GST BILL கொண்டு வருவது இந்தியாவிற்கு லாபமா?

GST (சரக்கு மற்றும் சேவை வரி or Goods and Services Tax):
==================================================

இந்தியாவில் தற்போது நடைமுறையிலுள்ள வரி முறைகளுக்கு மாற்றாக முன் வைக்கும் திட்டமே சரக்கு மற்றும் சேவை வரியாகும். இது ஓர் மதிப்புக் கூட்டு வரியாகும். (Value Added Tax). கடந்த 65 ஆண்டுகளாக இந்தியாவில் பொருட்களுக்கான மறைமுகவரியாக நடுவண் அரசு கலால்/சுங்க வரி(Excise Duty) மற்றும் நடுவண் விற்பனை வரியையும்(Central Sales Tax) சேவைகளுக்கு சேவை வரியையும்(Central Service Tax) வசூலித்து வருகிறது. மாநில அரசுகள் விற்பனை வரியையும்(State Sales Tax) சேவைகளுக்கு கேளிக்கை வரி, உல்லாச வரி(State Service Tax) எனவும் வசூலித்து வருகின்றன. இவை விதிக்கப்படும் பொருட்களும் சேவைகளும் அவற்றிற்கான வரிவிகிதமும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடுகிறது.

தற்போதுள்ள வரி விதிப்பு முறையைப் புரிந்து கொள்ள சின்ன உதாரணம். Raw materials க்கான உற்பத்திச் செலவு = Rs 1000 என்று வைத்துக் கொள்வோம். அதற்கு CST 10% tax போட்டால் Rs1100 வாங்கும் செலவாகும். அதன் பிறகு லாபம் Rs 200 சேர்த்தால் Rs 1300 ஆகும். பின்னர் அதற்கு மாநில அரசின் வரி விதிப்பு (SST) 10% Tax போட்டால் Rs 1430 ஆகும். இதனுடன் மறைமுகமாக பல வரிகளையும் சேர்த்தே மத்திய மாநில அரசுகள் வசூலித்து வந்தது. இதில் வெளிப்படைத்தன்மை என்பது சுத்தமாக இராது. தற்போதைய GST முறை அமலுக்கு வந்தால், உற்பத்திச் செலவிற்கு விதிக்கும் வரிகளுக்குப் பிறகான மறைமுக வரிகள் எதுவும் அதிகமாக இராது என்பதால் பொருளின் விலை குறையவும், பணவீக்கம் குறையவும் நிறைய வாய்ப்புண்டு. உற்பத்தியின் செலவும் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கும் என்கிறார்கள்.

இதனால்தான் GST கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது. இச்சட்டம் அமலுக்கு வர வேண்டுமானால் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் பில் பாஸ் பண்ணப்படவேண்டும். இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால் அது இந்தியாவின் வரலாற்றிலேயே பொருளாதார வரி விதிப்பில் கொண்டுவரப்பட்ட மிகப் பெரிய மாற்றமாகும். தற்போது நடைமுறையிலுள்ள வரி முறையை ஒப்பிடும் போது GST வெளிப்படைத்தன்மையுடன் கூடிய வரியமைப்பாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.

பொருளாதார விஷயத்திலும் வெளியுறவுக் கொள்கைகளிலும் எந்தப் பெரிய மாற்றமும் பாஜகவிற்கும் காங்கிரசுக்கும் இல்லை. இருக்கப்போவதுமில்லை. மேற்கூறிய விஷயங்கள் அமெரிக்காவிற்கும், இதர நாடுகளுக்கும் கூட பொருந்தும். அதன் செயலாக்கத்தில்தான் அவற்றின் நடவடிக்கைகளின் மூலமாகவே அவை மேம்படுகிறதா இல்லையா என்பதில்தான் வேறுபாடுகள் இருக்க முடியும். இந்த GST விஷயமும் அப்படித்தான். வாஜ்பாய் ஆட்சிக்காலத்திலிருந்தே இதற்கான யோசனைகளும் செயல்படுத்துவதற்கான வரைமுறைகளையும் இரு கட்சிகளும் செய்ய ஆரம்பித்து விட்டன.

GST வந்தால் நல்லதுதான். தனித்தனியாக வரிவிதிப்பதைத் தடுத்து இந்தியா முழுமைக்கும் ஒரே விலையில் எல்லா இடங்களிலும் கிடைக்கச் செய்யலாம். ஆனால் தற்போதைய நிலையில் மாநிலங்கள் இதை எதிர்ப்பதற்குக் காரணமும் உண்டு. குறிப்பாக மாநிலங்கள் கோரும் ( Compensation Tax for the state taxes & Indirect Taxes, Petrol Tax, entry Tax) ஆகியவற்றை உள்ளே கொண்டு வர வேண்டும் என்பதே பெரும்பாலான மாநிலங்களின் கோரிக்கையாகும்.

என்னைப் பொறுத்தவரையில் மற்ற வரிகளில் மத்திய அரசு கொடுக்கிறதோ இல்லையோ Compensation Tax விஷயத்தில் மத்திய அரசு மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய வருவாயைக் கிடைக்கச் செய்ய வேண்டும். குறிப்பாக எந்தெந்த மாநிலங்கள் மாநில வரியை அதிகமாக வைத்து அதன் மூலமாக தமது மாநில அரசிற்கு வருவாய் அதிகமாகக் கிடைக்க வழி செய்திருந்தத மாநிலங்கள் இதனால் பாதிப்படைய வாய்ப்புண்டு. சில மாநிலங்களுக்கு நன்மையும் கிடைக்க வழியுண்டு. காரணம் மத்திய அரசு இதற்கென பொதுவான ஒரு வரிவிகிதத்தைக் கொண்டு வந்து பகிரச் செய்யும். அப்போது அதிக வரிவிதித்த மாநிலங்கள் பாதிப்பாகும் என்பதாலேயே எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.

மாநில நிதிக்குழு சமர்பித்த அறிக்கையில், GSTயை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இதனால் ஏற்படும் இழப்புகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்று அதற்கான இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளது. மத்திய அரசோ ஒவ்வொரு மாநிலத்திற்கும் CST (Central sales Tax) மூலமாக மாநிலங்களுக்கு 11,000 கோடி ரூபாயைத் தருவதாகக் கூறியுள்ளது என்று மாநிலங்கள் நிதிக் குழுவின் பொறுப்பாளரான அப்துல் ரஹீம் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில் தாங்கள் கோரிய மூன்று விஷயங்களில் ஒன்றே ஒன்றை ( Divisive Pool) மட்டுமே மத்திய அரசு ஒத்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

தற்போதைய நிலையில் வைத்துப் பார்த்தால் ஸ்டாக் மார்க்கெட்டில் சரிவு ஏற்படலாம். ஆனால் நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் நிச்சயம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மூலம் வரவும் அதிகரிக்கும். அதிக போட்டி முறையும் உருவாகும். மாநிலங்களுக்குச் சேர வேண்டிய நியாயமான பங்கீட்டிற்கான வழிமுறையை மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் கொண்டு வந்துவிட்டால் GST (Goods and Services Tax) முறை உண்மையிலேயே இந்தியப் பொருளாதரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கொண்டுவரும்.

லால் பிகாரியும் இந்திய சட்ட பிழைகளும்

லால் பிகாரி – சுவாராஸ்ய மனிதனின் வாழும் போதே
===============================================
இறந்த கதை:
===========

லால் பிகாரி. உத்திரப் பிரதேசத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அவர் தனக்கு ID Proof எடுக்க தாலுகா ஆபிசுக்கு சென்ற போது, அவருக்கு ID கொடுக்க மறுத்து விட்டனர். அவரிடம் ” நீ யார்? “. உனக்கேன் லால் பிகாரி பெயரில் ID வேண்டும் எனக் கேள்விகள் முன் வைக்கப்பட்டன. அவருக்கு அதிர்ச்சி!

“சார், நான்தான் லால் பிகாரி. எனக்கு ID வேண்டுமென நான் கேட்காமல் யார் கேட்பார்கள்?”

“ஹலோ… நீங்க ஏற்கனவே இறந்து விட்டீர்கள். அப்படித்தான் ரிஜிஸ்தர் ஆகியுள்ளது. மன்னிக்கவும், உங்களுக்கு ID தர முடியாது.”

“சார், நான் உயிரோடத் தான் இருக்கேன். எப்ப செத்தேன்?”

“ நீங்க போன வருஷம் இறந்து விட்டீர்கள். உங்கள் தாய்மாமா தான் அரசுக்குத் தகவல் கொடுத்து, உங்கள் குடும்பச் சொத்தான ஒரு ஏக்கருக்கும் குறைவான உங்கள் நிலத்தை அவர்களின் பெயரில் எழுதிக் கொண்டு போயுள்ளார்”

“ யாருய்யா, நான் இறந்தேன் என certificate கொடுத்தது.?”

“ போன வருஷம் இருந்த தாசில்தார்.”

விசாரித்த போது 300 ரூபாய்க்கு நான் இறந்துள்ளேன் என பிற்காலத்தில் லால் பிகாரி நகைச்சுவையுடன் தெரிவிக்கிறார்.

நாம் இனி உயிரோடு இருக்கிறோம் என்பதை proof பண்ண வேண்டும் என்பதற்காக பல கோல்மால் வழிகளை, நேர்வழிகளை கையாள்கிறார். அவர் கையாண்ட முதல் வழி: அவரது Cousin brother ஐக் கடத்துகிறார். யாராவது நம்மை போலீசில் கம்ப்ளைண்ட் பண்ணுவார்கள். அதை வைத்து நான் உயிரோடு இருக்கிறேன் என்பதை proof பண்ணி விட வேண்டியது தான்.

