கெஜ்ரிவால் ஒரு ஆம்பிளை ஜெயலலிதா

கெஜ்ரிவால் ஒரு ஆம்பிளை ஜெயலலிதா. ஜெயலலிதாவிற்கும் கெஜ்ரிக்கும் ஒரேயொரு வித்தியாசமுண்டு. ஜெ வெளிப்படையாக தமது அதே கர்வத்தோடும் பெருமையோடும் வலம் வருவார். கெஜ்ரி ஒரு psychological politician. இந்தக்காலத் தலைமுறைக்கு ஏற்ப பசப்புகிற தலைவராகத் தம்மை முன்னிறுத்துவதும், புத்திசாலியாகத் தன்னையும் தம்முடன் இருப்பவர்களையும் காண்பித்தே மக்கள் நம்பிக்கையைப் பெற்று ஆட்சியைப் பிடித்தவர். உண்மையான கர்வத்தையும் ஆணவத்தையும் வெளிப்படையாகக் காண்பிக்க மாட்டார். நல்லவன் வேடத்திற்கு அது மிகப் பெரிய இடையூறு என்பதை அவர் நன்றாக உணர்ந்தவர்.
அவரை ஜெவுடன் ஒப்பிட காரணங்கள் உண்டு. ஜெவும் பதவி கிடைத்தவுடன் செய்த காரியங்கள் எம்ஜிஆர் காலத்தில் யாரெல்லாம் மிகுந்த புகழுடனும், அவருக்கு வேண்டியவராகவும் கட்சியின் முக்கியப் பிரமுகர்களாக அறியப்பட்டவர்களையும் தூக்கி எறிந்தவர். திருநாவுக்கரசு, ஆர்.எம்.வீரப்பன், பண்ருட்டியார், சாத்தூர் ராமச்சந்திரன், கருப்பசாமி பாண்டியன், தாமரைக்கனி என அந்தப்பட்டியல் பெரியது.

ஜெவைப் போலவே கெஜ்ரிவால் எவரெல்லாம் தமக்குக் கட்சிக்குள் இருந்தால் அணி சேர்த்து விட்டால் பிரச்சினையாகும் எனக் கருதுகிறாரோ, அவர்களை வெறுத்து தானாக வெளியேறச் செய்வதும் (புத்திசாலி அரசியல்வாதியல்லவா) அல்லது கட்சியை விட்டு வெளியேற்றவும் மௌனமாகத் தனக்கு ஆமாஞ்சாமி போடும் ஆட்களை வைத்தே காய் நகர்த்துகிறார். நகர்த்தினார்.
மது பாதுரியில் ஆரம்பித்து சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ், ஷாஜியா, அஞ்சலி தமானியா, மயங்க் காந்தி என கட்சியின் அறிவாளி முகங்களாகக் காட்டப்பட்டவர்களை சாதுர்யமாக வெளியேற வைக்கும் காரியங்களைச் செய்துள்ளார்.
#வெள்ளையா_இருக்கிறவனெல்லாம்_நல்லவனும்_இல்லை_புத்திசாலியா_நடிக்கிறவனெல்லாம்_நல்ல_அரசியல்வாதியும் கிடையாது.

காங்கிரஸ் ஏன் RSS ஐத் தடை செய்யவில்லை?

இரு தினங்களுக்கு முன்பாக நண்பர்கள் இணைந்து அரசியல் பேசிக் கொண்டிருந்த போது குழுவில் ஒரு இஸ்லாமிய நண்பரும் இருந்தார். அப்போது ஒரு நண்பர் பாஜக ஆட்சியில் RSS போன்ற இந்து அமைப்புகள் தங்கள் இஷ்டத்திற்கு அதிகமாகப் பேசுகிறார்கள் என்று சொன்னபோது, இதை எங்களுடன் இருந்த இஸ்லாமிய நண்பர் மறுத்தார் என்பதுதான் ஆச்சர்யமான உண்மை.

அவர் சில கேள்விகளை கேள்வி எழுப்பிய இந்து நண்பரிடம் தொடுத்தார். அவர் பேசியதன் சாராம்சம் இதுதான்.

1. RSS தலைவர் மோகன் பகவத் இந்தியா இந்து ராஷ்டிரா என்ற கருத்தை ஏதோ இன்று பேசுவது போல சொல்வதைக் காட்டிலும் அபத்தம் வேறேதுமில்லை.

2. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அவர் பங்கெடுத்தக் கூட்டங்களில், விழாக்களில் இன்னொரு ஆட்சி இருக்கிறது என்பதற்காகத் தமது கொள்கையை எங்கும் மாற்றிப் பேசி இருப்பாரா? அப்போதும் அவர் இந்தியாவை இந்து ராஷ்டிரம் என்று சொல்வதே பெருமை என்று பேசினார், பேசி இருப்பார். RSS ஒருபோதும் தமது பார்வையை ஆட்சிகளுக்குப் பயந்து மாற்றிக் கொண்டுள்ளது என்பதை எவரும் நம்பப்போவதில்லை.

3. கடந்த UPA ஆட்சியில் கம்யுனிஸ்ட் கூட முதல் ஐந்து வருடங்களுக்குக் கூட்டணியில் இருந்தது. அவர்கள் ஏன் RSS என்ற அமைப்பை இந்திய மக்களை மத அடிப்படையில் பெரும்பான்மை பலத்தைக் காட்டி நாட்டில் பிளவை உண்டு பண்ணுகிறது என்று சொல்லி நாடு முழுவதும் RSS ஐ தடை செய்து மதச்சார்பின்மையை நிருபித்திருக்கலாமே! போலி மதச்சார்பின்மையைப் பேசுபவனுக்கும், போலி சமத்துவம் பேசுகிற கட்சிகளும் செய்கிற ஏமாற்று வேலைக்கு சின்ன உதாரணம், விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு மட்டும் இதே காங்கிரஸ் ஆட்சி தடை நீடித்ததே அது ஏன்?

4. காங்கிரஸ் அரசு மட்டும் ஊழல் செய்யவில்லை. இந்தியாவையே ஒரு corrupt country ஆக ஆக்கி வைத்திருந்தது. அதனால்தான் வரலாறு காணாத தோல்வியை பாராளுமன்றத் தேர்தலில் பெற்றது. பாஜகவின் மோடி அரசு ஊழல் வழக்குகளில் சிக்காமல் தேச வளர்ச்சியை உறுதி செய்தாலே போதும். ஏனெனில் என்னைப் பொறுத்தவரையில் இஸ்லாமியர்கள் தமக்கான இட ஒதுக்கீட்டையோ மற்ற சலுகைகளையோ பாஜக பிடுங்கி விடும் என நான் நம்பப் போவதில்லை. பாஜக இதுவரை மிகத் தெளிவாகவே நிலக்கரி ஏலம் என அனைத்திலும் முடிந்தவரை transparency செயல்படுகிறது.

5. ஆங்காங்கே மத அடிப்படையிலான குரல்கள் எழுவது இந்தியாவிற்கு ஒன்றும் புதிதல்ல. ஆகவே இந்து குரல்கள் இன்று தான் ஆடுகிறது என்பது ஊடகங்களால் பெரிது படுத்திப் பேச உதவுகிற அருமையான சமாச்சாரம் என்பதால் தான் ஏதோ, இப்போதுதான் மோகன் பகவத் இந்தியா இந்து ராஷ்டிரம் என்ற குரலில் பேசுவது போல சொல்வதைக் காட்டிலும் அபத்தம் வேறெதுவும் இருக்க முடியாது என்றார் அந்த முஸ்லிம் நண்பர்.

நாலு குழந்தைகள் பெற்றுக் கொள்ளக்கூடாதா?

இஸ்லாமிய நண்பரின் விளக்கங்கள் பற்றிய பார்வையே இந்தப்பதிவின் நோக்கம். அவருடன் ஏற்பட்ட ஒரு அனுபவத்தையும் இங்குக் குறிப்பிட்டாக வேண்டும். சாக்சி மகாராஜ் ஒவ்வொரு இந்து பெண்ணும் நான்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற போது, அவரிடம் இது குறித்து சில கேள்விகளை நான் கேட்ட போது அவர் சொன்ன பதில்கள் இவைதான். அவர் சொன்ன கருத்துகளில் முரண்படுபவர்கள் இங்கு உங்கள் பார்வையை முன்வைக்கலாம்.

நான்: “சார்… சாக்ஷிமகாராஜ் என்பவர் ஒரு இந்து பெண் நான்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்வது சரியா… தவறா “ என்றேன்.

அவர்: இந்து பெண் என்ற வார்த்தையை எடுத்து விட்டு, இந்தியக் குடும்பங்கள் என்று பார்த்தால் அவர் சொல்வது ஒரு விதத்தில் சரிதான் என்றார்.

