மக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?

ஜனநாயக நாட்டில் தமது உரிமைக்காக மக்கள் போராடுவதை எவரும் குறைகூற இயலாது. அதேபோல நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பொது நலன் கருதி அரசுகள் சில முடிவுகளை மேற்கொள்ளும் போது அரசையும் மேம்போக்காக குறை சொல்லிவிட முடியாது. மக்கள் நல அரசுகள் நாட்டின் முன்னேற்றம் கருதியும் உள் கட்டமைப்பை வலுப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்வதில் தவறில்லை.

 

ஆனால் அரசுகள் நிலங்களை விட்டுக்கொடுக்கும் மக்களுக்கும், அப்பகுதிக்கும் தேவையான சலுகைகளையும் உரிய சன்மானத்தையும், வேலை வாய்ப்புகளையும் முறையாக செய்ய வழிவகைகள் செய்யப்பட வேண்டும். நிலத்தை இழக்கும் பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கும், அப்பகுதி மக்களுக்கு அரசு உதவிகள் செய்ய அப்பகுதி மக்களை இணைத்து கமிட்டிகள் அமைத்தும், அரசு சார்பற்ற நீதிபதிகளின் தலைமையில் கமிட்டிகள் அமைத்தும் நிவாரண உதவிகளும் முறையாக நிவாரணமும் பணி நியமனங்களும் அமைந்துள்ளதா என வழி வகைகள் செய்யப்படலாம்.

 

உள் கட்டமைப்பை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளும் போது குறிப்பிட்ட நிலப்பகுதியைச் சார்ந்த மக்கள் அதிக விலையைக் கொடுக்கவேண்டியுள்ளது என்பதை மறுக்க இயலாது. ஆனால் இன்று எந்தவொரு திட்டத்திற்கும் எதிர்ப்புகளை முன்னெடுக்க சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் பகுதி மக்களில் ஒரு சாராரையோ, அல்லது ஒட்டு மொத்த கிராம மக்களையோ இணைத்துக் கொண்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அது சரியா தவறா என்பது விவாதப் பொருளல்ல.

 

பகுதி நிலப்பகுதி மக்கள்தான் அதிகப் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பதால் இயல்பாக ஆதரவு கிடைப்பதில் வியப்பில்லை. ஆனால் இதர பகுதி மக்களுக்கு அரசின் திட்டங்கள் சரியென படும் போது அதற்குரிய ஆதரவு மற்ற நிலப்பகுதி மக்களிடமிருந்து வருவதில்லை. வரவும் செய்யாது. அவ்வாறு வர வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

 

உதாரணாமாக கூடங்குளம் அணு உலை விவகாரத்தை எடுத்துக் கொள்ளலாம். இன்று வணிக ரீதியிலான உற்பத்தியை அணுசக்தி கழகம் அணு உலையிலிருந்து மின் உற்பத்தி செயல்படுத்தப்பட்டுள்ளது. அணு உலை எதிர்ப்புப் போராட்டம் உள்ளூர் போராட்டம் என்ற அளவில் மிகப் பெரிய வெற்றியாக இருக்கலாம். ஆனால் அப்போராட்டம் தேச அளவில் நோக்கினால் ஒரு தோல்விப் போராட்டமாக அமைந்துள்ளது. இவ்வாறு சொல்வதை போராட்டக்குழுவினரோ அல்லது போராட்ட ஆதரவு தரப்போ எதிர் மறையாகப் பார்க்கக் கூடாது. போராட்டம் தோல்வி என சொல்வதற்கு நான் முன் வைக்கும் பிரதான குற்றச் சாட்டுகள் இவைதான்.

 

“ அணு உலைகள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கட்டப்பட்டு வருகின்றன என்பது யாவரும் அறிந்ததே. கூடங்குளம் அதில் ஒன்று மட்டுமே! இந்தப் போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்தது அனைவருக்கும் தெரியும். அதன் தலைவர்களான கெஜ்ரிவாலும் பிரசாந்த் பூஷனும் கூடன்குளப் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவைத் தனிப்பட்ட முறையிலும் கட்சி மூலமாகவும் தெரிவித்திருந்தார்கள்.

 

அணு உலைகள் கட்டமைப்பில் உள்ள மற்ற மாநிலங்களிலுள்ள மற்ற அணு உலை எதிர்ப்பு அமைப்புகளை ஒருங்கிணைக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தும் அதை தமிழ்நாட்டு அணு உலை எதிர்ப்பாளர்கள் முறையாகக் கையாளவில்லை. அவர்கள் இங்கு போராட்டத்தை முன்னெடுத்த போது அதே நாளில் தொடர் போராட்டங்களையோ அல்லது உண்ணாவிரத முறைகளையோ மற்ற மாநிலங்களிலும் மக்களைத் திரட்டி செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்களே தமது போராட்டத்தை உள்ளூர் போராட்டமாக சுருக்கிக் கொண்டதே இப்போராட்டம் தோல்வி என நான் முன் வைப்பதற்கு முக்கியக் காரணம்.”

 

அன்னா ஹஸாரே போல போராட்டத்தைத் தமிழகத் தலைநகரிலோ, இந்தியத் தலை நகரிலோ ஆம் ஆத்மியின் தெரு முனைப் போராட்ட முன்னோடியான கேஜ்ரிவாலின் துணை கொண்டு இப்போராட்டத்தை மிகப் பெரிய அளவில் முன்னெடுத்திருக்கலாம். அதை இப்போராட்டக் குழுவினரும், ஆதரவை முன்னெடுத்தவர்களும் செய்யத் தவறினார்கள் என்பதே உண்மை. கூடவே ஐந்து  மாநில காவல்துறை அதிகாரிகளை நீக்கக் கோரி கெஜ்ரிவால் போராட்டம் செய்பவர். அவர் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு என்ன செய்தார்? ஒரேயொரு நாள் இங்கு வந்து ஆதரவு தெரிவித்ததும், வழக்கில் உதவி செய்ததோடு நிறுத்திக் கொண்டார்.

 

சர்வ நிச்சயமாக போராட்டத்தைப் பலப்படுத்த இயன்றும், வாய்ப்புகள் இருந்தும் போராட்ட குழுவினர் அதை இறுதி வரை செய்யாமல் போனதன் மர்மம்தான் புரியவில்லை.