விதி, கடத்தப்பட்டவரின் வீட்டிலிருந்து நான்கு நாட்களாகியும் யாரும் காவல்துறையில் புகார் கொடுக்கவில்லை. அவனை சினிமாவுக்குக் கூட்டிச் சென்றதுதான் மிச்சம். உடனே அவனது சட்டையில் ஆட்டு ரத்தம் தடவி அதை கசின் வீட்டு முன்பாக போடலாம் என நினைத்து கசாப்புக் கடைக்காரரிடம் போகிறார். அவர் முடியாது என மறுக்கிறார். கடைசியில் இது சரியில்லை என அந்த ஐடியாவைக் கைவிடுகிறார்.

இதற்கிடையில் உத்திரப்பிரதேச சட்டசபை முன்பாக தர்ணா செய்கிறார். யாரும் கண்டுகொள்ளவில்லை. தினமும் தர்ணாக்கள் நடந்ததால் யாரும் இவரது பிரச்சினையைக் கண்டுகொள்ளவில்லை. அவரும் அவரது சகோதரரும் சேர்ந்து கலவரத்தில் ஈடுபடுகிறோம், எங்களைக் கைது செய்யுங்கள் எனச் சொல்லி போலீசிடம் 500 ரூபாய் லஞ்சம் கொடுக்கிறார்கள். இவர்களது motive என்ன என்பதை அறிந்த காவலர் இவர்களைக் கைது செய்யாமல் ஒழுங்கா வீடு போய்ச் சேருங்க என சொல்லி விட்டு சென்று விடுகிறார்.
அவர் இதற்கிடையில் “உத்திரப்பிரதேச வாழும் போதே இறந்த மனிதர்கள் சங்கத்தை” தோற்றுவிக்கிறார். இதுபற்றி அறிந்து கொண்டு பேட்டி எடுக்க வந்த நிருபர் கிரிமினல் நடவடிக்கைகளைக் கைவிடுமாறும் வேறு முயற்சிகள் செய்யுங்கள் எனச் சொல்லி விட்டு பத்திரிகையில் லால் பிகாரி பற்றிய செய்தியை வெளியிடுகிறார். இச்செய்தி பரவலான கவனம் பெறுகிறது.

சில நாட்களிலேயே 100 பேர் உறுப்பினர்களாக சேர்கின்றனர். இதையறியறிந்த இச்சிக்கலில் இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலே மேலே கூடுகிறது. எண்ணிக்கை 25,000 எனத் தொடுகிறது. இது உத்திரப்பிரதேச மாநில உறுப்பினர்கள் மட்டுமே என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதற்கிடையில் அவர் இன்னொரு முயற்சியை மேற்கொள்கிறார். தனது மனைவிக்கு விதவைப் பணம் தர வேண்டும் என்று மனு செய்கிறார். 1988 ல் அவர் பெயரில் இருந்த சொத்தைக் காட்டி விபி சிங்கை எதிர்த்து நின்று 1600 வாக்குகள் பெறுகிறார். , 1989 ல் ராஜீவ் காந்தியை எதிர்த்தும் தேர்தலில் நிற்கிறார், கூடவே தாம் இறந்தவர் என்றும் டாக்குமெண்டில் குறிப்பிடுகிறார்.

சுவராஸ்யம் உச்சத்தை அடைகிற இடம். இவர் தொடங்கிய “வாழும் போதே இறந்தவர்கள் சங்கம்” பற்றிய செய்திகள் NEWS week, TIMES போன்ற சர்வதேச பத்திரிகையிலும் வெளிவந்தன. லால் பிகாரிக்கு “IG NOBEL” prize அறிவிக்கப்படுகிறது. இந்த பரிசு யாருக்குக் கொடுப்பார்கள் என்றால் , யார் மிக strange things செய்கிறார்களோ, பார்க்க நகைச்சுவையாக இருந்தாலும் ஆனால் மிகவும் சிந்திக்கக் கூடிய செயலைச் செய்கிறார்களோ அவர்களுக்கு இந்த பரிசு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் என அறிவிக்கிறது.

இங்கு மீண்டும் ஒரு சுவராஸ்யம். லால் பிகாரிக்கு விசா வழங்கப் படவில்லை. காரணம் பாஸ்போர்ட் இல்லாத ஒருவருக்கு எப்படி அமெரிக்கா விசா வழங்கும்? இறந்தவருக்கு நாங்கள் எப்படி பாஸ்போர்ட் கொடுக்க முடியுமென இந்திய பாஸ்போர்ட் ஆபிஸ் அறிவிக்கிறது. நீங்கள் கேசை வென்ற பின்னரே இனி நாங்கள் முடிவு செய்ய இயலும். ஆகையால் பாஸ்போர்ட் வழங்க முடியாது என்று சொல்லி விடுகிறார்கள். இறுதியாக குந்தன் ஷா என்பவர் லால் பிகாரி சார்பாகச் சென்று விருதை வாங்கி வருகிறார்.

ஒரு வழியாக இவரின் செயல்பாடுகளையும் மற்ற விஷயங்களையும் அறிந்து தாசில்தார் அலுவலகம் அவர் உயிரோடு இருப்பதாகவும் தவறுதலாக இறந்து விட்டார் என பதிவு பண்ணியதாகவும் சான்றிதழ் வழங்குகிறார்.

லால் பிகாரி இறுதியாக அந்த நிலத்தை மாமாவிடம் தரச் சொல்லி கேட்கவில்லை. அவருக்கு இந்தியச் சட்டத்தையும், அது எப்படி செயல்படுகிறது? தான் இறந்தவனில்லை என்பதை நிருபிக்க 1976 லிருந்து 1994 வரை தேவைப்படுகிறது என்பதை அறிந்து கொண்டதாகக் கூறுகிறார்.

எல்லாம் சரி, இவரது சங்கத்தில் உறுப்பினராக இருந்த 24999 பேரின் நிலைமை என்ன ஆனது? யார் கண்டார், இன்னும் தாங்கள் உயிருடன் இருப்பதை நிருபிக்க அன்றாடம் செத்துக் கொண்டிருப்பார்கள். இந்தியாவில் சட்டம் எவ்வாறு ஒவ்வொரு விஷயத்தையும் அணுகுகிறது? அரசு அலுவலகங்கள் சாமானியர்களின் பிரச்சனைகளை எப்படி அணுகுகிறது என்பதற்கு இந்த ஓர் உதாரணம் போதாதா?

பெண்மையை போற்றும் இந்தியா

பெண்மையை போற்றும் இந்தியா:
===============================

இந்தியாவில் பெண்களுக்கான இடத்தைப் புரிந்து கொள்ள இந்தியாவின் கலாச்சாரத்தை, பக்தி முறையை, இந்திய மனநிலையின் அடித்தளத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியப் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடுமைகளைப் பற்றி பேசுவது மட்டுமே “பெண்ணியம்” என இங்கே கருதப்படுகிறது. அவ்வாறு பேசுதலும் சரியானதே. அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்திலிருந்தும் பெண்ணியம் பேச இயலும் என்பதை வலியுறுத்தவே இக்கட்டுரை. எதிர்மறையான விஷயங்களிலிருந்து அணுகுவதற்குப் பதிலாக நேர்மறையான எண்ணங்களின் மூலமாகவும், மனதைத் தூய்மைப்படுத்துவதன் மூலமாகவும், செயல்களில் வெளிப்படுத்துதல் மூலமாகவும் பெண்ணியம் போற்றலாம்.

பெண்ணைத் தெய்வமாக வணங்கும் முறை:
———————————————————————–

பெண் வணங்குதலுக்குரியவள் என்பதன் வெளிப்பாடே இந்தியாவில் பூமியை “பூமி மாதாவாக” ஒப்பிடுவது. வீடுகளோ, வணிக வளாகங்களோ கட்டப்படும் போது பூமி மாதாவிற்குப் பூஜைகள் செய்யப்படுகின்றன. நதிகளைக் கூட கங்கா, காவேரி, யமுனா, கோதாவரி என பெண்களின் பெயர் சூட்டி அழகு பார்க்கிறோம். வணங்குகிறோம். “பாரத் மாதாக்கி ஜே” என பெண்ணின் பெயரிலேயே சுதந்திரப் போராட்டத்தின் போது கூட முழக்கங்கள் முன் வைக்கப்பட்டன. இவையெல்லாம் பெண்ணை எவ்வாறு வணங்கியுள்ளார்கள் என்று அறிவுறுத்துவது போல உள்ளதல்லவா? அதைத் தானே சுதந்திரப் போராட்டத்திலும் வெளிப்படுத்தினார்கள்.

இச்சமயத்தில் என்னுடைய சிறு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். சவூதியில் உள்ள நான் பணிபுரியும் நிறுவனம் கடந்த ஆண்டு கலாச்சார நாள் (Cultural Day) நடத்திய போது அதன் ஒருங்கிணைப்பாளர்களில் நானும் ஒருவன். இந்தியாவைப் பார்த்தவுடன் புரிந்து கொள்ள சில போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. மேலிருந்த போட்டோவில் மதர் இந்தியா (அன்னை இந்தியா), மகாத்மா காந்தி, காஷ்மீர் உள்ளடக்கிய வரைபடம், அனைத்து மத வழிபாட்டுத் தளங்களும் பெண் கடவுளர்களின் போட்டோக்களையும் வைத்தோம். நிறைய வெளிநாட்டு நண்பர்கள் சரஸ்வதி, லக்ஷ்மி, துர்காவின் படங்களைப் பார்த்து யார் இது என்றார்கள். கல்வி, செல்வம், வீரத்திற்கான தெய்வங்கள் என்று விளக்கிய போது மிகுந்த ஆச்சர்யத்துடன் பெண் தெய்வங்கள் உண்டா என்றனர். ஏனெனில் பெண் தெய்வங்கள் உண்டு என்பதை அவர்கள் அறிந்திருக்கவும் இல்லை. அவர்களின் வழிபாட்டில் பெண் இறைதூதரும் கிடையாது. பெண் கடவுள்களும் கிடையாது.