நான்: ஒரு பெண் எத்தனைக் குழந்தைகளைப் பெற வேண்டும் என்பதைப் பெண் தான் தீர்மானிக்க வேண்டும், பெண்ணின் சுதந்திரத்திலும் முடிவிலும் தலையிடும் ஆணாதிக்கம் என்று பெண்ணியம் பேசுபவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில்: இல்லை. சாக்சி மகாராஜ், பெண்கள் குழந்தை பெறுவதால் தான் ஒரு பெண்ணை வைத்து சொல்லி இருக்கிறார் என்றே பொருள் கொள்ள வேண்டும். அவர் ஒவ்வொரு குடும்பமும் நான்கு குழந்தைகளைப் பெற வேண்டும் என்று சொன்னதாகவேப் பொருள் கொள்ள வேண்டும். அவ்வாறு பார்த்தால் இந்தியக் குடும்பக் கட்டமைப்பில் நான்கு குழந்தைகளுக்கு முறையான கல்வி, குடும்பச் செலவு என அனைத்தும் ஆணின் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்பு , ஆகவே இன்றைய நிலையில் ஒவ்வொரு ஆணுக்கும் இது மிகப் பெரிய சுமை என்று ஏன் எந்தப் பெண்ணியம் பேசுபவர்களும் பேசுவதில்லை என்றார். ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒன்றை வைத்து தமது பக்க நியாயம் பேச வேண்டும். அதன் ஒரு பகுதியே இது பெண்ணின் பிரச்சினை என்று சுருக்கிப் பார்க்கும் பெண்ணியவாதிகளின் கருத்துகள் என்றார்.

நான்: சார்… எப்படி பார்த்தாலும் நான்கு குழந்தைகளை இந்த globalized காலத்தில் பெற்றுக் கொள்ளச் சொல்வது சுமை தானே, அதை சரி என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்.

அவர்: இப்போதும் சொல்கிறேன். இந்துவிற்கு மட்டும் சொன்னதாகக் கருதாமல் இந்திய சமூகத்திற்கு என்று எடுத்துக் கொண்டால் அவரின் கருத்தில் தவறில்லை என்பதே எனது கருத்து. நான்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது சுமை என்றால், இன்று ஒரு குழந்தையோ, இரு குழந்தையோ பெற்றுக் கொள்ளும் பெற்றோர்கள் குழந்தைகளுக்குத் தேவைக்கு அதிகமாக வாங்கிக் கொடுக்கிறார்களே? தேவையை மட்டும் பூர்த்தி செய்தால் என்று ஒரு பெற்றோர் நினைத்தால் நான்கு குழந்தைகள் என்பது சுமையல்ல. குழந்தைகளுக்கு தேவைக்குப் பதிலாக விருப்பத்திற்காகவும், என்னுடைய பிள்ளையின் அனைத்து ஆசைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுகிறேன் என்பதை பெருமையாகக் கருதுவதுதான் தவறு. globalized உலகத்தில் ஒரு குழந்தை பெற்றுக் கொள்கிற பெற்றோர்கள் தான் இறுதிக் காலத்தில் தனித் தீவுகளாக விடப்பட்டுள்ளார்கள் என்பதை இன்றுள்ள முதல் தலைமுறை உணராது. அவர்கள் தங்கள் குழந்தைகள் செல்லுமிடத்திற்குப் போக விரும்பாமல் போனாலோ, அவர்களின் ஒற்றை எண்ணிக்கை என்ற தாரக மந்திரத்தில் வெளிவந்த குழந்தை எதிர்காலத்தில் இவர்களை அதிகம் கவனிக்காமல் போனால் அதிகமாக மன உளைச்சலுக்கு ஆளாகப் போவது இந்தப் பெற்றோர்களே! அதிகக் குழந்தைகளோடு பெற்ற காலங்களில் இறுதிக் காலத்தில் தமக்கு முடியாத வயதில் ஏதேனும் ஒரு குழந்தை தமது சுகவீனத்தைப் புரிந்து தமக்கு பரிவு காட்டும். ஏதோ ஒரு குழந்தையின் அரவணைப்பில் இறுதிக் காலத்தைக் கழிக்கும் நிலையை இன்றைய தலைமுறை எதிர்காலத்தில் உணராமல் போகலாம். தமக்கான தேவைக்குப் பணம் சேமிப்பது மட்டுமே இறுதிக் காலத்திற்குப் போதுமானது என்று நினைப்பவர்கள் இறுதியில் தாம் அனாதையாக்கப் பட்டுள்ளோம் என்பதை உணர்வது மிகுந்த வலியுடன் கூடியது. ஆகையால் ஒற்றைக் குழந்தை என்பதைத் தான் ஏற்றுக் கொள்ள முடியாது, நான்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே சரி.

நிலம் கையகப் படுத்தும் சட்டம் 1:

நிலம் கையகப் படுத்தும் சட்டம் 1:

நேரு ஜி , நீங்கள் இந்த தேசத்தின் வளர்ச்சியிலும் சரி, தொலைநோக்குப் பார்வையிலும் சரி. இன்று வரை பெரியவர்களிலிருந்து குழந்தைகள் வரை ஹீரோவாகவே பார்க்கப்படுகிறீர்.உம்மைத் தான் இந்த தேசத்தின் ஹீரோவாகப் பார்க்க வைத்தார்கள். ஆனால் உமது ஆட்சியில் இந்தியாவின் நிலக் கையகப்படுத்தும் சட்டத்தை வைத்து நிறைவேற்றிய திட்டங்கள் பற்றியோ, அதனால் நிலமிழந்த மக்களைப் பற்றியோ எவரும் இங்கு துளியளவும் பேசப்போவதில்லை.

நண்பர்களே, தற்போது நடைமுறையிலுள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் சில சாதகங்களும் உண்டு. சில பாதகங்களும் உண்டு. ஒன்று மட்டும் உறுதியாக சொல்ல முடியும். நேருவின் ஆட்சிக்காலத்தில் இருந்த நிலக்கையகப்படுத்தலைக் காட்டிலும் இந்த சட்டமும் சரி. காங்கிரஸ் கடந்த வருடம் கொண்டு வந்த சட்டமும்சரி. பல்வேறுசாதகங்களைக் கொண்டது. நேருவின் காலத்தில் தான் முதன்முறையாக தனியாருக்கும் நிலம் கொடுக்கலாம் என்று சட்டம் கொண்டுவரப்பட்டது. அன்றைய காலத்தில் நேரு செய்ததுஎல்லாம் தொலைநோக்குத் திட்டங்களாக வர்ணித்தவர்கள், இன்று ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் தொல்லை தரும் திட்டங்களாகப் பார்க்க மட்டும் வைத்து விட்டார்கள். அது பற்றிய சிறு பார்வை.

இந்தியாவிற்கு நிலவுடமைச் சட்டம் என்பது காலனிய ஆதிக்க ஆட்சியின் இறக்குமதிதான். 1894 ல்தான் இந்தியாவில் நிலவுடமைச் சட்டம் அமலுக்கு வந்தது. இந்தச் சட்டத்தை ஆங்கிலேயர்கள் கொண்டு வந்ததற்கு முக்கியக் காரணம் அவர்களின் வணிகத்திற்கும் பொருட்களை சந்தைப்படுத்தவுமாகவே வந்தது. குறிப்பாக ரயில் போக்குவரத்திற்காக, ரயில் தடங்களை அமைக்க தடங்கல் வரக்கூடாது என்பதற்காக என்றும் சொல்லலாம்.

சுதந்திர இந்தியாவும் அச்சட்டத்தையே ஆரம்பத்தில் வைத்திருந்தது. நாட்டின் தொழில் முன்னேற்றத்திற்காகவும் தேச வளர்ச்சிக்காகவும் “பொதுத் தேவை” என்ற பெயரில் மக்கள் தங்கள் நிலங்களை அரசின் திட்டங்களுக்குக் கொடுக்கும் வகையில்தான் இருந்தது. ஆரம்ப காலக்கட்டத்தில் தனியார் நிலங்கள் பலவற்றை ஆக்கிரமித்துத் தான் அணைகள், இரும்பு ஆலைகள், நிலக்கரி சுரங்கங்கள், கனிம வளங்கள், நீர் மின் ஆலைகள், பெட்ரோ கெமிக்கல் ஆலைகள், பெர்டிலைசர் ஆலைகள், அனல் மின் நிலையங்கள், சிமெண்ட், பேப்பர் ஆலைகள், நாட்டின் பாதுகாப்பு வீரர்களுக்கான பயிற்சி கூடங்கள், பல்கலைக் கழகங்கள், விமான நிலையங்கள் ரயில் தொழிற்சாலைகள் என பல துறைகளின் முன்னேற்றத்திற்காக தனியார் நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களை அரசு பரிந்துரையால் ஏற்றுக்கொள்ளப் பட்ட விலைக்கு விற்க வேண்டி இருந்தது.