 

ஓரளவுக்காகவாவது ஊழல் எதிர்ப்புப் போராட்டம் மிகப் பெரிய அரசியல் அழுத்தத்தைக் கொடுத்ததற்குக் காரணம் அதை நாடு தழுவிய அளவில் மிகப் பெரிய போராட்டமாக மாற்றி அமைத்ததுதான். குறிப்பாக அனைத்து ஊடகங்களின் பார்வையையும் தமிழ் ஊடகம் மட்டுமில்லாமல் அனைத்து இந்திய ஊடகங்களின் வாயிலாக அழுத்தத்தைக் கொடுக்க அணுஉலை எதிர்ப்புப் போராளிகள் செய்ய முனையவில்லை. ஆனால் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்திற்கு தேசிய ஊடக அரசியல் உதவியது போல இதற்கு அவ்வாய்ப்பை ஏற்படுத்த அணுஉலை எதிர்ப்புக் குழுவினர் பயன்படுத்தத் தவறினர் அல்லது விரும்பவில்லை அல்லது முனைப்புக் காட்டவில்லை என்றே தோன்றுகிறது.

 

இன்னமும் சொல்லப் போனால் எழுத்தாளர்கள் கையெழுத்து போட்டதும் மதுரையில் ஒரேயொருமுறை அடையாளமாக எதிர்ப்பைப் பதிவு செய்து அடையாளப் போராட்டம் மட்டுமே தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டது. அணு உலை எதிர்ப்பு எழுத்துப் போராளிகள் இது பற்றி கட்டுரைகள் எழுதினார்கள், விவாத நிகழ்ச்சிகளில் தமது கருத்தை முன் வைத்தார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

 

ஆனால் இன்றைய நிலையில் தேசம் முழுமைக்குமாக போராட்டத்திற்கான ஆதரவைத் திரட்ட வேண்டிய பொறுப்பு போராட்டக்காரர்களுக்கு உண்டு. அணு உலை போல, இந்தியா முழுமைக்கும் சாலை மேம்பாடு, நிலக்கரி, இரும்பு, மீத்தேன் திட்டங்கள் போன்ற பொதுவான கனிம வளம் சார்ந்த திட்டங்களில் உள்ள பிரச்சினைகள் அனைத்திற்கும் தேசத்தை இணைக்கிற அளவிற்கு மக்களை ஒருங்கிணைக்காத போராட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது.

 

இதற்கு நம்மிடம் மிகப் பெரிய முன்னுதாரணமுண்டு. நாடு அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில், விடுதலை வேண்டி போராட்டங்கள் ஆரம்பத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விடுதலை தாகம் வேண்டி போராடி இருந்தாலும் காந்தியடிகள் இந்தியத் தலைவர்களை விடுதலைப் போராட்ட வீரர்களை, தியாகிகளை நேரடியாகவும், கடிதங்கள் வாயிலாகவும் ஒருங்கிணைத்தார். அதை தேசம் முழுமைக்குமான ஒரே குரலில் ஒற்றை நோக்கம் நிறைவேற வேண்டி மக்கள் போராட்டங்களை அகிம்சை வழியில் தேசம் முழுமைக்குமான மக்களை போராட்டங்களில் பங்குபெறச் செய்து ஆங்கிலேயர்களுக்கு மிகப் பெரிய அழுத்தத்தைக் கொடுக்கச் செய்தார்கள்.

 

ஒவ்வொரு போராட்டத்தையும் கடிதங்கள் வாயிலாக தொலைபேசி வாயிலாக அனைத்து மாநிலத்திலும் ஒருங்கிணைத்து அதே நாளில் தேசம் முழுமைக்குமாக எதிர்ப்புப் போராட்டங்களை காந்தியடிகள் தலைமையில் தேசம் மேற்கொண்டது நாமறிந்த வரலாறே!

 

ஜனநாயகமற்ற நிலையிலிருந்த போதே இந்திய மக்களை ஒருங்கிணைக்க இயலுமெனில் இன்றைய ஊடக வளர்ச்சியையும், தொழில் நுட்ப வளர்ச்சியையும் பயன்படுத்தாமல் உள்ளூர் மக்களின் ஆதரவு மட்டுமே போதுமென நினைத்து போராட்டத்தைச் சுருக்கிக் கொண்டதே கூடங்குளம் போராட்டம் மிகப் பெரிய தோல்வி அடைந்ததற்குக் காரணம்!.

 

இதை போராட்டக் குழுவினர் அறிந்தே செய்தார்களா என்ற அச்சமும் உண்டு. இந்தியாவில் இதர மாநிலங்களில் அணு உலைக்கு எதிர்ப்பை உருவாக்கும் நிலையில் இருந்தாலும் ஆம் ஆத்மி கட்சி தேசிய அளவில் எந்தப் போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது.

 

அரசிற்கும், நீதி மன்றத்திற்கும் எதிர்ப்புக் காட்ட விரும்பும் போராட்டக் குழுக்கள் இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல் நிலப்பகுதிக்குள் மட்டுமே போராடி வெற்றி பெறலாம் எனக் கனவு கண்டால் அது பெரும்பாலான மக்கள் ஆதரவைப் பெறாது. போராட்டமும் வெற்றி பெறாது.

 

இது போன்ற போராட்டங்கள் தோல்வி அடைவதற்கு இன்னொரு பிரதான காரணமும் உண்டு. அது அரசியல் ரீதியிலான ஆதரவு எதிர்ப்பைச் சார்ந்தது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் அதிமுக, திமுக, தேசியத்தைப் பொறுத்த வரையில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இம்மாதிரியான உள்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்களுக்கு தெரிவிக்கும் ஆதரவும் எதிர்ப்பும் மிக மிக முக்கியமானது. இதே கருத்து மற்ற மாநிலங்களிலுள்ள பிரதான மாநில ஆளுங்கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும் பொருந்தும்.

 

மாநில அரசையும் மத்திய அரசையும் ஆள்கிற அல்லது ஆளத் தகுதியாக உள்ள மக்கள் ஆதரவைப் பெற்ற கட்சிகள் இதுபோன்ற உள் கட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து விட்டால் பெரும்பாலான போராட்டங்கள் தோல்வியில் முடிவடைய வாய்ப்புண்டு. இதை முறியடிக்க வேண்டுமானால் எதிர்ப்பு மனநிலையை மக்களை ஒருங்கிணைத்து செய்ய வேண்டிய பொறுப்பு எதிர்ப்பைப் பதிவு செய்பவர்களிடமிருந்து வர வேண்டும்.

