான் ஏற்றுக் கொள்ள முடியாது, நான்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே சரி.

பள்ளி நிர்வாக முறையும் சுய அனுபவமும்

பள்ளிக்கூட நிர்வாகம் மற்ற நிர்வாக முறைகளோடு ஒப்பிட்டால் மிகவும் தரமற்றதாகவும், அகங்காரத்துடனும் செயல்படும் என்பதற்கு இன்றையை அனுபவம் மீண்டும் ஒரு பாடம் என்பதை உணர்ந்தேன். இன்று வேறொரு பள்ளிக்குக் குழந்தைகளை மாற்றலாம் என எண்ணி தேர்விற்கு அழைத்துச் சென்றேன். 50 ரியால் கொடுத்துத் தேர்விற்கான விண்ணப்பமும் நிரப்பிக் கொடுத்தேன்.

தேர்வு எழுதுகிற குழந்தைகளின் பெற்றோர் பிப்ரவரி 18 ஆம் தேதி அழைத்து உங்கள் குழந்தையின் பெயர் shortlist ல் உள்ளதா என அழைத்துக் கேளுங்கள் என்றார் ஒரு ஆசிரியையும், நிர்வாகி ஒருவரும். நான் சில யோசனைகளை முன் வைத்த போது, மிகுந்த அதிகாரத்துடனும், இதுதான் மானேஜ்மெண்ட் டிசிஷன். அதனால் நீங்களே call செய்யுங்கள் என்ற பதிலே கிடைத்தது.

நான் அவர்களிடம், நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒவ்வொரு வகுப்பிற்கும் தேர்வு எழுதுகிறார்கள். நீங்களோ ஒரு வகுப்பிற்கு 20 மாணவர்கள் வீதம்தான் தேர்வு செய்வோம் என்கிறீர்கள். பின்னர் எதற்கு பெற்றோர்களை அழைக்கச் சொல்கிறீர்கள்.

1. உங்கள் பள்ளிக்கூட இணையதளத்தில் shortlisted மாணவர்களைப் பற்றி போட்டால் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

2. நம்பரை விண்ணப்பத்தில் எழுதியுள்ளோம். நீங்களே வகுப்பு வாரியாக குரூப் மெசேஜோ, தனி நபர்களுக்கோ தேர்வானவர்களைப் பற்றி அனுப்பலாம்.

3. இருபது மாணவர்களின் பெற்றோருக்குப் பதில் சொல்வதற்குப் பதிலாக நூற்றுக்கணக்கான மாணவர்களின் பெற்றோர்கள் உங்களைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்வது தொல்லையும், தேவையற்றதும் தானே என்றேன்.

அதற்குத் தான் மானேஜ்மெண் டிசிஷன் என்ற பதில் கிடைத்தது. பள்ளி நிர்வாகமும் சரி, பள்ளி மேலாளரில் ஆரம்பித்து முதல்வர் என பெரும்பாலும் அவர்கள் முடிவே சரியென செயல்படுவதை பார்த்து வருகிறேன். இன்றைய தொழில் நுட்பத்திற்குத் தகுந்தாற்போல திருத்திக் கொள்வார்களா எனத் தெரியவில்லை.

பி.கு: இந்தப் பஞ்சாங்கம் ஒரு பக்கம் இருக்கட்டும். இன்று எனது குழந்தைகள் படிக்கும் delhi public school க்கு நடிகரும் தற்போதைய பாஜக எம்பியுமான சத்ருகன் சின்ஹா சிறப்பு விருந்தினராக வருகிறார். கடந்த வருடங்களில் கபில்தேவ், அசாருதீன் என பல முக்கியப் புள்ளிகள் சிறப்பு விருந்தினராக வந்துள்ளனர். இந்த வருடம் எனது மகளும் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறாள் என்பதுதான் பள்ளியைப் பொருத்தமட்டில் இன்று எனக்கு மகிழ்ச்சியான செய்தி.