இதன் விளைவாகவே இந்தியாவில் பல்வேறு அணைத் திட்டங்களும், பிலாய், ரூர்கேலா, துர்காபூர், ரயில் ஆலைகள் என மேற்கூறிய பல திட்டங்கள் தொலைநோக்குப் பார்வையில் மக்களுக்குக் கிடைத்தவை.
இவையனைத்தும் மக்கள் நலன் (Greater Good for people) என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்ட திட்டங்கள் என்றே அரசுகள் விளக்கமளித்தன.

பொதுத்துறை என்ற பெயரில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வந்த வேளையில் தனியார் நூற்பாலை அமைக்க நிலங்களை தனியாரிடம் பெற முயன்றதையடுத்து 1962 ல் உச்சநீதி மன்றத்தில் ஒரு வழக்கு வந்தது. உச்சநீதி மன்றம் அரசிடம் இதுகுறித்து கேள்விகள் எழுப்ப, அரசு நிலவுடமைச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவதாக விளக்கமளித்தது. பொதுத்துறை மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களுக்கும் அரசே பொது ஏஜென்டாக இருப்பதற்கு அத்தாட்சியாக, நிலவுடமைச் சட்டத்தை தனியார் நிறுவனங்களுக்கும் வழங்க வழிவகை செய்யும் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தது நேருவின் அரசு.

இப்போது சில கேள்விகள்:

1. தொழில் துறை முன்னேற்றத்திலும் சரி, அணை கட்டுதல், அனல் மின் நிலையங்கள், இன்னபிற தொழில் வளர்ச்சியில் அவரின் நிலக்கையகப்படுத்தும் சட்டம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நேரு வேலை வாய்ப்பைப் பெருக்க , இந்தியாவை முன்னேற்ற பொதுச் சேவை என்ற பெயரில் நிலம் கையகப்படுத்த உபயோகித்த சட்டம் பற்றி என்ன கருதுகிறீர்கள்.

2. நேருவைக் ஹீரோவாக மட்டுமே காண்பிக்க முனைபவர்கள் இதுபற்றி விளக்க முன்வருவார்களா?

டெல்லி ஏன் முழு மாநிலமாக அங்கீகாரம் பெறவில்லை?

தமிழ் ஹிந்துவில் இக்கட்டுரை வெளிவர உதவிய திரு ஜடாயு அவர்களுக்கும் தமிழ் ஹிந்து இணையதள ஆசிரியக் குழுவிற்கும் எனது நன்றிகள். ஆம் ஆத்மி கட்சி பல உறுதிமொழிகளைக் கொடுத்துள்ளது. அதன் முக்கியமான உறுதி மொழியான டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து பற்றியே இந்தக் கட்டுரை அலசுகிறது. டெல்லி எத்தனை முறை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளது என்ற வரலாறின் புரிதலோடும் முழு மாநில அந்தஸ்து பற்றியும் பார்க்க வேண்டியுள்ளது.

http://www.tamilhindu.com/2015/02/%e0%ae%9f%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95/

கிமு 1450 ல் இந்திரபிரஸ்தா என்ற பெயரில் பாண்டவர்களால் ஆட்சி செய்யப்பட்ட நிலப்பகுதியே இன்றைய டெல்லி ஆகும். அதன் பின்னர் பல அரசர்களின் கீழ் டெல்லி ஆளப்பட்டு வந்தது. சுதந்திரத்திற்கு முன்னால் நிலப்பிரபுத்துவத்தின் கீழும், கவர்னரின் கீழும் டெல்லி இருந்தது.

சுதந்திர இந்தியாவான பிறகு டெல்லி 1947-52 வரை Government of India வின் நேரடி ஆட்சியின் கீழும், 52 ல் தன்னாட்சியுடன் கூடிய மாநிலமாக 48 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்ட அதிகாரத்துடன் மாறியது.
ஆனால் 1956 ல் சட்டசபை அமைப்புமுறை ஒழிக்கப்பட்டது. 1956-66 வரை யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு நேரடி அதிகாரமாக மத்திய அரசின் கீழ் வந்தது. 1957 ல் delhi municipal corporation உருவானது. Metropolitan Counsil setup under the delhi administration act 1966 ஆம் ஆண்டு உருவானது. இதையடுத்து 1967 ல் முதன் முதலாக மெட்ரோ பொலிட்டன் தேர்தல் நடந்தது. ஆனால் 1980 ல் மெட்ரோ பொலிட்டன் தேர்தலை இந்திராகாந்தி ஒழித்துக் கட்டினார்.

மீண்டும் அதே இந்திராவின் ஆட்சியில் 1983 ல் மெட்ரோ பொலிட்டன் உயிர்ப்பித்தது. மீண்டும் 1990 ல் மெட்ரோ பொலிட்டன் கவுன்சில் கலைக்கப் பட்டது.

20110721_011940_india-gate-delhi74 ஆவது சட்ட திருத்தத்தின் படி மாநிலங்கள் தங்களது மாநில முன்னேற்றத்திற்கு அதிகாரப்பரவலாக்கம் முறையே சரியானது என்ற அடிப்படையில் சட்டசபை தேர்தல்களும் முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரமும், மேலும் கவுன்சிலர் தேர்தல்களும் 1992 லிருந்து நடைமுறைக்கு வந்தது. அன்றிலிருந்து இதுவரு டெல்லி NCT(National Capital Territory ) of Delhi என்றே அழைக்கப்பட்டு வருகிறது.

NCT of delhi யைப் பொறுத்தவரையில் மாநில அரசிற்கு சில அதிகாரங்களும், மத்திய அரசிற்கு சில அதிகாரங்களும் உள்ளன. New Delhi Municipal Council (NDMC), the Municipal Corporation of Delhi (MCD) and the Cantonment Board ஆகிய மூன்று துறைகளும் மத்திய அரசின் கீழ்தான் வருகிறது.

மாநில அரசின் கீழ் போக்குவரத்து, நீர், மின்சாரம், கழிவுநீர், தீயணைப்புத் துறை, சேரிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத பகுதிகளில் வாழும் மக்களுக்கு உரிய பணிகள் செய்தல், கல்வி, சுகாதாரம், பால்வளத்துறை, பிறப்பு இறப்பு சான்றிதழ்   போன்ற துறைகள் வருகின்றன.

மத்திய அரசின் கீழ் சட்டம், ஒழுங்கு, Enforcement of planning controls போன்ற துறைகள் உள்துறை அமைச்சகத்தின் கீழும், நகரத்தைத் திட்டமிடல் மற்றும் நகர மேம்பாடு போன்ற துறைகள் நகர மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கீழும், தொலைபேசி துறையும் மத்திய அரசின் கீழ் வருகிறது.

மாநில அரசு ஏதேனும் ஒரு இடத்தில் தொழிற்சாலை கொண்டு வந்தாலோ, கல்விக் கூடம் கொண்டு வர வேண்டுமென்றால் கூட DDA (Delhi Development Authority ) யின் அனுமதியோடுதான் திட்டத்தை செயல்படுத்த முடியும். DDA வும் மத்திய அரசின் கீழ்தான் வருகிறது.

இன்னமும் சொல்லப்போனால் மாநில முதல்வரைக் காட்டிலும் டெல்லி கவர்னருக்குத் தான் அதிக அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் சட்டத்தை மாநில அரசு கொண்டு வர வேண்டுமானால் கவர்னரின் அனுமதிக்குப் பிறகே சட்டசபையில் நிறைவேற்ற இயலும். ஒருவேளை கவர்னருக்கும், முதல்வருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதை குடியரசுத் தலைவரின் பார்வைக்குக் கவர்னர் கொண்டு செல்ல வேண்டும் என்பதே சட்டம். (Government of India , 1991, Article 4 ).

இதுவெல்லாம் தெரிந்தும் கேஜ்ரிவால் கடந்த முறை ஜன் லோக்பாலுக்கான கவர்னரின் அனுமதியைப் பெறாமலேயே சட்டசபையில் முன் மொழிந்ததையும், சட்ட மீறலை ஒத்துக் கொள்ள இயலாது என காங்கிரசும் பிஜேபியும் சொன்ன போது, அவர்கள் ஜன் லோக்பாலை எதிர்க்கிறார்கள் என  பதவியைத் தியாகம் செய்தது போல கேஜ்ரிவால் நாடகமாடியத்தை நாடறியும்.

