வழக்கிற்குள் ஓர் வழக்கு:

வழக்கிற்குள் ஓர் வழக்கு:

மோகனுக்கும் திவ்யாவிற்கும் நடந்தது என்னவோ காதல் கல்யாணம்தான். திவ்யாவை கல்லூரியில் படிக்கும்போதுதான் சந்தித்தான். திவ்யா அழகு தேவதை. அவள் நடந்து சென்றால் சீனியரில் ஆரம்பித்து ஜூனியர் வரை முன்னழகை மட்டும் ரசித்துவிட்டு பார்வையை எடுப்பதில்லை. பின்னழகு அதற்குமேல். அதற்குமேலென்றால் எப்படியென்று கேட்கக்கூடாது. கற்பனைக்குதிரையால் அவ்வழகை ரசித்துக்கொள்ள வேண்டியதுதான்.

அப்படியான அழகு தேவதையைத் தான் மோகன் கவர்ந்து விட்டான். திவ்யாவிடம் காதலைச் சொன்னவர்கள் கல்லூரியில் மட்டும் ஐந்துபேர் இருக்கும். ஆனால் மோகனைத் தேர்ந்தெடுத்ததற்கு ஒரே காரணம், அவனுடைய அப்ரோச். மோகனுக்கு  அழகுப் பெண்கள் என்றால் அத்தனை பிடிக்கும். ஆனால் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டான். கல்லூரியில் படித்தபோது திவ்யாதான் அழகு. அவளைக் காட்டிலும் வேறு அழகி எவளுமில்லை. மோகன் அவளிடம் வழியவில்லை. படிப்பில்வேறு கெட்டிக்காரன். அவள் அவனது பேச்சில் மயங்கினாள்.

காதலில் உள்ளவர்கள் தமது பாசிட்டிவான எண்ணங்களையே வெளிப்படுத்துவார்கள். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. தன்னை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ள அதைவிட அரிய வாய்ப்பு அவர்களுக்குக் கிடையாது. தன்னிடம் எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது என்பதை காண்பிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். மோகனும் அதைத் தான் செய்தான். நட்பாய் பழகியவர்கள் படிப்பு முடிந்து திருமணமும் செய்து கொண்டார்கள்.

மோகன் நல்லவன்தான். ஏழைகளுக்கு உதவுவது, ரத்ததான முகாம் நடத்துவது, தமது தெருவில் தண்ணீர் பிரச்சினை என்றால் அதைத் தீர்த்து வைப்பது என அனைத்துப் பொதுக் காரியங்களிலும் வலியச் சென்று பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பான். இதில்தான் திவ்யா விழுந்திருந்தாள். இது மோகனின் ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் தனக்குத் திருமணமாகி விட்டது என்பதை மறந்து வேறு ஏதேனும் அழகுப் பெண்கள் கிடைத்தால் அவர்களை வளைக்க வேண்டும் என்று எண்ண ஆரம்பித்து விடுவான். அதுதான் அவனுடைய வீக்னெஸ். அது மட்டுமே! அப்படி அவன் பல பெண்களை வளைத்துள்ளான். அவன் நற்செயல்களை செய்வதால் பெண்களை வீழ்த்துவதும் அவனுக்கு எளிதாகவே இருந்தது.

திவ்யாவிற்கு எந்த வகையிலும் தொல்லை கொடுப்பவன் அல்ல. திவ்யாவையும் நன்றாகவேக் கவனித்துக் கொள்வான். புகை பிடித்தல், மது அருந்துதல் என மற்ற எந்தக் கெட்ட பழக்கமும் அவனிடம் கிடையாது. ஒருநாள் அவன் சட்டையில் குங்குமக்கரை படிந்ததைத் துவைக்கும் போது பார்த்து விட்டாள். மெல்ல அவன் யார் யாரிடம் பேசுகிறான் என்ன செய்கிறான் என்று கவனிக்க ஆரம்பித்தாள். பல பெண்களிடமும் பேசுவதை அவள் அறிந்ததால் சற்று சந்தேகம் கொண்டாள்.

திவ்யா இதுகுறித்து மோகனிடம் நேரடியாகக் கேட்கவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் கேட்டு அதுவே குடும்பத்தில் குழப்பத்திற்குக் காரணமாகிவிடக்கூடும் என அவள் நினைத்திருக்கலாம். ஆனால் அதைக் கண்டுபிடித்து கையும் களவுமாகப் பிடித்துவிட்டே பஞ்சாயத்து பண்ண வேண்டும் என்று நினைத்து விட்டாளோ என்னவோ? அப்போதுதான் அவளுக்கு ஒரு யோசனை பிறந்தது. நாமும் ஏன் டிவியில் காண்பிப்பது போல டிடெக்ட்டிவ் ஏஜென்சி மூலமாகக் கண்டுபிடிக்கக்கூடாது என எண்ணினாள்.

அப்போது விவேக்கும், கேசனும் இது போன்று செயல்படுபவர்களைக் இலவசமாகக் கண்டுபிடித்துத் தருபவர்கள். மெத்தப்படித்து விட்டு மிகப் பெரிய நிறுவனத்தில் இருவரும் பணியாற்றவும் செய்கிறார்கள். மோகனைப் போலவே நற்செயல்கள் பல செய்து வருபவர்கள். அனாதை இல்லம் வைத்தும் நடத்தி வருகிறார்கள். அவர்களின் தொண்டு நிறுவனத்தின் மூலமே மிகப் பிரபலமானார்கள். கூடவே குடும்பம் மற்றும் சிக்கலில் உள்ள காதலர்களின் பிரச்சினையை யாருக்கும் தெரியாமல் முடித்து வைக்கிறார்கள் என்பதை திவ்யா பல நாளிதழ்களிலும் மாத இதழ்களிலும் படித்திருந்தாள்.

ஆதலால் அவர்களையே அணுகுவோம், தமது பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்று எண்ணினாள். விவேக்கும் கேசனும் அவளுக்கு உறுதி அளித்தார்கள். திவ்யாவிற்கு இன்னொரு யோசனையும் தோன்றியது. மோகன் தனது வீட்டிலேயே தான் இல்லாத நேரத்தில் வேறு பெண்ணை எப்படி அணுகுவான்? வெளியேதான் இப்படியா? நான் இல்லையென்றால் தன் வீட்டிலேயே மயங்கி விடுகிறானா என்று எண்ணியவள் தமது வீட்டிலேயே மோகனைப் பற்றி கண்டுபிடியுங்கள் என்று விவேக்கிடம் சொல்லி விட்டாள்.

தான் தன் தோழி வீட்டிற்குப் போய் வருவதாகக் கூறிச் சென்று விட்டாள். இன்று தனது காதலனின் உண்மையான முகத்தைக் கண்டுபிடித்து விடலாம் என்று எண்ணிக்கொண்டாள். மாலை விவேக்கிடம் ஆதாரத்தைக் கலெக்ட் பண்ணி விட வேண்டியதுதான் என்று எண்ணிக்கொண்டாள்.