இந்தியாவின் தொன்ம மதமான இந்துவில் ஆண் கடவுளர்கள் மட்டுமல்லாது பெண் தெய்வங்களும் உண்டு என விளக்கினேன். இந்தியாவில் மட்டுமே “அன்னை இந்தியா” என்று சொல்கிறீர்கள் என ஒரு நண்பர் ஆச்சர்யத்துடன் கூறினார். உலகின் தொன்ம மதத்தில்தான் பெண் தெய்வமாக வணங்கப்பட்டாள், வணங்கப்படுகிறாள். அந்தத் தொன்மக் கலாச்சராத்தை, பெண்ணை வழிபடும் முறையைக் கொண்ட நாடு என்பதிலிருந்து பெண்மையைப் போற்றும் தன்மை இயல்பாகவே இங்குள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் பெண்களுக்கான இடத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் முதலில் நாம் இதையெல்லாம் ஏன் இந்திய சமூகத்தின் கலாச்சாரத்தில் மட்டும் உள்ளது என்ற கேள்வியிலிருந்து விடை காண முனைய வேண்டும்.

உலகில் வேறெங்கும் இல்லாத ஒன்று. இந்திய மனநிலையிலிருந்து நோக்கினால் புரியும். தன் குடும்பத்தில் கன்னியாய் இருந்த பெண், மணமுடிக்கும் முன்பாகவே மரித்து விட்டால், கன்னி பூஜை என அவர்களை வணங்கும் முறையைக் கொண்ட சமூகம் இந்தியச் சமூகம். சுவாஷினி பூஜை செய்கிறோமே! வீட்டிற்கு சீதேவி வரவேண்டும் என்கிறோமே! இவையெல்லாமும் நமக்கு எதைக் கற்பிக்கிறது? அடிப்படையில் இந்தியாவில் பெண்கள் வணங்கப்படுகிறவர்கள் என்பதை உணர முடியவில்லையா?

பெண்ணையும் குடும்ப அமைப்பையும் வணங்கும்
————————————————————————
மனநிலை:
—————–

இன்றைய நடைமுறையில் குடும்பங்களில் என்ன நடக்கிறது? நம்முடைய குடும்பங்களில் சேமிப்பு நிகழ யார் முக்கியக் காரணம்? நன்றாக யோசித்துப் பாருங்கள். வீடு வாங்குங்கள், நகைகள் வாங்க வேண்டும், வங்கியில் பணம் போட்டு வையுங்கள். எப்படியேனும் சேமிக்க வேண்டும் என்ற அழுத்தத்தை ஆண்களுக்குக் கொடுப்பவர்கள் மனைவியும், தாயும்தானே! எனக்குத் தெரிந்து மேற்கூறிய மூன்று விஷயங்களில் நம்மை அழுத்தும் மனைவியோ, தாயோ எப்போதேனும் ஷேர் மார்க்கெட்டில் போடுங்கள் என சொன்னதுண்டா? பெரும்பாலும் அவர்கள் இது போன்ற விஷயத்தில் அறிவுறுத்துவதுமில்லை. பேராசைப் படுகிறாள் என்று சொல்கிற நாம் ஏன் ஒருபோதும் சூதாட்டத்தில் பங்கு கொள்ளுங்கள் என்று பெண்கள் சொல்லிக் கேள்விப்படுவதில்லை? இந்தியக் குடும்பங்களின் சேமிப்பில் தேசிய அளவில் 19 %லிருந்து 27 % ஆக இன்று உயர்ந்துள்ளது என்பதற்குக் காரணமான பெண்கள் வணங்குதலுக்கு உரியவர்கள் தானே!

பெண்ணை மதிப்பதில்லை, தன் விருப்பத்தில் செயல்படும் ஆண்கள், ஏன் பெண்ணின் அறிவுரைப்படி சேமிப்பிற்கான முதலீட்டில் மட்டும் பெண் சொன்னதற்குத் தலையை ஆட்டிக் கொண்டு செயல்படுகிறான். குடும்ப அமைப்பாக இந்தியா இருக்கும்வரை பாரதத்தின் குடும்ப சேமிப்பு குறையப்போவதில்லை. ஆனால் பிடிக்கவில்லையெனில் வெட்டிவிடு என்கிற கருத்தாக்கமே பெண்ணியம் என்று இங்கு போதிக்கப்படுகிறது. அவ்வாறு பேசுவது மட்டுமே முற்போக்கு என்றும் அழைக்கப்படுகிறது.

குடும்ப அமைப்பு முறையே இந்தியாவின் பலம் என்பதற்குச் சின்ன உதாரணம். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அந்நிய முதலீட்டின் மூலம் இந்தியாவிற்குக் கிடைத்த பணவரவைக் காட்டிலும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அனுப்புகிற பணம் இரு மடங்கு என்பது எதைக் காட்டுகிறது? தன் குடும்பத்திலுள்ள சகோதரிக்குத் திருமணம் நடக்க கஷ்டப்படும் அண்ணன்கள், மகள்களுக்கு சிறந்த முறையில் கல்வி, திருமணம் நடத்தித் தர கஷ்டப்படும் தந்தைகள், தங்கள் குடும்பம் பொருளாதார அளவிலும் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் ஆண்கள் சர்வ நிச்சயமாகப் பெண்களை மதிக்கத் தெரிந்தவர்கள் என்பதைத் தான் இந்தியக் குடும்ப அமைப்புகள் கற்றுக்கொடுத்த பாடம் என்பதாகப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. பெண்களை மதிக்கும் சமூகத்தில் மட்டுமே சேமிக்கும் பழக்கம் இருக்கமுடியும். இந்தியாவை இப்படித்தான் புரிந்து கொள்ளவும், வெளிப்படுத்தவும் நாம் முயற்சிக்கவேண்டும்.
கிராமங்களில் முன்பெல்லாம் பெரியோரின் முன்பாக சிகரெட் பிடித்தல் தவறு. குறிப்பாக பெண்களின் முன்பாக சிகரெட்டோ மது அருந்துதலோ தவறு. பெண் முன்பாகத் தகாதசொற்கள் பேசினால் அங்கேயே அவன் அவமதிப்புக்கு உள்ளாவான். ஏனெனில், பெண்ணின் முன்பாக ஆண் ஒழுக்கத்துடன் நடக்க வேண்டும் என்கிற படிப்பினையைத் தான் இன்று மீட்டெடுக்க வேண்டியுள்ளது. நகரமயமாதலில் இன்றைய பெண்களின் முன்பாக எந்தத் தயக்கமும் இன்றி சிகரெட் பிடித்தலும், இரட்டை அர்த்தப்பேச்சையும் பேசுதல்தான் பெண்மையை இகழ்வதைப் போன்றது. பெண்களும் இவ்விஷயத்தைத் தன் கண் முன்னால் செய்யும் ஆணுடன் பேசுவதைத் தவிர்த்தாலே ஆண்கள் இயல்பாகவே பெண்ணுக்கு என்ன மரியாதைத் தரவேண்டும் என்று உணர ஆரம்பிப்பார்கள். தன் முன்னாலேயே ஓர் ஆண் எதையெல்லாம் செய்தால் அது தன்னை அவமதிக்கும் செயல் என எண்ணி இன்றைய பெண்கள் ஒதுக்குகிறார்களோ, அடுத்த கணமே ஆண்கள் தங்களின் வரம்பு மீறலைக் குறைப்பார்கள். ஒரு மரியாதை எண்ணமும் வளரும்.

பெண்ளுக்கான வாக்குரிமை:
———————————————

வாக்குரிமையைப் பெண்களுக்கு வழங்கலாமா என்ற விவாதமே இந்தியா சுதந்திரம் பெற்றபோது ஏற்படவில்லை. சுதந்திரம் வாங்கிய போதே பெண்கள் வாக்கு பெறும் உரிமையைப் பெற்றார்கள். சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கும் அளப்பரியதல்லவா! காலனி ஆதிக்கத்தின் கீழ் சென்ற நாடுகளை விடுங்கள். 1779 ஆம் ஆண்டிலிருந்து ஜனநாயகம் என்று பெருமை பேசிக்கொள்ளும் அமெரிக்காவில் பெண்களுக்கான வாக்குரிமை 1920 ல் தான் நடைமுறைபடுத்தப்பட்டது. ஸ்விட்சர்லாந்தில்1974 ஆம் ஆண்டில்தான் பெண் வாக்குரிமை நடைமுறைக்கு வந்தது. இங்கிலாந்திலும் 1928 ஆம் ஆண்டில்தான் நடைமுறையில் வந்தது. குறிப்பாக தங்களின் புண்ணிய இடம் என சொல்லும் வாடிகன் சிட்டியிலும் (போப்) , சவுதியிலும் பெண்களுக்கு இன்றுவரை வாக்குரிமை வழங்கப்படவில்லை. இணைப்பில் போய் படித்தால் ஒவ்வொரு நாட்டிலும் பெண்களுக்கு வாக்குரிமை எப்போது வழங்கப்பட்டது என்பது தெரியவரும்.
http://en.wikipedia.org/wiki/Women%27s_suffrage#India

