பொன்னம்மாள் ஆச்சி

பொன்னம்மாள் ஆச்சி:

பொன்னம்மாள் ஆச்சி தவறி விட்டாள் என்ற தகவலை பிரபுதான் ஆபிசுக்குப் போன் பண்ணி எனக்குத் தெரிவித்தான். அப்போதெல்லாம் செல்போன் டெக்னாலஜி வந்திருக்கவில்லை. எந்த அவசரம் என்றாலும் அலுவலக எண்ணுக்கே தொடர்பு கொள்ள வேண்டும்.

கணேசா… உன்னையும் என்னையும் அப்பா இன்னைக்கேக் கிளம்பி வரச் சொல்லிட்டார். கோபால் மாமா அப்பாகிட்டே ஏற்கனவே சொல்லிட்டாங்களாம். ஆபிஸ்ல பெர்மிசன் போட்டுட்டு உடனே கிளம்பி வா என்றான்.

பிரபு எனக்கு மாமா பையன். ஒரு வயசுதான் வித்தியாசம். அதனால் பேர் சொல்லிக் கூப்பிட்டே பழகிட்டேன். சீக்கிரம் கெளம்பு ஆறு மணிக்கெல்லாம் பாரிஸ் கார்னர் போனால்தான் டிடிசி பஸ்ஸை பிடிச்சு காலைக்குள் திருநெல்வேலி போய் சேர முடியும் என்றான்.

“கணேசா. இந்தப் பஸ்ல போலாமா”

“ இது சாதாரணப் பேருந்து. சூப்பர் டீலக்ஸ் வீடியோ கோச் பஸ்ல போகலாம்”

“ டேய்… ஆச்சி இறந்திருக்கா. நீ என்னடான்னா வீடியோ கோச்ல போகலாம்கிற.”

அவனுக்கு சோகமெல்லாம் ஒன்றும் இல்லை. இருந்தாலும் சோகமாய் இருப்பதாக வெளிப்படுத்த முயற்சி செய்தான். டேய்… பன்னிரெண்டு மணிநேரம் படம் பாக்காம எல்லாம் என்னால வரமுடியாது என்று சொல்லிக் கொண்டே, வீடியோ கோச் பஸ் கண்டக்டர்கிட்டே போய், என்ன படம்னே இன்னைக்குப் போடுவீங்கன்னேன்.

தொர என்ன படம்னு சொன்னாதான் வருவீகளோ… சொல்ல முடியாது. இஷ்டம்னா ஏறுன்னார் அரசாங்க ஊழியர் என்ற தோரணையில். நானும் ஒங்க பஸ் மட்டுந்தான் திருநெல்வேலிக்குப் போவுதுன்னு நெனைப்போ. இது இல்லன்னா இன்னொன்னு.

இன்னொரு கண்டக்டர் படத்தைச் சொன்னார். பிரபு மீண்டும் ஏ மாப்ள… ஆச்சி இறந்திருக்கான்னு சொல்றேன். நீ என்னடான்னா…

பிரபு நீ வேணா உள்ளே போனதும் கண்ணை மூடிக்கோ. நான் மட்டும் படம் பாக்கேன்னேன். சும்மா சொன்னேம்ல என்று ஜகா வாங்கிக் கொண்டான்.

பஸ் விக்கிரவாண்டி வந்ததும் டீ காபிக்காக நின்றது. பிரபுவிடம் மசாலா டீயும் முறுக்கும் சாப்பிடலாமா என்றேன். பிரபு மீண்டும் சோகத்தைக் காட்ட ஆரம்பித்தான். சரி, நான் மட்டும் குடிக்கிறேன் என்றேன். இப்படி ஒவ்வொரு தடவையும் நான் மட்டும்னு சொன்னவுடன் பிரபு என் வழிக்கே வந்து விடுவான்.