மாலையில் வீட்டிற்கு வந்தவளுக்குப் பேரதிர்ச்சி. மோகன் தற்கொலை பண்ணி இறந்து கிடந்தான். திவ்யாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. போலீசுக்குக் கூப்பிட்டாள். அனைத்து விவரங்களையும் சொன்னாள். கதறி அழுதாள். மோகனை அனாவாசியமாக சந்தேகப்பட்டு விடக்கூடாது என்பதால்தான் டிடெக்டிவ் ஏஜென்சியை அணுகியதாகச் சொன்னாள். மோகன் தற்கொலை ஏன் செய்து கொண்டான் என்று தமக்குத் தெரியவில்லை என்று அத்தனையும் ஒப்புவித்தாள்.

வழக்கு கோர்ட்டிற்கு வந்தது. முதற்கட்ட விசாரணையில் போலிசால் எதையும் உறுதியாக சொல்ல முடியவில்லை. தங்கள் சந்தேகம் திவ்யா, விவேக் மற்றும் கேசன் மூன்று பேரின் மேலும் உள்ளது. ஆகையால் அவர்களைத் தனித்தனியாக விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்கள்.

விசாரணையை போலீசார் விவேக்கிடமும் கேசனிடமும் ஆரம்பித்தார்கள்.

“மோகன் தற்கொலை பற்றி தெரியுமா?”

“ டிவியில் பார்த்தோம் சார்… “

“ ஏன் தற்கொலை செய்திருப்பான் என்று நினைக்கிறீர்கள்?”

“ தெரியலையே சார்….”

“ அவருடைய மனைவி கேட்டுக் கொண்டதன் பேரில், சேல்ஸ் கேர்ள் போல ஓர் அழகுப் பெண்ணை அவன் வீட்டிற்கு அனுப்பி வைத்தோம். அவன் அவளின் வலையில் விழுந்து விட்டான். அதை அவருடைய மனைவிக்குத் தெரியப்படுத்தவே வீடியோ ஆதாரத்தை டவுன்லோட் செய்து கொண்டிருக்கும் போதே , மோகன் தற்கொலை செய்து கொண்ட செய்தியை டிவியில் பார்த்து அதிர்ந்தோம்… மற்ற படி எங்களுக்கு எதுவும் தெரியாது சார்….”

“ஓகே… வேறு தகவல் தேவைப்பட்டால் கேட்கிறோம்” என்று சொல்லி விட்டு காவல்படை அங்கிருந்து நகர்ந்தது.

போலீசார் திவ்யாவின் வீட்டை முற்றிலுமாகச் சோதனை போட்டார்கள். அப்போதுதான் கண்ணுக்குத் தெரியாமல் ஒரு கேமரா இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். கேமரா பற்றி திவ்யாவிடம் கேள்வி எழுப்பினார்கள். திவ்யாவிற்கு இதற்கு மேலும் உண்மையைச் சொல்லாவிட்டால் நம்முடைய கதை அவ்வளவுதான் என்ற முடிவுக்கு வந்தாள்.

சார்… மோகனின் நடவடிக்கையைக் கண்காணிக்கவே நான்கு நாட்களுக்கு முன்னதாக வீட்டில் கேமராவை செட் செய்தேன். வெளியே செல்லும் போது மோகன் யாரையும் அழைத்து வருகிறானா என்பதையெல்லாம் கேமரா காட்டிக் கொடுத்துவிடும். ஆதாரத்துடன் பஞ்சாயத்தை வைத்துக் கொள்ளலாம் என்று எண்ணியே செய்தேன் என்றாள்.

“அப்புறம் எதுக்குமா தனியார் ஏஜென்சியை அணுகினீர்கள்? “

இல்ல சார்… மோகனின் வெளி நடவடிக்கைகளை யாராவது சீக்கிரமாகக்  கண்டுபிடித்துத் தந்தால் நல்லது என்று எண்ணியே விவேக்கையும் கேசனையும் அணுகியதாகச் சொன்னாள்.

“போலீசார் கேமராவில் என்ன ரெக்கார்ட் ஆகியிருக்கிறது என்பதைப் பார்த்து விட்டு கோர்ட்டில் சமர்ப்பிக்கிறோம் என்றார்கள்.”

வீடியோ பார்த்த கையோடு விவேக்கையும் கேசனையும் காவல்துறை அரெஸ்ட் செய்தது. அரெஸ்ட் செய்தி கேட்டவுடன் நாடு முழுவதும் அதுபற்றியே பேச்சு. சமூகத்தில் எவ்வளவு சேவை செய்தார்கள். அவர்கள் என்ன தவறு செய்திருக்கக் கூடும் என்று பொது மக்களில் பெரும்பாலோர் பேசினார்கள். விவேக்கும் கேசனும் கூட தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்றார்கள்.

வீடியோவில் சேல்ஸ் கேர்ளை அனுப்பி விட்டு ஆதாரத்தைக் கலெக்ட் செய்த கையோடு விவேக்கும் கேசனும் திவ்யாவின் வீட்டிற்குள் வருகிறார்கள். மோகன் உங்கள் மனைவிக்கு இந்த விஷயம் தெரிந்தால் என்ன ஆகும் என்று தெரியுமா என்று மிரட்ட ஆரம்பிக்கிறார்கள். மோகன் பயத்தில் தயவு செய்து திவ்யாவிடம் சொல்லி விடாதீர்கள் என்று கெஞ்சுகிறான்.

அப்படியா… அப்படி என்றால் நீங்கள் எங்களுக்கு இருபது லட்சம் ஏற்பாடு செய்து தாருங்கள்… உங்களை நல்லவர் என்று சொல்லி விடுகிறோம் என்று மிரட்டுகிறார்கள். தம்மிடம் அவ்வளவு பணமில்லை… புரட்டவும் முடியாது எனக் கெஞ்சுகிறான். திவ்யாவிடம் காண்பித்து விடாதீர்கள். பெண்கள் விஷயத்தைத் தவிர நான் எந்தத் துரோகமும் திவ்யாவிற்கு செய்யவில்லை. எனக்கென சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்து இருக்கிறது என்று கதறி அழுகிறான். அதை அவர்கள் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. நாளைக்குள் சொன்னால் அதற்கேற்ப உங்கள் அன்பு காதலியிடம் விஷயத்தின் தன்மை மாற்றிச் சொல்லப்படும் என்று சொல்லி விட்டு வெளியேறுகிறார்கள்.

தன்னால் பணம் புரட்ட முடியாது என்று தெரிந்தவுடன், தன் மனைவியிடம் மாட்டிக் கொள்வோமே… சமூகத்தில் தான் எடுத்த நற்பெயருக்குக் களங்கம் வந்து வாழ்வதை விட இறப்பதே மேல் என்ற முடிவுக்கு வந்தவனாய் தற்கொலை செய்து கொள்கிறான்.

