அவன் :

அவன் நன்றாகப் பேசுவான். அவனால் அரசியல், சமூகம், வரலாறு, சினிமா, விளையாட்டு, கலை, விஞ்ஞானம், எலெக்ட்ரானிக்ஸ் என அனைத்து விஷயங்களைப் பற்றியும் நண்பர்களிடத்து எளிதாக பேச இயலுகிறது. அவன் பேசுகிற விஷயங்களில் பத்தில் ஒரு பங்கிற்குக் கூட அவனுடைய நண்பர்களால் பேச இயலாது. விஷயம் எளிதானது. அவர்களின் அறிவு சினிமா, விளையாட்டு, மொபைல் போனில் விளையாடுதல் மற்றும் சில பொழுது போக்குகளோடு அவர்களின் நாட்கள் கழிந்து விடுகின்றன.

இவனாக சில நேரங்களில் சில விஷயங்களை நண்பர்களோடு விவாதிக்கலாம் என எடுத்தால் கூட எதிர்த் தரப்பில் பேச ஒருவருக்கும் தெரிந்திருக்காது.

இது தெரியாதா எனக் கேட்டால், எனக்கு நேரமே இல்லை… ரொம்ப பிஸி என நண்பர்களும், உனக்கு எப்படி இவ்வளவு நேரம் கிடைக்கிறது என நண்பர்கள் இவனிடமும் மாற்றி மாற்றி கேட்டு விட்டு எதையும் விவாதிக்காமல் அமைதியாகி விடுவார்கள்.

அனைவருக்கும் அறிந்த விஷயங்களிலும் விவாதங்கள் நிகழும். அப்போது இவனது வாதத் திறமையைக் கண்டு , “நீ ஏன் விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது?” என்றோ “ நீ ஏன் மேடையில் பேசக்கூடாது” என்றோ நண்பர்கள் சில நேரங்களில் கேள்வி எழுப்புவதுண்டு.

எனக்கு மேடையில் பேச ரொம்ப கூச்சம். சாதாரணமாக நண்பர்களோடு விவாதிக்கும் போது யதார்த்தமாக விவாதிக்கிறேன். கத்திப் பேசலாம். உணர்ச்சியை உள்ளபடியே வெளிக்காட்ட இயலுகிறது. ஆனால் மேடையில் பேசும்போது கூச்சமும், பயமும் சில நேரங்களில் போலியாகவே உணர்ச்சி வெளிப்பாட்டைக் கொட்டி பேச வேண்டும். அது தன்னால் இயலாது என்றான்.

பேசத் தானே கூச்சமாக, பயமாக இருக்கிறது.. நீ பேசுகிற விஷயத்தை எழுதலாம்தானே! இந்த யோசனை நண்பர்களால் கொடுக்கப்பட்ட பிறகே அவனும் , நாம் எழுதினால்தான் என்ன என்று யோசிக்க ஆரம்பித்தான்.

மனதில் தோன்றும் , அறிந்த , கற்ற விடயங்களை உலகிற்கு வழங்குவது மகத்தான செயல் என்று உணர்ந்தவன் தனக்கென பிளாக் ஒன்று ஆரம்பித்தான். முதல் கட்டுரை சமூகத்திற்கு பலனளிக்கக் கூடிய கட்டுரையாக, மக்களின் கல்வி சார்ந்து எழுதுவோம் என்று முடிவெடுத்து எழுத ஆரம்பித்தான்.

அரசின் கல்விக்கொள்கையையும், அரசே ஆங்கில வழிக் கல்விக்கு உயர் கல்வியில் கொடுக்கும் பிரதிநிதித்துவம் கொடுப்பது தவறா சரியா என எழுத ஆரம்பித்தான். நான்கு வரிகள் வரை எழுத முடிந்தவனுக்கு அதன் பின்னர் அதை எப்படி எழுதுவது என்று தெரியவில்லை.

பேசும் போதும், விவாதிக்கும் போதும் மணிக்கணக்காக விவாதிக்கிற எனக்கு ஏன் நான்கு வரிகளைத் தாண்டி எழுத முடியவில்லை? அவ்வாறானால் விவாதங்களில் அரைத்த மாவைத் தான் அரைக்கிரோமா? எனக்குத் தெரிந்தது இவ்விடயத்தில் இவ்வளவுதானா? பெரும்பாலான விவாதங்களை நண்பர்களோடு செய்த போது தலைப்பிற்கும், விவாதம் போகிற திசைக்கும் எந்த சம்பந்தமுமில்லாததை மெல்ல உணர ஆரம்பித்தான். கட்டுரையை எப்படி படைப்பது? எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்? கட்டுரைக்கு எது தேவை? என்பதில் குழப்பமடைந்தான்.

கட்டுரை பற்றி பல அறிஞர்கள் எழுதியதைப் படிக்க ஆரம்பித்தான். ஒரு சின்ன கட்டுரையைப் படைக்க ஐம்பதுக்கும் அதிகமான கட்டுரைகளையும் அரசின் கொள்கைகளையும் படிக்க வேண்டியிருந்தது. அதன் பிறகே ஒரு வழியாகக் கட்டுரையை எழுத முடிகிறது என்பதை முதல் கட்டுரையை முடித்த போது முழுமையாக உணர்ந்திருந்தான். இவ்வளவு நாள் நமக்குத் தெரிந்தது எல்லாம் ஊடகங்களில் வரும் செய்தியறிவின் அடிப்படை மட்டுந்தான். ஆனால் அறிவு பெற தேடல் அவசியம் என்பதை உணர்ந்தான்.