இந்திய மனச்சாட்சியின் வெளிப்பாடு:
———————————————————–

2012 டிசம்பரில் இந்தியத் தலைநகர் டெல்லியில் பெண் கற்பழிக்கப்பட்ட நிகழ்வு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. மேற்கத்திய நாடுகளும் சில ஊடகங்களும் இந்தியாவில் படிப்பறிவின்மை, காமவெறி யுள்ளவர்கள் அதிகம் உள்ளனர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் அளவிற்குக் காட்சிப்படுத்தின. இந்த விஷயம் மிகப்பெரிய அளவில் வெளிநாட்டு ஊடகங்களிலும் விவாதத்திற்கு வந்தது. அவை வன்புணர்வை மட்டும் பேசின. ஆனால் அத்தகைய பரப்புரைகளை முறியடிக்கும் செயல் இந்தியாவில் நடந்தேறியது. மக்கள் தெருவில் வந்து போராடினார்கள். பெண்ணை மதிக்கக் கோரி ஊர்லவலங்களை நடத்தி ஆண்களும் பெண்களும் டெல்லியை ஸ்தம்பிக்கச் செய்தார்கள். வழக்கும் விசாரணையும் வெகு விரைவாக முடுக்கிவிடப்பட்டது. ராணுவம் அவ்வாண்டு ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடப்போவதில்லை என அறிவித்தது. அண்டை மாநிலங்களான பஞ்சாபும், ஹரியானாவும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை ரத்து செய்தன. இதைத் தான் நாம் இங்கு பார்க்கவேண்டும். பெண்ணுக்கு இழைக்கப்பட்ட வன்புணர்விற்கு எதிராக ஓர் சமூகம் போராடுவது என்பது பெண்மைக்கான இடம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று சொல்லும் இந்தியச் சமூகத்தின் மனச்சாட்சியாகப் பார்க்கவேண்டாமா?. ஊடகங்கள் டெல்லி சம்பவத்தைப் பற்றி மக்களுக்கு எடுத்துக் காட்டியது சரிதான். ஆனால் ஓர் சமூகம் தனது எதிர்வினையை எவ்வாறு காட்டியது என்பதைப் பற்றி இங்கு அதைப் பாராட்டும் விதமாக ஊடகங்கள் விவாதிக்காதது எதைக் காட்டுகிறது? அச்சம்பவம் ஒட்டி ஏதோ ஓர் அரசியல்வாதி தன் குறுக்குப்புத்தியிலிருந்து தவறான கருத்துரைத்தால் அதை மணிக்கணக்காக ஊடகங்கள் விவாதம் செய்வதன் வாயிலாக நமது (இந்தியாவின்) இமேஜை உடைப்பது மட்டுமா ஊடகத்தின் பணி. நாம் முதலில் நம்மை(இந்தியாவை) எப்படி முன்னெடுக்கிறோமோ (ப்ரொஜெக்ட்) செய்கிறோமோ, அதைப் பொறுத்தே நம்மைப் பற்றிய எண்ணத்தை மற்ற நாடுகள் மேற்கொள்ளும். ஏன், நாமே கூட இந்தியாவைப் பற்றி தாழ்வாகக் கருதாமல், தவறு நிகழ்ந்ததற்கு நம்முடைய எதிர்வினை எப்படி இருக்கவேண்டும்? நம்முடைய செயல்முறைகளில்தான் அதை மீட்டெடுக்க முடியும் என்கிற புரிதல்தான் இன்றைய தேவை.

இந்தியாவை மட்டம்தட்டிக் கொள்கிற விவாதங்களை அமெரிக்காவும் லண்டனும் செய்தபோதுதான் எமெர் ஓ டூல் ( Emer O Toole) The Guardian இதழில் ஒரு கட்டுரை எழுதினார். அதில் அவர் மேற்கத்திய நாடுகள் தங்களை உயரிய பீடத்தில் வைத்துக் கொண்டும், இந்தியாவை மட்டம் தட்டியும் விவாதிக்கும் விவாதங்கள் தகுதியற்றவை என்பதை ஆதாரப்பூர்வமாகத் தகர்த்தெறிந்தார். இந்தியாவில் இயல்பாகவே பெண்களை மதிக்கும் தன்மையும், அரசுக்கு எதிராகப் போராடும் ஜனநாயகமும் இருப்பதால்தான் ஒரு பெண்ணுக்கு நிகழப்பட்ட வன்கொடுமையை எதிர்த்து தெருவில் இறங்கி போராடும் சமூகம் உள்ளது என்று கட்டுரை வடித்துள்ளார்.

இக்கட்டுரையில் அவர் அமெரிக்காவில் ஓர் இளம்பெண்ணைக் கால்பந்து விளையாட்டு வீரர்கள் (மாணவர்களே) 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேங் ரேப் பண்ணியதைப் பற்றி எழுதி அதில் பல கேள்விகளைக் கேட்டுள்ளார். அமெரிக்காவில் நடந்த இச்சம்பவம் பற்றி நமக்கு துளியளவாவது தெரிந்திருந்ததா? மேலும் அமெரிக்காவில் நடந்த கற்பழிப்பையும், இந்தியாவில் அதே போன்ற நிகழ்வு ஏற்பட்ட போது ஏற்பட்ட கொந்தளிப்பையும் ஒப்புமைப்படுத்தி கட்டுரை எழுதியுள்ளார். அதன் இணைப்பு இதோ. http://www.theguardian.com/commentisfree/…/delhi-rape-damini

இந்தியாவின் இமேஜை எதிர்மறையாகக் காண்பிப்பது அந்நிய உணர்வுடன் செயல்படும் சில ஊடகங்களும், தேசத்தைத் தரக்குறைவாகவே பேசுபவர்கள் செய்தாலும் இந்தியாவின் அடிப்படை மனநிலை பெண்ணுக்கு ஆதரவாகவும், பெண்மையை மதிக்கும் குணம் கொண்டது என்பதைத் தான் நாம் முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு தொடர்ந்து செயல்படுதலின் வாயிலாகவே நம்மை உலகிற்கு அடையாளப்படுத்த வேண்டும்.

இந்தியா பெண்மையைப் போற்றும் விதமாக இறை வழிபாட்டிலிருந்து, தம் வீட்டுப் பெண்களை வணங்கும் குணத்திலிருந்து என அனைத்தையும் தமது சடங்கு முறைகளிலும், கலாச்சாரத்திலும் கொண்டுள்ளது என்பதைப் புரிந்து கொண்டு ஏற்கனவே மழுங்கடிக்கப் பட்ட மனநிலையிலிருந்து வெளிவரச் செய்ய வேண்டியதற்கு நமது சிந்தனைகளில் மாற்றம் தேவைப்படுகிறது. அதற்கு குடும்ப அமைப்பு முறையும்,இந்தியாவின் கலாச்சார அடையாளங்களைப் புரியவைப்பதன் மூலமே மீட்டெடுக்க முடியும். பெண்ணியம் பேசுதல் என்பது நேர்மறையாக அவர்களாலும் அவர்களுக்காகவும் செயல்படுதலில் உள்ளது என்பதே நாம் உணரவேண்டியது.

விவசாயத்தை விட்டு வெளியேறலாமா?

விவசாயத்தை விட்டு வெளியேறுவது தவறில்லை என
——————————————————————————–
யோசனை சொல்பவர்களை எவ்வாறு அழைப்பீர்கள்?
———————————————————————————-

இந்தியாவில் தனிநபர் வருமானம் அதிகரிக்க வேண்டுமானால் அதிக மக்களை விவசாயத்திலிருந்து மற்ற வேலைகளுக்கு நகர்த்த வேண்டும். இந்தியாவில் விவசாயம் சார்ந்து எந்த ரூபத்தில் மாற்றுக் கருத்துச் சொன்னாலும் அதை பெரும் சமூகம் ஏற்றுக் கொள்வதில்லை. அதுகூட பரவாயில்லை, கொலைக்குற்றம் செய்தது போல விமர்சிக்க ஆரம்பித்து விடுவார்கள். உண்மை, கார்ப்பரேட் கையாள் என்றுதான் அவர்கள் மீது முதல் விமர்சனம் வந்து விழும்.

இந்தியாவில் 52 % மக்கள் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மையின் பங்களிப்பு 14% தான் உள்ளது. சராசரியாக ஆண்டிற்கு 3% அளவிற்கே விவசாய வளர்ச்சி உள்ளது. இந்தியாவில் விவசாயம் செய்வதற்கு 264 மில்லியன் ஹெக்டேர் நிலம் உள்ளது. 160 மில்லியன் ஹெக்டேர் பயிரிடத்தக்க நிலம் உள்ளது. 124 மில்லியன் ஹெக்டேர் நீர்ப்பாசன வசதியுடன் கூடிய விவசாயநிலம் உள்ளது.

உலகிலேயே சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக அளவிற்கு விவசாய நிலம் கொண்ட நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. உற்பத்தியை இன்னும் இரட்டிப்பாக்க முடியும். நாம் இதுவரை அதில் பாதியளவிற்கே உற்பத்தி செய்துவருகிறோம் என்பதே உண்மை. இந்தியாவில் உலகமயமாதலுக்குப் பிறகு விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளதா? குறைந்துள்ளதா? என்பதைச் சொல்லிவிட்டு விவாதிப்போம். அதாவது உலக மயமாதலுக்குப் பிறகு நிலம் அதிக அளவிற்கு விற்கப்பட்டிருக்கும் அல்லவா? அவ்வாறானால் இந்நேரத்திற்கு விவசாய உற்பத்தி குறைந்திருக்க வேண்டுமல்லவா? ஒருவேளை உங்களின் பதில், விவசாயத்தில் வந்த நவீன முறைகள்தான் உற்பத்தி அதிகரிக்கக் காரணமெனில், எதிர்காலத்திலும் அது அதிகரிக்கச் செய்வதில் எந்தப் பிரச்சினையும் இருக்காதுதானே? எதற்காக வலுக்கட்டாயமாக விவசாயத்தால் பலன் பெற முடியாதவர்களும், செய்ய இயலாதவர்களும் நிலத்தை விட்டு போவதால் தவறில்லைதானே! சீனா விவசாயத்திலிருந்து 300 மில்லியன் மக்களை வெளியேற்றி மற்ற பணிகளில் ஈடுபடச் செய்துள்ளது.

நிதர்சனம் என்னவென்றால் விவசாயத்தில் ஈடுபடாத 48% மக்களின் பங்களிப்பே இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 86% ஆக உள்ளது. விவசாயத்தில் ஈடுபடும் 52% தத்தினரின் பங்களிப்பு வெறும் 14% தான் உள்ளது. ஒரு பக்கம் விவசாயம் செய்பவர்களால் தமது விளைச்சளுக்கான விலையை நிர்ணயம் செய்ய முடியவில்லை போன்ற காரணங்களால் சமூக அழுத்தம் (Social Tension) தான் இதனால் அதிகமாகும்.