ஏன் முழு மாநிலமாக அறிவிக்கப்படாமல் டெல்லி உள்ளது என்பதற்குக்  கடந்த கால மத்திய அரசுகள் சொல்லும் காரணங்கள் இதுதான். மற்ற மாநிலங்களைப் போல டெல்லியை முழு மாநிலமாக ஆக்காமல் இருப்பதற்கு டெல்லி பாரதத்தின் தலைநகரம் என்பதே முதன்மைக் காரணமாக சொல்லப்படுகிறது. டெல்லியில் தான் அனைத்து தேசிய அலுவலகங்களும், பன்னாட்டின் அலுவலகங்களும் உள்ளன என்பதும், தலைநகரின் பாதுகாப்பு, தேசத்தின் இமேஜை மற்ற நாடுகளுக்குக் காண்பிக்க, தலைநகரின் சட்ட ஒழுங்கைக் காக்க, தலைநகரின் மேம்பாட்டில் நலம் செலுத்த , நாட்டின் அனைத்து பெருந்தலைவர்களும் வசித்து வருவதால் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, மற்ற நாடுகளின் embassy இங்குள்ளது  என பல காரணங்களை முன்வைத்தே இதுவரையிலான மத்திய அரசுகள் டெல்லியை முழு மாநிலமாக அறிவிக்காமல் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதும் கூட கெஜ்ரிவாலுக்கு நன்றாகத் தெரியும். மோடியே விரும்பினாலும், பாஜக விரும்பினாலும் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டுமானால் லோக்சபா, ராஜ்யசபா என இரு அவைகளிலும் பெரும்பான்மை பலத்தைக் காண்பித்து நிரூபிக்க வேண்டும். முழு மாநிலமாக அறிவிக்க சட்டத் திருத்தம் தேவை. அதை பாராளுமன்றத்தில் வெற்றி பெற்றே நிறைவேற்ற இயலும். அதுவரையில் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட இயலாது. இதுவெல்லாம் தெரிந்தும் கெஜ்ரிவால் பல நாடகங்களை அரங்கேற்றுவார் என்பதை நாம் கண்கூடாகப் பார்ப்போம்.

ஆம் ஆத்மியின் பல்வேறு திட்டங்களையும் நிறைவேற்ற மத்திய அரசு நிதி உதவியையும், மத்திய அரசின் அனுமதியும் மிக முக்கியம். மத்திய அரசின் அனுமதி தேவைப்படுகிறது என்கிற உண்மையைக் கூட manifesto வில் சொல்லாமல் விட்டார்கள் என்பதே உண்மை. டெல்லியைப் பொறுத்தவரையில் கேஜ்ரிவால் எதைச் செய்யாவிட்டாலும் மத்திய அரசின் மீது பழியைப் போட்டுத் தப்பித்துக் கொள்ள பல நாடகங்கள் அரங்கேறுவதை நாம் பார்ப்போம் என்பது திண்ணம்.

பீகார் அரசியலும் பாஜகவின் ராஜ தந்திரமும்

பீகார் சட்டசபையில், முதல்வர் ஜிதன்ராம் மஞ்ஜி, இன்று நம்பிக்கை ஓட்டு கோர இருந்த நிலையில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை கவர்னர் திரிபாதியை சந்தித்து அவர் நேரில் கொடுத்தார்.இதனையடுத்து பீகார் முதல்வராக நிதிஷ்குமார் வரும் 22ம் தேதி மாலை மீண்டும் பதவியேற்க உள்ளார். – செய்தி.

பீகாரில் நடந்துள்ள அரசியல் சூழலை பாஜகவிற்கான தோல்வி என்று சொல்ல முடியாது. உண்மையைச் சொல்லப்போனால் பீகாரில் தலித்துகள் வாக்கை அள்ளவும் வழி செய்துள்ளார்கள். மேலும் மாஞ்சியை முதல்வராக்க விரும்பாமல் அதை முழுமையாக குதிரைப்பந்தயம்செய்து கட்சியின் பெயரைக் கெடுக்காமலும், அதே நேரத்தில் நிதிஷ் போல தேர்தல் நேரத்தில் பாஜகவையும் புது முதல்வர் வேட்பாளரை சொல்வதில் சிக்கல் ஏற்பட்டுவிடாமல் இருக்கவும், மாஞ்சியை தேவையில்லாமல் இப்போது முதல்வர் நாற்காலியில் குதிரைப் பேரத்தில் ஈடுபட்டு முதல்வராகத் தொடரச்செய்தால் தான் பிஜேபிக்கு கெட்ட பெயரும் ஏற்படும். அதற்குப் பதிலாக மாஞ்சியை பகடைக்காயாகவும், தமது தேர்தல் வாக்குக்கணக்கையும் மனதில் கொண்டு சிறப்பாக செய்து முடித்துள்ளார்கள் என்றே பார்க்கிறேன்.

எனக்கென்னவோ தேர்தலுக்காக மாஞ்சியும் ராம்விலாஸ் பஸ்வான் போல தலித் கட்சியை ஆரம்பிப்பார் அல்லது ராம்விலாஸ் பஸ்வானுடன் கைகோர்த்து பிஜேபி அணிக்குள் வந்து சேர்வார்.

இன்னொரு விஷயத்தையும் குறிப்படவேண்டும். காங்கிரஸ் ஒவ்வொரு மாநிலத்திலும் தொடர்ந்து நான்காம் நிலை  கட்சியாக தள்ளப்பட்டுள்ளது. பாஜக காங்கிரசின் இடத்தை இன்று அரசியலில் எடுத்துள்ளது.

லல்லு, நிதிஷ் இவர்களின் கட்சிகளுக்குப் பின்னால் இருந்த பாஜககட்சி இன்று நேரடியான எதிர்க்கட்சியாக உள்ளது. நிச்சயமாக பாஜகவை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து சட்டசபை தேர்தலில் வீழ்த்தும். ஆனால் அப்போதும் அதிக எண்ணிக்கையுடன் இரண்டாவது கட்சியாகவோ பிரதான எதிர்க்கட்சியாகவோ பிஜேபி இருக்கக்கூடும் . அவ்வாறு இல்லாமல் நிதிஷ் லல்லுவின் ஆதரவில்தான் ஆட்சி நீடிக்கும் என்றுஅரசியல் சூழல் வந்தாலும் நிதிஷுக்குத் தான் சிக்கல். எனக்கென்னவோ நிதிஷின் அரசியல் எதிர்காலம் லல்லுவைப் போலவே மங்கும் என்றே தோன்றுகிறது. ஹீரோவாக வலம்வர வேண்டிய நிதிஷ் இன்று தனி நபர் ஈகோவால் தமதுஇமேஜைக் கூட தக்கவைக்க என்ன பாடுபடுகிறார் என்றே பார்க்கிறேன்.

பி.கு : தனி நபர் ஈகோவால் அரசியலில் இன்று அதள பாதாளத்தில் வீழ்ந்து கிடப்பது யாரெனப் பார்த்தால் அது நிதிஷ் குமார் தான். எனக்குத் தெரிந்து மோடியை ஈகோவால் வெறுத்து வெறுத்து ஒதுக்கி இறுதியில் லோக்சபா தேர்தலில் படு மோசமாகத் தோற்று , யாரும் கேட்காமலே தனது பதவியையும் ராஜினாமா செய்து மாஞ்சி என்பவரை முதல்வராக்கி கடைசியில் மோடியுடன் மோதியவர் நிலைமை அவரது கையாளுடன் மல்லுக் கட்டுவதைப் பார்த்தால் அரசியலில் சாதுர்யமாகக் கையாலாகாமல் போனால் என்ன ஆகும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் நிதிஷ் குமார். ஓவர் ஈகோ உடம்புக்கு ஆகாது, அரசியல் எதிர்காலத்திற்கும் உதவாது.

“மக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்”?

கூடங்குளத்தை உதாரணமாக வைத்து இக்கட்டுரையை எழுதியுள்ளேன். இந்த மாத ஆழம் இதழில் வெளி வந்துள்ளது. கிழக்கிற்கும், நண்பர் திரு மருதனுக்கும் எனது நன்றிகள். smile emoticon

ஜனநாயக நாட்டில் தமது உரிமைக்காக மக்கள் போராடுவதை எவரும் குறைகூற இயலாது. அதேபோல நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பொது நலன் கருதி அரசுகள் சில முடிவுகளை மேற்கொள்ளும் போது அரசையும் மேம்போக்காக குறை சொல்லிவிட முடியாது. மக்கள் நல அரசுகள் நாட்டின் முன்னேற்றம் கருதியும் உள் கட்டமைப்பை வலுப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்வதில் தவறில்லை.

ஆனால் அரசுகள் நிலங்களை விட்டுக்கொடுக்கும் மக்களுக்கும், அப்பகுதிக்கும் தேவையான சலுகைகளையும் உரிய சன்மானத்தையும், வேலை வாய்ப்புகளையும் முறையாக செய்ய வழிவகைகள் செய்யப்பட வேண்டும். நிலத்தை இழக்கும் பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கும், அப்பகுதி மக்களுக்கு அரசு உதவிகள் செய்ய அப்பகுதி மக்களை இணைத்து கமிட்டிகள் அமைத்தும், அரசு சார்பற்ற நீதிபதிகளின் தலைமையில் கமிட்டிகள் அமைத்தும் நிவாரண உதவிகளும் முறையாக நிவாரணமும் பணி நியமனங்களும் அமைந்துள்ளதா என வழி வகைகள் செய்யப்படலாம்.