சிகரெட், மது அருந்துதல் போன்ற கெட்ட பழக்கவழக்கங்கள் மனைவிக்குத் தெரியவந்தால் பெரிதாகப் படித்த யுவன்களும் யுவதிகளும் அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் அது மற்ற பெண் ஆண் விஷயத்தில் வீக்னெஸ் என்றால் படித்த ஆணும் பெண்ணும் கையாளத் தெரியாமல் நகரத்தில் தடுமாறுவது எளிதாகத் தெரியும். கிராமத்தில் கூட சில  சமயங்களில் இதுபோன்ற தகாத கெட்ட பழக்க வழக்கம் உள்ள நபர்களைக் காண முடியும். அங்குள்ள படிக்காத பெண் இவ்விஷயத்தை தைரியமாக பெரும்பாலும் எதிர்கொள்கிறாள். அவள் கணவனுக்கு அறிவுறுத்துகிறாள். அவள் மட்டுமல்ல. அது சமூகமாகச் செயல்படுவதால் , தவறிழைக்கும் ஆணுக்குக் கூட்டாக அறிவுறுத்தல் நடக்கிறது. இனி இது மாதிரி செய்யாதே … அதுக்காடா கல்யாணம் பண்ணி வச்சிருக்கு… நீ என்ன நாயா என்ற கேள்விகளுடன் நேரடியாகவே அறிவுறுத்தப்படுகிறது.

படித்தவர்கள் இவ்விஷயத்தில் மட்டும் மானம் போய் விட்டது போல உணர்கிறார்கள். அவ்வாறானால் எம்மாதிரியான கல்வி இங்கு போதிக்கப்படுகிறது? கற்றவர்கள் வாழ்க்கையை ஏன் இவ்வளவு சிக்கலாகப் பார்க்கிறார்கள்? நேரடியாக, பக்குவமாகக் கையாளத் தெரியாமல் இதுபோன்ற முகம் தெரியாத மனிதர்களை வைத்துக் கண்டுபிடிக்க முயன்றதன் விளைவுதான் மோகனின் உயிர். ஒருவேளை திவ்யா இவ்விஷயத்தை இப்படி அணுகி இருந்திருக்கலாம்.

“மோகன்.. உண்மையிலேயே நீங்கள் நல்லவர். உங்களைத் திருமணம் செய்ததற்கு நான் கொடுத்து வைத்திருக்கிறேன். ஆனால் நீங்கள் பெண்கள் விஷயத்தில் மட்டும் வீக் என்பதாகக் கேள்விபடுகிறேன். எனக்கு நீங்கள் துரோகம் செய்ய மாட்டீர்கள் என்று முழுமையாக நம்புகிறேன்.. ஒருவேளை நீங்கள் இது போன்ற கெட்ட பழக்கமுடையவராக இருந்தால் அதை மட்டும் திருத்திக் கொள்ளுங்கள். நம் வாழ்வே அமைதியாகச் செல்லும். இதையும் மீறி நீங்கள் மற்ற பெண்களுடன் சகவாசம் என்றால் உங்களை விட்டுப் பிரிய வேண்டி வரும் என்று சொல்லி இருந்தால் கூட மோகன் திருந்தி இருக்கலாம். அவனை அவளுக்கு மிகவும் பிடித்தும், இன்று இந்த விஷயத்தைக் கையாளத் தெரியாமல் ஒரு உயிர் பறிபோகச் செய்ததில் அவளின் பங்கும் அறியாமல் விளைந்திருக்கிறது.

“ கோர்ட்டில் வீடியோ ஆதாரத்துடன் போலீசார் சமர்பிக்கிறார்கள்.”

நீதிபதி “ஏன் இப்படி செய்தீர்கள்?” என்று கேசனிடமும் விவேக்கிடமும்  கேட்கிறார்.

அப்போது அதிர்ச்சியான பல தகவல்களை விவேக்கும் கேசனும் தெரிவிக்கிறார்கள். டிவியில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் காண்பிப்பதைப் பார்த்தே எங்களுக்கும் இதுமாதிரி செய்ய வேண்டும். அதன் மூலம் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற யோசனை வந்தது. ஆனால் யாருக்கும் தெரிய வந்தால் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதால் ரகசியமாக ஆரம்பத்தில் நாங்களே பல ஆண்களுக்கு பெண்களை அனுப்பி அவர்கள் வீழ்கிறார்களா? என்று பார்ப்போம். சில நேரங்களில் பணக்கார வீட்டுப் பெண்களுக்கும் இம்மாதிரி அழகான ஆண்களை அனுப்பி மாட்டிக் கொண்டால் பேரம் பேசுவோம்.

அவ்வாறு வலையில் விழுந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். இப்படி செய்தால் மாட்டிக்கொண்டால் ரொம்ப அசிங்கமாகி விடும், நமக்கென சொசைட்டியில் முதலில் நல்ல பெயர் வாங்குமளவுக்கு ஏதாவது செய்ய வேண்டும். அதற்கு சிறந்த வழி சமூக சேவை என்பதே. ஆகவே நாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் உதவிகளும் கொஞ்சம் செய்தோம்.

உதவி செய்ய வேண்டும் என்ற யோசனை எப்படி வந்தது? ஏன் வந்தது  என்று நீதிபதி குறுக்குக் கேள்வி கேட்டார். சமூக சேவை செய்பவர்கள் புனிதமானவர்கள் என்ற பிம்பம் இங்கு அருமையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வி சேவை என்ற பெயரில் ஆரம்பத்தில் சமூக சேவையுடன் வந்து பின்னர் பணத்திற்காக இயங்கும் பல அமைப்புகள் தேசத்திற்கு எதிராகக் கூட செயல்படுகிறது என்பதைப் பற்றியெல்லாம் அறிந்தோம். வெளிநாட்டுக் கைக்கூலிகள் எல்லாம் சமூக சேவகர்களாக வலம் வருகிறார்கள். ஆகவே சமூக சேவை செய்தால் நம்மீது சந்தேகம் ஏற்படாது , மேலும் இதுபோன்ற பிரச்சினைகள் வந்தால் மக்கள் ஆதரவு நமக்கு எளிதாகக் கிட்டும் என்ற எண்ணத்தில்தான் அனாதை இல்லம், கல்வி சேவை போன்றவற்றை நடத்தவும் ஒரு தொகையைச் செலவு செய்தோம்.

துரதிருஷ்டவசமாக திவ்யா கேமரா செட் பண்ணுகிற அளவிற்குப் புத்திசாலியாக இருக்கமாட்டார் என்று எண்ணியே அவர் வீட்டிற்கே ஆள் அனுப்ப ஒத்துக் கொண்டோம். விதி, இன்று மாட்டிக்கொண்டோம்.

விசாரணையை முடித்து வைத்த நீதிபதி விவேக்கிற்கும் கேசனுக்கும் பத்தாண்டுகள் சிறைத் தண்டனை வழங்கினார். திவ்யா போன்ற படித்த பெண்கள் கெட்ட பழக்கமுள்ள ஒருவரைத் திருத்த இதுபோன்ற அந்நியர்களை நம்பி இறங்குவதற்குப் பதிலாக தாமே செய்யலாம் அல்லது உறவினர்களிடம் சொல்லி திருத்த முயற்சிக்கலாம் என்று அறிவுறுத்தினார். திவ்யா இப்போது மோகனின் நினைவுகளோடு வாழ ஆரம்பித்தாள்.

கோகிலாவின் வருகைக்குப் பின்னால்….