விவசாயத்தை நம்பி இத்தனை சதவீதம் பேர் ஈடுபடவேண்டிய அவசியமில்லை. ஆகையால் விவசாயம் செய்ய இயலாதவர்கள் நிலத்தை தொழிற்சாலைகளுக்கோ அல்லது கட்டமைப்பு சார்ந்த விஷயங்களுக்கோ விற்றுவிட்டு நகர்வது ஒன்றும் தவறல்ல. NGOக்கள் நிலம் விற்பவர்களுக்கு முறையான Rehabilitation கிடைக்க பேசுவதென்பது வேறு. விவசாயம் மடிந்து விடும், உற்பத்தி சரிந்து விடும் என அறிவாளிகள் சொல்வதெல்லாம் நிலத்தை விற்பதால் நடக்கப்போவதல்ல என்பதே நிதர்சனம். நகரமயமாதலுக்கு உட்படுத்திக் கொண்ட மாநிலங்களையும், விவசாயத்தை மட்டும் பெரிதும் நம்பியுள்ள மாநிலங்களையும் கணக்கில் எடுத்துப்பார்த்து எடை போடுங்கள். அது பற்றி முந்தைய பதிவில் எழுதியுள்ளேன்.

இந்தியாவின் குடித்தனம் (Household) நகரமயமாதலை எப்படி புரிந்து கொள்ள வேண்டும்?

இந்தியாவின் குடித்தனம் (Household) நகரமயமாதலை
================================================
எப்படி புரிந்து கொள்ள வேண்டும்?
==============================

இந்தியாவின் முதுகெழும்பு கிராமங்கள் என்கிறோம். ஆனால் பெரிய மாநிலங்களாகக் (150 சட்டசபை கொண்ட மாநிலங்களைக்) கணக்கில் கொண்டால் பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலங்கள், நகரமயமாதலுக்குத் தன்னை வெகுவேகமாக மாற்றிக் கொண்ட மாநிலங்கள் என்பதிலிருந்து நாம் எதைப் புரிந்து கொள்ள வேண்டும்? அல்லது இந்தியாவை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்?

பெரிய மாநிலங்களின் வரிசையில் பார்த்தால் நகரமயமாதலில் முதலிடத்தில் இருப்பது தமிழகம். % of house holds ஐக் கிராமம் நகரம் என எடுத்துக்கொண்டால் இந்தியாவின் சராசரி முறையே 73.44 %, 26.56% என மத்திய அரசு வெளியிட்டுள்ள SECC2011 கணக்கெடுப்பு சொல்கிறது. தமிழகம் நகரமக்களின் வாழிடத்தைப் பொறுத்தவரையில் 42.47% ஆகும். தமிழகத்தைக் காட்டிலும் நகர குடித்தனம் அதிகமுள்ளவை சிறிய மாநிலங்களான/ UT சண்டிகார் (92.69%), டெல்லி(69.01%), பாண்டிச்சேரி( 58.84%), மிசோரம்(50.64%) போன்றவை. இதுபோன்ற சிறிய யூனியன் பிரதேசத்தையும், மாநிலத்தையும் விட்டு விடுவோம். பெரிய மாநிலங்களைக் கணக்கில் கொண்டால் நகரத்தில் வசிப்பவர்களின் பட்டியலில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்திற்கு அடுத்த படியாக குஜராத்(40.48%), மகாராஷ்டிரா(40.16%), கர்நாடகா(38.74%), ஹரியானா(35.88%) பஞ்சாப்(35.04%), தெலுங்கானா(31.31%) போன்ற மாநிலங்கள் தேசிய சராசரியைக் காட்டிலும் அதிகமாக, நகரமாக மாறியுள்ளது.

தொழில் வளர்ச்சி பெறாத மாநிலங்கள் என்றும் சொல்லலாம் அல்லது விவசாயத்தைத் துடிப்பாக செய்யும் மாநிலங்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது கல்வியறிவு குறைவான மாநிலங்கள் என்றும் ஓரளவுக்கு சொல்லலாம். அவைதான் நகரமயமாதலில் தேசிய சராசரியைக் காட்டிலும் குறைவாக உள்ளன. நகரப்புற குடித்தனத்தை, பெரிய மாநிலங்களை மட்டும் எடுத்துப்பார்த்தால் உத்திரப்பிரதேசம்(19.81%), பீகார்(9.99%), மத்தியப் பிரதேசம்(23.34%), மேற்கு வங்காளம்(22.64%), ஒரிசா(12.77%), ராஜஸ்தான்(22.18%), கேரளா(17.98%) போன்ற மாநிலங்கள் ஆகும். இதில் கேரளா மட்டும் விதிவிலக்கான மாநிலமாகக் கொள்ளலாம். அங்குள்ள நிலப்பரப்பே கிராமம், நகரம் இரண்டும் கலந்தே வரும் என்பதையும், அதன் உள் மாநில உற்பத்தியில் அதிக பங்கு வகிப்பது வெளிநாட்டில் பணிபுரியும் கேரளத்தினர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இத்தகவல்கள் அரசின் இணையதளத்திலேயே உள்ளது. மற்ற விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.http://www.secc.gov.in/staticReportData?getReportId=Z_11

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் விவசாயம் மட்டுமல்லாது தொழிற்சாலைகளைச் சார்ந்த மாநிலங்களாக நகரமயமாதலுக்குத் தன்னை அதிக அளவிற்கு உட்படுத்திக் கொண்ட மாநிலங்கள்தான், தனி நபர் வருமானத்திலும் அதிக அளவிற்கு உள்ளனர் என்பது எதைக்காட்டுகிறது? வணிகத்தில் விவசாயியே தனது விளைப்பொருட்களுக்கான விலையை நிர்ணயிக்க முடியாமல் உள்ளது. விவசாயம் சார்ந்து இயங்கும் குடும்பங்களைப் பொருளாதார அளவில் பின்னுக்குத் தள்ளியுள்ளன என்பதும் தெளிவாகத் தெரிகிறது. விவசாயம் செய்பவர்கள் விலையை நிர்ணயிக்க இயலாமல் இருப்பது தொடருமானால் ஏழை மக்கள் விவசாயத்தை விட்டு வெளியேறுவதே அவர்களுக்கு நல்லது.

விவசாயம் இந்தியாவின் முதுகெழும்பு என்று சொல்பவர்கள் அதைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் வட மாநிலங்களின் விவசாயப் பங்களிப்பையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். வட மாநிலங்கள் கல்விக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதன் மூலமாகவும், அதிக தொழில் நிறுவனங்களை நிறுவுவதன் மூலமாகவும் பொருளாதார வளர்ச்சியையும் எட்ட இயலும். விவசாயம், தொழிற் வளர்ச்சி ஆகிய இரண்டையும் சரிசமமாக நிலை நிறுத்துகிற திட்டங்கள்தான் இந்தியாவை பொருளாதார வளர்ச்சியிலும் அதிக உயரத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்.

பொருளாதாரத்தில் திருப்பம் தரவல்ல திட்டம் – முத்ரா வங்கி

பிரதமரின் பெயரில் பல திட்டங்களை தற்போதைய மத்திய அரசு அறிவித்து வருகிறது. அவற்றில் குறுந்தொழில் நிறுவனங்களின் வணிகம் மிகச் சிறப்பாக நடந்தால்தான் இந்தியப் பொருளாதாரத்தை இன்னும் வலுப்படுத்த இயலும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் கொண்டு வரப்படுகின்ற திட்டமே முத்ரா வங்கி திட்டமாகும். இந்தத் திட்டம் உறுதியாக பொருளாதாரத்தில் மிகப்பெரிய திருப்பத்தைத் தரும் என பொருளாதார வல்லுனர்கள் பலரும் கருத்துரைத்துள்ளார்கள்.
முத்ரா வங்கி திட்டத்தைப் புரிந்து கொள்ளும் முன்பாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP) (Small , Micro Enterprise or Unincorporate) நிறுவனங்களே 50% க்குப் பங்களிப்பு செய்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு 12 to 14% மும், விவசாயம் மற்றும் அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தலா 18% மும் உள்ளது.

12 % to 14% இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் 40% அளவிற்குக் கடனுதவி பெறுகின்றன. ஆனால் மற்ற நிறுவனங்களோ குறைந்த அளவிற்கே கடனுதவியை வங்கியின் மூலம் பெறுகின்றன. பெரும்பாலும் வட்டி மூலமே தமது வணிகத்தை மேற்கொள்ள நடவைக்கைகளை எடுத்து வருகின்றன.

முத்ரா வங்கி திட்டம் ஏன் கொண்டுவரப்படுகிறது?
==========================================

1. கடன் நிதியுதவியை வங்கியின் மூலம் குறுந்தொழில் செய்பவர்களுக்கு வழங்குதல். அவர்களை முறையாகப் பதிவு செய்ய வைத்தல்.

2. தொழில் வளர்ச்சி பெருகுவதன் மூலம் அதிக வேலைவாய்ப்பை உருவாக்கல்.