 

சிறு கட்சிகளான பாமக, மதிமுக போன்ற கட்சிகள் மக்கள் நலன் என்ற பெயரில் ஆதரவுப் போராட்டங்கள் நடத்துவது பெரும்பாலும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் நிரூபிக்கின்றன. மக்கள் ஆதரவை இவர்களால் தேர்தல் அரசியலில் இதுவரை அதிமுக திமுகவைத் தாண்டிப் பெற முடியவில்லை என்பதும் கவனிக்க வேண்டியது. அவ்வாறானால் இவர்களின் மக்கள் நலப் போராட்டங்கள் என்ற பெயரில் நடத்தும் போராட்டங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது.  இதுபோன்ற கட்சிகள் ஆளும் அரசுகளாக மாறினால் அதிமுக, திமுக போன்ற நிலையைக் கூட எடுக்க வேண்டி வரலாம் என்பது யூகம் மட்டுமே.

இது போன்ற திட்டங்கள் கிடப்பிலோ அல்லது கைவிடப்பட வேண்டுமானால் பிரதான கட்சிகளின் ஆதரவை எவ்வகையிலாவது பெற முயற்சிகளை போராட்டக் குழுவினர் முயல வேண்டும் அல்லது மேற்கூறிய நிலையிலுள்ள பிரதான கட்சிகளின் எதிர்ப்பு இருக்கிற பட்சத்தில் மட்டுமே சில போராட்டங்கள் வெற்றி பெறுகின்றன.

 

இதன் தொடர்ச்சியாக வரலாற்றிலிருந்து பார்த்தாலும், நடைமுறை அரசியல் நோக்கில் பார்த்தாலும் இயல்பாக நடக்கும் நிதர்சனங்களையும் உதாரணப்படுத்த வேண்டியுள்ளது.

 

யார் பலம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்களோ, அவர்களே அதிகாரம் செய்ய இயலும் என்பதுதான் உலக நியதி!.  பலம் மூன்று வகைகளில் உள்ளது. அதிகார பலம், பண பலம், ஆள் பலம் என்பதே அது.இதில் யார் எந்த சூழ்நிலையில் பலம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் தான்,  அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டு, அடுத்தவர்களை அடக்கி ஆள்வார்கள் என்பது தான் யதார்த்தம்.

 

இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கூடங்குளம் பிரச்சினையைப் பொறுத்தவரை, பலம் வாய்ந்தவர்களாக அரசு இருந்தது. இது அதிகார பலம். கூடன்குளத்தைத் தவிர மாநிலத்தின் இன்ன பிற பகுதிகளில் சமூக ஆர்வலர்களோ , சமூக எழுத்தாளர்களோ, தொண்டு நிறுவனங்களோ பெருமளவில் மக்களுக்கு அணு உலை ஆபத்து, அது அப்பகுதியில் உள்ள குடிமக்களைப் பாதிக்கும் என்று பரப்புரை செய்து, அதன் மூலம் பெருவாரியான சமூகத்தை தங்களின் போராட்டத்திற்கு துணை நிற்கச் செய்து,அரசுகள் அணு உலையைத் திறக்காத வண்ணம் இருக்கச் செய்யத் தவறி விட்டார்கள். இதை சமூக ஆர்வலர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒருவேளை இப்போராட்டம், தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பெரும் திரளான மக்களை ஒருங்கிணைத்து இருந்தால், அரசுகள் தடியடிக்குச் செல்லாது அடிபணிய வாய்ப்பிருந்திருக்கும்.

 

ஆனால், இங்கு பெருவாரியான மக்களின் பார்வையில், மின் சக்தியின் தேவை மட்டுமே பார்க்கப் படுகிறது. இதுவும் ஒரு மிகப் பெரிய பிரச்சினையாக சமூக ஆர்வலர்களுக்கு இருந்திருக்கக் கூடும். மேலும் தமிழகத்தின் முன்னணி கட்சிகளான திமுகவும், அதிமுகவும் இந்தியாவின் முன்னணி கட்சிகளான பிஜேபி யும், காங்கிரசும் அணு உலையைப் பொறுத்தவரையில் அது தேவை என்பதற்காக பேசிய பிறகு போராட்டம் வெற்றி பெறாது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது.

 

 

யார் பலம் வாய்ந்தவர்களோ அவர்கள் பலமின்மையானவர்களை அடக்கி ஆள்வார்கள். அதுதான் இப்பொழுது நடந்தேறி இருக்கிறது. ஆட்சி என்ற அதிகார பலத்தின் முன்பு, பெரும்பான்மையான தமிழக மக்களை ஒருங்கு இணைக்காத , சிறு அளவிலான மக்களின் கூட்டு முயற்சி பலமற்றுக் காணப்படுவதாலேயே போராட்டம் தோல்வியைத் தழுவியது.

 

 

துனிசியாவில் பென் அலியாகட்டும், எகிப்தின் ஹோசினி முபாரக் ஆகட்டும், அதிகார பலத்தில் இருந்தார்கள் என்பதால் , அவர்களால் மக்களை அடக்கி ஆள இயலவில்லை என்பதை 2011 ஆம் ஆண்டில் உலகம் புரிந்து கொண்டிருக்கும். உலக சரித்திரத்தில் இதை விடச் சுருக்கமாகத் திட்டமிடப்பட்டு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட புரட்சிகள் இல்லை. மக்கள் சக்தி ஒழுங்காக ஒருங்கிணைக்கப் பட்டால், அதிகாரத்தில் யார் இருந்தாலும் வீழ்வார்கள் என்பது சம காலத்தில், சமீப ஆண்டில் நிகழ்ந்ததே!

 

சமூக ஊடகத்தின் வாயிலாக மக்கள் ஆதரவைப் பெற்று வீதிகளில் மக்கள் இறங்கிப் போராடியதன் விளைவே சில நாட்களிலேயே ஆட்சியாளர்களை பதவியை விட்டு இறங்க வழி வகுத்தது. அந்த அளவிலான எதிர்ப்பு மனநிலை அணு மின் உற்பத்தி விஷயத்தில் இல்லை என்பதை மறுக்க இயலாது.

