விவசாயத்தை விட்டு வெளியேறலாமா?

விவசாயத்தை விட்டு வெளியேறுவது தவறில்லை என
——————————————————————————–
யோசனை சொல்பவர்களை எவ்வாறு அழைப்பீர்கள்?
———————————————————————————-

இந்தியாவில் தனிநபர் வருமானம் அதிகரிக்க வேண்டுமானால் அதிக மக்களை விவசாயத்திலிருந்து மற்ற வேலைகளுக்கு நகர்த்த வேண்டும். இந்தியாவில் விவசாயம் சார்ந்து எந்த ரூபத்தில் மாற்றுக் கருத்துச் சொன்னாலும் அதை பெரும் சமூகம் ஏற்றுக் கொள்வதில்லை. அதுகூட பரவாயில்லை, கொலைக்குற்றம் செய்தது போல விமர்சிக்க ஆரம்பித்து விடுவார்கள். உண்மை, கார்ப்பரேட் கையாள் என்றுதான் அவர்கள் மீது முதல் விமர்சனம் வந்து விழும்.

இந்தியாவில் 52 % மக்கள் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மையின் பங்களிப்பு 14% தான் உள்ளது. சராசரியாக ஆண்டிற்கு 3% அளவிற்கே விவசாய வளர்ச்சி உள்ளது. இந்தியாவில் விவசாயம் செய்வதற்கு 264 மில்லியன் ஹெக்டேர் நிலம் உள்ளது. 160 மில்லியன் ஹெக்டேர் பயிரிடத்தக்க நிலம் உள்ளது. 124 மில்லியன் ஹெக்டேர் நீர்ப்பாசன வசதியுடன் கூடிய விவசாயநிலம் உள்ளது.

உலகிலேயே சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக அளவிற்கு விவசாய நிலம் கொண்ட நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. உற்பத்தியை இன்னும் இரட்டிப்பாக்க முடியும். நாம் இதுவரை அதில் பாதியளவிற்கே உற்பத்தி செய்துவருகிறோம் என்பதே உண்மை. இந்தியாவில் உலகமயமாதலுக்குப் பிறகு விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளதா? குறைந்துள்ளதா? என்பதைச் சொல்லிவிட்டு விவாதிப்போம். அதாவது உலக மயமாதலுக்குப் பிறகு நிலம் அதிக அளவிற்கு விற்கப்பட்டிருக்கும் அல்லவா? அவ்வாறானால் இந்நேரத்திற்கு விவசாய உற்பத்தி குறைந்திருக்க வேண்டுமல்லவா? ஒருவேளை உங்களின் பதில், விவசாயத்தில் வந்த நவீன முறைகள்தான் உற்பத்தி அதிகரிக்கக் காரணமெனில், எதிர்காலத்திலும் அது அதிகரிக்கச் செய்வதில் எந்தப் பிரச்சினையும் இருக்காதுதானே? எதற்காக வலுக்கட்டாயமாக விவசாயத்தால் பலன் பெற முடியாதவர்களும், செய்ய இயலாதவர்களும் நிலத்தை விட்டு போவதால் தவறில்லைதானே! சீனா விவசாயத்திலிருந்து 300 மில்லியன் மக்களை வெளியேற்றி மற்ற பணிகளில் ஈடுபடச் செய்துள்ளது.

நிதர்சனம் என்னவென்றால் விவசாயத்தில் ஈடுபடாத 48% மக்களின் பங்களிப்பே இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 86% ஆக உள்ளது. விவசாயத்தில் ஈடுபடும் 52% தத்தினரின் பங்களிப்பு வெறும் 14% தான் உள்ளது. ஒரு பக்கம் விவசாயம் செய்பவர்களால் தமது விளைச்சளுக்கான விலையை நிர்ணயம் செய்ய முடியவில்லை போன்ற காரணங்களால் சமூக அழுத்தம் (Social Tension) தான் இதனால் அதிகமாகும்.

விவசாயத்தை நம்பி இத்தனை சதவீதம் பேர் ஈடுபடவேண்டிய அவசியமில்லை. ஆகையால் விவசாயம் செய்ய இயலாதவர்கள் நிலத்தை தொழிற்சாலைகளுக்கோ அல்லது கட்டமைப்பு சார்ந்த விஷயங்களுக்கோ விற்றுவிட்டு நகர்வது ஒன்றும் தவறல்ல. NGOக்கள் நிலம் விற்பவர்களுக்கு முறையான Rehabilitation கிடைக்க பேசுவதென்பது வேறு. விவசாயம் மடிந்து விடும், உற்பத்தி சரிந்து விடும் என அறிவாளிகள் சொல்வதெல்லாம் நிலத்தை விற்பதால் நடக்கப்போவதல்ல என்பதே நிதர்சனம். நகரமயமாதலுக்கு உட்படுத்திக் கொண்ட மாநிலங்களையும், விவசாயத்தை மட்டும் பெரிதும் நம்பியுள்ள மாநிலங்களையும் கணக்கில் எடுத்துப்பார்த்து எடை போடுங்கள். அது பற்றி முந்தைய பதிவில் எழுதியுள்ளேன்.