உள் கட்டமைப்பை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளும் போது குறிப்பிட்ட நிலப்பகுதியைச் சார்ந்த மக்கள் அதிக விலையைக் கொடுக்கவேண்டியுள்ளது என்பதை மறுக்க இயலாது. ஆனால் இன்று எந்தவொரு திட்டத்திற்கும் எதிர்ப்புகளை முன்னெடுக்க சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் பகுதி மக்களில் ஒரு சாராரையோ, அல்லது ஒட்டு மொத்த கிராம மக்களையோ இணைத்துக் கொண்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அது சரியா தவறா என்பது விவாதப் பொருளல்ல.

பகுதி நிலப்பகுதி மக்கள்தான் அதிகப் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பதால் இயல்பாக ஆதரவு கிடைப்பதில் வியப்பில்லை. ஆனால் இதர பகுதி மக்களுக்கு அரசின் திட்டங்கள் சரியென படும் போது அதற்குரிய ஆதரவு மற்ற நிலப்பகுதி மக்களிடமிருந்து வருவதில்லை. வரவும் செய்யாது. அவ்வாறு வர வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

உதாரணாமாக கூடங்குளம் அணு உலை விவகாரத்தை எடுத்துக் கொள்ளலாம். இன்று வணிக ரீதியிலான உற்பத்தியை அணுசக்தி கழகம் அணு உலையிலிருந்து மின் உற்பத்தி செயல்படுத்தப்பட்டுள்ளது. அணு உலை எதிர்ப்புப் போராட்டம் உள்ளூர் போராட்டம் என்ற அளவில் மிகப் பெரிய வெற்றியாக இருக்கலாம். ஆனால் அப்போராட்டம் தேச அளவில் நோக்கினால் ஒரு தோல்விப் போராட்டமாக அமைந்துள்ளது. இவ்வாறு சொல்வதை போராட்டக்குழுவினரோ அல்லது போராட்ட ஆதரவு தரப்போ எதிர் மறையாகப் பார்க்கக் கூடாது. போராட்டம் தோல்வி என சொல்வதற்கு நான் முன் வைக்கும் பிரதான குற்றச் சாட்டுகள் இவைதான்.

“ அணு உலைகள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கட்டப்பட்டு வருகின்றன என்பது யாவரும் அறிந்ததே. கூடங்குளம் அதில் ஒன்று மட்டுமே! இந்தப் போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்தது அனைவருக்கும் தெரியும். அதன் தலைவர்களான கெஜ்ரிவாலும் பிரசாந்த் பூஷனும் கூடன்குளப் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவைத் தனிப்பட்ட முறையிலும் கட்சி மூலமாகவும் தெரிவித்திருந்தார்கள்.

அணு உலைகள் கட்டமைப்பில் உள்ள மற்ற மாநிலங்களிலுள்ள மற்ற அணு உலை எதிர்ப்பு அமைப்புகளை ஒருங்கிணைக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தும் அதை தமிழ்நாட்டு அணு உலை எதிர்ப்பாளர்கள் முறையாகக் கையாளவில்லை. அவர்கள் இங்கு போராட்டத்தை முன்னெடுத்த போது அதே நாளில் தொடர் போராட்டங்களையோ அல்லது உண்ணாவிரத முறைகளையோ மற்ற மாநிலங்களிலும் மக்களைத் திரட்டி செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்களே தமது போராட்டத்தை உள்ளூர் போராட்டமாக சுருக்கிக் கொண்டதே இப்போராட்டம் தோல்வி என நான் முன் வைப்பதற்கு முக்கியக் காரணம்.”

அன்னா ஹஸாரே போல போராட்டத்தைத் தமிழகத் தலைநகரிலோ, இந்தியத் தலை நகரிலோ ஆம் ஆத்மியின் தெரு முனைப் போராட்ட முன்னோடியான கேஜ்ரிவாலின் துணை கொண்டு இப்போராட்டத்தை மிகப் பெரிய அளவில் முன்னெடுத்திருக்கலாம். அதை இப்போராட்டக் குழுவினரும், ஆதரவை முன்னெடுத்தவர்களும் செய்யத் தவறினார்கள் என்பதே உண்மை. கூடவே ஐந்து மாநில காவல்துறை அதிகாரிகளை நீக்கக் கோரி கெஜ்ரிவால் போராட்டம் செய்பவர். அவர் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு என்ன செய்தார்? ஒரேயொரு நாள் இங்கு வந்து ஆதரவு தெரிவித்ததும், வழக்கில் உதவி செய்ததோடு நிறுத்திக் கொண்டார்.

சர்வ நிச்சயமாக போராட்டத்தைப் பலப்படுத்த இயன்றும், வாய்ப்புகள் இருந்தும் போராட்ட குழுவினர் அதை இறுதி வரை செய்யாமல் போனதன் மர்மம்தான் புரியவில்லை.

ஓரளவுக்காகவாவது ஊழல் எதிர்ப்புப் போராட்டம் மிகப் பெரிய அரசியல் அழுத்தத்தைக் கொடுத்ததற்குக் காரணம் அதை நாடு தழுவிய அளவில் மிகப் பெரிய போராட்டமாக மாற்றி அமைத்ததுதான். குறிப்பாக அனைத்து ஊடகங்களின் பார்வையையும் தமிழ் ஊடகம் மட்டுமில்லாமல் அனைத்து இந்திய ஊடகங்களின் வாயிலாக அழுத்தத்தைக் கொடுக்க அணுஉலை எதிர்ப்புப் போராளிகள் செய்ய முனையவில்லை. ஆனால் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்திற்கு தேசிய ஊடக அரசியல் உதவியது போல இதற்கு அவ்வாய்ப்பை ஏற்படுத்த அணுஉலை எதிர்ப்புக் குழுவினர் பயன்படுத்தத் தவறினர் அல்லது விரும்பவில்லை அல்லது முனைப்புக் காட்டவில்லை என்றே தோன்றுகிறது.

இன்னமும் சொல்லப் போனால் எழுத்தாளர்கள் கையெழுத்து போட்டதும் மதுரையில் ஒரேயொருமுறை அடையாளமாக எதிர்ப்பைப் பதிவு செய்து அடையாளப் போராட்டம் மட்டுமே தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டது. அணு உலை எதிர்ப்பு எழுத்துப் போராளிகள் இது பற்றி கட்டுரைகள் எழுதினார்கள், விவாத நிகழ்ச்சிகளில் தமது கருத்தை முன் வைத்தார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் இன்றைய நிலையில் தேசம் முழுமைக்குமாக போராட்டத்திற்கான ஆதரவைத் திரட்ட வேண்டிய பொறுப்பு போராட்டக்காரர்களுக்கு உண்டு. அணு உலை போல, இந்தியா முழுமைக்கும் சாலை மேம்பாடு, நிலக்கரி, இரும்பு, மீத்தேன் திட்டங்கள் போன்ற பொதுவான கனிம வளம் சார்ந்த திட்டங்களில் உள்ள பிரச்சினைகள் அனைத்திற்கும் தேசத்தை இணைக்கிற அளவிற்கு மக்களை ஒருங்கிணைக்காத போராட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது.

இதற்கு நம்மிடம் மிகப் பெரிய முன்னுதாரணமுண்டு. நாடு அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில், விடுதலை வேண்டி போராட்டங்கள் ஆரம்பத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விடுதலை தாகம் வேண்டி போராடி இருந்தாலும் காந்தியடிகள் இந்தியத் தலைவர்களை விடுதலைப் போராட்ட வீரர்களை, தியாகிகளை நேரடியாகவும், கடிதங்கள் வாயிலாகவும் ஒருங்கிணைத்தார். அதை தேசம் முழுமைக்குமான ஒரே குரலில் ஒற்றை நோக்கம் நிறைவேற வேண்டி மக்கள் போராட்டங்களை அகிம்சை வழியில் தேசம் முழுமைக்குமான மக்களை போராட்டங்களில் பங்குபெறச் செய்து ஆங்கிலேயர்களுக்கு மிகப் பெரிய அழுத்தத்தைக் கொடுக்கச் செய்தார்கள்.

ஒவ்வொரு போராட்டத்தையும் கடிதங்கள் வாயிலாக தொலைபேசி வாயிலாக அனைத்து மாநிலத்திலும் ஒருங்கிணைத்து அதே நாளில் தேசம் முழுமைக்குமாக எதிர்ப்புப் போராட்டங்களை காந்தியடிகள் தலைமையில் தேசம் மேற்கொண்டது நாமறிந்த வரலாறே!