 

 

அதற்கும் , நான் சொல்கிற,யார் பலம் வாய்ந்தவர்களோ அவர்கள் பலமின்மையானவர்களை அடக்கி ஆள்வார்கள் என்பதே காரணம். ஆட்சியைப் பிடித்து அதிகாரத்தில் இருந்து கொண்டு அடுத்தவர்களை அடக்குவது ஒருவகை. எண்ணிக்கை அளவிலான பலத்தை நிருபித்து அடுத்தவர்களை அடி பணியச் செய்வது இன்னொரு வகை. பொருள் பலத்தைக் காட்டி அடுத்தவர்களை அடிமையாக்குவது மற்றொரு வகை. இந்த மூவரில் யார் , எந்த சூழ்நிலையில் பலசாலிகளாக உருவெடுக்கிறார்களோ, அவர்கள் அடுத்தவர்களை ஆள்கிறார்கள்.

அரசு ஒடுக்குகிறது… அரசு மக்கள் நலனைப் புரியவில்லை என்ற வாசகங்கள் எந்த அளவுக்கு போராட்டக்காரர்களுக்கு வலு சேர்க்குமோ அதே அளவுக்கு பெருவாரியான மக்கள் உங்கள் பிரச்சினையை எப்படி புரிந்து வைத்துள்ளார்கள், தவறான புரிதலை எப்படி களைவது என்பதை சமூக எழுத்தாளர்களும், போராட்டக் குழுவினரும், சமூக ஆர்வலர்களும் எடுத்தாளவில்லை அல்லது பெருவாரியான மக்களை வீதிகளுக்கு வரவைக்கவில்லை.  ஆகையால்தான், போராட்டம் தோல்வியைத் தழுவியதே தவிர, அரசின் சர்வாதிகாரமல்ல! எல்லா அதிகாரமும் வீழ்ந்து போகும், அவர்கள் பலவீனமாக இருக்கும் வரை அல்லது சாமானியர்கள் பெருமளவில் தேசம் முழுமைக்கும் ஒன்று திரளும் போது என்பது மட்டுமே உண்மை.

விவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :

விவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :

இந்தியாவில் ஒரு முதலமைச்சர் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமானால், தொழில் நுட்பத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால் போதாது. விவசாயத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஹைதராபாத்தை மிகச் சிறந்த தொழில்நுட்ப நகரமாக மாற்றிக் காட்டினார். அது அவரை மறுமுறை தேர்தலில் வெற்றி பெறச் செய்தது. ஆனால் அதற்கடுத்த முறை மாபெரும் தோல்வியைச் சந்தித்தார். அதற்கு அவர் மேல் வைக்கப்பட்ட மிக முக்கியமான குற்றச்சாட்டு, கிராமங்களையும், விவசாயத்தையும் அவர் கவனிக்கவில்லை என்பதே!

சில தினங்களுக்கு முன்பாக அசோக் குலாதி மத்தியப் பிரதேச முதல்வர் வேளாண்மையில் காட்டி வரும் அக்கறை பற்றியும்,மத்தியப் பிரதேசத்திடமிருந்து மற்ற மாநிலங்கள் கற்க வேண்டியதையும் பற்றிய அழகான கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் சொல்லும் விஷயங்களின் சாராம்சம் இதுதான். FY2006 to FY2015 குட்பட்ட காலத்தில் சராசரியாக 9.7% per Annum வளர்ச்சியை விவசாயத்தில் காட்டியுள்ளார். குறிப்பாக கடந்த ஐந்து வருடத்தில் 14.2 % வளர்ச்சியையும் ம.பி சாதித்துக் காட்டியுள்ளது. விவசாயத்தில் முதலிடத்தில் இருந்த குஜராத்தைப் பின்னுக்குத் தள்ளியும் உள்ளார். இகாலக் கட்டத்தில் குஜராத் 7.7% வளர்ச்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் வேளாண்மையின் சராசரி வளர்ச்சி 3.3%. பாஜக ஆட்சி செய்யாத பல மாநிலங்கள் விவசாயத்தில் காட்டிவரும் அக்கறை மிக மோசமாக உள்ளது என்பதே நிதர்சனம்.

மூன்றாம் முறையாக சிவ்ராஜ் சிங் சவுகான் தேர்ந்தெடுக்கப்பட மிக முக்கியக் காரணம் விவசாயிகளையும் வேளாண்மையையும் புரிந்து செயல்படுதல் என்கிறார். எந்தெந்த மாநிலங்கள் விவசாயிகளின் வளர்ச்சியை முறையாக மேற்கொள்கிறதோ, அது அவர்களுக்கு பொருளாதார வளர்ச்சியில் மட்டுமல்ல, அரசியல் ரீதியாகவும் வெற்றி பெற உதவும் என்கிறார். அதைத் தான் சிவராஜ் செய்துவருகிறார்.

விளைச்சலில் 30.6% (FY2005) to 41.2% (FY2014), சராசரியாக 35% வளர்ச்சியைக் கடந்த பத்து வருடங்களாக செய்து காண்பித்துள்ளார். Tractor sales from 28,500 in FY06 to 87,100 in FY15, என்ற அளவில் Tractor விற்பனையின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. Certified Seed Producer ல் இன்று ம.பி முதலிடத்தில் உள்ளது. கோதுமை, சோயாபீன், அரிசி மற்றும் தானியங்களின் விளைச்சலிலும் அதிகம். விவசாயிகளுக்கு டன்னுக்கு அதிக விலை கிடைக்கும் வகையிலும் செய்துள்ளார்.

மேலும் ஒரு மாநிலத்தின் தலைவர் எவ்வாறெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்பதில் அக்கறை செலுத்தி வருகிறார் என்றும், இப்போது சாலைகள், மின்சாரம் மற்றும் கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் மற்றும் சந்தை, crop இன்சுரன்ஸ் ஆகியவற்றை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவதைப் பாராட்டுகிறார். 2015 ஆம் ஆண்டைப் பொறுத்தவரையிலும் ம.பிக்கும் மிக மோசமான வருஷம். மழை பொய்த்துப் போனதால் விவசாயம் மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. ஆனால் சிவராஜ் சவுகான், எந்த மாநில முதல்வரும் மேற்கொள்ளத் தவறிய பல விஷயங்களைச் செய்து வருகிறார். 164 IAS, IPS and IFS Officers ஐ கிராமங்களுக்கும், விவசாயிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களின் பிரச்சினைகள் என்ன என்பதைப் புரிந்து கொள்ளவும், எம்மாதிரியான ஆலோசனைகள் விவசாயிகளிடமிருந்து வருகிறது என்பதைக் கேட்கவும் அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளார். Experts ன் ஆலோசனைப் படி, பல விஷயங்களை நடைமுறைப்படுத்தியும் உள்ளார். இது இந்தியாவின் பெரும்பாலான அரசியல்வாதிகள் செய்வதில்லை என்றும், அதைச் செய்து வரும் சவுகான் மிகுந்த பாராட்டுக்குரியவர் என்கிறார்.