கல்வி பற்றிய இந்திய மனநிலை:

கல்வி பற்றிய இந்திய மனநிலை:

நேற்று அலுவலகத்திலிருக்கும் போது கீழே விழுந்திருந்த புத்தகத்தைத் தெரியாமல் மிதித்து விட்டேன். நம்முடைய அனிச்சைச் செயலான புத்தகத்தைத் தொட்டு கும்பிட்டு விட்டு, அழுக்கைத் துடைத்து விட்டு மேலே எடுத்து வைத்தேன். அதைப் பார்த்துக் கொண்டிருந்த வேற்று நாட்டு நண்பர்,
“எதற்காக புத்தகத்தைத் தொட்டு இப்படி கன்னத்தில் போட்டுக் கொண்டாய்” என்றார்.

“அது படிக்கிற புத்தகம்… எங்கள் நாட்டில் புத்தகத்தையோ , ஏதேனும் நோட்டையோ மிதித்து விட்டால், அறிவு பெருகாதோ என்ற எண்ணத்தில் தவறை மன்னிக்க வேண்டுமென கும்பிடுவோம் என விளக்கமளித்தேன்.

“ஏ.. இது காமெடியா இருக்கு.. இதுக்கும் அறிவுக்கும் என்ன இருக்கு என்றான்.”

“உண்மைதான். அதை மிதிப்பதால் என் அறிவு குறையாது. ஆனால் நாங்கள் வளர்க்கப் பட்ட விதமும், எங்கள் நாட்டின் வழக்கமும் அப்படி” என்றேன்.

புருவத்தை லேசாகச் சுருக்கியவனிடம், “எங்கள் நாட்டில் வறுமை காரணமாகக் குழந்தைகளுக்குக் கல்வியைக் கொடுக்க முடியாத தந்தைகளும் உண்டு. கெட்ட பழக்க வழக்கங்களால் கல்வியைக் கொடுக்கும் கடமையில் தவறிய தந்தைகளும் உண்டு. ஆனால், இந்தியாவின் ஒட்டு மொத்த மனட்சாட்சியும் கல்வியைத் தெய்வமாகவே பார்க்கும் குணம் கொண்டது. எப்படியாவது தங்கள் குழந்தைகள் நிறைய படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்ற பேராவல் கொண்ட பெற்றோர்கள் நிறைந்த சமூகம்.. எங்கள் குழந்தைகளுக்கும் புத்தகத்தை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதை சிறு வயதிலேயே சொல்லிக் கொடுப்போம்” என்றேன்.

“அப்படியா… எனக்கு இது ரொம்பவே புதிதாக இருக்கிறது என்றான்.”

“ஆம்.. நாங்கள் கல்விக்கென ஒரு தெய்வத்தை வேண்டி ஒருநாள் அதற்காகவே சிறப்பு பூஜையே பண்ணுவோம் என்றேன். “

அவன் வேற்று மதமும், வேற்று நாட்டைச் சேர்ந்தவன் என்றாலும், என்னிடம் உண்மையிலேயே நான் வேடிக்கைக்காகவே கேட்டேன். ஆனால் உன் செய்கைக்குப் பின்னால் இருக்கும் கல்வியைத் தெய்வமாக வணங்கும் முறை எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. நல்ல விஷயம் என்றான். இந்தியா மிகப் பெரிய கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் கொண்ட நாடு என்பதை அவன் புரிந்து கொண்டான். ஆனால், மதத்தை துவேசிப்பவர்களுக்கும், பகுத்தறிவின் பெயரால் குதர்க்கமாகக் கேட்பவர்களுக்கும் தான் இந்தியாவின் ஒட்டு மொத்த மக்களின் கூட்டு மனட்சாட்சி எதற்காக ஒவ்வொரு விஷயத்தையும் செய்கிறது என்பதைப் புரியாதவர்களாக ஆக்கியுள்ளது.

I don’t know : (எனக்குத் தெரியாது)

I don’t know :

 i dont know

I don’t know. எனக்குத் தெரியாது. இதுதான் மனிதர்கள் பெரும்பாலும் உபயோகிக்கத் தயங்கும் கடினமான வார்த்தை. கனமான வார்த்தையாகவும் பார்ப்பதால்தான் கடினமாக உள்ளது.