ஜனநாயகமற்ற நிலையிலிருந்த போதே இந்திய மக்களை ஒருங்கிணைக்க இயலுமெனில் இன்றைய ஊடக வளர்ச்சியையும், தொழில் நுட்ப வளர்ச்சியையும் பயன்படுத்தாமல் உள்ளூர் மக்களின் ஆதரவு மட்டுமே போதுமென நினைத்து போராட்டத்தைச் சுருக்கிக் கொண்டதே கூடங்குளம் போராட்டம் மிகப் பெரிய தோல்வி அடைந்ததற்குக் காரணம்!.

இதை போராட்டக் குழுவினர் அறிந்தே செய்தார்களா என்ற அச்சமும் உண்டு. இந்தியாவில் இதர மாநிலங்களில் அணு உலைக்கு எதிர்ப்பை உருவாக்கும் நிலையில் இருந்தாலும் ஆம் ஆத்மி கட்சி தேசிய அளவில் எந்தப் போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது.

அரசிற்கும், நீதி மன்றத்திற்கும் எதிர்ப்புக் காட்ட விரும்பும் போராட்டக் குழுக்கள் இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல் நிலப்பகுதிக்குள் மட்டுமே போராடி வெற்றி பெறலாம் எனக் கனவு கண்டால் அது பெரும்பாலான மக்கள் ஆதரவைப் பெறாது. போராட்டமும் வெற்றி பெறாது.

இது போன்ற போராட்டங்கள் தோல்வி அடைவதற்கு இன்னொரு பிரதான காரணமும் உண்டு. அது அரசியல் ரீதியிலான ஆதரவு எதிர்ப்பைச் சார்ந்தது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் அதிமுக, திமுக, தேசியத்தைப் பொறுத்த வரையில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இம்மாதிரியான உள்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்களுக்கு தெரிவிக்கும் ஆதரவும் எதிர்ப்பும் மிக மிக முக்கியமானது. இதே கருத்து மற்ற மாநிலங்களிலுள்ள பிரதான மாநில ஆளுங்கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும் பொருந்தும்.

மாநில அரசையும் மத்திய அரசையும் ஆள்கிற அல்லது ஆளத் தகுதியாக உள்ள மக்கள் ஆதரவைப் பெற்ற கட்சிகள் இதுபோன்ற உள் கட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து விட்டால் பெரும்பாலான போராட்டங்கள் தோல்வியில் முடிவடைய வாய்ப்புண்டு. இதை முறியடிக்க வேண்டுமானால் எதிர்ப்பு மனநிலையை மக்களை ஒருங்கிணைத்து செய்ய வேண்டிய பொறுப்பு எதிர்ப்பைப் பதிவு செய்பவர்களிடமிருந்து வர வேண்டும்.

சிறு கட்சிகளான பாமக, மதிமுக போன்ற கட்சிகள் மக்கள் நலன் என்ற பெயரில் ஆதரவுப் போராட்டங்கள் நடத்துவது பெரும்பாலும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் நிரூபிக்கின்றன. மக்கள் ஆதரவை இவர்களால் தேர்தல் அரசியலில் இதுவரை அதிமுக திமுகவைத் தாண்டிப் பெற முடியவில்லை என்பதும் கவனிக்க வேண்டியது. அவ்வாறானால் இவர்களின் மக்கள் நலப் போராட்டங்கள் என்ற பெயரில் நடத்தும் போராட்டங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது. இதுபோன்ற கட்சிகள் ஆளும் அரசுகளாக மாறினால் அதிமுக, திமுக போன்ற நிலையைக் கூட எடுக்க வேண்டி வரலாம் என்பது யூகம் மட்டுமே.

இது போன்ற திட்டங்கள் கிடப்பிலோ அல்லது கைவிடப்பட வேண்டுமானால் பிரதான கட்சிகளின் ஆதரவை எவ்வகையிலாவது பெற முயற்சிகளை போராட்டக் குழுவினர் முயல வேண்டும் அல்லது மேற்கூறிய நிலையிலுள்ள பிரதான கட்சிகளின் எதிர்ப்பு இருக்கிற பட்சத்தில் மட்டுமே சில போராட்டங்கள் வெற்றி பெறுகின்றன.

இதன் தொடர்ச்சியாக வரலாற்றிலிருந்து பார்த்தாலும், நடைமுறை அரசியல் நோக்கில் பார்த்தாலும் இயல்பாக நடக்கும் நிதர்சனங்களையும் உதாரணப்படுத்த வேண்டியுள்ளது.

யார் பலம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்களோ, அவர்களே அதிகாரம் செய்ய இயலும் என்பதுதான் உலக நியதி!. பலம் மூன்று வகைகளில் உள்ளது. அதிகார பலம், பண பலம், ஆள் பலம் என்பதே அது.இதில் யார் எந்த சூழ்நிலையில் பலம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் தான், அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டு, அடுத்தவர்களை அடக்கி ஆள்வார்கள் என்பது தான் யதார்த்தம்.

இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கூடங்குளம் பிரச்சினையைப் பொறுத்தவரை, பலம் வாய்ந்தவர்களாக அரசு இருந்தது. இது அதிகார பலம். கூடன்குளத்தைத் தவிர மாநிலத்தின் இன்ன பிற பகுதிகளில் சமூக ஆர்வலர்களோ , சமூக எழுத்தாளர்களோ, தொண்டு நிறுவனங்களோ பெருமளவில் மக்களுக்கு அணு உலை ஆபத்து, அது அப்பகுதியில் உள்ள குடிமக்களைப் பாதிக்கும் என்று பரப்புரை செய்து, அதன் மூலம் பெருவாரியான சமூகத்தை தங்களின் போராட்டத்திற்கு துணை நிற்கச் செய்து, அரசுகள் அணு உலையைத் திறக்காத வண்ணம் இருக்கச் செய்யத் தவறி விட்டார்கள். இதை சமூக ஆர்வலர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒருவேளை இப்போராட்டம், தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பெரும் திரளான மக்களை ஒருங்கிணைத்து இருந்தால், அரசுகள் தடியடிக்குச் செல்லாது அடிபணிய வாய்ப்பிருந்திருக்கும்.

ஆனால், இங்கு பெருவாரியான மக்களின் பார்வையில், மின் சக்தியின் தேவை மட்டுமே பார்க்கப் படுகிறது. இதுவும் ஒரு மிகப் பெரிய பிரச்சினையாக சமூக ஆர்வலர்களுக்கு இருந்திருக்கக் கூடும். மேலும் தமிழகத்தின் முன்னணி கட்சிகளான திமுகவும், அதிமுகவும் இந்தியாவின் முன்னணி கட்சிகளான பிஜேபி யும், காங்கிரசும் அணு உலையைப் பொறுத்தவரையில் அது தேவை என்பதற்காக பேசிய பிறகு போராட்டம் வெற்றி பெறாது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது.
யார் பலம் வாய்ந்தவர்களோ அவர்கள் பலமின்மையானவர்களை அடக்கி ஆள்வார்கள். அதுதான் இப்பொழுது நடந்தேறி இருக்கிறது. ஆட்சி என்ற அதிகார பலத்தின் முன்பு, பெரும்பான்மையான தமிழக மக்களை ஒருங்கு இணைக்காத , சிறு அளவிலான மக்களின் கூட்டு முயற்சி பலமற்றுக் காணப்படுவதாலேயே போராட்டம் தோல்வியைத் தழுவியது.
துனிசியாவில் பென் அலியாகட்டும், எகிப்தின் ஹோசினி முபாரக் ஆகட்டும், அதிகார பலத்தில் இருந்தார்கள் என்பதால் , அவர்களால் மக்களை அடக்கி ஆள இயலவில்லை என்பதை 2011 ஆம் ஆண்டில் உலகம் புரிந்து கொண்டிருக்கும். உலக சரித்திரத்தில் இதை விடச் சுருக்கமாகத் திட்டமிடப்பட்டு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட புரட்சிகள் இல்லை. மக்கள் சக்தி ஒழுங்காக ஒருங்கிணைக்கப் பட்டால், அதிகாரத்தில் யார் இருந்தாலும் வீழ்வார்கள் என்பது சம காலத்தில், சமீப ஆண்டில் நிகழ்ந்ததே!

சமூக ஊடகத்தின் வாயிலாக மக்கள் ஆதரவைப் பெற்று வீதிகளில் மக்கள் இறங்கிப் போராடியதன் விளைவே சில நாட்களிலேயே ஆட்சியாளர்களை பதவியை விட்டு இறங்க வழி வகுத்தது. அந்த அளவிலான எதிர்ப்பு மனநிலை அணு மின் உற்பத்தி விஷயத்தில் இல்லை என்பதை மறுக்க இயலாது.
அதற்கும் , நான் சொல்கிற,யார் பலம் வாய்ந்தவர்களோ அவர்கள் பலமின்மையானவர்களை அடக்கி ஆள்வார்கள் என்பதே காரணம். ஆட்சியைப் பிடித்து அதிகாரத்தில் இருந்து கொண்டு அடுத்தவர்களை அடக்குவது ஒருவகை. எண்ணிக்கை அளவிலான பலத்தை நிருபித்து அடுத்தவர்களை அடி பணியச் செய்வது இன்னொரு வகை. பொருள் பலத்தைக் காட்டி அடுத்தவர்களை அடிமையாக்குவது மற்றொரு வகை. இந்த மூவரில் யார் , எந்த சூழ்நிலையில் பலசாலிகளாக உருவெடுக்கிறார்களோ, அவர்கள் அடுத்தவர்களை ஆள்கிறார்கள்.