3. நிதி அமைச்சகத்தின் தகவலின் படி 5.77 கோடி(57.7 million) சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள் உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. Economic Access 2014 ன் கணக்கின் படி, குறுந் தொழில் செய்பவர்களின் Gross Fixed Asset11.5 இலட்சம் கோடி ஆகும். கார்ப்பரேட் நிறுவனங்களை விட இவை மிகவும் திறம் வாய்ந்தவை. (Efficient one)

RBI யின் கணக்கின் படி, மைக்ரோ தொழில் செய்யும் நிறுவனங்கள், அவர்களின் Gross Fixed Asset ல் 55% (6.26 Laksh Crore) அதிக பங்கீட்டைத் தருவதாகவும், இந்தியக் கார்ப்பரேட் நிறுவனங்கள் வெறும் 36% தான் பங்கீடு தருகிறது எனவும் தெரிவிக்கிறது. இதுவரையிலும் வெறும் 4% அளவிற்கே வங்கிக் கடனாக மைக்ரோ தொழில் செய்பவர்கள் பெற்றுள்ளார்கள். அதாவது 11.5 Laksh Crore ல் வெறும் 46,000 கோடிதான் கடனாகப் பெற்றுள்ளார்கள். ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் 50 லட்சம் கோடியைக் கடனாக FDI , FII and வங்கிகள் மூலமாக 1991 லிருந்து 2011 வரைக்குள்ளான காலத்தில் பெற்றுள்ளார்கள். ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் கடந்த இருபது ஆண்டுகளில் (1991-2011) 29 மில்லியன் வேலை வாய்ப்புகளே பெருகியுள்ளது. அதாவது ஆண்டுக்குத் தோராயமாக ஒரு லட்சம் மக்களுக்கே வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. Economic Access 2014 ன் கணக்கின்படி, சிறு மற்றும் குறுந் தொழில் நிறுவனங்கள் (பெரும்பாலும் பதிவு செய்யப்படாத இந்த நிறுவனங்கள்) மூலம் 128 மில்லியன் வேலை வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கிறது. இதில் கட்டுமானப்பணியில் வேலை வாய்ப்பு பெற்றவர்களைக் கணக்கில்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கிறது.
இந்தியாவின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவது கார்ப்பரேட்டுகள் மட்டுமல்ல.. கார்ப்பரேட் அல்லாத கம்பெனிகள் என்பதைப் புரிந்துகொண்ட மத்திய அரசு செயல்படுத்த முன் வந்துள்ள திட்டமே முத்ரா வங்கி திட்டமாகும்.
கார்ப்பரேட் அல்லாத இந்த நிறுவனங்களின் பங்களிப்பு உற்பத்தித் துறையிலும் சேவைத் துறையிலும் அளப்பரியது. குறிப்பாக சேவைத் துறையில். கட்டுமானம், வணிகம், போக்குவரத்து, லாட்ஜ், உணவகங்கள், மளிகைக்கடைகள், ரியல் எஸ்டேட், சொந்தமாகத் தாமாகவே செய்துவரும் எலெக்ட்ரிசியன், ப்ளம்பர், மெக்கானிக், வக்கீல், ஆடிட்டர்கள் என சொந்தத் தொழில் செய்துவருபவர்களின் பங்களிப்பு 70 க்கும் அதிகமாக சேவைத் துறையில் உள்ளது.
நடைமுறை வாழ்க்கையில் சிறு மற்றும் குறுந்தொழில் செய்பவர்களைப் பாருங்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் காலையில் 100 ரூபாயைக் கடனாக வாங்கி மாலையில் 110ரூபாய் கொடுப்பவர்கள் உண்டு. இது உதாரணம் மட்டுமே. 10000 ரூபாய் கடன் வாங்குபவரை எடுத்துப்பார்த்தால் அவரின் வருட வட்டி விகிதம் குறைந்த பட்சம் 20 % to 30% க்கும் அதிகமாக இருக்கும். நம்மூரில் கந்து வட்டி முறையில் அரசிற்கும் பலனில்லாமல், சொந்தத் தொழில் செய்பவர்களும் முன்னேற முடியாமல் கறுப்புப் பணம் சம்பாதிப்பவர்களின் கைகளில் பணம் சென்று சேர்கிறது. கந்து வட்டி, சீட்டு உடன்படிக்கை, பத்திர ஒப்பந்தம் போட்டு கடன் கொடுத்தல் என பல வழிகளில் கடன் பெறுவோர் அதிகமிருப்பதை அன்றாடம் நாம் காண இயலும்.
இவர்களைக் கணக்கில்கொண்டே முத்ரா வங்கியின் மூலம் அவர்கள் பயன்பெறும் வகையில் குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் 5.77 கோடி சிறு தொழில் செய்பவர்கள் பலன் பெறுவார்கள்.
வங்கயில் இதன் ஆரம்ப முதலீடாக 20,000 கோடியையும், கடன் உத்தரவாதத்திற்கு 3000 கோடியும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடன் பெறுபவர்களை மூன்று வகையாகப் பிரித்துள்ளார்கள்.

சிசு : முதன் முதலாக தொழில் செய்யும் சிறு தொழில் செய்பவர்களுக்குக் கடனாக ரூபாய் 50,000 வழங்கப்படும்.

கிஷோர்: இந்த நிலையை அடைந்தவர்களுக்கு Rs 50,000 to Rs 5,00,000 வரையிலும் கடன் வழங்கப்படும்.

தருண்: இந்நிலையை அடைந்தவர்களுக்கு Rs 5,00,000 to Rs 10,00,000 வரை கடனுதவி கிடைக்கும்.
முத்ரா வங்கி இந்தப் பணம் கொடுத்தல், திரும்பப் பெறல், எப்படி பெறுவது என்பதற்கான சட்ட திட்டங்களை வகுத்து அதன் அடிப்படையில் செயல்படும் எனவும், இன்னும் ஒரு வருடத்திற்குள்ளாக இவற்றை முழுமையாக நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் சிபியின் துணையோடு செயல்படும் என்றும், பின்னர் தனி வங்கியாக செயல்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
குறுந் தொழில் செய்பவர்களில் 62% த்தினர் SC, ST and OBC வகையைச் சேர்ந்தவர்கள் என்றும் அரசே தெரிவித்துள்ளது. இவர்கள் பலன் பெறும் வகையில் கொண்டுவரப்பட்ட திட்டமே முத்ரா வங்கி திட்டமாகும். “Funding the unfunded companies “ என்பதை அருண் ஜெட்லி பட்ஜெட் உரையில் குறிப்பிடுகிறார். அதில் சிறு குறுந் தொழில் நிறுவனங்களுக்கு முறையாக பதிவு செய்ய வைத்தல் மற்றும் வங்கி மூலமாகக் கடன் உதவி செய்வதன் மூலம் அதிக வேலை வாய்ப்புகளையும், அதிகளவிற்கு உள் நாட்டு உற்பத்தியையும் பெருக்க இயலும் என்று அறிவித்தார்.
முத்ரா வங்கியின் முதலீட்டை இன்னும் மத்திய அரசு அதிகப்படுத்த வேண்டும். இதை முதலில் வெற்றிகரமாக அமல்படுத்தினாலே இந்தியா தமது பொருளாதாரத்தில் மிகப் பெரிய திருப்பத்துடன் கூடிய பெரிய வளர்ச்சியைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை. அதை நிச்சயமாக மோடி செய்வார் என்றே தோன்றுகிறது. 2016 ஏப்ரலுக்குள் முழுமையாக நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்த பட்ஜெட்டில் இதன் முழு வடிவம் பற்றிய தெளிவும் நமக்குக் கிடைக்கும்.

தமிழ்நாடு அங்காடி, தொழிலகம் & உணவகங்களுக்கான சட்டம் தேவையா?

TAMILNADU SHOPS AND ESTABLISHMENT ACT:
=====================================

மோடியிடம் சொல்லி முதலில் இந்தச் சட்டத்தை மாற்ற வேண்டும்.

தமிழக அரசின் Shops and establishment சட்டத்தைப் படித்தால் சிரிப்பு சிரிப்பாக வருகிறது. அந்தச் சட்டத்தில் என்ன சொல்லியுள்ளது என்பது பற்றிய சில முக்கியமான ரூல்ஸ் மட்டும் சொல்கிறேன். இந்த மாதிரி சட்டம் தேவையா என்பதே எனது கேள்வி?

1. கடைகளை வாரத்தில் எந்த நாளும் திறக்கலாம். உதாரணமாக உணவகங்களை எடுத்துக்கொள்வோம். அங்கு பணிபுரிபவர் அதிக பட்சமாக NT = 48HRS/week & Including OT = 54/week. தான் பணி செய்யச் சொல்ல வேண்டும். இது எந்த ஊர்ல நடக்குதுன்னு சொல்லுங்க.

2. நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை one Hour break கொடுக்க வேண்டும். இல்லையெனில் அது சட்டமீறல் என்கிறது சட்டம்.

3. வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். (இது ஓரளவுக்கு உண்டு)

4. பெயிண்ட் அடிச்சுருக்கனும். தீ பிடிக்காமல் இருக்கவும், தீப்பிடித்தால் அதை அணைக்கக் கூடிய உபகரணங்களை வைத்திருக்க வேண்டும்.

5. ventilation proper ஆக இருக்கனும். அதாங்க காற்றோட்டத்துடன் இருக்கனும்.அரசு இன்ஸ்பெக்டர் வந்து விசிட் பண்ணும் போது இவையெல்லாம் இல்லையெனில், இன்ஸ்பெக்டர் சொல்வதே சரி எனக் கொள்ளப்படும். அபராதமும் விதிக்கப்படும்.

6. கடையைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மழை பெய்தால் ஒழுகக்கூடாது. எலி வரக்கூடாது. மீறினால் அபராதம்.

7. வருஷத்துக்கு 12 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை , மேலும் 12 நாட்களுக்கு sick லீவ் எடுத்துக்கலாம். முதலாளி முறையாகச் சம்பளம் கொடுக்க வேண்டும்.

8. குழந்தைகள் (14 வயதுக்குக் குறைந்தவர்களை) பணியில் அமர்த்தக்கூடாது.

9. பெண்களை காலை ஆறு மணியிலிருந்து மாலை ஏழு மணி வரை மட்டுமே இருக்கும் வகையில் (8 மணி நேரம் தான், எந்த நேரத்தில் கடைகளோ, ஹோட்டலோ, எதுவாக இருந்தாலும்) தான் வேலை வாங்க வேண்டும்.