பிரபு நேரடியாகவே கேட்டான். “மாப்ள அன்னைக்கு யாரோ ஒருத்தன் ரோட்ல அடிப்பட்டு கிடந்தப்போ அழுத… அவனை ஆஸ்பத்திரியில் சேர்க்க அந்த ஓட்டம் ஓடின” . இன்னைக்கு படம் பாத்துக்கிட்டே போவோம்கிற. என்ன மனுசனோ நீ.

ஏல.. அன்னைக்கு அடிப்பட்டுக் கிடந்தவன் வயசு 20ல. ஆச்சிக்கு வயசு என்னல? 87 வயசுல ஆச்சி போயிருக்கா. பொன்னம்மா ஆச்சிக்கு என்னல குறை? ஆச்சி அண்டக் கருப்பு. தாத்தாவுக்கு சுண்டுனா ரத்தம் வந்துரும். ஆச்சி நம்ம குடும்பத்தில் மகன் பிள்ள, மக பிள்ள, பேரப் பிள்ளைகளுக்கு, பேரப் பிள்ளைகளோட பிள்ளைன்னு மூணு தலைமுறைக்கு பேர்காலம் பாத்துருக்கா. குறைஞ்சது 40 பிள்ளைகளுக்கு மேலேயாவது பாத்திருக்க மாட்டா. அத்தனை பேரை ஒருத்தி தன் தலைமுறையில் பாக்க கொடுத்து வச்சிருக்கனும்ல. மருமகள்களை எல்லாம் மகள்கள் போல பாத்துருக்கா. யாராவது இந்தக் குடும்பத்துல ஆச்சியைத் தப்பா பேசுனதுண்டால. பொன்னம்மாள் ஆச்சியைப் போல ஒருவரைக் காண்பது அரிது. கடைசி வரைக்கும் படுக்கையில் விழாமல், யாருக்கும் பாரம் இல்லாமல் போய் சேந்திருக்கா.

ஆச்சி சில நேரங்களில் பேசுறத கேக்கிறப்போ காமெடியா இருக்கும். யாராவது தப்பு செஞ்சா, அம்மாகிட்டே சொல்லும் போது குரலைத் தாழ்த்தி குசுகுசுவென மெதுவா சொல்வாள். நான் வெளையாட்டுக்கு ஆச்சியிடம், யாச்சி நீ சொல்றது கல்லிடைக்குறிச்சியிலுள்ள அவனுக்குக் கேக்கவா போவுது. அந்த இடம் வந்தவுடன் இவ்வளவு மெல்ல சொல்ற. அம்மா உடனே கோபித்துக்கொண்டு, பெரியவங்க பேசுற இடத்தில ஒனக்கு என்னல வேண்டிக்கிடக்கு. தூரப்போ என்று விரட்டுவாள்.

ஆச்சியை மருமகள்கள் கூட தாங்குவார்கள். யாரிடமும் கோபப்பட்டதில்லை. நாத்தனார் சண்டையைக் கூட அவள் ரசிக்க விரும்ப மாட்டாள். குடும்ப ஒற்றுமைக்கு எதிராக யார் பேசினாலும் அன்போடு அறிவுறுத்துவாள். குடும்பத்தில் மகன் வழி பிள்ளைகளில் முதல் ஆண் குழந்தைக்குத் தாத்தா பிரம்மநாயகம் பிள்ளையின் பெயரையும், முதல் பெண் குழந்தைக்கு பொன்னம்மாள் ஆச்சி பெயருந்தான் வைத்திருந்தார்கள். ஆச்சியும் தாத்தாவும் தங்கள் குழந்தைகளுக்கு தெய்வநாயகம், கோமதி சங்கரன், தியாகராஜன், திருநாவுக்கரசு, சுந்தரி, மங்கையர்க்கரசி, திலகவல்லி, மோகனா என்று அழகான பெயர்களைச் சூட்டி இருந்தார்கள். இப்படி ஆச்சியின் பழம்பெருமைகளைப் பேசிக்கொண்டே போனோம்.

