இந்தியாவின் குடித்தனம் (Household) நகரமயமாதலை எப்படி புரிந்து கொள்ள வேண்டும்?

இந்தியாவின் குடித்தனம் (Household) நகரமயமாதலை
================================================
எப்படி புரிந்து கொள்ள வேண்டும்?
==============================

இந்தியாவின் முதுகெழும்பு கிராமங்கள் என்கிறோம். ஆனால் பெரிய மாநிலங்களாகக் (150 சட்டசபை கொண்ட மாநிலங்களைக்) கணக்கில் கொண்டால் பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலங்கள், நகரமயமாதலுக்குத் தன்னை வெகுவேகமாக மாற்றிக் கொண்ட மாநிலங்கள் என்பதிலிருந்து நாம் எதைப் புரிந்து கொள்ள வேண்டும்? அல்லது இந்தியாவை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்?

பெரிய மாநிலங்களின் வரிசையில் பார்த்தால் நகரமயமாதலில் முதலிடத்தில் இருப்பது தமிழகம். % of house holds ஐக் கிராமம் நகரம் என எடுத்துக்கொண்டால் இந்தியாவின் சராசரி முறையே 73.44 %, 26.56% என மத்திய அரசு வெளியிட்டுள்ள SECC2011 கணக்கெடுப்பு சொல்கிறது. தமிழகம் நகரமக்களின் வாழிடத்தைப் பொறுத்தவரையில் 42.47% ஆகும். தமிழகத்தைக் காட்டிலும் நகர குடித்தனம் அதிகமுள்ளவை சிறிய மாநிலங்களான/ UT சண்டிகார் (92.69%), டெல்லி(69.01%), பாண்டிச்சேரி( 58.84%), மிசோரம்(50.64%) போன்றவை. இதுபோன்ற சிறிய யூனியன் பிரதேசத்தையும், மாநிலத்தையும் விட்டு விடுவோம். பெரிய மாநிலங்களைக் கணக்கில் கொண்டால் நகரத்தில் வசிப்பவர்களின் பட்டியலில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்திற்கு அடுத்த படியாக குஜராத்(40.48%), மகாராஷ்டிரா(40.16%), கர்நாடகா(38.74%), ஹரியானா(35.88%) பஞ்சாப்(35.04%), தெலுங்கானா(31.31%) போன்ற மாநிலங்கள் தேசிய சராசரியைக் காட்டிலும் அதிகமாக, நகரமாக மாறியுள்ளது.

தொழில் வளர்ச்சி பெறாத மாநிலங்கள் என்றும் சொல்லலாம் அல்லது விவசாயத்தைத் துடிப்பாக செய்யும் மாநிலங்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது கல்வியறிவு குறைவான மாநிலங்கள் என்றும் ஓரளவுக்கு சொல்லலாம். அவைதான் நகரமயமாதலில் தேசிய சராசரியைக் காட்டிலும் குறைவாக உள்ளன. நகரப்புற குடித்தனத்தை, பெரிய மாநிலங்களை மட்டும் எடுத்துப்பார்த்தால் உத்திரப்பிரதேசம்(19.81%), பீகார்(9.99%), மத்தியப் பிரதேசம்(23.34%), மேற்கு வங்காளம்(22.64%), ஒரிசா(12.77%), ராஜஸ்தான்(22.18%), கேரளா(17.98%) போன்ற மாநிலங்கள் ஆகும். இதில் கேரளா மட்டும் விதிவிலக்கான மாநிலமாகக் கொள்ளலாம். அங்குள்ள நிலப்பரப்பே கிராமம், நகரம் இரண்டும் கலந்தே வரும் என்பதையும், அதன் உள் மாநில உற்பத்தியில் அதிக பங்கு வகிப்பது வெளிநாட்டில் பணிபுரியும் கேரளத்தினர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இத்தகவல்கள் அரசின் இணையதளத்திலேயே உள்ளது. மற்ற விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.http://www.secc.gov.in/staticReportData?getReportId=Z_11

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் விவசாயம் மட்டுமல்லாது தொழிற்சாலைகளைச் சார்ந்த மாநிலங்களாக நகரமயமாதலுக்குத் தன்னை அதிக அளவிற்கு உட்படுத்திக் கொண்ட மாநிலங்கள்தான், தனி நபர் வருமானத்திலும் அதிக அளவிற்கு உள்ளனர் என்பது எதைக்காட்டுகிறது? வணிகத்தில் விவசாயியே தனது விளைப்பொருட்களுக்கான விலையை நிர்ணயிக்க முடியாமல் உள்ளது. விவசாயம் சார்ந்து இயங்கும் குடும்பங்களைப் பொருளாதார அளவில் பின்னுக்குத் தள்ளியுள்ளன என்பதும் தெளிவாகத் தெரிகிறது. விவசாயம் செய்பவர்கள் விலையை நிர்ணயிக்க இயலாமல் இருப்பது தொடருமானால் ஏழை மக்கள் விவசாயத்தை விட்டு வெளியேறுவதே அவர்களுக்கு நல்லது.

விவசாயம் இந்தியாவின் முதுகெழும்பு என்று சொல்பவர்கள் அதைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் வட மாநிலங்களின் விவசாயப் பங்களிப்பையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். வட மாநிலங்கள் கல்விக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதன் மூலமாகவும், அதிக தொழில் நிறுவனங்களை நிறுவுவதன் மூலமாகவும் பொருளாதார வளர்ச்சியையும் எட்ட இயலும். விவசாயம், தொழிற் வளர்ச்சி ஆகிய இரண்டையும் சரிசமமாக நிலை நிறுத்துகிற திட்டங்கள்தான் இந்தியாவை பொருளாதார வளர்ச்சியிலும் அதிக உயரத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்.