10. பெனால்டி எவற்றிற்கு உண்டு என அடுக்கியுள்ளார்கள். பெரும்பாலும் மேலே சொல்லப்பட்ட விஷயங்களை முதல் தடவை சரியாக இல்லையெனில் 25 Rs ம், இரண்டாவது முறை கண்காணிப்பில் செய்யாமல் இருந்தால் Max of rs 250 வரையிலும் அபராதம் விதிக்கலாம். இது தெரியாமல் நம்மிடம் 500 Rs முதல் 1000Rs வரை லஞ்சமாகப் பெறுவார்கள்.

11. தொழிலாளிக்கு மீதமுள்ள சம்பளத்தைக் கொடுக்காமலோ, ஒரு மாத முன்னறிவிப்புச் செய்யாமலோ வேலையை விட்டுத் தூக்கினால் சிறைத் தண்டனை உண்டு.

சட்டம் எழுதியிருப்பதெல்லாம் ஓகே. ஆனால் நடைமுறையில் இவைதான் ஊழலுக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக point no 4 to 9 , அதிகாரிகள் விசிட் பண்ணிட்டு லஞ்சப் பணம் வாங்கிட்டுப் போக மட்டுந்தான் உதவுது. என்னைக் கேட்டால் இந்த மாதிரி இந்தியாவிற்கு நடைமுறையில் பலனளிக்காத சட்டங்களைத் தூக்கி விட்டாலே லஞ்சம் வாங்க முடியாது. அதற்குப் பதிலாக Shops and establishment சட்டத்தை மிக எளிமையாக்கி விடலாம்.

என்னுடைய யோசனை என்னவென்றால் ஒன்று முறையாக கடையைப் பதிவு செய்வது, அதற்கு ஆண்டுதோறும் வரி செலுத்துவது, பணியாட்களுக்கு கையெழுத்துடன் கூடிய சம்பளக் கவர் வழங்குதல், தவறினால் அந்தத் தொழிலாளி வழக்குப் போட்டு வெற்றி பெறும் பட்சத்தில் அதற்கான செலவையும் முதலாளி ஏற்றுக் கொள்ளல், கடைகளுக்கு இன்சுரன்ஸ் செய்து விடுதல், அதற்குக் கட்டாயமாக அரசுக்கு ஆண்டுதோறும் வரியோடு ஒரு தொகையைச் செலுத்தச் செய்தல் (தீ விபத்து போன்றவையால் பாதிக்கப்பட்டால்) போன்றவையே போதுமானது. அதிகாரிகள் பதிவு செய்யும் போது, அதை வழங்கும் போது மட்டும் கடையில் மேற்கூறிய விஷயங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா எனப் பார்த்தால் போதும். எப்ப வேணும்னாலும் போகலாம் என்று இருப்பதால்தான் கை அரிக்கும் போது காசைப் பிடுங்க வருவார்கள். சில யோசனைகள் எனக்குத் தோன்றாமல் போயிருக்கலாம்.

இன்ஸ்பெக்டர் வரும்போதெல்லாம் மேற்பார்வை என்ற பெயரில் லஞ்சம் வாங்க மட்டுமே இச்சட்டம் நடைமுறையில் உதவுகிறது. இதன் மூலமாக தொழிலாளி அடைந்த பலன் என்ன? வாடிக்கையாளர்கள் கடை சுத்தம், காற்றோட்டம் என அடைந்த பலன்கள் இவர்கள் இன்ஸ்பெக்ட் பண்ணியதால் கிடைத்தது என ஒன்று கூட கிடையாது. முதலாளிகள் தங்கள் கடைக்கு வாடிக்கையாளர்கள் வந்தால் , வர வேண்டுமானால் என்ன வசதியை தற்காலத்தில் செய்து கொடுத்தால் வருவார்கள் என்று தெரியும். அதை வைத்து அவர்களே அதை நிறைவேற்றிக் கொள்வார்கள். ஆகவே முதலில் இதுபோன்ற சட்டங்களை அரசு அதிகாரிகள் மேற்பார்வை என்ற பெயரில் லஞ்சம் வாங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சட்டமாகக் கொண்டு வர வேண்டும். மோடி தேவையற்ற சட்டங்கள் நீக்கப்படும் என சொல்லியுள்ளார். முதலில் இதுபோன்ற கதைக்குதவாத சட்டங்களைப் பிடுங்கி எளிதாகக் கொண்டு வாங்க. தேசம் போற்றும்.

http://nics.in/wp-content/uploads/2014/03/TN-Shop-act.pdf
இதைப் பற்றி அறிய விரும்புபவர்கள் மேலுள்ள லிங்கில் சென்று படித்துப் பாருங்கள். முக்கியமான விஷயங்கள் மட்டுமே சொல்லியுள்ளேன்.

ஐரோப்பா VS இந்தியா எதிர்காலப் பொருளாதாரம் :

பொருளாதாரத்துக்கும் நிதி திட்டமிடலுக்கும் சேமிப்பும், முதலீடும் இரு கண்கள். அப்படி வைத்துப் பார்க்கும் போது இங்கிலாந்து மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் Household Savings எடுத்துப்பார்த்தால் படு மோசம். இதுக்கு என்ன காரணம்னு எல்லாம் ரொம்ப மெனக்கெட வேண்டியதில்லை. குடும்ப அமைப்புகள் வலுவில்லாத பயலுகளுக்கு சேமிப்புப் பழக்கம் எப்படி இருக்கும்? கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்வதற்கு புதுசா கண்டு பிடிச்ச பெயர்தான் Single Parenting சிஸ்டம். லெஸ்பியன்கள் கல்யாணம் பண்ணிக்கலாம், gay கல்யாணம் பண்ணிக்கலாம் என்று வேறு இதில் வரவேற்பார்களாம். அமெரிக்காவில் அப்பாவை எதிர்த்து மகன் போட்ட வழக்கில் , இருவருக்கும் டைவர்ஸ் கொடுத்து எகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

பற்றாக்குறைக்கு குடும்பத்தையே Nationalise ஆக்கிட்டு பென்சன் திட்டத்தையும் முழுவதுமாக அரசே மேற்கொள்வதால் பல சிக்கலை இன்று ஐரோப்பிய நாடுகள் எதிர் கொண்டுள்ளது. டென்மார்க் Household savings விஷயத்தில் -.2 ஆகவும், நம்மை ஆண்ட பரம்பரை இங்கிலாந்து 3% க்கும் குறைவாகவே savings உள்ளது. இந்தியாவின் குடும்ப சேமிப்பு சராசரியாக எடுத்துக்கொண்டால் கூட 25% இருக்கிறது.

Demography Changes விஷயத்திலும், ஐரோப்பிய நாடுகளுக்குச் சிக்கல்தான். அங்குள்ளவர்களின் சராசரி ஆயுள் 82 to 85 ஆக உயர்ந்துள்ளது. அரசு அதனால் ஓய்வு வயதை 65 ஆக மாற்றி உள்ளது. ஆனால் வயதானவர்கள் ஓய்வுக் காலத்தில் கொடுக்கிற சம்பளத்தை(பென்சன்) எடுத்துக்கிட்டு வேற நாடுகளுக்கு சுற்றுலா கிளம்பி விடுகிறார்கள். இன்னொரு விஷயம் மக்களின் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே செல்கிறது. அரசுகள் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளச் சொல்லி முக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதுக்கு முதலில் குடும்பமாக வாழ வேண்டுமே. இதனால் அங்குள்ள அரசுக்கு வரவைக் காட்டிலும் செலவு அதிகமாகிறது.

இது எதையும் புரிந்து கொள்ளாமல் , இந்தியாவை முதலில் எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்று புரிந்து கொள்ளாமல் இங்கே ஒரு குரூப் நீயா நானாவில் வந்து உட்கார்ந்து கொண்டு, எத்தனை நாளைக்குத் தான் குடும்பங்களைக் கட்டிக்கிட்டு அழுவீங்க. பிடிக்கலன்னா வெட்டி விடுங்கன்னு சொல்லிட்டுத் திரியுறாங்க. இந்தியாவை இப்படி புரிந்து கொண்டவர்கள்தான் இங்கு முற்போக்குவாதிகள்.

இறுதியாக ஒரு செய்தி, கடந்த 2000 ஆண்டு பொருளாதார வரலாற்றை எடுத்துப் பார்த்தால் , ஒவ்வொரு நாட்டின் GDPயையும் வைத்துப் பார்த்தால் இந்தியா தான் 14 ஆம் நூற்றாண்டு வரை முதலிடத்தில் இருந்துள்ளது. 15 ஆம் நூற்றாண்டிலிருந்து சீனாவும் இந்தியாவும் மாறி மாறி முதல் இரு இடங்களில் இருந்துள்ளது. 1750 வரையிலான காலக்கட்டத்தில் வெறும் 0.2 சதவீதம் இருந்த UK வும், 1.7 % இருந்த அமெரிக்காவும் பல நாடுகளை காலனி ஆதிக்கத்தில் கொண்டு வந்த பிறகே பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்றுள்ளார்கள். இந்தியா சுதந்திரம் அடையும் போது உலக GDP யில் 1.6 % மே நமது பங்கு ஆகும். அதாவது மற்ற நாடுகளைச் சுரண்டி தங்கள் பொருளாதாரத்தை வளர்த்துக் கொண்டவர்கள் இன்று மீண்டும் திணறி வருகிறார்கள். 200 ஆண்டுகளில் நம்மை முழுவதுமாகச் சுரண்டி வளர்ந்தவர்கள் இன்று சுரண்ட வழியில்லாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவைப் பொறுத்தவரையில் Demography மற்றும் தொழில் நுட்பத்தை வைத்து தாக்குப்பிடிப்பார்கள். ஆனால் ஐரோப்பிய நாடுகளின் கதிதான் அதோகதியாக மாறுகிறது.

இந்த பொருளாதார மந்த நிலை பற்றி கேள்வி எழுப்பிய போது ஸ்பெயின் அமைச்சர் சொன்ன தகவல் தான் பெரிய காமெடி. எங்கள் பொருளாதாரம் என்ன, உகண்டா போல மோசமானதா? பெல்ஜியம் நாங்கள் கிரீஸ் அல்ல என்று சொல்வதிலிருந்து என்ன தெரிகிறது. கப்பல் கவிழப் போகுது. அதற்கு முன்பாக ஒருவரையொருவர் ஒப்பிட்டுக் கொள்கிறார்கள்.