ஒரு துறையில் அனுபவம் பெற்ற பிறகு துறை சார்ந்து எழுப்பப்படும் கேள்விகளுக்குத் தான் “எனக்குத் தெரியாது” என்ற பதிலைத் தரத் தயக்கம் காட்டுகிறார்கள். அவ்வாறு சொல்வதன் மூலம் இவருக்கு இது தெரியாது என மற்றவர்கள் தரக்குறைவாக எடை போடுவார்களோ என்ற அச்சமே பிரதானமான  காரணம். அதிலும் கூர்ந்து கவனித்தால் “எனக்குத் தெரியாது” என்ற பதிலை தன்னைவிட அனுபவத்தில் குறைந்தவர்கள் கேட்டால் பெரும்பாலும் சொல்ல மாட்டார்கள்.

பள்ளிகளில் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலோர் தனக்குத் தெரியாத கேள்வியாக இருந்தால் பதில் எழுதாமல் விடுகிறார்களா என ஆய்வு செய்தால் அத்தகைய மாணவர்கள் மிக அரிதாகத் தான் இருப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் வகுப்பில் இது சம்பந்தமாகக் கேள்விப்பட்டது அல்லது கேள்விக்குத் தொடர்பான வார்த்தைகளுக்கு இணையான ஏதாவது பதிலை தம்முடைய ஞாபகத்திற்குக் கொண்டுவந்து எழுதி விடுவதைப் பார்க்கலாம்.

ஆசிரியர்கள் அறியாத/தெரியாத விஷயங்கள் பற்றி மாணவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மிக அரிதாகவே “எனக்குத் தெரியாது” என்று சொல்வதற்குப் பதிலாக “ பார்த்து விட்டு சொல்கிறேன். “ஞாபகத்தில் இல்லை” என்ற பதிலைத் தருவார்கள். பல நேரங்களில் மாணவர்களை அதிகப் பிரசிங்கித்தனமாகக் கேட்காதே என்றோ, அல்லது ஏதோ ஒரு பதிலைச் சொல்லி சமாளிப்பதைக் காணலாம்.

குறிப்பாக எதிர்காலத்தைக் கணிக்கும் ஜோசியர்களை நாம் கிண்டல் செய்வதுண்டு. ஆனால் பலதுறை நிபுணர்கள் எதிர்காலத்தைக் கணித்து சொல்வதையும் காணலாம். அதாவது பண்டிதர்கள், அரசியல் விமர்சகர்கள், அறிவாளிகள், சிந்தனையாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், பொருளாதார நிபுணர்கள், அறிவியலாளர்கள் இன்னபிற துறையைச் சார்ந்த வல்லுனர்கள் கூட எதிர்காலத்தில் என்ன நடக்கும் எனத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் யூகத்தின் அடிப்படையில், ஏதோ ஒரு கணக்கீட்டின் அடிப்படையில் ஏதாவது ஒரு கருத்தை சொல்லி வைப்பார்கள்.

கருத்தை சொல்கிறார்களா? அல்லது உளறி வைக்கிறார்களா என்பதை அறிய வேண்டுமானால் அவர்கள் கணித்த காலத்தில் சென்று பார்த்தால் மட்டுமே சரியா தவறா என சொல்ல இயலும்.

கணித்தல் அல்லது குறி சொல்லுதல் பற்றி நீல்ஸ் போர் என்பவர் இவ்வாறாகக் குறிப்பிடுகிறார். கணித்தல் என்பது மிகக் கடினமானது, அதிலும் எதிர்காலம் பற்றி கணித்தல் என்பது’ என்கிறார். அவ்வாறு எதிர்காலத்தில் கணிப்பது நடக்குமா எனத் தெரியாவிட்டாலும் வல்லுனர்கள் தமக்குத் தெரியும் என்பது போல ஏதாவது ஒன்றை சொல்லி வைப்பார்கள்.

