சிற்றின்பம்

பருவமெய்தும் வரை
எட்டிப் பிடித்தும் விளையாடினோம்
கட்டிப் பிடித்தும் விளையாடினோம்
கள்ள நெஞ்சமல்ல…
யாரும் கண்டுகொள்ளவுமில்லை!
நீ ஆளாகினாய்
என்னை ஆளாக்கினாய்!
மண்பார்த்து நடந்தாலும்
பின் தொடர்வதைக் கவனித்தாய்
என்ன நினைத்தாயோ
இறுதியில் சம்மதித்தாய்!
அச்சம் கைமாறியது
இச்சையை நிறைவேற்ற நான் சொல்கிற
கச்சையைக்கூட கட்டி வந்தாய்
நான் கரைக்க
ஊர் குரைக்க
பொருட்படுத்தாமல் ஓடி வந்தாய்!
தனித்துப் போனோம்
களித்துக் கிடந்தோம்
உச்சத்தை அடைதலென்பது ’
மோட்சத்தை அடைவது மட்டுமல்ல
மோகத்தைக் காண்பதும்தான்
சிற்றின்பமெனும் ஊடகமே
பேரின்பம் காணும்
பெரும்வழி….