இறுதியாக மோடி அரசு , சவுகான் செய்துவருவதைப் போல மற்றவர்களையும் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கிறார். மத்திய அரசு விவசாயத்திற்கு மிகுந்த முக்கியத்துவமும், எவ்வாறு மீண்டும் விவசாய உற்பத்தியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு வர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கிறார். விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு மாநில அரசைப் புரிந்து கொள்ள படித்த சமூகம் இன்னும் கற்க வேண்டியது நிறையவே உள்ளது.

மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்கள் சொல்லும் விஷயங்கள்

ஹரியானாவில் ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் பிஜேபி பெற்ற இடங்கள்:

 

ஹரியானா பற்றி நான் தேர்தல் முடிவுகளுக்கு முன்னமே எழுதியதால் தேர்தல் முடிவிலிருந்து எதையும் அலசவில்லை. அதை மனதில் கொண்டு படியுங்கள் நண்பர்களே.

6 Seats (1982), 16 seats (1987), 2 seats (1991), 11 seats(1996), 6 seats (2000), 2 seats(2005), 4 seats(2009)

ஹரியானாவின் சட்டசபை தேர்தலின் வரலாற்றில் ஒரேயோருமுறைதான் பிஜேபி எதிர்க்கட்சியாக வந்துள்ளது. 16 இடங்களில் 1987 தேர்தலில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது.  மற்ற அனைத்துத் தேர்தல்களிலும் அது மூன்று, நான்காம் இடத்தைப் பிடித்த கட்சியே!

ஆனால் இந்த வருடம் பிஜேபி தனித்த மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் வருகின்றன. ஹரியானாவில் எதிர்க்கட்சியாக இல்லாத கட்சி இன்று ஆட்சியைப் பிடிக்க முக்கியக் காரணம் என்னவாக உள்ளது?

  1. பொருளாதார வளர்ச்சியை முன்னிறுத்திய பிரச்சாரம்.
  2. காங்கிரஸ் மற்றும் இந்திய தேசிய லோக்தலின் ஊழல்.
  3. இரண்டைக் காட்டிலும் மோடி என்ற மனிதர் மீது மக்கள் வைத்துள்ள அபார நம்பிக்கை.

இந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டியது பிஜேபியின் கடமை. மத்திய பிரதேசத்திற்கு சிவ்ராஜ் சிங் சவானை அளித்தது போல சிறந்த முதல்வரை ஹரியானாவிற்கு அளிக்க வேண்டியது பிஜேபியின் கடமையாகும்.

அதைச் செய்தாலே பிஜேபி மீது இதர மாநிலங்களிலும் நம்பிக்கை பிறக்கும். பிஜேபி வளர்வதற்கான வாய்ப்புகள் பெருகும். இதை பிஜேபி உணர்ந்து செயல்படவேண்டும். ஒருவேளை மக்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றம் என்ற நிலையை உணர்ந்தால் பிஜேபி ஏற்கனவே வாங்கிய 2 இடங்களுக்குத் தானாகவே வந்து சேர்ந்து விடும்.

பாஜகவின் இந்த வளர்ச்சி மாநிலக் கட்சிகளுக்கு மிகுந்த எச்சரிக்கையை அளிக்க வல்லது. அதை உணராமல் காவிக்கட்சி, மதவாதக் கட்சின்னு புலம்பினால் மாநிலக் கட்சிகள் தம்மிடத்தை மேலும் இழக்கும். பாஜக முறையான ஆட்சியை தாம் ஆளும் மாநிலங்களில் வழங்கினாலே இதர மாநில மக்களுக்கு அக்கட்சியின் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படும். மேற்கு வங்கத்தில் கம்யுனிஸ்டின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது என்பதற்கான அனைத்து செய்கைகளும் நன்றாகவே தெரிகின்றன. பீகாரைப் பொறுத்தவரையிலும் இனி பிஜேபி ஆளும் அல்லது நேரடி எதிர்க்கட்சியாக வளரும். நேரடி எதிர்க்கட்சியாக வளர்கிற பட்சத்தில் அது மாநிலங்களில் பாஜகவிற்கான மிகச் சிறந்த பலத்தையும் அரசியல் எதிர்காலத்தையும் தரும். பாஜக மெல்ல மெல்ல ஒவ்வொரு மாநிலத்திலும் வளர்வதே கட்சிக்கு நல்லது.

 

தேர்தல் முடிவில் ஹரியானாவில் 47 இடங்களைப் பிடித்து பாஜக ஆட்சி அமைத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

http://eciresults.nic.in/PartyWiseResultS13.htm?st=S13

மகாராஷ்டிராவில் ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் பிஜேபி பெற்ற இடங்கள்:

14 seats ( 1980), 16 seats (1985), 42 seats (1990), 65 seats(1995), 56 seats(1999), 54 seats(2004), 46(2009) 122 seats (2014)

BJP Voting Percentage:

12.8  %  (1995),14.54 % (1999),13.67 % (2004), 14.02 %(2009),  27.8 % (2014),

Congress  Voting Percentage:

31.0  % (1995), 27.20  % (1999), 21.06 % (2004) , 21.01 %(2009), 18 %(2014)

கடந்த கால மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் மகாராஷ்டிரா காங்கிரசின் கோட்டை என்பது தெளிவாகப் புரிகிறது. 95 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 80 இடங்களையே பிடித்தாலும் அதன் வாக்கு வங்கி(31%),  ((சிவசேனா & பாஜக(29%)) கூட்டணியைக் காட்டிலும்  அதிகமாகவே வாங்கியுள்ளது. அத்தேர்தலில் தேசிய வாத காங்கிரஸ் என்ற கட்சி உருவாகவில்லை. இடங்களின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தைக் காட்டி பிஜேபி + சிவசேனா ஆட்சியைப் பிடித்துள்ளதும் தெரிகிறது. 1999 முதல் 2009 தேர்தல் வரை காங்கிரஸ் + தேசிய வாத காங்கிரசின் வாக்கு வங்கியும், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பலமும் போதிய அளவிற்கு இருந்தது.