ஒரு இலக்கியவாதி போகிற போக்கில் இந்தியைப் பள்ளிகளில் கொண்டுவந்தால் தமிழ் இலக்கியம் ஐம்பது ஆண்டுகளில் அழிந்து விடும் என்று சொல்லலாம். இன்னொருவர் ஆங்கில வழிக் கல்வியைப் படிப்பதால் தமிழ் அழியும் என்று ஆருடம் செய்யலாம். இதை அறிந்து கொள்ள நாம் ஐம்பது வருடங்கள் இருக்கமாட்டோம் என்கிற தைரியத்தில் சொல்கிறார்களோ?

பிலிப் டெட்லாக் என்பவர் ஓர் ஆய்வை மேற்கொண்டார். அவர் அரசியல் பண்டிதர்கள், பொருளாதார நிபுணர்கள், மிக உயரிய அரசு அதிகாரிகள், திட்டம் வகுப்பவர்கள் என பல்துறையைச் சேர்ந்தவர்களில் 300 பேரைத் தேர்ந்தெடுத்து அடுத்த இருபது ஆண்டுகளில் குறிப்பிட்ட சில நாடுகள் பொருளாதாரத்தில், முன்னேற்றத்தில், மக்கள் நலனில் என ஆயிரம் கேள்விகளைக் கேட்டிருந்தார்.

நிபுணர்களிடம் உங்கள் கணிப்பை சொல்லுங்கள் என வேண்டுகோள் வைத்தார். அதில் எவரும் “எனக்குத் தெரியாது” என்ற பதிலைத் தரவில்லை. அவர்கள் பதில் அளித்ததன் மூலம் , முதலில் ஒரு முடிவுக்கு வந்தார். “ அவர்கள் அறிந்ததைக் காட்டிலும் எல்லாம் தெரிந்தவர்கள் போல காட்டும் மேட்டிமைத் தனம் தெரிவதை” கண்டுகொண்டார். இதை இன்று எந்த சமூகப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, அது கல்வியாகட்டும், பொருளாதாரம் சார்ந்த பிரச்சினையாகட்டும், விலையேற்றம், வரி, கட்டமைப்பு, அரசின் திட்டங்கள் என அனைத்திற்கும் சமூக ஆர்வலர்களாக வலம் வருபவர்கள் , எழுத்தாளர்கள் என பலரும் “எனக்குத் தெரியாது” என சொல்வதற்குப் பதிலாக தாம் படித்த, அனுபவங்களின் வாயிலாகவே எந்த பிரச்சினைக்கும் தயங்காமல் கருத்து சொல்வதை அன்றாடம் ஊடகங்களில் நாம் காண்கிறோம்.

மீண்டும் டெட்லாக்கின் ஆய்வு முடிவுகள் பற்றி காண்போம். நிபுணர்களும் குரங்குகளும் ஏறத்தாழ ஒன்றாகவே எதிர்காலத்தைக் கணித்துள்ளது என கிண்டலாகக் குறிப்பிடுகிறார். குரங்குகளையும் மனிதர்களையும் நான்கில் ஒன்றைத் தேர்வு செய்யுங்கள் என சில கடந்த கால வரலாறைப் பற்றியோ, அறிவியல், இன்னபிற நடப்பு உண்மைகளின் அடிப்படையில் கேள்விகளை வைத்தால் மனிதர்களைக் காட்டிலும் குரங்குகள் பல நேரங்களில் சரியான விடையைத் தருகின்றன என பலமுறை நடந்துள்ளதோடு ஒப்பிட்டு , அதைப் போலவே உள்ளது நிபுணர்கள், பலதுறை பண்டிதர்கள் எதிர்காலம் பற்றி கணித்துச் சொல்லுதலும் என்ற முடிவை இருபது ஆண்டுகள் கழித்து அறிந்து கொள்கிறார். இதன் மூலம், “எனக்குத் தெரியாது” என்ற வார்த்தையை உபயோகிக்கத் தயங்குவதுதான் என்று சொல்கிறார்.