மனிதர்களை எப்படி புரிந்து கொள்வது என்பது இறுதி வரை புலப்படாமல் போய்விடுமோ என்று யோசித்துக்கொண்டே இருக்கிறேன். பொருளாதார அளவில் வாழ்க்கையில் மேலெழுவதும் கீலெழுவதும் மனிதர்களுக்கு நடந்திருக்கிறது என்பதில் அவ்வளவு வியப்புகள் ஏற்படுவதில்லை. அவை பற்றிய நிறைய கதைகளையும் அனுபவங்களையும் நேரில் கண்டதாலோ கேட்டதாலோ இருக்கலாம். ஆனால் உறவுகளில் ஏற்படும் முரண்களைப் பற்றிதான் புரிந்துகொள்ளவும் இயலவில்லை. அதிகமாக யோசிக்கவும் செய்கிறேன்.

நர்ஸ் கோகிலா செம்பனூர் கிராமத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையத்தின் பணிக்காக கோவையிலிருந்து வந்திருந்தாள். ஆரம்ப சுகாதார நிலையங்களையும் சரி, புதிதாகக் கட்டப்படும் அரசுத் திட்டங்கள் அனைத்தும் ஊருக்கு ஒதுக்குப்புறமாகவே வருவதேனோ? செம்பனூரின்  பாலர் பள்ளியும் சரி, ஆரம்ப சுகாதார நிலையமும் சரி, அவ்வாறே அமைந்திருந்தது. நர்ஸ் கோகிலாவின் கட்டுப்பாட்டிற்குள் செம்பனூர் , குத்தாலங்குறிச்சி, கொக்கித் தோப்பு, நொச்சிக்குளம் ஆகிய நான்கு கிராமங்களும் அடங்கும். ஒவ்வொரு வாரத்திற்கும் மற்ற கிராமங்களுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டாலோ கோரிக்கையின் அடிப்படையிலோ கோகிலா செல்வாள்.

நர்ஸ் கோகிலாவிற்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகி இருந்தன. குழந்தைகள் ஏதுமில்லை. அவளுடைய கணவன் கோவையில் வேலை பார்க்கிறார் என்று தெரியும். என்ன வேலை பார்க்கிறார் என்று தெரியாது. இரண்டு முறைதான் மனைவி இருக்கும் கிராமத்திற்கு வந்திருப்பார். நனைந்த பனை மரத்தைப் போல இருப்பார். ஆனால் நல்ல லட்சணம் தான். நர்ஸ் கோகிலாவைப் பார்த்தால் திருமணமானது போலத் தெரியாது. உயரம் நாலேமுக்கால் அடிதான். தலைமுடியை சேர நாட்டுப் பெண்களைப் போலத் தான் பெரும்பாலும் விரித்துப் போட்டிருப்பாள். அந்த கிராமத்தைப் பொறுத்தவரையில் படிச்ச பொண்ணு. பற்றாக்குறைக்கு அவள் மேக்கப் போடுவதால் கூடுதல் கவர்ச்சியாகவும் தோற்றமளித்தாள்.

அவளின் பேரழிகில் மயங்கி விடலையில் ஆரம்பித்து கிழம் வரைக்கும் காய்ச்சல், தொண்டை புகைச்சல், இருமல், சளி என ஏதாவது ஒன்றை சொல்லிக் கொண்டு ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள அவளது நிலையத்திற்கே வந்துவிடுவார்கள். அவர்கள் செல்கிற நேரத்தில் கூட்டமிருந்தால் பிறகு வரலாம் என்று நைசாகக் கழண்டு போன கூட்டமும் உண்டு. தனியா இருக்கும் போது வந்தால்தான் பார்ட்டியிடம் பேச முடியும் என்பதே அவர்களின் கணக்கு.

அதற்கு ஒரே காரணம்தான். அவள் அங்கு தனியாய் தங்கி இருக்கிறாள். துணைக்கு யாருமில்லை. மேற்கொண்டு ஊருக்கு ஒதுக்குப்புறமும் கூட. மிக அருகில் வீடுகள் ஏதும் கிடையாது. முன்னூறு மீட்டர் தள்ளியே கிராமத்திலுள்ள வீடுகள் இருந்தன. ஆரம்ப சுகாதார நிலையத்தில் தண்ணீர் வசதிக்காக அரசாங்கம் போட்டுக் கொடுத்த அடிபம்பும் உண்டு. அவ்வப்போது தண்ணீர் எடுக்கும் குரூப்பும், தாகம் எடுக்கிறது என்ற பெயரில் நர்ஸ் வீட்டில் என்ன செய்கிறாள் என்று சன்னல் வழியாக நோட்டமிடும் கூட்டமும் உண்டு.
மற்றவர்கள் வீட்டிற்குத் தெரிந்தால் என்னாவது என்று சற்றுக் கட்டுப்படுத்திக்கொண்டு சென்றதுண்டு. ஆனால் செந்தில்  அவ்வாறு விடுவதாக இல்லை. காரணம் அவனது வயது. அவளை விட நாலைந்து வயது குறைவாக இருக்கும். அப்போது அவனுக்கு வயது 19 இருக்கும். செந்தில் ஒன்றும் அழகன் அல்ல. அவன் முகம் ஒடுங்கியும் பற்கள் சற்று உயர்ந்தும் இருக்கும். பருக்களும் கூட உண்டு. அவனது தந்தை பூ வியாபாரம் செய்து வந்தார். அவ்வப்போது பூவை நர்சுக்குக் கொண்டு போய் கொடுப்பான்.

ஆரம்பத்தில் அவன் பேசுவதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மெல்ல மெல்ல அவள் பக்கத்துக் கிராமத்திற்கு செல்வதாக இருந்தால் அவன்தான் துணைக்கு சென்றான். அதையும் பெரிதாக பலரும் கண்டுகொள்ளவில்லை. அவள் பக்கத்து நகரத்துக்குச் சென்றாலும் செந்தில்  கூடவே செல்வதைச் சிலர் நேரில் பார்த்தார்கள். பின்னர் கண் காது மூக்கு வைத்து கதைகள் ஊரில் அரசல் புரசலாக இருவரையும் பற்றி பேச ஆரம்பித்தார்கள். கிராமத்தைப் பொறுத்தவரையில் வேற்று ஆள் அடிக்கடி ஆண்கள் இல்லாத போது அடுத்தவர் வீட்டில் தவம் கிடந்தாலே தவறாகப் பேச ஆரம்பிப்பார்கள். இந்தக் கதை ஊரறிய நடக்கிறது. கேட்கவா வேண்டும்.

செந்திலின்  அழகிலேயே கோகிலா விழுந்திருக்கிறாள் என்றால், நாமும் ஏன் அவளை மடக்கக் கூடாது என்ற எண்ணம் சிவநேசனுக்கு  வந்ததில் ஆச்சர்யமில்லை. சிவநேசனின்  புருவமுடி அடர்த்தியாக இருக்கும். இரு புருவ முடியும் நெற்றிப் பொட்டு வரையில் சேர்ந்திருக்கும். மாநிறம். உயரத்திற்கேற்ற எடையுடன் இருந்தான். சிவநேசனுக்கு  அடிக்கடி தோன்றியதெல்லாம் , நாம் முதலிலேயே களம் இறங்கி இருக்கலாமோ. ஆரம்பத்தில் தோன்றாதவனுக்கு பழனி மடக்கி விட்டான் என்று தெரிந்த போது ஆர்வப்பட்டான். எப்படி எப்படியெல்லாமோ கோகிலாவை மடக்கி விட பல வழிகளில் முயற்சித்தான்.