2014 ஆம் ஆண்டிற்கான இந்த சட்டசபை தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி 2009 ஆம் ஆண்டிற்கான வாக்கு வங்கியைக் காட்டிலும் இரட்டிப்பாக ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலைப் பொறுத்தவரையில் , Cong + NCP & SHS + BJP கூட்டணியாகப் போட்டியிட்டு இருந்தால் மக்களின் மனநிலை பிந்தையக் கூட்டணிக்கு அதிகமாக வெற்றி பெற உதவி இருக்கக்கூடும். ஆனால் இப்போது அதை ஒப்பிடுவது சரியாக அமையாது.

பாஜகவைப் பொறுத்தவரையில் இது மிகப் பெரிய வளர்ச்சி மட்டுமல்ல. தக்க வைக்க வேண்டிய அவசியமும் உள்ளடங்கிய வெற்றியுமாகும். 100 இடங்களுக்கு மேலாக தனிக் கட்சியாக 1990 ல் காங்கிரஸ் 141 இடங்களைப் பிடித்திருந்தது. 24 வருடங்களுக்குப் பிறகு தனிக் கட்சியாக பாஜக 122 இடங்கள் பிடித்துள்ளது என்பது கவனிக்கப் பட வேண்டியது.

பாஜக சிறு அரசியல் பிழை செய்தால்கூட காங்கிரஸ் எந்நேரமும் மகாராஷ்டிராவில் தனது பழைய பலத்திற்கு வந்துவிடும் என்பதைத் தான் பாஜக இத்தேர்தலின் வெற்றியில் கற்றுக் கொள்ள வேண்டியது. சிவசேனாவாலோ, MNS கட்சியாலோ இனி பிஜேபியை அவ்வளவு எளிதாக மிரட்ட முடியாது. சிவசேனா தான் மிக முக்கியமான அரசியல் பாலபாடத்தைக் கற்றுக் கொண்டிருக்கும் அல்லது கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

காங்கிரஸ் 15 வருடங்களில் உருவான புதிய இளம் வேட்பாளர்களைக் கவரவில்லை என்பதை அக்கட்சி உணரவேண்டும். 15 வருடத்திற்குப் பிறகே காங்கிரஸ் மீதான எதிர்ப்பலை பாஜகவிற்கு சாதகமாக்கி உள்ளது. சிவ சேனாவின் கெடுபிடியைப் பொறுத்துக் கொள்ளாமல், பாஜக தனித்து நிற்க எடுத்த முடிவு களத்தின் அடிப்படைதான் என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. பாவம், சிவசேனா தான் பாஜகவைத் தவறாக எடை போட்டு விட்டது.

பாஜக NCPயின் ஆதரவோடு ஆட்சி அமைக்கக் கூடாது. பழைய நண்பனான சிவா சேனாவுடன் கூட்டணி வைப்பதே எதிர்வருங்காலங்களில் சிற்சில அரசியல் தவறுகள் செய்தாலும், நல்லாட்சி புரிகிற பட்சத்தில் காங்கிரசை மேல்நோக்கி வளரவிடாமல் தடுக்க உதவும். என்னைப் பொறுத்தவரையில் காங்கிரசைக் காட்டிலும், பாஜகவிற்குத் தான் விஷப்பரிட்சையாக இருக்கும்.

ஆனால் மேற்கண்ட இரு மாநிலத் தேர்தல்கள் காங்கிரசிற்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை மட்டுமல்ல. மக்கள் மாநிலக் கட்சிகளையும் சேர்த்தே இரு மாநிலங்களிலும் புறக்கணித்துள்ளார்கள்.  பாஜகவின் தேர்தல் பிரச்சார யுக்தி அவர்களுக்கு வெற்றியைத் தந்துள்ளது. அவர்கள் நல்லாட்சி புரிகிற பட்சத்தில் இதர மாநில மக்களும் பாஜகவை ஆதரிக்கத் தயங்க மாட்டார்கள். மாநிலக் கட்சிகள் இதை உணர்ந்து தம் மாநிலங்களில் ஆட்சி புரிய வேண்டிய கட்டாயமும் உள்ளது. எங்கெல்லாம் பாஜக வளர்ச்சி ஒருமுறை பெறுகிறதோ அங்கெல்லாம் பிரதான ஆளும் அல்லது எதிர்க்கட்சியாக பாஜக தன்னை வளர்த்து மாநிலக் கட்சிகளைப் பின் தள்ளி விட்டது என்பதே தேர்தல் வரலாறு. கர்நாடகாவில் இன்று பாஜக பிரதான எதிர்க்கட்சியாகி விட்டது. தேவகவுடா மூன்றாவது கட்சியாக மட்டுமே காலம் தள்ள வேண்டிய நிலை வந்துள்ளது. பீகாரும் அவ்வாறு மாறியுள்ளது. இதைத் தான் மாநிலக் கட்சிகளும் காங்கிரசும் மனதில் வைத்து செயல்பட வேண்டிய தருணம் இது. அதே போல பாஜகவும் தமது எல்லையை விரிக்க விரும்பினால் நல்ல முதல்வர்களைக் கொடுப்பதன் மூலமும், சிறந்த ஆட்சி வழங்குவதன் மூலமும் மட்டுமே வளர இயலும். இல்லையேல் அடுத்த தேர்தலிலேயே தமது இடத்தைப் பலமாக இழக்குமாதலால் மிகக் கவனமாக செயல்படவேண்டிய கடமை பிஜேபிக்கு உள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பகுதி – 2

This gallery contains 2 photos.