இதைப் போலவே இன்னொரு ஆய்வை CXO Advisory Group ம் , பங்குச் சந்தை நிபுணர்களை வைத்து 6000 க்கும் அதிகமான எண்ணிக்கையில் கணிக்கச் சொன்னார்கள். அவர்களின் கணிப்பு 47% தான் சரியாக இருந்துள்ளது என்பது தெரிய வந்தது. இந்த நிபுணர்கள் தமது துறையைச் சார்ந்த விடயங்களில் எதிர்காலம் பற்றி தயங்காமல் எதிர்காலத்தில் இப்படி நடக்கும் என்று சொல்வதற்கு மூல காரணமாக இருப்பது “ அவர்களின் அதீத நம்பிக்கையே”. அதீத நம்பிக்கையுடையவர்கள் ஒரு காலத்திலும் “எனக்குத் தெரியாது” என சொல்வார்களா?

“எனக்குத் தெரியாது” என்று சொல்வதற்குப் பதிலாக எதிர்காலத்தைக் கணிப்பதால் சில நேரங்களில் மிகப் பெரிய வல்லுனராக நீங்கள் அறியப்படலாம். பங்குச் சந்தையில் எதில் முதலீடு செய்ய வேண்டுமென ஒரு நண்பர் தயங்காமல் ஒரு கருத்தை சொன்னார். நீங்கள் இந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்தால் அடுத்த 18 மாதத்தில் மூன்று மடங்கு உங்கள் பங்குகள் பெருகி இருக்கும் என்றார்.

எப்படி இவ்வளவு தைரியமாக சொல்கிறீர்கள் என்று கேட்டேன். என்னுடைய கணிப்பின் படி நடந்து விட்டால் “என்னை மிகப் பெரிய அளவில் கொண்டாடுவார்கள்” என்றார். என்னுடைய கணிப்பிற்குப் பணம் தரவும் தயாராக இருப்பார்கள்.

ஒருவேளை நடக்காமல் போனால் என்ன செய்வீர்கள்?

கவலையே வேண்டாம். ஒன்று  என்னை மறந்திருப்பார்கள். பெரும்பாலும் மக்கள் தவறான கணிப்புகளை மறந்திருப்பார்கள். சரியான கணிப்பை மட்டும் எடுத்துக் கொண்டே வாழ்க்கையை நடத்த விரும்புவார்கள். என்னையும் இவன் பண்டிதன் அல்ல போல. இவனும் பத்தோடு ஒண்ணு தான் போல என நினைத்துக் கொண்டு மற்ற வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விடுவார்கள்.

எனக்குத் தெரியாது என்று சொல்வதைக் காட்டிலும் எதையாவது நம் பதில் அல்லது கருத்து என்ற அடிப்படையில் சொல்வதே தன்னைப் புத்திசாலியாக அடையாளப்படுத்தும் என்றே சாதாரணமானவர்களிலிருந்து பண்டிதர்கள் வரை நினைக்கிறார்கள்.

நானெல்லாம் எனக்குத் தெரியாததை தெரியாது என்று சொல்பவர்களுக்காக :

எனக்குத் தெரியாது என்பதை யாரிடம் சொல்வார்கள் எனப் பார்த்தால் தான் யாரிடம் report பண்ணுகிறோமோ அவரிடம் மட்டும் எனக்குத் தெரியாது என்று சொல்வதைக் காணலாம். பணி சார்ந்த இடங்களில் எனக்கு முறையான பயிற்சி தந்தால் பண்ண இயலும் என்றும், முயற்சி செய்கிறேன் முடியவில்லைஎன்றால் உதவிக்குத் தெரிந்தவர்களை அனுப்புங்கள் என சொல்லுவதன் பின்னால், ஒரு விஷயம் ஒளிந்து கிடக்கிறது. தமது வாடிக்கையாளர்கள் தம்மை முட்டாள் என சொல்வதற்கு முன்பாக தன்னுடைய மேலதிகாரியிடம் சொல்லி விட்டால் பிரச்சினை தீர்ந்தது என நினைப்பதே அடிப்படைக் காரணம்.