ஒருவேளை சிவநேசன்  அன்பாக அணுகவில்லையோ என்னவோ, அவள் அவனிடம் மயங்குவதாக இல்லை போல. ஒருமுறை அவளை நேரடியாகவே உடல் சுகத்திற்காகக் கூட சாடை மாடையாக சொல்லிப் பார்த்திருப்பான் போல. அவள் திட்டி அனுப்பி விட்டாள். அப்போதைக்கு சிவநேசன்  அவளிடமிருந்து ஒதுங்கி விட்டான். சவத்த, அவள் கல்யாணமானவள்தானே. இவள் பின்னால் நாம் ஏன் அலைய வேண்டும் என்று எண்ணியிருப்பான் போல. ஆனால் அவனுக்குள் வஞ்சம் குடி கொண்டிருந்தது என்பது பின்னர்தான் ஊருக்குத் தெரிய வந்தது.

பொங்கல் விடுமுறைக்காக நர்ஸ் தனது ஊருக்கு சென்று விட்டாள். அந்தக் கிராமத்தில் மாட்டுப் பொங்கலன்று டெக்கில் படம் பிரித்துப் போட்டார்கள். அப்போதெல்லாம் டிவியையும் டெக்கையும் (வீடியோ ரெகார்டரைத் தான் டெக் என்பார்கள்.) 150 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்தால் மூன்று படங்களோ நான்கு படங்களோ போடுவார்கள். சர்வ நிச்சயமாக ராமராஜன் படமுண்டு, விஜயகாந்த் படமும் உண்டு. மற்றவர்களின் படங்கள் ரீலாசாகி இருந்தால் அதுவும் உண்டு. நல்ல படமா இருந்தால், அதே படத்தைத் திருப்பியும் போடும்படி பெண்கள் கோரிக்கை வைப்பார்கள். வீட்டுப் பெண்களின் கோரிக்கையை ஏற்பதில் தானே ஆண்களுக்குச் சிக்கல். ஊர்ப் பெண்கள் கோரிக்கை வைத்தால் அதைச் செய்து முடிப்பதுதானே ஆண்களின் மட்டமான புத்தி. ஆகையால் பெண்கள் கோரிக்கை வைக்கும் படங்கள் நிச்சயம் இடம்பெறும். படத்திற்கு வீட்டுக்கு ஐந்து ரூபாயோ பத்து ரூபாயோ இளைஞர்களே பிரிப்பார்கள். பணம் சார்ட்டேஜ் ஆனால் மட்டும் அழகுவேல் சப்போர்ட் செய்வார். மீதிப் பணத்தை அவரே கொடுத்து விடுவார். சில நேரங்களில் அதிகமாக வசூலாகி விட்டால், மூன்று படங்களோடு நிறுத்தி விட்டு டைலர் கடையில் வைத்து சாமி படங்களைப் போட்டுப்பார்ப்பார்கள். எதை எதோடு ஒப்பிடுவது என்பதில் கூட ஒரு வடவர்த்தனை கிடையாது. அவையாவும் பூஜை படங்களாம்.

டெக்கில் படம் பார்ப்பது இங்கு முக்கியமில்லை. ஆனால் அந்த மாட்டுப் பொங்கலன்று நர்சின் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் யாரோ திருடிச் சென்று இருக்கிறார்கள் என்பது மறுநாள் காலைதான் தெரிய வந்தது. நர்ஸ் எப்பவுமே தாடியாசாரி வீட்டில்தான் கீயைக் கொடுத்துச் சென்றிருப்பாள். அவர் தாடி வைக்க ஆரம்பிச்ச பிறகு அவரின் பெயர் நாராயணன் என்பதை ஊரே மறந்து போயிற்று. யாரிடமும் போய்க் கேட்டால் தாடியாசாரி என்று மட்டுமே தெரியும். பலருக்கும் அடையாள பெயர்களே ஊரில் உண்டு. அடிபம்பில் தண்ணி எடுக்கச் சென்ற யாரோ தாடியாசாரியிடம் நர்ஸ் வீடு திறந்து கிடக்குதுன்னு சொல்ல, ஆசாரி பதறிப் போனார்.

அப்போது யார் வீட்டிலும் லேண்ட் லைன் வசதி கூட கிடையாது. ஆசாரி போஸ்ட் ஆபிஸுக்கு ஓடினார். தகவலை கோகிலாவுக்கு ஒரு வழியாகத் தெரிவித்து விட்டார். கோகிலாவும் கிராமத்திற்கு விரைந்து வந்தாள். காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் போவதாகச் சொல்ல, ஊர்ப் பெரியவர்கள் இரும்மா… ரெண்டு நாள் பொறுத்துக்கோ…. நாங்களே யாரு தப்பு பண்ணினார்கள் என்று சொல்கிறோம் என்றார்கள். ஆரம்பத்தில் தான் காவல் நிலையம் கட்டாயம் செல்வேன் என்று சொல்ல, ஒரே வார்த்தையில் மிரட்டி விட்டார்கள். நீ இந்த ஊர்ல ஒழுங்கா வேலை பாக்கணுமா வேண்டாமா? போலிஸ் ஸ்டேசனில் எல்லாரையும் எங்களுக்குத் தெரியும். போலிஸ் ஸ்டேசனுக்குப் போன, நடக்கிறதே வேறு என்று மிரட்டி விட்டார்கள்.

கிராமத்துப் பெரியவர்களுக்கு நன்றாகப் புரிந்து விட்டது, இது ஏதோ வயசுப் பயக பண்ணியிருக்கிற சேட்டைதான். போலிஸ் ஸ்டேசன் போய், நாளைப் பின்ன வேற எங்கே திருட்டு நடந்தாலும் பொய் கேசைப் போட்டு நம்மூர் பயலுகளை தேவையில்லாமல் மற்ற கேசிலையும் புக் பண்ணிருவானுக போலிஸ்காரனுக என்பதால் தான் அவளைப் போக விடாமல் தடுத்தார்கள். இறுதியில் கோகிலாவும் தனது வீட்டிலிருந்த டிவி பெட்டியில் ஆரம்பித்து உடைப் பெட்டி வரை காணாமல் போனது என்று வாசித்தாள். நகையையும் காணவில்லை என்று சொன்னாள்.

பெரும்பாலான அப்பாக்களே பல விஷயங்களில் ஒழுக்கமில்லாமல் நடக்கிற போது அவர்களுக்கு அவர்களின் பயலுக மேலேயே சந்தேகம் வந்தது. தலையாரி மெல்ல தன் பையனிடம் , ஏலே நீயுமுண்டா என்று சந்தேகத்தைப் போக்கிவிட்டு அவனிடமே மெல்ல யாரெல்லாம் இதுல உண்டு. இது ஒத்தை ஆளா பண்ணுன வேலை மாதிரி தெரியலையேன்னு சொல்லி விஷயத்தைக் கறந்ததை அவர் பையனே வெளியே சொன்னான். வெளியே சவுண்டு கொடுக்குறதுக்கு முன்னால் தன் பையன் உண்டா என்று கேட்டுக் கொண்டு விட்டுப் பின்னர் நெஞ்சை நிமிர்த்தி பேசுகிற பெரியார்தனமும் உண்டு. தன் பையன் இதில் ஈடுபடவில்லையென்று தெரிந்தவுடன், மறுநாள் டைலர் கடையில் வைத்து ஓரளவுக்கு யார் இதில் ஈடுபட்டுள்ளார்கள் எனத் தெரிந்தவுடன் மெல்ல சாடை மாடையாக கேட்க ஆரம்பித்தார் தலையாரி.