அப்பத்தான் பிரபு என்கிட்டே கேட்டான். ஏ மாப்ள.. நீ தெய்வு பெரியப்பா இறந்தப்ப பின்னால் போய் நின்னு அழுறவங்களைப் பாத்து சிரிச்சாயாமே அப்படியா?

“யாருல ஒனக்கு இதைச் சொன்னது?”

“ திலகா அத்தைதான்”

“ ஓ… எங்கம்மா தான் சொன்னாங்களா?”
அதுல பெரிய கதை இருக்குல. ஏ பிரபு ஒனக்கு ஒண்ணு தெரியுமா. எங்கம்மா ஒவ்வொரு தடவையும் ஊருக்குப் போகும் போதெல்லாம், ஏலே… ஒரு எட்டு எட்டிப் போய் எங்க அம்மையைப் பாத்துட்டு வாயம்ல.. ஆச்சிக்கு ரொம்ப வயசாகிக்கிட்டே போவுதுன்னு சொல்லிக்கிட்டே இருந்தா. நான்தான் யம்மா.. அடுத்தத் தடவ போறேன். இப்ப நேரமில்ல. நாளைக்கே கம்பெனியில் வாரேன்னு சொல்லி இருக்கேன். லீவு கிடைக்கலன்னு சொல்லி தட்டிக் கழிச்சேன்.

கடைசியா ஒரு தடவை நானே யம்மா … நாளைக்கு வேணா நான் போய் ஆச்சியைப் பாத்துட்டு வந்துருதேன்னு சொன்னேன். சொல்லி அஞ்சு நிமிஷமாகல. தெய்வு மாமா தவறிட்டான்னு பாபனாசத்திலிருந்து தகவல் வருது. சரிம்மா.. அப்ப ஆச்சியை அங்கேயே வச்சி பாத்துற வேண்டியதுதான்னேன்.

தெய்வு மாமா ரொம்ப ரிசெர்வ்டு டைப். வரி ஆபிசர் மாமே என்றே கூப்பிடுவோம். இன்கம் டாக்ஸ் ஆபிசர்னு சொல்லி இருந்திருக்கலாம். பெரியவங்கெல்லாம் அவரை வரி ஆபிசர் அண்ணேன்னு சொன்னதால் அவர் வரி ஆபிசர் மாமா என்றே அழைக்கப்பட்டார். குழந்தைகளிடம் எல்லாம் நெருங்கி வரமாட்டார். குடும்ப விழாக்களுக்குக் கூட காலையில் வந்துவிட்டு அன்றே கிளம்பி விடுவார். ஆகையால் மற்ற மாமாக்களிடம் நான் ஒட்டியது போல தெய்வு மாமாவிடம் ஒட்டியது கிடையாது.

மாமாவிடம் குறைபட்டவர்களெல்லாம் கதறி பதறி அழுதது எனக்கென்னவோ கிலேசியாக தோணுச்சு. அது எனக்குள் சிரிப்பை வரவழைத்தது. அதை அம்மாவிடம் அவ்வப்போது சொல்லிக் கிண்டலடிச்சேன். அதைத் தான் ஒன்கிட்டே சொல்லி இருக்கா என்றேன்.

“அதுசரி. நீதான் கடைசியில் பெரியப்பாவோட அஸ்தி கரைக்கப் போனியாமே. எல்லாரும் சொன்னாங்க.”
அதை ஏன் கேக்க? மருமகன்களில் யாராவது போகனும்கிறதுதான் சடங்காம். அமரன் சின்னவன், ராமக்கிட்டு கல்யாணம் ஆயிருச்சு. இன்னைக்கி ராமக்கிட்டுக்கு உடம்புக்கு வேற முடியல. அதனால நீயே போயிட்டு வான்னு அப்பாவும் சொல்லிட்டார். நானும் நமக்குத் தான் travel னா ரொம்ப பிடிக்குமேன்னு சரின்னு சொல்லித் தொலைச்சிட்டேன்.