மேலதிகாரி அறிவுரை செய்யும் போது ரொம்ப எளிதாக உபயோகிக்கும் சொல், “It is easy to say I don’t know; but rather saying to I don’t know, please try to say positively that I will try and I can”. இதை மேலதிகாரி சொல்வதன் பின்னால் கிடக்கும் விஷயம் அதைவிட புரிந்து கொள்வதற்கு மிக எளிதானது. வேலையை எவனையாவது வைத்து முடித்து விட்டால் போதுமென நினைப்பதே!

எனக்குத் தெரியாது என்பதை சொல்வதால் தவறு ஒன்றுமில்லை. ஆனால் பணி செய்யுமிடங்களில் எனக்குத் தெரியாது என்று சொல்கிற கையோடு முயற்சி செய்கிறேன் என சொல்வதன் மூலம் நீங்கள் உங்கள் மேலதிகாரியின் மதிப்பிற்குரியவராகிறீர்கள்.

“எனக்குத் தெரியாது” என்ற சொல்லை உபயோகிக்கத் தயங்குவதை இவ்வாறு சொல்லி நிறைவு செய்யலாம். “தயக்கம்” , “அச்சம்” “அவமானமாகக் கருதுதல்” “தரக்குறைவாக எண்ணுவார்கள் என நினைத்தல்” “ அதீத நம்பிக்கை” என்று சொல்லலாம். எதிர்காலம் கணிக்கும் நிபுணர்களை இப்படியும் சொல்லலாம். “ இவன் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல” என்றும் சொல்லி வைப்போம்.

அவன் :

அவன் நன்றாகப் பேசுவான். அவனால் அரசியல், சமூகம், வரலாறு, சினிமா, விளையாட்டு, கலை, விஞ்ஞானம், எலெக்ட்ரானிக்ஸ் என அனைத்து விஷயங்களைப் பற்றியும் நண்பர்களிடத்து எளிதாக பேச இயலுகிறது. அவன் பேசுகிற விஷயங்களில் பத்தில் ஒரு பங்கிற்குக் கூட அவனுடைய நண்பர்களால் பேச இயலாது. விஷயம் எளிதானது. அவர்களின் அறிவு சினிமா, விளையாட்டு, மொபைல் போனில் விளையாடுதல் மற்றும் சில பொழுது போக்குகளோடு அவர்களின் நாட்கள் கழிந்து விடுகின்றன.

இவனாக சில நேரங்களில் சில விஷயங்களை நண்பர்களோடு விவாதிக்கலாம் என எடுத்தால் கூட எதிர்த் தரப்பில் பேச ஒருவருக்கும் தெரிந்திருக்காது.

இது தெரியாதா எனக் கேட்டால், எனக்கு நேரமே இல்லை… ரொம்ப பிஸி என நண்பர்களும், உனக்கு எப்படி இவ்வளவு நேரம் கிடைக்கிறது என நண்பர்கள் இவனிடமும் மாற்றி மாற்றி கேட்டு விட்டு எதையும் விவாதிக்காமல் அமைதியாகி விடுவார்கள்.

அனைவருக்கும் அறிந்த விஷயங்களிலும் விவாதங்கள் நிகழும். அப்போது இவனது வாதத் திறமையைக் கண்டு , “நீ ஏன் விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது?” என்றோ “ நீ ஏன் மேடையில் பேசக்கூடாது” என்றோ நண்பர்கள் சில நேரங்களில் கேள்வி எழுப்புவதுண்டு.

எனக்கு மேடையில் பேச ரொம்ப கூச்சம். சாதாரணமாக நண்பர்களோடு விவாதிக்கும் போது யதார்த்தமாக விவாதிக்கிறேன். கத்திப் பேசலாம். உணர்ச்சியை உள்ளபடியே வெளிக்காட்ட இயலுகிறது. ஆனால் மேடையில் பேசும்போது கூச்சமும், பயமும் சில நேரங்களில் போலியாகவே உணர்ச்சி வெளிப்பாட்டைக் கொட்டி பேச வேண்டும். அது தன்னால் இயலாது என்றான்.