ஏலே… எவம்லாம் பண்ணுனதுன்னு எனக்குத் தெரியும். ஒழுங்கா உண்மையைச் சொல்லி இருங்க.. இல்லன்னா நாளாக்கழிச்சி நர்ஸ் போலிஸ் ஸ்டேசன் போனா யாரும் ஒண்ணும் பண்ண முடியாது. அவளை ரெண்டு நாள்தான் பொறுத்திருக்கச் சொல்லி இருக்கு என்று சொல்லிவிட்டு… ஏ…. சிவநேசா உனக்குத் தெரியுமாடே, நீ இதுல உண்டா… என்றார். அவர் கேட்டதுக்கு முக்கியக் காரணம் நர்சை வளைக்க முயற்சித்தது, சிவநேசா  நர்சை அசிங்க அசிங்கமாகத் திட்டியதை மனதில் கொண்டும் பையனிடம் கறந்ததன் அடிப்படையிலும் கேட்டார். ஆனால் சிவநேசன்  சற்றும் தயங்காமல் எவனாவது இதுல என்னை சொன்னான்னா… ஏகே 47 வச்சு சுட்டுத் தள்ளிப் போடுவேன்னு ஏதோ ஹீரோ போல அடிச்சு விட்டான்.

சிவநேசனிடம்  நான் கேட்டபோது கூட எனக்குத் தெரியாதுல என்று சொன்னதோடு பேச்சை நிறுத்திக் கொண்டான். ஆனால் மறுநாள் காலையில் பத்து மணி வாக்கில் மூணு பேரை பெரியவர்களே தங்களுக்குள் பேசி அதில் ஈடுபட்ட மற்ற ரெண்டு சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் சிவநேசனையும்  பிடித்து இழுத்து வந்தார்கள். அதற்கும் ஒரு காரணமுண்டு. பெரியவர்களுக்குள் விடலைப் பயலுக பண்ணுற சேட்டையால் தங்களுக்குள் சாதிச் சண்டை வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். ஆகையால் அந்தந்த சாதிப் பெரியவர்களே அவர்களை கிராமத்து பஞ்சாயத்துக்கு இழுத்து வந்தார்கள். இதைச் செய்தது சிவநேசன், கதிரேசன், சிங்காரம். அங்கு நடந்ததைக் கட்டப் பஞ்சாயத்து என்றும் நீங்கள் சொல்லிக் கொள்ளலாம். பிரச்சினையை சுமூகமாக மற்ற இடங்களுக்குச் செல்லாமல் கையாளும் கிராமப் பஞ்சாயத்து என்றும் சொல்லிக் கொள்ளலாம். எப்படி வேண்டுமோ அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள்.

ஏலே … களவாண்டத எங்கே வச்சிருக்கீய….. ஒழுங்கா சொல்லிருங்க. என்று பெரியவர்கள் சொல்ல…
டிவியை ரெண்டு கண் பாலத்துக்கு அடியில் வச்சிருக்கோம் என்றான் கதிரேசனும் சிவநேசனும் . ரெண்டு பேரை உடனே அனுப்பி, இருக்கான்னு பாத்துட்டு வாங்கலன்னு சொல்லி அனுப்பினார்கள். பத்து நிமிஷத்தில் டிவியோடு வந்தார்கள். வேறேன்னலாம் எடுத்திய…. எங்கே வச்சிருக்கியேன்னு சொல்லுங்க…
நர்ஸ் சூட்கேஸ் பெட்டியை எங்கே போட்டோம்னு தெரியல. ஆனால் தெக்க பாத்து கொண்டு போனோம். குடியில செஞ்சதால் அது ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது என்றார்கள். டிவி பெட்டி வந்தவுடனேயே…. ஒருத்தர் நர்சை பார்த்து சொன்னார். பாத்தியாம்மா….களவாண்டு வித்து திங்கனும்னு நெனைச்சா நாலு நாளா வச்சிருப்பானுகளா?

உடனே ஆராயும் படையுடன் ஊர்ச் சிறுவர்களும் இளைஞர்களும் உடன் சென்றார்கள். சிங்காரம்  சொன்னது போல அவனுங்க சுய நினைவில் இல்லையென்பதை அனைவரும் உணர முடிந்தது. காரணம் சூட்கேசைத் தூக்காமல் இழுத்துச் சென்றதில் அவளின் ஜாக்கெட், பாவாடை என ஆங்காங்கே சில ஆடைகள் கிடந்ததும், இழுத்துச் சென்ற தடமும் தெரிந்தது. ஒரு வழியாக சுந்தரம்  வயல் பக்கத்தில் சூட்கேஸ் கிடைப்பதை கண்டெடுத்து வந்தார்கள்.

வேற எதையும் எடுக்கவில்லை என்றார்கள். எதுக்குல இதைப் பண்ணினீர்கள் என்ற கேள்வியைத் தெரிந்தே பெரியவர்கள் கேட்ட போது, கார்கிலில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு ஏதாவது செய்யணும்னு பாலிடெக்னிக் படிக்கும் சிவநேசன்  பொய்யை அடித்து விட்டான் பாருங்க… அத்தனை பேருக்கும் உள்ளுக்குள் ஒரே சிரிப்பு. இந்த மொகரக்கட்டைகளா அதுக்காகச் செய்திருக்கும்னு. ஆனால் கேட்ட கேள்வியே எதையாவது அவனுககிட்டே கேட்கணும் என்ற அளவிலேயே இருந்தது.

மேற்கொண்டு பஞ்சாயத்தின் தீர்ப்பு இவ்வாறாக அமைந்தது. நர்சுக்கு ஆளுக்கு தலா ஆயிரம் அபராதமா கட்டணும். கோயில்ல தேங்காய் உடைச்சு இனி இந்த மாதிரி தப்பு பண்ண மாட்டேன்னு சத்தியம் பண்ணனும். அவ்வளவுதான். களவில் ஈடுபட்ட பெற்றோர்களே… இந்தப் பயலுவளை பெத்ததுக்கு கட்டித் தொலைக்கோம்னு சொன்னார்கள். நர்ஸ் இன்னும் நிறைய காணவில்லை என்று சொல்ல…. அதுக்குத் தானேம்மா அவுங்களை மூவாயிரம் கட்டச் சொல்லி இருக்கு. பிரச்சினையை இத்தோட முடிச்சு விடும்மா என்று நர்சுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நர்சின் பேச்சை யாரும் பொருட்படுத்தத் தயாராக இல்லை. இந்தப் பயலுக பண்ணுன தப்புல அவள் ஏதோ நல்லவளா என்பதை கோகிலா காதுபடவே பெண்களே சாடைமாடையாகப் பேசினார்கள். சாடைமாடையாகப் பேசுதல் என்பது கிராமத்தில் சர்வ சாதாரணம். கோகிலா அந்த வீட்டைக் கடக்கும் போது, அங்கு நடந்து போகும் நாயைத் திட்டுவது போல, இந்த நாயை எத்தனை தடவை விரட்டி விட்டாலும் இந்த வழியாவே போவுது. இன்னும் எத்தனை நாய் பின்னால போக அலையுதோன்னு பேசுவார்கள் சில பெண்கள். அவர்களின் கோபமெல்லாம் கல்யாணம் ஆனவளுக்கு இங்கே வந்து எதுக்கு இன்னொருத்தனை வச்சுக்கிட்டு திரியனும் என்கிற கோபமும், நாளை நம்ம பிள்ளைகளும் கெட்டுப் போயிருமோ என்கிற பயமும் அதன் பின்னால் இருந்தது.