சரின்னு சொன்னதுக்கப்புறம்தான் தெரியுது. பக்கத்து வீட்டுக் கல்யாணி மாமா சொல்றாரு… ஏல கன்னியாகுமரியில போய் அஸ்தியைக் கரைக்கிற வரைக்கும் நீ யார்கிட்டேயும் பேசக் கூடாது. எதுவும் சாப்பிடக் கூடாதுன்னுட்டார்.

“பிரபு… நெனச்சுப் பாரு இந்த ரெண்டும்தான் எனக்குக் கஷ்டம்னு ஒனக்குத் தெரியுமே. என்ன பண்றதுன்னு ஒத்துக்கிட்டோமேன்னு போனேன்.”

“மாப்ள… எப்படில பேசாம இருந்தே. பசி தாங்க மாட்டிய. எப்படி சமாளிச்ச.”

வள்ளியூர்ல பஸ் மாறனும்ல. ஏ அவருக்கு எந்த பஸ் போகும்னு தெரியல. நான்தான் பாத்துக்கிட்டு, ம் … ம்… ம்…. ன்னு செய்கையால் ஏறுவோம்னு சொன்னேன். அவரு என்னடான்னா ஏ அதுல ரெண்டு பேர் ஒக்கார்ற சீட்ல எடம் இல்லலா . அடுத்த பஸ்ல போவோம்கிறார். ஏன்னு சைகையில கேட்டா… ஒன்கிட்டே எவனாவது பேச்சுக் கொடுத்து நீ பேசிட்டேன்னா.. அடுத்த பஸ் அரைமணிநேரம் கழிச்சு வருது. ஒரு வழியா அஸ்தியைக் கரைச்சு முடிச்சு பாபநாசம் வரும் போது மணி ராத்திரி பதினொன்னு ஆகிருச்சு.

லோகாம்பாள் அத்தைதான் , கணேஷ் தான் அவுக அஸ்தியைக் கரைக்கனும்னு இருந்துருக்கு. ஒன் பையன் கரைச்சதுல எனக்கு ரொம்ப சந்தோசம்னு அத்தை சொன்னதாக அம்மா சொன்னாள்.

இப்படி பேசிக்கிட்டே கல்லிடைக்குறிச்சியை வந்து சேர்ந்து விட்டோம். கோமு மாமா வீட்டில் வைத்தே ஆச்சி இறந்திருந்தாள். ஆச்சி தன்னோட சொந்த ஊர்ல, ரெண்டாவது பையன் வீட்டில் வைத்துத் தான் காலமாகி இருந்தாள். பெரும்பாலான காலத்தை கோமு மாமா வீட்டில்தான் ஆச்சி கழித்திருந்தாள்.
அங்குபோய் பார்த்தால் மருமகள்கள் எல்லாம் கதறி அழுது கொண்டிருந்தார்கள்! அத்தை…. அம்மாவா இருந்து எங்களைப் பார்த்தியளே… இப்படி விட்டுட்டுப் போயிட்டேளே என ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள். மகள்கள் எல்லாம் அழுது கொண்டிருந்த போதிலும், அவர்களே ஒவ்வொருவரிடமும் மதினி அழாதீங்க… அம்மாவுக்குத் தான் வயசாயிட்டே. அழாதீங்க என்று சமாதானம் செய்து கொண்டிருந்தார்கள்.

மருமகள்கள் உண்மையான அன்போடு அழுது கொண்டிருக்கும் அளவிற்குப் பெருமை பொன்னம்மாள் ஆச்சியை விட்டால் வேறு யாருக்குத் தான் கிடைக்கும்? அதைவிட உண்மை, பொன்னம்மாள் ஆச்சியைப் போல அனைவரிடமும் அன்போடு நடந்துகொள்ளும் ஒருவரை எவர்தான் வெறுப்பர்? யாருக்குந் தெரியாமல் என் கண்ணிலிருந்தும் உப்புநீர் வழிந்தோடிருந்தது.