பேசத் தானே கூச்சமாக, பயமாக இருக்கிறது.. நீ பேசுகிற விஷயத்தை எழுதலாம்தானே! இந்த யோசனை நண்பர்களால் கொடுக்கப்பட்ட பிறகே அவனும் , நாம் எழுதினால்தான் என்ன என்று யோசிக்க ஆரம்பித்தான்.

மனதில் தோன்றும் , அறிந்த , கற்ற விடயங்களை உலகிற்கு வழங்குவது மகத்தான செயல் என்று உணர்ந்தவன் தனக்கென பிளாக் ஒன்று ஆரம்பித்தான். முதல் கட்டுரை சமூகத்திற்கு பலனளிக்கக் கூடிய கட்டுரையாக, மக்களின் கல்வி சார்ந்து எழுதுவோம் என்று முடிவெடுத்து எழுத ஆரம்பித்தான்.

அரசின் கல்விக்கொள்கையையும், அரசே ஆங்கில வழிக் கல்விக்கு உயர் கல்வியில் கொடுக்கும் பிரதிநிதித்துவம் கொடுப்பது தவறா சரியா என எழுத ஆரம்பித்தான். நான்கு வரிகள் வரை எழுத முடிந்தவனுக்கு அதன் பின்னர் அதை எப்படி எழுதுவது என்று தெரியவில்லை.

பேசும் போதும், விவாதிக்கும் போதும் மணிக்கணக்காக விவாதிக்கிற எனக்கு ஏன் நான்கு வரிகளைத் தாண்டி எழுத முடியவில்லை? அவ்வாறானால் விவாதங்களில் அரைத்த மாவைத் தான் அரைக்கிரோமா? எனக்குத் தெரிந்தது இவ்விடயத்தில் இவ்வளவுதானா? பெரும்பாலான விவாதங்களை நண்பர்களோடு செய்த போது தலைப்பிற்கும், விவாதம் போகிற திசைக்கும் எந்த சம்பந்தமுமில்லாததை மெல்ல உணர ஆரம்பித்தான். கட்டுரையை எப்படி படைப்பது? எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்? கட்டுரைக்கு எது தேவை? என்பதில் குழப்பமடைந்தான்.

கட்டுரை பற்றி பல அறிஞர்கள் எழுதியதைப் படிக்க ஆரம்பித்தான். ஒரு சின்ன கட்டுரையைப் படைக்க ஐம்பதுக்கும் அதிகமான கட்டுரைகளையும் அரசின் கொள்கைகளையும் படிக்க வேண்டியிருந்தது. அதன் பிறகே ஒரு வழியாகக் கட்டுரையை எழுத முடிகிறது என்பதை முதல் கட்டுரையை முடித்த போது முழுமையாக உணர்ந்திருந்தான். இவ்வளவு நாள் நமக்குத் தெரிந்தது எல்லாம் ஊடகங்களில் வரும் செய்தியறிவின் அடிப்படை மட்டுந்தான். ஆனால் அறிவு பெற தேடல் அவசியம் என்பதை உணர்ந்தான்.

அனுபவங்கள்,கதைகள் தவிர்த்த இதர கட்டுரைகளுக்கு மெனக்கெடல் கொஞ்சமாவது வேண்டுமென்பதை அறிந்து கொண்டான்.

ஆரம்பத்தில் அவனது கட்டுரைகள் படிக்கப்படுகிறதா என்பதை பிளாக்கில் பார்த்தவனுக்கு அதிர்ச்சி. ஐம்பது பேர் கூட படிக்கவில்லை. ஆனால் அவனுக்குள் எழுதுவது பிடிக்க ஆரம்பித்திருந்தது. நண்பர்களிடம் தான் இதுகுறித்து கட்டுரை எழுதியுள்ளேன். சமூக வலைத்தளங்களில் கூட பகிர்ந்துள்ளேன். படித்தீர்களா என நண்பர்கள் படிக்கிறார்களா? என அறிய விரும்பியவனுக்குக் கிடைத்த பதில் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது.

நீ ரொம்ப பெரிதாக எழுதுகிறாய். நானெல்லாம் மேலும்… Continue Reading, See more… என வந்துவிட்டால் அதைப்படிப்பதில்லை என்ற பதிலே அவனுக்குக் கிடைத்தது.