” இந்தியாவிற்குக் கிடைத்த இரண்டாவது சுதந்திரம்” என்றே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை வர்ணிக்கிறார்கள் தகவல் அறியும் உரிமைப் போராளிகள். தகவல் அறியும் உரிமைச் சட்டம் பகுதி 1 ல் , இச்சட்டம் எவ்வாறு நிறைவேற்றப் பட்டது என்பதைக் கண்டோம். இப்பகுதியில், சட்டம் என்ன சொல்கிறது என்பதையும், எவற்றையெல்லாம் தகவல்களாகப் பெற முடியும் என்பதையும் பார்க்கலாம். சட்டம் என்ன சொல்கிறது? தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 ன் படி, தகவலறியும் உரிமை என்பது ஒவ்வொரு … Continue reading

ப்ரோக்கோலி சூப்

This gallery contains 2 photos.

தேவையான பொருட்கள்: பிரொக்கோலி -1 கப் வெங்காயம் – அரை கப் பூண்டு – 10 பற்கள் ஆலிவ் ஆயில் – 2 டீ ஸ்பூன் உப்பு – தேவையான அளவு மிளகுத் தூள் – 1 டீ ஸ்பூன் செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும். பிறகு ப்ரோக்கோலி போட்டு வதக்கவும். பிறகு தண்ணீர் விட்டு வேக விடவும். Corn  flour மாவை நீர்க்கக் கரைத்து வேக விடவும். இவை … Continue reading

தகவல் அறியும் உரிமைச் சட்டம் – பகுதி 1:

This gallery contains 2 photos.

  “மக்களாட்சியில் அரசு மற்றும் அரசைச் சார்ந்த அலுவலகங்களின் செயல்பாடுகளை பொது மக்கள் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகத் தெரிந்து கொள்வது குடிமக்களின் அடிப்படை உரிமை.” பேச்சளவில் சொல்லப்பட்ட இந்த விடயத்தை உண்மையாக்க கொண்டு வரப் பட்டது தான், தகவல் அறியும் உரிமைச் சட்டம். விகடன் வெளியீடாக வந்த’ தகவல் அறியும் உரிமைச் சட்டம்’ என்ற நூலை எழுதி இருப்பவர் எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி. இந்த நூல் முழுக்க பரக்கத் அலியின் உழைப்பு தெரிகிறது. இயன்றவரை எந்த வித ஒளிவுமறைவுமின்றி தன்னுடைய … Continue reading

கும்கி – திரை விமர்சனம்

This gallery contains 1 photo.

படம் முழுக்க தியாகத்தையும் மரியாதையையும் ஆத்தோ ஆத்துன்னு ஆத்தியிருக்கிறார்கள். இனி கதைக்குச் செல்வோம். பழங்குடி இன மக்கள் வாழ்கிற நிலப் பகுதியில் பெரும் பணமுதலைகளால் கட்டிடங்கள்  காடுகளில் எழுப்பப்படுவதால் யானைகள் ஊருக்குள் வந்து விடுகின்றன. அதில் கொம்பன் என்ற மதம் பிடித்த யானை  பழங்குடி மக்களின் நிலப் பகுதிக்குள் நுழைந்து சிலரைக் கொன்று விடுகிறது. அதையடுத்து கிராமத் தலைவர் மற்றும் பொது மக்களிணைந்து கொம்பனை அடக்க கும்கி யானையை  ஏற்பாடு செய்கிறார்கள். கும்கியின் பயிற்சியாளர் குடும்ப சூழ்நிலைக் … Continue reading