அனுபவங்கள்,கதைகள் தவிர்த்த இதர கட்டுரைகளுக்கு மெனக்கெடல் கொஞ்சமாவது வேண்டுமென்பதை அறிந்து கொண்டான்.

ஆரம்பத்தில் அவனது கட்டுரைகள் படிக்கப்படுகிறதா என்பதை பிளாக்கில் பார்த்தவனுக்கு அதிர்ச்சி. ஐம்பது பேர் கூட படிக்கவில்லை. ஆனால் அவனுக்குள் எழுதுவது பிடிக்க ஆரம்பித்திருந்தது. நண்பர்களிடம் தான் இதுகுறித்து கட்டுரை எழுதியுள்ளேன். சமூக வலைத்தளங்களில் கூட பகிர்ந்துள்ளேன். படித்தீர்களா என நண்பர்கள் படிக்கிறார்களா? என அறிய விரும்பியவனுக்குக் கிடைத்த பதில் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது.

நீ ரொம்ப பெரிதாக எழுதுகிறாய். நானெல்லாம் மேலும்… Continue Reading, See more… என வந்துவிட்டால் அதைப்படிப்பதில்லை என்ற பதிலே அவனுக்குக் கிடைத்தது.

சொல்ல வர்றதை ரத்தினச் சுருக்கமாக சொன்னால் போதாதா என்றும் கிண்டல்கள் வந்தன. சில கேலியாக, மொக்கையாக, அர்த்தமற்ற விடயங்களை பகடியாக அவன் எழுதும் போது லைக்குகளும், கமெண்டுகளும் வந்து குவிந்தன.

அவன் மக்கள் அறிந்து கொள்ளவேண்டுமென நான்கு நாட்களாக பல இணைப்புகளில் அறிந்ததையும், தனது சொந்தப் பார்வையையும் வைத்து ஆழமாக எழுதிய கட்டுரைகள் அலமாரியில் தூங்கும் புத்தகங்களாக மட்டுமே கிடந்தது. எந்த கட்டுரையெல்லாம் மக்களால் படிக்கப்படவில்லையோ அக்கட்டுரைகள்தான் அவனுக்கு மன நிறைவைத் தந்தவை என்றால் நம்புவீர்களா?

தமது பிளாக்கில் எழுதுவதால்தான் நிறைய பேர் படிப்பதில்லை, இதழ்களில் வந்தால் படிப்பார்களா என எண்ணி சில கட்டுரைகள் பத்திரிக்கைகளில் வந்தன. பின்னர் தொடர்ச்சியாக பல கட்டுரைகளும் கதைகளும் எழுத ஆரம்பித்தான்.

தன்னுடைய கட்டுரை வெளிவந்ததை தானே விளம்பரம் செய்தான். நுகர்வு மனநிலை என்பது இதுதானா? விளம்பர மோகம், புகழைத் தேட அலையும் செயல் இதுதானா என தனக்குள்ளாகவே கேட்டுக் கொண்டான்.

அவ்வாறு எழும் கேள்விகள் சரியென அவனுக்குத் தெரியும். ஆனால் அனைவரும் பயன்பெறுவதற்கு எழுதிய கட்டுரைகள் படிக்க விளம்பரம் செய்வது தவறல்ல என சுய சமாதானம் செய்து கொள்வான்.

மெல்ல மெல்ல சமூகம் சார்ந்த விஷயங்களை கடுமையாக எழுதினான். அவனுக்கும் கணிசமாக வாசகர்கள் கிடைத்தார்கள். வாசகர் எண்ணிக்கை அதிகமானால் அரசியல் அழுத்தங்களும் அதிகமாகும் என்பதை அனுபவிக்கும் துர்பாக்கிய நிலையை அடைந்தான். அரசின் கையாலாத்தனம் என்ற தலைப்பில் ஆளும் அரசை எதிர்த்து கட்டுரைகள் எழுதிய கட்டுரைக்காக இடையில் ஒருவரியில் முதல் அமைச்சரின் கையாலாகத்தனம் என்ற வார்த்தை தனி நபர் தாக்குதல் என காரணம் கண்டுபிடித்து கைதுக்குள்ளானான். ஒரே நாளில் பிரபலமானான்.

இப்படியாக பல கட்டுரைகளை எழுதிக் குவித்தவனுக்கு ஒரு கட்டத்தில் அவன் கருத்து இந்த விஷயத்தில் என்னவென சொல்லவேண்டும் என வாசகர்கள் விரும்பினார்கள். ஆரம்பத்தில் தமது திறமையையும் அனுபவத்தையும் வைத்தே எழுதினான். ஒரு கட்டத்தில் சில விஷயங்களை அவன் எழுதாவிட்டால், இதுபற்றி உங்கள் கருத்தென்ன என்ற அரசியல் அழுத்தங்கள் கூடுதலாகின. ஆகையால் எல்லாவற்றின் மீதும் வெறுப்பு வந்தது. முதலில் எழுதியதை நிறுத்தினான்.

தான் தற்போது இயல்பாய் இல்லையென்பதை உணர்ந்தான். மன அமைதிக்காக எங்கோ சென்றான். ஒருவேளை இப்போது போதிமரத்தடி புத்தனாகி இருக்கக்கூடும்.