நர்சுக்கும் அவள் கணவனுக்கும் வேறு ஏதேனும் சண்டையா பிரிவா புரிதல் இல்லையா என்பதெல்லாம் அந்தக் கிராமத்தில் யாருக்கும் தெரியாது. மூன்று மாதத்தில் நர்ஸ் சென்னைக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு சென்று விட்டாள், கூடவே பழனியையும் இழுத்துக் கொண்டு!

செந்திலோட அப்பா அவனை ஊர்ப்பக்கம் வந்தாயென்றால் என்று மகனைத் திட்டி ஊருக்குள் சில வருடங்களுக்கு வரவிடவில்லை. கோகிலாவின் அடிப்பொடியாகவே அலைந்த செந்திலை  இரு வருடங்களுக்குப் பின்னால் கோகிலாவே திருமணம் செய்து கொண்டாள் என்ற தகவலும் கிடைத்தது. செந்தில்  அவள் அழகில் மயங்கி அனுபவித்தவுடன் அவளை விட்டு விலகிச் செல்லவில்லை. அவளோடு வாழ ஆரம்பித்திருந்தான். குழந்தைகள் பிறந்து பள்ளிக்குச் சென்ற பிறகே கிராமத்திற்கு வந்தான். ஏறத்தாழ பத்து வருடங்கள் சென்று விட்டதால் யாரும் அவனைத் தவறாகக் கேள்வி கேட்கவில்லை. ஒருவேளை கோகிலாவை அழைத்து வந்திருந்தால் ஏற்றுக் கொள்ளாமல் ஊர் பேசி இருக்கலாம். அதன் பின்னர் இன்று வரையிலும் நர்ஸ் கோகிலா கருவேலம்பாட்டிற்கு வரவில்லை. செந்திலின் பெற்றோர் தான் மற்ற பயலுக வீட்டுக்குப் போவது போல சென்னையில் சென்று பேரனையும், மகனையும் பார்த்து வந்தார்கள்.

கோகிலாவும், செந்திலும் ஆரம்பத்தில் உடல் சுகத்தில் சுற்றித் திரிந்திருக்கலாம். ஆனால் வாழ்க்கைப் பயணத்தில் திக்குத் தெரியாமல் போய் விடுவோமா என்கிற அச்சத்தில் சேர்ந்திருக்கலாம். இருவரும் நல்ல புரிதலுக்குள் வந்திருக்கலாம். இதற்கு மேலும் சொல்ல வேண்டுமானால் கதையின் முதல் பாராவைத் தான் நீங்கள் படிக்க வேண்டும். முரணான உறவுகளால் அமைந்த கெட்டியான காதல் இதுதானோ என்னவோ? காதல் எது என்பதில் உள்ள ஐயங்கள் எப்போது தீரும் என்பதே இப்போது நான் யோசித்துக் கொண்டிருப்பது.

மரியாதை – குறுங்கதை.

இன்று அது ஒரு மிகப் பெரிய நிறுவனமாகி விட்டது. அங்கு ஆயிரக்கணக்கானோர் பணி புரிந்து வருகிறார்கள். அவர்களில் ரவிக் குமாரும் ஒருவர். அவருடைய மாத வருமானம் மிக அதிகமானது. ரவிக்குமாருக்கு வயது அறுபதாகிறது. அவ்வப்போது உடல்நிலை காரணத்தாலும், குடும்ப சூழல் காரணமாகவும் அடிக்கடி விடுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.

ஆரம்பத்தில் சில நாட்கள் விடுப்பு எடுக்க ஆரம்பித்தவர் இப்போதெல்லாம் மாதக்கணக்கில் விடுப்பு எடுத்தார். இப்படி அடிக்கடி விடுப்பு எடுக்கிற இவரை ஏன் இந்த நிறுவனம் வைத்துள்ளது? அவரிடம் கண்டிப்பாகச் சொல்லி இதற்கு மேல் எடுத்தால் பணியிலிருந்து நின்று கொள்ளுங்கள் என்று சொல்லிவிட வேண்டியதுதானே! ஏன் இவருக்கு தேவையில்லாமல் இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்து இன்னமும் வைத்திருக்கிறார்கள்? இவர் இல்லாமல் கம்பெனிதான் வெற்றிகரமாக நடக்கவில்லையா? இவருடைய துறையில் மற்ற அதிகாரிகளின் பார்வையிலேயே துறையும் சிறப்பாகத் தான் செயல்படுகிறதே, பின்னர் எதற்கு இவரைப் போய் ஓனர் தாங்கிக் கொண்டிருக்கிறார். சரியான லூசப்பயலா இருப்பார்போலேயே இந்த ஓனர் என்று தன் எண்ணத்தை சீனியிடம் கேள்வியாகக் கேட்டான் ராம்.

சீனி சொன்னான். உன்னிடம் ஒரு விஷயம் சொல்கிறேன். அதிலிருந்து இந்த விஷயத்தை நீ அணுக வேண்டும். சரியா என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தான் சீனி. நம்ம அப்பாவுக்கு வயசாகி விட்டது. அவரால் பெரிதாக நமது தங்கையின் திருமணத்திற்கு ஓடியாடி வேலை செய்ய முடியலை. எல்லாமே அண்ணனாகிய நீயோ நானோ எவரோ ஒருவர் பண்ணுகிறோம். நம்முடைய தந்தைக்குத் தான் இப்ப ஓடியாடி வேலை செய்ய முடியலையே என்பதற்காக மேடையில் நாம் உட்காருவோமா? அவருடைய அறிவுரையை மட்டும் கேட்டுக் கொண்டே செயல்படுகிறோமா, அவர் அறிவுரை தேவையற்றது என ஒதுக்கி வைக்கிறோமா? அல்லது நம்ம அப்பாவை உட்கார வைப்போமா மாட்டோமா என நறுக்கென ஒரு கேள்வியைப் போட்டான் சீனி.

அதெப்படி சபை மரியாதையை தந்தைக்குக் கொடுப்பதுதானே சரி. ஆகையால் அவரைத் தான் மணமேடையில் அமரச் செய்வேன் என்றான் ராம்.

நல்லது என்ற சீனி இப்போது சொன்னான். ரவிக்குமாரின் இன்றைய நிலையை வைத்து அவரைத் தூக்கி எறிய வேண்டியதுதானே என்று எளிதாக நீ சொல்லி விட்டாய். ஆனால் இந்த நிறுவனத்தின் ஓனர் இந்த நிறுவனத்தைத் தூக்கி நிறுத்த அரும்பாடுபட்ட போது பல்வேறு துறைகளை உருவாக்க பல்வேறு விதமான வணிகத்தில் முன்னேற பாலமாக இருந்து செயல்பட்டவர்தான் இந்த ரவிக்குமார்.