அரசு ஒடுக்குகிறது… அரசு மக்கள் நலனைப் புரியவில்லை என்ற வாசகங்கள் எந்த அளவுக்கு போராட்டக்காரர்களுக்கு வலு சேர்க்குமோ அதே அளவுக்கு பெருவாரியான மக்கள் உங்கள் பிரச்சினையை எப்படி புரிந்து வைத்துள்ளார்கள், தவறான புரிதலை எப்படி களைவது என்பதை சமூக எழுத்தாளர்களும், போராட்டக் குழுவினரும், சமூக ஆர்வலர்களும் எடுத்தாளவில்லை அல்லது பெருவாரியான மக்களை வீதிகளுக்கு வரவைக்கவில்லை. ஆகையால்தான், போராட்டம் தோல்வியைத் தழுவியதே தவிர, அரசின் சர்வாதிகாரமல்ல! எல்லா அதிகாரமும் வீழ்ந்து போகும், அவர்கள் பலவீனமாக இருக்கும் வரை அல்லது சாமானியர்கள் பெருமளவில் தேசம் முழுமைக்கும் ஒன்று திரளும் போது என்பது மட்டுமே உண்மை.

நரேந்திர மோடியின் புத்தாண்டு கொண்டாட்டம் 2015

பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி அவர்கள் ஆங்கில புத்தாண்டுக் கொண்டாட்டத்தை தமது பிரதம அலுவலக அதிகாரிகளுடன் கொண்டாடிய போது சில சுவாராஸ்யமான உரையாடல்களும், சில கேள்விகளுக்கு மோடி நகைச்சுவையாகவும், ஊக்கமளிக்கும் பதிலாகவும் அமைந்துள்ளதைப் படிக்கும் போதே நம்மால் உணர இயலும்.

இந்த நிகழ்ச்சிக்கு முதன்மைச் செயலாளரில் ஆரம்பித்து, குறைந்த நிலையில் உள்ளவர் வரை அழைக்கப்பட்டிருந்தார்கள்.

மோடி குஜராத் முதல்வராக இருந்த போதே தமது துறை அதிகாரிகளுடன் அவ்வப்போது உரையாடுவதற்கு இதுபோன்ற கொண்டாட்ட மனநிலையில் அவர்களது கருத்தை ஆழமாகவும் திறந்த மனதுடனும் முன் வைப்பார்கள் என்பதை புரிந்து கொண்டே இது போன்ற கொண்டாட்டங்களை அவ்வப்போது மேற்கொள்வார்.

மோடிக்கு தமது அதிகாரிகள் சர்வ நிச்சயமாக பல யோசனைகளை வைத்திருக்கக் கூடும், அதை அவர்களின் சிந்தனைகளைத் தம்முடன் பகிர்வதன் மூலம் நாட்டுக்குத் தேவையான நலத்திட்டங்களை முன்னெடுக்க உதவும் எனத் தீவிரமாக நம்புகிறார்.

பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அழைத்துள்ளார். ஒரேயொரு சாம்பிள் மட்டும் இப்போது.

ஏழு வயது சிறுமி தனது மூன்று வயது தம்பியைத் தூக்கிக் கொண்டு மலை உச்சிக்கு ஏறிச் சென்றாள். அங்கு ஒரு துறவியைக் கண்ட போது துறவிக்கும், சிறுமிக்கும் நடந்த உரையாடல்.

துறவி: உன் தம்பியைத் தூக்கிக் கொண்டு இவ்வளவு உயரத்திற்குத் சுமந்து கொண்டே வந்தாயே? உனக்கு அயர்ச்சியாக இல்லையா? என்று கேட்டார்.

சிறுமி: அயர்ச்சியாக இல்லை.

துறவி: உண்மையிலேயே அயர்ச்சியாக இல்லையா?

சிறுமி: இல்லை. ஏனெனில் அவன் என் தம்பி.

துறவி: மீண்டும் அதே கேள்வி.

சிறுமி: மீண்டும் அதே பதில்.

இந்தக் கதையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆங்கில புத்தாண்டுக் கொண்டாட்டத்தை தமது அலுவலக அதிகாரிகளோடு கலந்து கொண்ட போது, ஓர் அதிகாரி ஒவ்வொருவருவம் எவ்வாறு ஊக்கத்துடன் பணியாற்ற வேண்டும் என்ற கேள்விக்குப் பதில் அளிக்கையில், பாரத தேசத்து மக்களின் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் பூர்த்தி செய்ய உங்களைத் தான் நம்புகிறார்கள் என நீங்கள் எண்ணும் போது நமது பணியில் ஒருபோதும் நமக்கு அயர்ச்சியும் வருவதில்லை, சுமையாகவும் தோன்றாது என மேற்கோள் காட்டிப் பேசியது அனைவருக்கும் சர்வ நிச்சயமாக அதிகாரிகளுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும் அல்லவா?

இஸ்லாமியர்களில் சாதிகள்/வகுப்பு இல்லையா?

கடந்த சில நாட்களாக தாய் மதம் திரும்புபவர்களுக்கு என்ன சாதியைக் கொடுப்பீர்கள் என்று கிண்டலுடன் கூடிய பதிவுகளும் கார்ட்டூன்களும் கண்ணில் படுகின்றன. குறிப்பாக இஸ்லாம் சமூகத்திலிருந்து திரும்புபவர்களுக்கு என்ன சாதியைக் கொடுப்பீர்கள் என்பதுதான் அது. ஏறத்தாழ கிருத்துவ மதத்தில் சாதிகள் உண்டு என்பது போலவும், இஸ்லாம் சமூகத்திலிருந்து வருபவர்களை எங்கு அடைப்பீர்கள் என்பதுதான் இவர்கள் கேட்கும் கேள்விகள்.

முஸ்லிம்கள் இந்திய இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும், வாழ்வியல் முறையிலும் சாதியற்று இருக்கிறார்களா என அறிய வேண்டியுள்ளது. உண்மை அவ்வாறல்ல என்பதே! முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் தாங்களே உயர்வானவர்கள் என சொல்லிக் கொள்வதுண்டு. குறிப்பாக Syed மற்றும் Shaik வகையைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் தாங்கள் அரபிலிருந்து வந்த வழியினர் என்றும், Mughals and Pathans வகையைச் சேர்ந்தவர்கள் தாங்கள் துருக்கி, ஆப்கான் வழிவந்தவர்களாகவும், முஸ்லிம் மன்னர்களின் ஆட்சியில் Foreign Extraction வாயிலாக வந்தவர்களை அஷ்ரப் (Ashraf) என்றும் தாங்களே இஸ்லாமிய சமூகத்தின் உயர்நிலைப் பிரிவினர் எனவும் அழைக்கிறார்கள். இவர்களோடு இந்து சமயத்திலிருந்து மதமாற்றம் செய்யப்பட்ட /மதமாற்றமான இஸ்லாமியர்கள் உயர் சாதி/வகுப்பிற்குள்ளும் வருகின்றனர்.

Ajlaf என்ற பிரிவினர் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறிய இடைநிலைச் சாதிகள் என்பதால் அவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலும், Arzal என்ற பிரிவினர் வண்ணான், தலித், சவரம் செய்பவர்கள், பழங்குடியினர் மற்றும் மிகப் பின்தங்கிய நிலையிலிருந்த சாதிகள் இந்துமதத்திலிருந்து இஸ்லாம் தழுவியவர்கள் ஆவார்கள். இவர்களைப் பெரும்பாலும் ஏழ்மையைப் பயன்படுத்தியே மதம் மாற்றப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் இவர்களின் கல்வி, சமூக பொருளாதார நிலை இன்றளவிலும் மிக மோசமாகவே உள்ளது.

இந்தியாவில் 82 இஸ்லாம் வகுப்பினர்(சாதிகளாகத் தொகுக்கப்பட்டு) OBC பிரிவிலும், மேற்கூறிய ashraf வகையினர் போன்றோர் NON-OBC பிரிவிற்குள்ளாகவும் வருகிறார்கள். இஸ்லாமியர்களில் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் அனைத்து முஸ்லிம்களையும் சாதிப் பிரிவுகளுக்குள் அடக்கக் கூடாது எனவும் இஸ்லாமிய மார்க்கத்தின் படி அனைவரையும் ஒரே பிரிவினராகக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை ஒருபுறமும், தாழ்த்தப்பட்ட, சமூகத்தில் பின் தங்கிய OBC quotaவில் சிக்கிக் கொண்ட arzal வகையினர் தங்களை SC/ST பிரிவிற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைக்கின்றனர்.