சொல்ல வர்றதை ரத்தினச் சுருக்கமாக சொன்னால் போதாதா என்றும் கிண்டல்கள் வந்தன. சில கேலியாக, மொக்கையாக, அர்த்தமற்ற விடயங்களை பகடியாக அவன் எழுதும் போது லைக்குகளும், கமெண்டுகளும் வந்து குவிந்தன.

அவன் மக்கள் அறிந்து கொள்ளவேண்டுமென நான்கு நாட்களாக பல இணைப்புகளில் அறிந்ததையும், தனது சொந்தப் பார்வையையும் வைத்து ஆழமாக எழுதிய கட்டுரைகள் அலமாரியில் தூங்கும் புத்தகங்களாக மட்டுமே கிடந்தது. எந்த கட்டுரையெல்லாம் மக்களால் படிக்கப்படவில்லையோ அக்கட்டுரைகள்தான் அவனுக்கு மன நிறைவைத் தந்தவை என்றால் நம்புவீர்களா?

தமது பிளாக்கில் எழுதுவதால்தான் நிறைய பேர் படிப்பதில்லை, இதழ்களில் வந்தால் படிப்பார்களா என எண்ணி சில கட்டுரைகள் பத்திரிக்கைகளில் வந்தன. பின்னர் தொடர்ச்சியாக பல கட்டுரைகளும் கதைகளும் எழுத ஆரம்பித்தான்.

தன்னுடைய கட்டுரை வெளிவந்ததை தானே விளம்பரம் செய்தான். நுகர்வு மனநிலை என்பது இதுதானா? விளம்பர மோகம், புகழைத் தேட அலையும் செயல் இதுதானா என தனக்குள்ளாகவே கேட்டுக் கொண்டான்.

அவ்வாறு எழும் கேள்விகள் சரியென அவனுக்குத் தெரியும். ஆனால் அனைவரும் பயன்பெறுவதற்கு எழுதிய கட்டுரைகள் படிக்க விளம்பரம் செய்வது தவறல்ல என சுய சமாதானம் செய்து கொள்வான்.

மெல்ல மெல்ல சமூகம் சார்ந்த விஷயங்களை கடுமையாக எழுதினான். அவனுக்கும் கணிசமாக வாசகர்கள் கிடைத்தார்கள். வாசகர் எண்ணிக்கை அதிகமானால் அரசியல் அழுத்தங்களும் அதிகமாகும் என்பதை அனுபவிக்கும் துர்பாக்கிய நிலையை அடைந்தான். அரசின் கையாலாத்தனம் என்ற தலைப்பில் ஆளும் அரசை எதிர்த்து கட்டுரைகள் எழுதிய கட்டுரைக்காக இடையில் ஒருவரியில் முதல் அமைச்சரின் கையாலாகத்தனம் என்ற வார்த்தை தனி நபர் தாக்குதல் என காரணம் கண்டுபிடித்து கைதுக்குள்ளானான். ஒரே நாளில் பிரபலமானான்.

இப்படியாக பல கட்டுரைகளை எழுதிக் குவித்தவனுக்கு ஒரு கட்டத்தில் அவன் கருத்து இந்த விஷயத்தில் என்னவென சொல்லவேண்டும் என வாசகர்கள் விரும்பினார்கள். ஆரம்பத்தில் தமது திறமையையும் அனுபவத்தையும் வைத்தே எழுதினான். ஒரு கட்டத்தில் சில விஷயங்களை அவன் எழுதாவிட்டால், இதுபற்றி உங்கள் கருத்தென்ன என்ற அரசியல் அழுத்தங்கள் கூடுதலாகின. ஆகையால் எல்லாவற்றின் மீதும் வெறுப்பு வந்தது. முதலில் எழுதியதை நிறுத்தினான்.

தான் தற்போது இயல்பாய் இல்லையென்பதை உணர்ந்தான். மன அமைதிக்காக எங்கோ சென்றான். ஒருவேளை இப்போது போதிமரத்தடி புத்தனாகி இருக்கக்கூடும்.