அவரைத் தமது தந்தை ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கிற இந்த ஓனரையா முட்டாள் என்கிறாய் என்று கேட்ட போதுதான் ராமுக்கு உரைத்தது. காரியம் முடிந்தவுடன் கறிவேப்பிலையாய் தூக்கி எறியும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்தியில் கம்பீரமாகத் தோற்றமளித்தார் நிறுவனத்தின் ஓனரான கமல்நாத்.

ஆகாச கற்பனை:

This gallery contains 1 photo.

அந்தரத்தில் பறந்து கொண்டிருந்த எனக்குள் ஏதேதோ நினைவுகள்!!. அது சின்ன கிராமம். வறுமைக்குப் பஞ்சமில்லாத ஊர். மரங்கள் பட்டுப் போனது போல மனங்களும் வாடிக் கிடக்கிற ஊர். பஸ் ஏறணும்னாலே பக்கத்து ஊருக்கு நடந்துதான் போகணும். மக்கள் மட்டும் வெள்ளந்திகள். யாருக்கும் ஏன் நம்ம ஊருக்குப் பஸ் வரலங்கிற கவலையோ கோபமோ கூட வந்ததில்ல. அப்ப ஆறாப்பு படிக்கப் பக்கத்து ஊர்ல இருக்கிற பள்ளிக்கு சைக்கிள்ள தான் போவோம். சுடலைமுத்து தான் என்னோட நெருங்கிய தோழன். இப்பவும்தான். எங்களுக்குள்ளே … Continue reading

சிறுகதை ” விடிந்தால் தேரோட்டம் “

This gallery contains 1 photo.

மணி 06.45. கதிரவன் முழுவதாய் மறைந்துவிட்ட மாலைநேரம். தூங்குமூஞ்சி வாகைமரங்களின் இலைகள் எல்லாம் மூடி உறங்கதொடங்கி இருந்தன. ” பிர்ர்!  ” என்ற விசில் சத்தம் .  சத்தத்தைத் தொடர்ந்து ஒரு அரசுப் பேருந்து நிறுத்தத்தில் நிற்கவும், “மன்னார்புரம் சந்நிதித் தெரு” என்று நடத்துநரின் குரல் உள்ளேயிருந்து  ஒலிக்கின்றது.  அதனைத் தொடர்ந்து, பேருந்திலிருந்து,நிறைய பேர்கள்  இறங்குகின்றனர். இறுதியாக,  அதிலிருந்து பரதனும், பாரதியும் இறங்கி நடக்கின்றனர்.               ” எல்லாம் இன்பமயம் புவியில் ! ” என்ற எம்.எல்.வசந்தகுமாரியின் … Continue reading

பச்சோந்தி – சிறுகதை

This gallery contains 1 photo.

    துரைப் பாண்டியன். நல்ல உயரம். முறுக்கிய மீசை. நீண்ட கேரா. முத்துப் பற்கள். உடம்பெல்லாம் முடி. ஆள் பார்ப்பதற்கு நடிகர் விஜய குமார் மாதிரி இருப்பார் என்று கற்பனை செய்து கொள்ளுங்களேன். பிறகென்ன, அவர் தான் ஊர் நாட்டாமை. ஊர் பணக்காரரும் கூட.     ஊரில் எந்தப் பஞ்சாயத்து என்றாலும் துரைப்பாண்டியன் தான் தீர்த்து வைப்பார்.     ஊரில் மொத்தமே இரண்டு சாதிதான். அவர்கள் வாழும் பகுதிக்குள் துரைப் பாண்டியனின் சாதியினர் … Continue reading

கவரி மான் – சிறுகதை :

This gallery contains 1 photo.

சார்…. சார்… உங்களை ரவிக் குமார் சார் கூப்பிடுறார். உடனே வரணுமாம். ஆபீஸ் அசிஸ்டன்ட் சொல்லி விட்டுப் பதிலை எதிர்பார்க்காமல் சென்றான். அவனைப் பொறுத்த வரையில் மெசேஜை பாஸ் பண்ணனும். அவ்வளவு தான். என்ன மனுசன்டா இவன்னு நினைச்சுக்கிட்டே பாஸ் அறைக்குள் சென்றேன். சார்….. கூப்பிட்டீங்களா? யெஸ் … சிவா , ப்ளீஸ் உட்காருங்க. எப்படி இருக்கீங்கன்னு சகல உபசரிப்புடன் வழக்கம் போல குசலம் விசாரித்தார்.   எல்லா கம்பெனியிலும் ஏன் தனி நபர் மீதான அக்கறையைக் … Continue reading

தவிப்பு – சிறுகதை

This gallery contains 1 photo.

  மணி இரவு பத்து. மூன்றாம் பிறை வந்து போய் விட்டிருந்தது. கும்மிருட்டு. ஆலமரத்தடி. நான் மட்டும் தனியாக!. தென்றலாய்க் காற்று வீசுகிறது. தூரத்தில் தெரியும் சைக்கிளின் டைனமோ வெளிச்சம். மரத்திலிருந்து வரும் பறவையின் மெல்லிய முனங்கல். எதையும் ரசிக்க இயலாதவனாய் நான். இயலாதவன் என்பதைக் காட்டிலும் ரசிக்க விரும்பாதவனாய் நான்!. ஒன்பது முப்பதுக்கெல்லாம் வந்து விடுவேன் என்றாள். இன்னும் வரவில்லை. நிச்சயம் வருவாள் என்ற நம்பிக்கையுடன் நான். வருகிறேன் என்று அவளே ஒத்துக் கொண்டாள். ஆனாலும் … Continue reading

ஆசிரியர்- சிறுகதை

பிரம்ம நாயகம் வயது 70. தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பள்ளியில் பணியாற்றிய போது சில ஆண்டுகளுக்கு உதவி தலைமை ஆசிரியராகவும் இருந்தார். அவரின் பார்வைக்கும், பேச்சுக்கும் கட்டுப்பாடாத மாணவர்கள் உண்டெனில் அது ஆச்சர்யம்தான்!. இறை வழிபாட்டில் ஆரம்பித்து உலக அரசியல் வரை பேசத் தெரிந்தவர். ஆங்கிலத்தில் அவர் பேசுகிற போது, இவர் தமிழாசிரியர் தானா என்ற சந்தேகம் ஒருவர் மிஞ்சாமல் ஏற்படும் என்றால் மிகையாகாது. பிரம்மநாயகம் பணியாற்றிய ஊர் தளபதி சமுத்திரம். பெயரில் சமுத்திரம் இருந்ததே … Continue reading

ஜிக்கி

This gallery contains 2 photos.

ஜூலை 29 ,2012 அன்று வெளியாகியுள்ள திண்ணை இணையதள வார இதழில், நான் எழுதிய “ஜிக்கி” என்ற சிறுகதை வெளியிடப்பட்டுள்ளது. எனது கதையைப் பிரசுரித்தமைக்காக திண்ணை ஆசிரியர் குழுவிற்கும், திண்ணை இதழுக்கும், திண்ணையின் வாசகர்களுக்கும் எனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கதைக்கான பிணையை இதனோடு இணைத்துள்ளேன். http://puthu.thinnai.com/?p=13576   .