எழுதி வச்சுக்கோங்க, இன்னும் இருபது to முப்பது வருடத்திற்குள்ளாக நம்மை ஆண்ட பரம்பரையின் பொருளாதாரம் இந்தியப் பொருளாதாரத்தை ஒப்பிடும் போது அதள பாதாளத்தில் கிடக்கும் என்பது மட்டும் உறுதி. இதுபற்றி விளக்கமாக இன்னும் எழுத வேண்டும்.

தாய்லாந்திற்கு தெரிகிற கலாச்சார அடையாளம் இந்தியாவிற்குத் தெரியாமல் போனதேன்?

thailand manthan photo 4

ஒவ்வொரு நாட்டின் கலாச்சார அடையாளங்கள் (Cultural Identity) என்பது வேறு. வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுவதும், கடவுளை வழிபடும் (Worshiping God) தன்மையும் வேறாக இருக்கலாம். ஆனால் அந்த நாடு தன்னை எவ்வாறு அடையாளப்படுத்துகிறது என்பதில்தான் கலாச்சாரப் பெருமை அடங்கியுள்ளது.

இந்தோனேசியா பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். இப்போது இன்னொரு உதாரணம் தாய்லாந்து. தாய்லாந்து நாட்டில் பௌத்த மதத்தைப் பின்பற்றுகிற மக்கள் 94 %. முஸ்லிம் மதத்தைப் பின்பற்றுகிற மக்கள் 5%. இந்து மதம் 0.09%. ( கவனியுங்கள் 0.1 % க்கும் குறைவு). ஆனால் தாய்லாந்திற்குத் தமது கலாச்சார அடையாளம் எது என்பதைப் பெருமையாக சொல்வதில் எந்தத் தயக்கமுமில்லை. அதற்கு அடையாளமாக தாய்லாந்தின் பன்னாட்டு விமான நிலையத்திற்கு அரசு சூட்டியுள்ள பெயர் “சுவர்ண பூமி ” ( சோழர்கள் ஆண்ட பூமி), தமிழில் இதன் பொருள் தங்க பூமி. விமான நிலையத்தில் ஆமையின் மீது வீற்று இருக்கும் “சமுத்ரா மந்தன் (விஷ்ணு)” சிலையையும் சுற்றிலும் தேவர்கள் சிலையையும் அமைக்கவே பல ஆண்டுகள் ஆகியுள்ளது. தாய்லாந்தின் தேசிய அடையாளமாக இன்று வரையிலும் “கருடா” உள்ளது.

இந்தியாவில்தான் மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்தியாவிற்குப் போலி அடையாளங்களுடன் வெளிவருவதற்குப் பகிரதப்பிரயத்தனங்களை முற்போக்கு, போலி செக்குலரிய வாதிகள் மூச்சிரைக்க பதைக்கிறார்கள். இவர்களைக் கண்டு அஞ்சாது இந்திய அரசு தமது கலாச்சார அடையாளங்களை மீட்டெடுக்கவும் முன்னெடுத்தும் செல்வதில் எந்தத் தயக்கமும் காட்டக்கூடாது.

ஆகையால்தான் இந்தியாவைக் கலாச்சாரத்தில் இந்து என்றும், வழிபாட்டில் மற்ற மதங்களைப் பின்பற்றுகிறார்கள் என்றும் இந்துத்துவா சொல்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கலாச்சராத்தை விட்டுத் தராத இன்னும் சில நாடுகள் உள்ளன. அவற்றைப் பற்றி பின்னொரு நாளில் பேசுவோம்.thailand manthan photo 2

சாதிய அமைப்பு முறை மற்ற அமைப்புகளைக் காட்டிலும் சிறந்தது

இந்தக் கட்டுரையில் சாதிய அமைப்பு முறை மற்ற அமைப்பு முறைகளான மொழிப் பிரச்சினை, இனப் பிரச்சினை, மதப் பிரச்சினைகளோடு ஒப்பிடுகையில் ஓரளவுக்குச் சிறந்தது என்பதே எனது கருத்து.

பகுதி 1:

சாதியிலுள்ள தீண்டாமைக் கொடுமைகள் மறைய வேண்டுமென்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் மொழி, இனம், மதம் ஆகியவற்றால் ஒரு கலவரம் ஏற்பட்டால் அதனால் ஏற்படும் இழப்புகளும் ஏராளம். ஆனால் இரு சாதிப் பிரிவுகளுக்குள் கலவரம் ஏற்பட்டால் இழப்புகளையும், கலவரத்தையும் எளிதில் கட்டுப்படுத்தலாம்.

சியா, சுன்னி என மதமாக இருந்தாலும் சரி, சாதியாக இருந்தாலும் சரி பிரிவுகள் குறையும் போது ஒரு நாட்டில் ஏற்படும் இழப்புகள் அதிகம்.

பிரிவுகளற்ற சமுதாயமாக மனிதர்கள் இயங்கவும் வாய்ப்பில்லை என்பதே இயல்பு. அதைப் போலவே இன்று முக்குலத்தோர், வன்னியர் என தம் சாதியிலுள்ள மூன்று பிரிவுகளைச் சுருக்கி ஒற்றை முகத்தோடு வரும்போது தான், அவர்கள் தாங்கள்தான் ஆளத் தகுதியானவர்கள் என்ற எண்ணம் மேலோங்குகிறது.

ஆகையால் சாதிகள் பல துண்டுகளாக பல பிரிவுகளாக இருப்பதே வேற்றுமையில் ஒற்றுமை எண்ணத்திற்கு வலு சேர்க்கும். பிரிவுகள் சுருங்கும் போதே பிரச்சினைகள் அதிகமாகும். மனிதர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்பது வேறு.

சுதந்திரப் போராட்டத்தில் விடுதலை ஒன்று தான் குறிக்கோள் என்ற இடத்தில் கூட சிந்தனை மாற்றம், போராட்ட முறையில் ஏற்பட்ட கொள்கை மாற்றங்களே நேதாஜியையும், காந்தியையும் வேறு வழியில் பயணிக்கச் செய்தது. ஆகையால் எந்தக் காலத்திலும் மனிதர்கள் அதிகாரத்திற்காகவும், தமது பாதுகாப்பிற்காகவும், கொள்கைக்காகவும், பிரிவுகளாக மாறுவார்கள் என்பதே இயல்பு. ஆகவே உலகம் முழுக்க இனம், மொழி, மதம் ஆகியவற்றால் ஏற்பட்ட இழப்புகளைக் காட்டிலும் சாதிய அமைப்பு முறை ஒன்றும் கொடூரமானதல்ல என்பதே. உலகில் இருக்கிறஅமைப்பு முறைகளில் சாதியம் ஒன்றும் அத்தனை கொடூரமானதல்ல என்பதே எனது பார்வை. இல்லைஎன்பவர்கள் எந்த மாதிரியான அமைப்பு முறை இருப்பதில் சிறந்தது எனசொல்ல வேண்டும்

பகுதி 2:

குழு வாழ்க்கையிலும் சரி, தனி நபராக வாழும் வாழ்க்கையிலும் சரி, நாம் செயல்படுகிற முறையால் நன்மையும் தீமையும் கலந்தே இருக்க முடியும். நாம் அனைத்து விஷயத்திலும் தீங்குகள் என்று வந்தால் அந்த அமைப்பு முறையை ஒழித்துவிடுவதே நல்லது என்கிற பரப்புரைகளைச் செய்பவர்களாக இருக்கிறோம். ஓலை வீடாக இருந்தால் ஓலையை மாற்ற என்ன வழி என்று சொல்வதற்குப் பதிலாக வீட்டை இடி , தீப்பிடிக்க வாய்ப்பில்லைஎன்கிறோம்.

சாதி ஒழிப்பில் ஆரம்பித்து மதப் பிரச்சினை, இனப்பிரச்சினை, மொழிப் பிரச்சினை என அனைத்திலும் cause என்ன அதற்கு எவ்வாறு செயல்பட்டால் விடுபடலாம் என்பதற்குப் பதிலாக அதை ஒழிப்பதே முறை என்கிற கருத்துகளே வரவேற்கப்படுகின்றன. உதாரணமாக சாதி ஒழிந்தால் நல்லது, அது ஒழிந்தால் மட்டுமேதீர்வு என்று சொல்வதைப்போல!.

எந்த அமைப்பு முறை வாழ்க்கையிலும் பிரச்சினையிலிருந்து விடுபடும் ஆலோசனைகள் சொல்லப்பட்டால், அவர்களை சாதிய வெறியன் என்று சொல்லிஅடைக்கிறோம். பணம்கூட மக்களை upper class, middle class, Lower class, upper middle class… etc எனப் பிரித்துள்ளது. பணமற்ற ஒரு சமூகம் பங்கீட்டு வாழும் என்று சொல்லிவிட முடியுமா ? இந்த class(வகுப்பு) பிரிவினைகள் இல்லாத ஒரு மாற்று சமூகத்திற்கான வழிமுறைகள் என்ன என்று கேளுங்கள். Theoritical அறிவுரைகள் நிறைய வரும். அவை தேவையில்லை என்று சொல்லவில்லை. அவற்றிலிருந்தே அதை நடைமுறைப்படுத்த, நல்ல விஷயங்களைச் செயல்படுத்த முனைவோம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் உலகம் முழுவதும் வகுப்பு வாரியாக மக்கள் பிரியாத ஒரு சமூகம் இருக்கிறதா? ஆகவே ஒரு அமைப்பை ஒழித்தால்தான் தீர்வு என்பதற்குப் பதிலாக அதிலுள்ள தீமைகளைக் கலையும் அறிவுரைகளே இன்றைய தேவை.