எத்தனுக்கு எத்தன்

சென்னையில் உள்ள தன் தங்கையின் மகனுடைய குழந்தையைப் பார்க்க தூத்துக்குடி மாவட்டம் செட்டிக் குளத்திலிருந்து ராசய்யா வந்திருந்தார்.
ராஜ், மாமா மீது மரியாதையும் மிகுந்த அன்பும் கொண்டவன். அந்தக் குடும்பத்திலேயே படிச்சு சென்னையில் நல்ல வேலையில் இருப்பது ராஜ் மட்டுமே.
ராசய்யாவின் பேச்சில் தென்படுகிற ஊர் பாஷை இருக்கிறதே, ரொம்பவே ரசிக்கத்தூண்டும். ஊர் பாஷையை பேசுபவர்களின் பேச்சை நகர வாழ்வியலில் ரசிப்பவர்களும் உண்டு. கிண்டலாகப் பார்ப்பவர்களும் உண்டு.
ராசய்யா எந்த பன்னாட்டு நிறுவனத்திலும் பணி புரியாததால் அது குறித்து அவர் ஒருபோதும் சிந்தித்தது கூட இல்லை. எப்பவோ ஒருவாட்டி சென்னைக்கு வந்து செல்வதால் அவர் தன்னை நகர மனிதர்களின் பாஷையில் சொல்வதானால் இடம், பொருள், பணிச்சூழல் காரணமாக நாகரிகமாக டீசன்ட் பொதுத் தமிழ் என அவர்களாக வைத்திருக்கும் மொழியைப் பேச வேண்டிய அவசியத்திற்கு தன்னை ஆளாக்கிக் கொள்ளவில்லை.
ஒருநாள் மட்டும் ராஜ் வீட்டில் தங்கி இருந்த ராசய்யா, மருமகனே, இன்னைக்கு கிளம்புறம்பா. போட்ட வேலையெல்லாம் போட்டபடியே கிடக்கு.
கழுதை, கரண்ட்ட வேற நினைச்ச நேரத்துக்கு விடுறானுக… நெல்லுக்கு தண்ணி வேற பாயிச்சலப்பா… கிளம்புறேன் என்றார்.
ஓகே மாமா. மாமா, என்னால இன்னைக்கு உங்களை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து வழி அனுப்ப முடியல. முக்கியமான மீட்டிங் இருக்கு மாமா. மன்னிச்சுகோங்க மாமா என்றான். இதுல என்னப்பா இருக்கு, நான் ஆட்டோ… கீட்டோ பிடிச்சு போய்க்கிறேன். பிள்ளைகளை நல்லா பார்த்துக்கோ என்றார்.
மாமா ஆடோக்காரங்க ரொம்ப பைசா கேட்பாங்க, ஏமாந்துறாதிங்க என்றான். பத்து நிமிடத்துக்கு மேல வெயிட் பண்ணியும் பஸ் வராததால், ஆட்டோவைப் பிடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தவராய், அருகில் இருந்த ஆட்டோ நிலையத்தை நோக்கி வந்தார். பத்து நிமிஷத்தில பத்து பேர்கிட்ட பஸ் வருமா வராதா எனக் கேட்பதை கவனித்த ஆட்டோ டிரைவருங்க ரெண்டு பேரு, மச்சி, இந்த மாதிரி கிராக்கி கிடைச்சா நல்லா மொட்டை அடிக்கலாம்பா என்றனர்.
அந்த நேரம் பார்த்து அவர்களிடம் வந்த ராசய்யா, தம்பி…. ரயில்வே டேஷனுக்கு போகணும். என்ன காசு ஆகும் சாமி என்றார். இதோ… பாரு பெரிசு… எல்லா ரோடும் பிளாக் பண்ணிகின்னானுங்க… 100 ரூபாய் ஆகும். இஷ்டம்னா சொல்லு பெரிசு. ஏத்திக்கின்னு போறேன்.
தம்பி, படிச்ச புள்ளைகளா, பார்க்க… இருக்கீங்க. உங்களை நம்புறேன் தம்பி. என்னை ஏமாத்த மாட்டீங்கன்னு அந்த ஆத்தாவே சொல்ற மாதிரி இருக்கு என்று வெள்ளந்தியாய் சொல்ல, டிரைவர் சிரிச்சுகிட்டே, தோ… பாரு பெரிசு… நம்பு பெரிசு. பெட்ரோல் விக்கிற வேலையில, உனக்கோசம்தான் கம்மியா சொல்றேன். இதே வேற கஸ்டமரா இருந்தா… 160 கேட்பேன்னு சொல்ல ராசய்யா எறி உட்கார்ந்தார்.
ரயில்வே ஸ்டேஷனில் ஆட்டோவிலிருந்து இறங்கின ராசய்யா, இந்தாங்க தம்பி நீங்க கேட்ட 100 ரூபாய். கரெக்டான சமயத்தில இறக்கினதுக்கு ரொம்ப நன்றி என்றார்.
ஸ்டாண்டுக்கு திரும்புன ஆட்டோ டிரைவர் எத்தன், தன் நண்பன் அழகேசனிடம் மச்சி இன்னைக்குதான் சரியா ஒரு கிராக்கி மாட்டிச்சுப்பா… என்றான்.
டேய்… ஆனால் இது ஏமாத்துன மாதிரி உனக்கு தோணலியா… மச்சி பிசினஸ்னாலே அடுத்தவனை ஏமாத்துறதுதான். அந்த ஆளு சரியான பட்டிக்காடுடா… இந்த மாதிரி ஆளுககிட்டதான் நம்மாலே சம்பாதிக்க முடியும். அந்த ஆளு பேரம் கூட பேசாததைப் பார்த்தாலே தெரியலடா, சரியான மாங்காய் மடையன்டா , இதுல நாம ஏமாத்தமாட்டோம்கிறதை , அந்த ஆத்தாவே வேற சொல்லுற மாதிரின்னு செண்டிமெண்டா பினாத்திகின்னு இருக்கிறார் ..பா.
என்னோட பேரே எத்தன். நமக்குத் தெரியாதாடா எப்படி அடுத்தவனை ஏமாத்துறதுன்னு. சென்னைடா… எத்தனை பேரைப் பார்த்திருப்பேன். பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தான் எத்தன்.
ராத்திரி ஊர் போய் சேர்ந்த ராசய்யா, மருமகன் ராஜுக்கு தொலைபேசியில் அழைத்தார். மருமகனே.. நல்ல படியா வந்து சேர்ந்திட்டம்பா… en
மாமா, பஸ்சில ரயில்வே ஸ்டேஷன் போனீங்களா.. ஆட்டோவில போனீங்களா..
ஆட்டோவில்தான் போனம்பா.. 100 ரூபாய் கேட்டாம்பா…
மாமா உங்களை நல்லா ஏமாத்தி இருக்கான். அதுக்கு 50 ரூபாய்க்கு மேல ஆகவே ஆகாது. இப்படிதான் மாமா இங்க ஆட்டோ டிரைவருங்க ஆள் பார்த்து ஏமாத்துவாங்க….. என்றான்.
ஒத்தைக்கு ரெண்டு டைம் வாங்கி உங்களை ஏமாத்தி இருக்கான்.
அதை ஏன் கேட்கிற , நீ சொன்னதால நான் ஆட்டோவில ஏறுவதற்கு முன்னாலேயே உஷாராயிட்டேன்பா..
எவ்வளவுன்னு கேட்ட அடுத்த செகண்டே 100 … ட்ரான். சரின்னு ஏறுனேன். இறங்கும் போது 100 ரூபாய் வாங்கின பிறகு அவனைப் பார்க்கணுமே என்னா.. ஒரு சிரிப்பு.
மருமகனே… ரொம்ப நாளா கள்ள நோட்டு 100 ரூபாய் என்கிட்டே வந்து மாட்டிகிச்சுப்பா. ஏற்கனவே செல்லாதுன்னு தூத்துக் குடியில ஒரு கடைக்காரன் சொன்னாம்பா.. எப்படி இத தள்ளுறதுன்னு பார்த்தேன். என்னை ஏமாத்திறதிலேயே ஆட்டோ டிரைவர் குறியா இருந்தாம்பா. பிசினஸ்ல, நம்மள ஏமாத்துறவனை ஏமாத்துறதில தப்பே இல்ல. இல்லியா…
100 ரூபாய்ன்னு சொன்னப்பவே மனசுக்குள்ள நினைச்சுகிட்டம்பா… டேய் உங்களுக்கு பட்டிக்காடுன்னா ஏமாத்துறதா நினைப்பா… நானும் அவனுங்க முன்னால அந்த ஆத்தாவே வந்து சொல்லுற மாதிரி இருக்குன்னு சொல்ல , நம்பு பெரிசுன்னு நம்பிக்கை தர்ற மாதிரி பேசுறானாம்.
மருமகனே, அவன் எத்தன்னா.. நாம எத்தனுக்கு எத்தன்னு அவனுக்கு தெரியாது மாப்பிள்ளை என்றார் ராசய்யா.

Hello world!

Welcome to WordPress.com. After you read this, you should delete and write your own post, with a new title above. Or hit Add New on the left (of the admin dashboard) to start a fresh post.

Here are some suggestions for your first post.

  1. You can find new ideas for what to blog about by reading the Daily Post.
  2. Add PressThis to your browser. It creates a new blog post for you about any interesting  page you read on the web.
  3. Make some changes to this page, and then hit preview on the right. You can always preview any post or edit it before you share it to the world.