ஒருபுறம் ரங்கராஜ் மிஸ்ரா கமிஷன் படி சாதிகளின்/வகுப்பின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையையும் (SC/ST பிரிவை தங்களுக்கும் தர வேண்டுமெனவும்), இன்னொரு புறம் அதை நீக்கி அனைத்து இஸ்லாமியர்களுக்கும் உள்இட ஒதுக்கீடு கொடுத்தால் போதுமென்ற இரு முரணான கோரிக்கைகளும் முன் வைக்கப்படுகின்றன.

சட்டத்தின் படி குறிப்பாக ஏழை இந்துக்களை மதம் மாற்றம் செய்வதால்தான் இஸ்லாம் மதத்திற்குப் போகிறவர்களுக்கு OBC பிரிவின் கீழ் மட்டுமே இடம் கொடுக்க முடியும் என சட்டம் சொல்கிறது. அதேபோல உயர்சாதியில் பிறந்த ஒருவர் இஸ்லாம் மதத்திற்கு மாறி BC வகுப்பினுள் நுழைவது வெறும் சலுகைகளுக்காக அமைந்து விடக்கூடாது என்பதாலேயே அவர்கள் மதம் மாறினாலும் NON-OBC(OC) பிரிவில் மட்டுமே வருவர் என இது குறித்த வழக்கொன்று சென்னை உயர்நீதி மன்றத்தால் 2011 ல் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இணைப்பு இதோ.

ஆனால் பிறப்பில் அவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்களோ அதன் அடிப்படையில் தான் அவர்கள் OBC or NON OBC பிரிவிற்குள் வருகிறார்கள். சட்ட ரீதியாக இது ஒருபுறமிருக்கட்டும். முஸ்லிம்கள் இதர பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்களை திருமணம் போன்ற விஷயங்களில் சேர்த்துக் கொள்கிறார்களா என்ன? ஆகவே தாய் மதம் திரும்புபவர்கள் பிராமணர்களாகவே இதர உயர்த்தப்பட்ட சாதிகளாகவோ கூட வரட்டும். எந்த பிரிவில் இருந்து வந்தாலும் எந்த சாதியில் சேர்ப்பீர்கள் என்பதில் ஒரு பிரச்சினையும் இல்லை, ஹிந்து என்ற உண்மையான மதச்சார்பின்மையே இங்கு முக்கியம். இதில் வேடிக்கை என்னவென்றால் சாதி ஒழிப்புப் போராளிகளின் கவலைதான் மதம் மாறி வருபவர்களுக்கு எந்த சாதியை ஒதுக்குவீர்கள் என்று கேள்வி எழுப்புவது. உங்கள் சாதி ஒழிப்பில் தீயைத் தான் வைக்க வேண்டும்.

தனிப்பட்ட முறையில் எனக்கு மதமாற்றத்தில் நம்பிக்கைக் கிடையாது. மதம் மாறுபவர்களுக்கு என்ன சாதி ஒதுக்குவார்கள் என்று கேலி செய்பவர்கள், முஸ்லிம்கள் தரப்பில் OBC/ NON-OBC யில் எத்தனை சாதிகள் உள்ளன என்பது பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். அவர்களை வகுப்பு(சாதி) வாரியாகத் தான் இட ஒதுக்கீட்டில் உள்ளது என்பதை உணர வேண்டும். மாநில வாரியாக இஸ்லாமியர்களின் வகுப்பு/சாதி பற்றிய பட்டியலுக்கான இணைப்பு இதோ.

தற்போதைய இட ஒதுக்கீடு என்பது பிறப்பு அடிப்படையிலான சாதியின் அடிப்படை என சொல்ல முனைவதால் தாய் மதம் மாறுபவர்களுக்கு என்ன சாதி எனக் கொடுப்பதில் என்ன சிக்கல் இருக்க இயலும் என்பதே நமது கேள்வி.

பாப்பாரப்பட்டி கீரிப்பட்டி பற்றி பேச வருகிற வாயால் மேல்விஷாரம் பற்றி பேசாமல் இருப்பதுதான் முற்போக்கா?

பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி பற்றிய சாதிய ஒடுக்குமுறை பற்றி பல காலமாக ஊடகங்கள் விவாதித்தது அரசியலில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் மேல்விஷாரம் பற்றி ஒரு கேசை சுப்பிரமணியன் சுவாமி போட்டது தெரியுமா? சு.சா போட்ட கேஸ் யாதெனில் மேல்விஷாரத்திலுள்ள முஸ்லிம் மக்கள் கீழ் விஷாரத்திலுள்ள இந்துக்களுக்கு எந்த சலுகையையும் வணங்காது அனுபவித்து வருவதாகவும், சலுகைகளோ வசதிகளோ வேண்டுமென்றால் மதம்மாறுங்கள் என வற்புறுத்தப்படுவதாக மனு அளித்து, கீழ் விஷாரத்தை(ராசாத்திபுரத்தை) மேல் விஷாரத்திலிருந்து பிரிக்க வேண்டுமென 2009 ல் கேஸ் போட்டார்.

இதையடுத்து உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு ஓர் ஆணையைப் பிறப்பித்தது. இது விஷயமாக சரியான நடவடிக்கையை எடுக்க வேண்டுமெனவும், முஸ்லிம்களால் பாதிக்கப்படும் இந்து மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரியும் ஆணை பிறப்பித்தது.

இதையடுத்து தமிழக அரசு மேல்விஷாரத்தையும், கீழ் விஷாரத்தையும் வேலூர் நகராட்சியோடு இணைத்தது. தனி மூன்றாம் தர முனிசிபாலிட்டியாக இருப்பதால்தான் பிரச்சினை என்பதால் அதை வேலூர் நகராட்சியின் கீழ் இணைத்து ஓர் ஆணையை G.O Jan 3rd, 2010 ல் தமிழக அரசு பிறப்பித்தது.

இதில் சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும்.

1. பாதிக்கப்பட்ட கீழ்விஷாரம் மக்கள் 16 வருடங்களாகத் தேர்தலைப் புறக்கணித்தார்கள். 2011 ல் வேலூர் நகராட்சியுடன் இணைந்த பிறகே தேர்தலில் நின்றார்கள்.

2. ஒரேயொரு தொகுதியில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மை(25000 ) என்ற இடத்தில் 10000 க்கும் அதிகமான மக்களுக்கு சலுகைகளை வழங்க இயலாது எனவும் மதம் மாறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

3. தலித் மற்றும் வன்னிய சாதியைச் சேர்ந்தவர்களே இங்கு வாழ்ந்து வந்த இந்துக்கள். இரு சாதியினரின் பாதுகாவலராக அடையாளம் காட்டும் பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் இம்மக்களுக்காக எதையும் செய்யவில்லை.

4. சுப்ரமணிய சுவாமி சட்டத்தின் வாயிலாக பல காரியங்களைச் சாதித்துள்ளார். இதை அவரின் பார்வைக்குக் கொண்டு சென்ற பிறகே வழக்கின் மூலம் வென்று அம்மக்களும் ஜனநாயகத் தேர்தலில் பங்கு பெற முன் வந்துள்ளார்கள்.

5. மேல்விஷாரம் பற்றி எத்தனை ஊடகங்களில் இது பற்றிய கருத்துகள் விவாதிக்கப்பட்டன. அது ஏன் ஏதேனும் தலையங்கமாவது வந்ததா? பிரச்சினைகள் தீர்ந்தால் கூட , ஒப்பீடு செய்ய இளவரசன்- திவ்யா என இன்னும் பல ஆண்டுகளுக்கு நினைவில் வைத்து உதாரணம் பேசும் முற்போக்குவாதிகள் இதுகுறித்து என்றாவது பேசுவார்களா? தமிழ் ஹிந்து இணைய இதழும், விஜயவாணி மட்டுமே இது பற்றி எழுதின.

பி.கு: சாதி ரீதியானப் பிரச்சினைகளாக இருந்தால் விழுந்து விழுந்து பேசும் புரட்சியாளர்கள்/முற்போக்குவாதிகள், எனக்குத் தெரிந்து மேல்விஷாரத்தில் பெரும்பான்மை முஸ்லிம்கள் இந்து மக்களை ஒதுக்கித் தள்ளியதற்கு எம்மாதிரியாகக் குரல் கொடுத்தீர்கள் என்பதை உங்கள் மனச்சாட்சியோடு கேளுங்கள் என்பதற்கே இந்த நிலைக்கூற்றை இப்போது காலம் கடந்த விஷயமானாலும் அறிவுறுத்த வேண்டியுள்ளது.